2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

சட்டத்தின் ஆட்சி எங்கே?

Mayu   / 2024 மார்ச் 20 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

சட்டத்தின் ஆட்சியே ஜனநாயகத்தின் அடிக்கல் என்பார்கள். அதாவது, ஜனநாயகத்தின் கீழ் ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அல்லாது சட்டத்துக்கு ஏற்ப நாட்டில் சகல காரியங்களும் நடைபெறவேண்டும் என்பதாகும். ஆயினும், இலங்கையில் இந்த விதி பட்டப் பகல் மீறப்படுகிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதாவது நிகழ்நிலை காப்புச் சட்டத்தை நிறைவேற்றும் விடயத்தில் சபாநாயகர் சட்டப்படி நடந்து கொள்ளவில்லை என்ற அடிப்படையிலேயே இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அரசாங்கம் கடந்த செப்டெம்பர் மாதமே சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட இந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதன் மூலம் பொதுமக்களின் கருத்துச் சுதந்திரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்ற அடிப்படையில் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றின் மீதான விசாரணையின் தீர்ப்பு நவம்பர் மாதம் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி சட்டமூலத்தின் 31 வாசகங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. அவ்வாசகங்கள் நீதிமன்றத்தின் வழிகாட்டலின் பிரகாரம் திருத்தப்பட வேண்டும், அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.

அதன் பின்னர் அரசாங்கம் திருத்தப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் நீதிமன்றம் திருத்தப்பட வேண்டும் என்று விதித்த சில வாசகங்கள் திருத்தப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கூறின.

ஆயினும் அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது தமது பெரும்பான்மை பலத்தை பாவித்து கடந்த ஜனவரி 23ஆம் திகதி சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொண்டது.

நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு சபாநாயகரின் கையொப்பத்துடன், அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே அவற்றை அமுலாக்க முடியும். எனவே, நீதிமன்றத்தின் கட்டளைப் படி திருத்தப்படாது. நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டன.

ஆனால், சபாநாயகர் அதனைப் புறக்கணித்து பெப்ரவரி முதலாம் திகதி சட்டத்துக்கு தமது அனுமதியை வழங்கினார்.

இதன் காரணமாகவே சுமந்திரன் சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். ஆனால், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்று விடயத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படையில் நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.

பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குள்ளாக்க முடியாது என்பது மூத்த சட்டத்தரணியான சுமந்திரனுக்கு தெரியாதிருக்க முடியாது. அது தொடர்பாக முன் அனுபவமும் இருக்கிறது. தமிழர்களுக்காகவே அறிமுகப் படுத்தப்பட்ட மாகாண சபைகள் இப்போது இயங்காத நிலையில் உள்ளன.

2017இல் அப்போதைய பிரதமர் ரணில் தலைமையில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் காரணமாகவே அந்த நிலை ஏற்பட்டது. அச்சட்டம் முறையாக நிறைவேற்றப்பட வில்லை என்று அப்போது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

ஆனால், பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குள்ளாக்க முடியாது என்று நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்தது. இதனையும் சுமந்திரனுக்கு தெரியாதிருக்க முடியாது.

ஆயினும், அவரது மனு ஒருவித கவனயீர்ப்பு நடவடிக்கையாகவே அமைந்தது. அரசியலமைப்புக்கு முரணாகாத முறையிலேயே புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அதற்காகவே புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படு முன் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுகின்றன.

அவற்றைப் பற்றிய நீதிமன்றத்தின் பரிந்துரைகளை புறக்கணித்து சட்டங்கள் நிறைவேற்றப்படுமானால் அது சட்ட விரோதமானதாகும். ஆயினும் அவ்வாறு நீதிமன்ற பரிந்துரைகளைப் புறக்கணித்து சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றத்தால் அதற்கு எதிராக எதையும் செய்ய முடியாது. எதிர்காலத்திலும் இவ்வாறு இடம்பெறலாம்.

அதனையே சுமந்திரன் தமது மனுவின் மூலம் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார். நிறைவேற்றப்பட்ட சட்டங்களை மீளாய்வு செய்யும் அதிகாரம் இலங்கையின் நீதிமன்றங்களுக்கு இல்லை

. இவ்வாறு மீளாய்வு செய்வது ‘Judicial review of legislations’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஒரு அரசாங்கம் தமது பெரும்பான்மையைப் பாவித்து சட்ட விரோதமான அல்லது அடிப்படை உரிமைகளை மீறும் சட்டங்களை நிறைவேற்றிக் கொண்டால் அவற்றை பின்னொரு காலத்திலாவது திருத்த சாதாரண மக்களுக்கும் இந்த முறையின் கீழ் அவகாசம் கிடைக்கிறது. இன்று, ஜனாதிபதி சட்டத்தை மதிக்காத நிலை உருவாகி இருக்கிறது.

அந்த நிலையில் நீதிமன்றத்துக்கு அவ்வாறான அதிகாரம் இருப்பதே நல்லதாகும். நிகழ்நிலை காப்புச் சட்டம் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் அவசியத்துக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்குவதே அதன் நோக்கமாகும். புதிதாகக் கொண்டுவரப்பட இருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தின் நோக்கம் அதுவேயாகும்.

தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வருடம் மார்ச் மாதம் 9 ஆம் திகதியே உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை நடத்தத் திட்டமிட்டு இருந்தது. ஆனால், அதற்கு முன்னர் தேர்தல் திகதி நிர்ணயிக்கப்படுவதைத் தடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவரது ஐக்கிய தேசிய கட்சியும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் அத்தேர்தல்களில் படுதோல்வியடையும் நிலை காணக்கூடியதாக இருந்தமையே அதற்குக் காரணமாகும்.

தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான திகதியை நிர்ணயித்த பின்னரும் அவர் அதனைத் தடுக்க பல்வேறு தந்திரங்களில் ஈடுபட்டார். அத்தேர்தல்களை இடைநிறுத்துமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றையும் தாக்கல் செய்தார்.

தேர்தலுக்கான தடைகளுக்கு எதிராகவும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், வரவு-செலவுத் திட்டத்தால் தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுத்து வைத்திருக்கக் கூடாது என்று கடந்த வருடம் மார்ச் மாதம் 3ஆம் திகதி உயர் நீதிமன்றம் நிதி அமைச்சின் செயலாளருக்குக் கட்டளை பிறப்பித்தது.

ஆனால், அவர் அதன்படி நடந்து கொள்ளவில்லை. தேர்தலுக்குப் பணம் இல்லாததால் தேர்தல்களும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

உத்தரவைப் புறக்கணித்ததால் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நீதிமன்றத்தை அவமதித்தார் என்று இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிமன்ற உத்தரவைத் தாம் நிதி அரசருக்கு அனுப்பியிருப்பதாகவும் அமைச்சர் இன்னமும் நிதி விநியோகத்துக்கான உத்தரவைப் பிறப்பிக்கவில்லை என்றும் சிறிவர்தன நீதிமன்றத்தில் கூறினார். அத்தோடு, எல்லாம் முடிவடைந்துவிட்டன.

ஏனெனில் ஜனாதிபதியே நிதி அமைச்சராக இருக்கிறார். ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் சுயமாகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் நீதிமன்ற கட்டளை மீறப்பட்டது. ஜனாதிபதி குற்றமிழைத்தால் சட்ட மா அதிபருக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றின் மூலம் மட்டுமே பிரஜைகள் நீதி கோரலாம்.

ஆனால், இந்த விடயத்தில் எவரும் அவ்வாறான வழக்கொன்றைத் தாக்கல் செய்யவும் இல்லை. அரசியலமைப்புச் சபையின் முடிவுகளைப் புறக்கணிப்பதன் மூலமும் அண்மையில் ஜனாதிபதி தாம் சட்டத்து அப்பாற்பட்டவர் என்று காட்டியுள்ளார்.

தேசபந்து தென்னகோனுக்கு முந்திய பொலிஸ் மா அதிபரான சந்தன விக்ரமரத்னவின் பதவிக் காலம் முடிவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி விக்ரமசிங்க அவருக்கு மூன்று மாதங்கள் வீதம் இரண்டு பதவி நீடிப்புக்களை வழங்கினார். அவ்வாறான நீடிப்புக்கள் அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடனேயே வழங்க வேண்டும். அரசியலமைப்புச் சபை இவ்விரண்டு பதவி நீடிப்புகளுக்கும் ஒப்புதல் வழங்கும் போது தொடர்ந்தும் இந்த பொலிஸ் மா அதிபருக்குப் பதவி நீடிப்புக்களை வழங்க முடியாது என்றும் ஜனாதிபதிக்குத் தெரிவித்தது.

ஆனால், ஜனாதிபதி மூன்றாவது முறையாகவும் அவருக்குப் பதவி நீடிப்பு பரிந்துரைத்தார்.

அரசியலமைப்புச் சபை அதனை நிராகரித்தது. ஆனால், ஜனாதிபதி அதனைப் புறக்கணித்து பதவி நீடிப்பு வழங்கினார். எங்கே சட்டம்? சந்தன விக்ரமரத்ன ஓய்வு பெற்ற பின் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிக்கும் தமது பரிந்துரையை ஜனாதிபதி அரசியலமைப்புச் சபைக்கு அனுப்பினார்.

அரசியலமைப்புச் சபை அதனை ஆராயும் போது சபையின் நான்கு உறுப்பினர்கள் அதற்குச் சார்பாக வாக்களித்ததாகவும் இருவர் எதிராக வாக்களித்ததாகவும் மேலும் இருவர் வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டதாகவும் அச்சபையின் உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பின்னர் தெரிவித்தார்.

சபையின் ஐந்து உறுப்பினர்களின் இணக்கத்தாலேயே அதன் முடிவுகளை எடுக்க வேண்டும். அதேவேளை, ஒரு விடயத்துக்குச் சார்பாகவும் எதிராகவும் சம வாக்குகள் அளிக்கப்பட்டால் மட்டுமே அதன் தவிசாளரான சபாநாயகர் தமது வாக்கை அளிக்க முடியும்.

ஆனால், அவ்வாறு இல்லாத நிலையில் சபாநாயகர் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு ஆதரவாக தமது வாக்கை அளித்துள்ளார். அவ்வாறு தான் தேசபந்து பொலிஸ் மா அதிபராகியுள்ளார். எங்கே சட்டத்தின் ஆட்சி?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .