Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2022 செப்டெம்பர் 06 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளமை, இலங்கை அரசியலில் இன்னுமொரு திருப்பத்தை ஏற்படுத்த வழிகோலுமா என்ற கேள்வி, எழுந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்கள் கிளர்ச்சி வெடித்ததை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, மாலைதீவுக்கும் அங்கிருந்து சிங்கப்பூருக்கும் பின்னர் தாய்லாந்துக்கும் ஓடித் தப்பியிருந்தார்.
இப்போது 50 நாள்களின் பின்னர், நாடு திரும்பிய அவர் வரவேற்கப்பட்டு, வாகனத் தொடரணியாக அழைத்து வரப்பட்டிருக்கின்றார். இது ராஜபக்ஷர்களும் மொட்டு அணியும் மீள்எழுச்சி பெறுவதான தோற்றப்பாட்டையும், குழம்பிய அரசியல் குட்டைக்குள் என்ன நடக்குமோ என்ற நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
‘கோட்டா வீட்டுக்குப் போ’ ஆர்ப்பாட்டம் உச்சம் தொட்டிருந்த காலத்தில், ராஜபக்ஷவினர் மட்டுமன்றி அவர்களுக்கு ஆதரவளித்த எல்லோருமே ஓடி ஒளிந்திருந்தனர். ‘ஆளைவிட்டால் போதுமடா சாமி’ எனப் பின்கதவால் கோட்டாபய தப்பி ஓடியபோது, அவரைக் காப்பாற்றவோ அவருக்குப் பரிந்து பேசவோ, யாராலும் வாயைத் திறக்க முடியாத நிலை இருந்தது.
அதேபோல், ராஜபக்ஷ சார்பு அணியினரும் குறிப்பாக, பொதுஜன பெரமுன கட்சியினர், ஓர் அறிக்கையைக் கூட பகிரங்கமாக வெளியிட முடியாத அளவுக்குப் புறமொதுக்கப்பட்டு இருந்தனர். முன்பின் தெரியாத ஆர்ப்பாட்டக்கள செயற்பாட்டாளர் ஒருவருக்கு இருந்த சமூக அங்கிகாரம் கூட, இவர்களுக்கு இல்லாதிருந்தது.
இருப்பினும், ஏதோ ஒரு வகையில் ராஜபக்ஷர்கள் சார்பு அரசியல், மீள்எழுச்சி பெற்று வருவதான தோற்றப்பாடு ஏற்படுமளவுக்கு, உள்நாட்டுக் களநிலைமைகள் கடந்த ஒன்றரை மாதத்துக்குள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மிகப் பொருத்தமாகச் சொல்வதென்றால், திட்டமிட்டு இந்தக் சூழமைவுகள் மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோட்டாபயவுக்காக எம்.பி பதவியை இராஜினாமாச் செய்வோம் என்று கூறுவது ஒருபுறமிருக்க, பிரதமராக்குவோம் என்கின்ற அளவுக்கு கருத்துகள் முன்வைக்கப்படுவதைக் காணமுடிகின்றது.
இந்தக் களநிலையை சாதகமாக மாற்றுவதற்காக, இரண்டு விடயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது, மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள், தணியச் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது, காலவோட்டத்தில் மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நியதி பரீட்சிக்கப்பட்டு இருக்கின்றது.
‘கோட்டா வீட்டுக்குப் போ’ போராட்டம் உருவானதற்கான காரணத்தை மட்டுமன்றி, அதற்குப் பின்னால் இருந்த சக்திகளையும் ஜனாதிபதி ரணில் நன்கு அறிந்திருந்தார். அவரை ஆதரித்த சில நாடுகளும் ஆர்ப்பாட்ட முன்னெடுப்புகளில் செல்வாக்குச் செலுத்தின.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான கையோடு, ஓரிரு வெளிநாடுகள் ஒதுங்கிக் கொண்டன என்றுதான் தோன்றுகின்றது. பெரும்பாலும் எந்தப் பின்னணியும் இல்லாத தரப்பினரும், ஜே.வி.பி கொள்கையுடன் தொடர்புபட்டவர்களும்தான் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் சோபையிழந்து போகத் தலைப்பட்ட ஒரு கட்டத்தில், ரணிலையும் வீட்டுக்குப் போகுமாறு கோரினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி ரணில் ஒரு கணக்குப் போட்டிருக்க வேண்டும். அதாவது, மக்களது நெருக்கடிகளுக்குக் காரணமான அடிப்படை விவகாரங்களுக்குத் தீர்வு கண்டால், மக்கள் வீதிக்கு வரமாட்டார்கள் என்பதுதான் அந்த மனக்கணக்காகும்.
அதன்படி, மக்கள் எழுச்சிக்கு அடிப்படைக் காரணமான எரிபொருளையும் எரிவாயுவையும் வழங்கியதன் மூலம், மக்களிடத்தில் போராட்ட மனோநிலையை துரத்தும் திட்டம் வெற்றி பெற்றது.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தனக்கு எதிராகத் திரும்பிக் கொண்டிருந்த போராட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் ஆப்படித்தார். சட்டத்தை ஏவி விட்டும் ஆர்ப்பாட்டம் ஒடுக்கப்பட்டது. வெளிநாடுகள் தமது மறைகரத்தை ஒதுக்கிக் கொண்டதாலும் சாதாரண மக்கள் ஒதுங்கிக் கொண்டதாலும், இதனை செய்வது ரணிலுக்கு அவ்வளவு சிரமமான காரியமாக இருக்கவில்லை.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதை, ஜனாதிபதி ரணில் விரும்பினாரா, அதற்கு ஒத்துழைத்தாரா என்பது, விவாதிக்கப்படுகின்ற விடயமாகும்.
பெருந்தேசிய கட்சி சார்பான எல்லா ஆட்சியாளர்களும், ஒருவரை ஒருவர் பொதுவெளியில் விமர்சித்தாலும், நிஜத்தில் பரஸ்பரம் மற்றவரைக் காப்பாற்றும் விதத்திலான ஆட்சியையே, கடந்த காலத்தில் நடத்தியிருக்கின்றனர்.
இதற்கு ரணிலும் விதிவிலக்கல்ல! ராஜபக்ஷர்களை காப்பாற்றும், அவர்களின் மாறுவேடமணிந்த ஆட்சியாளராகவே விக்கிரமசிங்க இருப்பார் என்பது அனுமானிக்கப்பட்ட விடயம்தான்.
ஆனால், ராஜபக்ஷர்களை பகைக்காத அரசியல் நிலைப்பாட்டை ரணில் எடுத்தமைக்கு, வெளிப்படையாக ஒரு காரணமிருந்தது. அதாவது, ஐ.தே.கட்சியில் ஒரேயோர் எம்.பி ஆசனமே இருந்த நிலையில், நாடாளுமன்ற பலம் பொதுஜன பெரமுனவிடம் இருந்தது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள், ராஜபக்ஷவினரின் ஏவலுக்கு இயங்குபவர்களாக இன்னும் இருக்கின்றார்கள். எனவே, எதிரணி உள்ளிட்ட ஏனைய தரப்புகளும் முன்வராத சூழ்நிலையில், மொட்டுவின் ஆதரவை, ரணில் சரிவரப் பயன்படுத்தியிருக்கின்றார்.
இந்தப் பின்புலத்தில், மிகக் கிட்டிய காலத்தில், ‘இந்தப் பக்கம் வரவே மாட்டார்’ எனக் கருதப்பட்ட கோட்டாபய, மிகப் பகிரங்கமாக நாடு திரும்பியுள்ளார்.
ராஜபக்ஷர்களின் அதிகார வேட்கை, இன்னும் தீரவில்லை. அவர்கள் வேறு வழியில்லாத ஒரு கட்டத்திலேயே, தன்னை ஒரு ‘போடுகாயாக’ உபயோகிக்க முனைகின்றார்கள் என்பதையும் ஜனாதிபதி ரணில் நன்கு அறிந்து வைத்திருப்பார்.
