Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 10 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்ட ஆட்சியில் அரசியல் தலையீடு !
சட்டமா அதிபரின் தீர்மானங்களில் அரசியல் தலையீடு 'சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பென்ற கருத்துடன், குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது தொடர்பான சட்டமா அதிபரின் விருப்பம் மற்றும் நடைமுறைக்கு எதிராக அமைச்சரவையோ அல்லது அரசியல்வாதிகளோ தலையிடக் கூடாதென, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதே நேரத்தில், சட்டமா அதிபரின் அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் தேவையற்ற தலையீடுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் சங்கம் கோரியுள்ளதுடன், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கு அத்தியாவசியமான சட்டமா அதிபர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தைப் பாதுகாக்க இது உதவும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கரமதுங்கவின் கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூன்று இராணுவ - பொலிஸாரை விடுதலை செய்வதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம் மீளாய்வு செய்யப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் வெளியிட்ட கருத்தினை மேவியதாகவே இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், "குற்றவியல் விவகாரங்கள் தொடர்பாக சட்டமா அதிபரின் தீர்மானங்களை அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அரசியல் அதிகாரிகள் மீளாய்வு செய்யக்கூடாது என்பது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வலுவான கருத்தாகும்.
இது போன்ற விமர்சனங்கள் சட்டத்தின் ஆட்சிக்கு முக்கியமான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என வலியுறுத்தி" ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகெட மற்றும் செயலாளர் சட்டத்தரணி சதுர கல்ஹேன ஆகியோர் கையொப்பமிட்டு அக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பது தவறாகும். இருந்தாலும், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் 10 வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் வழக்கில் சட்டமா அதிபரால் சந்தேக நபர்களை விடுதலை செய்வது தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சந்தேக நபர்களது விடுதலை தொடர்பிலான அறிக்கை வெளியானவுடன், படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, சட்டமா அதிபருக்கு எதிராக பதவி நீக்க பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் 10 வருடங்களுக்கு மேலாக கல்கிசை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பி92ஃ2009 இலக்க வழக்கில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள மூவரையும் விடுதலை செய்யுமாறு கடந்த மாதம் 27ஆம் திகதி சட்டமா அதிபர் கடிதம் மூலம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்க்கு அறிவித்திருந்தார்.
10 வருடங்களாக இழுபறியில் இருந்த லசந்த வழக்கில் திடீரென இவ்வாறான முடிவு வெளிவந்தது என்பது சந்தேகமானதே. இருந்தாலும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் திறமையின்மையே வழக்குகள் தாமதமாவதற்குக் காரணம் என்ற ஜனாதிபதியின் அண்மைய கருத்துக்கள் கூட இந்த விரைவுக்குக் காரணமாக இருக்கலாம்.
இது தொடர்பான சட்டமா அதிபரின் அறிவித்தல் வெளியானதன் பின்னர் அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் சட்டமா அதிபரின் தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என்றார்.
அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விவகாரத்தில் எமது அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்று எதிர்பார்த்துள்ள மக்களுக்கு தற்போது நடைபெற்றுவரும் செயற்பாடுகள் உணர்வுபூர்வமாக அமையும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். சட்டமா அதிபர் திணைக்களம் ஒரே போக்கில் செயற்படுவதை அவதானித்துள்ளோம். லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் புதிய விசாரணைகளை மேற்கொள்ளவும், சாட்சியம் திரட்டவும், தேவையாயின் புதிய குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்வது குறித்து ஆராயவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அத்துடன், நாடாளுமன்றத்தில் ஒருநாள் விவாதத்துக்கும் தான் தயார் என்று அறிவித்திருக்கிறார்.
சட்டத்தரணிகள் சங்கம், சட்டமா அதிபரின் தீர்மானங்கள் அல்லது உத்தரவுகளால் ஒரு தரப்பினருக்கு பாதகமான நிலை ஏற்படுமாக இருந்தால், அதற்கெதிராக மேல் நீதிமன்றில் ரீட் மனுவை தாக்கல் செய்யலாம் அல்லது அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யலாம். ஆனால், அரசியல் ரீதியாக மீளாய்வு செய்வதற்கு எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை என்று கூறினாலும், இருந்தாலும் அரசாங்கத்தின் இந்த மீளாய்வு அறிவிப்பு சட்டத்தில் அரசியல் தலையிடுதலையே குறிப்பதாக அமைந்திருக்கிறது என விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சட்டமா அதிபர் வழங்கிய உத்தரவை கண்டித்து கடந்த வியாழக்கிழமை (பெப்ரவரி 6) கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு சட்டத்தரணிகளுடன் சென்றவேளை அவர்களை நீதிமன்றத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கோ பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது குடிமக்களுக்கோ பதிலளிக்க வேண்டிய கடமை தமக்கு இல்லை என சட்டமா அதிபர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தவிரவும் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புகளினால் கண்டன அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் சட்டமா அதிபர் திணைக்களம் சரியான தீர்மானத்தினையே அறிவித்திருக்கிறது என்ற வகையில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியை நாடியிருக்கிறது. இதற்கு என்ன முடிவு கிடைக்கும் என்பது பின்னரே தெரியவரும்.
ஆர்ப்பாட்டங்களின் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, சட்டமா அதிபர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பில் விசாரணைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக, சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தகவல் வெளிவந்திருக்கிறது. அவ்வறானால், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரi ணயின் குறைபாடுகள் காரணமாக அமைந்திருக்கின்றன. இது குற்றப் புலனாய்வு விசாரணைத் தோல்வியாகவே பார்க்கப்படவேண்டும். அவ்வாறானால் இதில் சட்டமா அதிபர்; திணைக்களத்தின் தவறு இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இலங்கையில் இவ்வாறு குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற நிலையில் விடுவிக்கப்படும் சந்தேக நபர்களில் இவர்கள் முதலாமவர்கள் அல்ல என்பதும் இதற்கு முன்னரும் இவ்வாறு பல வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதும் தெரிந்ததே. அதில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கும் அடங்கும். அதே நேரத்தில், சரியான விசாரணைகள் நடத்தப்படாது பலர் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர். பலர் தண்டனைகளைப் பெற்றும் இருக்கலாம். சட்டத்திலுள்ள வசதிகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதும், குற்றத்தினை மேற்கொள்ளாதவர்கள் தண்டிக்கப்படுவதும் சாதாரண தவறுகளாக பார்க்கப்படக்கூடாது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அறிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய, கைவிடப்பட்ட வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது. அதில் தராக்கி சிவராம், லசந்த விக்கிரமதுங்க போன்றோரது வழக்குகளும் இருந்தன. அதே நேரம், கடந்த 2024 டிசம்பர் மாத ஆரம்பத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். அப்படியானால் லசந்தலின் வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்தமையினால் தான் இந்த அறிவிப்பு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
“அரச அதிகாரம் எடுக்கும் தீர்மானங்களின் மீதான விவாதம் ஜனநாயக சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது போலவே, இந்த அதிகாரிகளின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் முக்கியம். சட்ட அதிகாரிகளால் சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்படும் தீர்மானங்கள் பொதுமக்களின் கருத்தை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்து சரியாக இருந்தாலும் கடந்த 10 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் இதுவரையிலும் குறைபாடுகளே இருந்திருக்கின்றன என்றால், இதுவரை உண்மை கண்டுபிடிக்கப்படாமைக்குக் காரணம் என்ன? அது இயலாமையா அல்லது முயலாமையா?
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தங்களது இயலுமைக்கும் வசதிக்கும் ஏற்றால்போல் விசாரணைகளை நடத்துவதும்.
சட்டத்தரணிகள் இருக்கின்ற ஆதாரங்களுக்கேற்ப வாதப்பிரதிவாதங்களை முன்வைப்பதும் முடிவுகளுக்கு வருவதும் நடைபெறுமாக இருந்தால் எதிர்காலத்திலும் பலர் முன்பு போலவே சந்தர்ப்பங்களைப்; பயன்படுத்தி தப்பித்துக்கொள்ள வாய்ப்பேற்படலாம்.
எது எவ்வாறானாலும், குற்றப் புலனாய்வாளர்களும், சட்டமா அதிபர் திணைக்களமும் குற்றவியல் வழக்குகளில் தெளிவான பொறுப்புகளைக் கொண்டுள்ளனர் என்றவகையில், குற்றவாளிகள் தப்பிச் செல்ல அனுமதிக்காத பொறுப்பிலிருந்தும் தப்பித்துக்கொள்ளமுடியாது என்பது மாத்திரமே உறுதியானது.
லக்ஸ்மன்.
10.02.2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago
38 minute ago