முன்னாள் ஜனாதிபதிக்காக, சீதா அரம்பேபொல தனது தேசிய பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமாச் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கும் நகர்வொன்றைச் செய்து விட்டு, பிரதமர் தினேஸ் குணவர்தனவை (பெயரளவில்) ஜனாதிபதியாக்கி விட்டு, கோட்டாவை அதிகாரங்கள் குவிக்கப்பட்ட பிரதமர் கதிரையில் அமரவைக்கும் திட்டங்களும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
உண்மையில், ராஜபக்ஷர்களின் ஆதரவுடனும் மறைமுகத் திட்டத்துடனுமே ரணில் இந்த அதிகாரத்துக்கு வந்திருந்தால், அதாவது தற்காலிகமாக அவர்களே இவரிடம் இவ்வதிகாரத்தை ஒப்படைத்திருந்தால், ரணில் இதைப் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்; அல்லது, எதிர்த்தாட வேண்டும். ஆனால், எதிர்த்தாடுவதற்கான நாடாளுமன்ற பலம் ஜனாதிபதியிடம் இல்லாதிருப்பது பெரும் சவாலாகும்.
இந்தக் கோணத்தில் நோக்கினால், கோட்டாவின் வருகையை, ரணில் மனப்பூர்வமாக விரும்பியிருக்கமாட்டார் என்று கருதலாம். அவ்வாறாயின், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அவசரப்பட்டு ஆப்படித்து விட்டோமா, என்று அவர் கவலைப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால், ஜனாதிபதியோ அரசாங்கமோ மீண்டும் ஒரு போராட்டத்துக்கான ஏது நிலைகளை தோற்றுவிக்காது. ஏனெனில், இப்போது எந்தப் போராட்டம் வந்தாலும் அது ‘மக்கள் போரட்டம்’ என்ற தோற்றப்பாட்டை எடுக்காது. குழுக்கள், அரசியல் செயற்பாட்டாளர்களின் கோசங்களாகவே பார்க்கப்படும்.
அதேபோல், அரசாங்கத்துக்கு எதிராகப் போராடியவர்கள், தடாலடியாக கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னுமொரு போராட்டம் மிக இலகுவில் சாத்தியப்படக் கூடியதல்ல. அப்படி ஒன்று மேலெழுந்தால், அது ஜனாதிபதிக்கும் எதிரானதாகவே இருக்கலாம் என்பதையும் ரணில் விக்கிரமசிங்க அறியாதிருக்க மாட்டார்.
கோட்டாவின் மீள் வருகையால், மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று கருத முடியாது. ஆனால், அதிகாரத்துக்கான குழிபறிப்புகளும் கயிறிழுப்புகளும் சகஜமாக நடந்தேறும்.
கோட்டாபய இப்போதும் அரசியலில் இருக்கின்றார்; அரசியல் செய்து கொண்டும் இருக்கின்றார். அவருக்குச் சாதகமான, பாதுகாப்பான களநிலைமைகள் நாட்டில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தாமல் திரும்பி வந்திருக்கவும் மாட்டார்.
கோட்டாபயவின் வருகை, இலங்கை அரசியலில் சில விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது என்பது வெளிப்படையானது. ஆனால், உடனடியாக அவர் பிரதிநிதித்துவ அரசியலுக்கு வரமாட்டார். ஆனால், எம்.பியாக வருவதற்கு வெட்கப்படுவார் என்று கருத முடியாது.
அதற்கிடையில், நிலைமைகளை அருகிலிருந்து நோக்குவதுடன் சகோதரர்கள் மற்றும் மொட்டு அணியுடன் இணைந்து நகர்வுகளைச் செய்ய வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் பெரும்பாலும் இது கோட்டபாய - ரணில் பனியுத்தமாக அல்லது சிலவேளை கோட்டா-மஹிந்த-ரணில் மும்முனை நகர்வாக அமையலாம்.
எது எப்படியாயினும், இவ்வாறான அரசியல் குழப்பங்கள் மீண்டும் தலையெடுக்குமாயின், யாருக்கு அதன்மூலம் அரசியல் இலாபம் கிடைத்தாலும், அது, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நெருக்கடி நிலைக்கு இறங்குமுகமாகவே இருக்கும். இதற்கான விலையை மக்களே தொடர்ந்து செலுத்த வேண்டிய நிலையும் உருவாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago