Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2022 மே 25 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஐயூப்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பார்வையில், தமது நலன்களைப் பாதுகாகக்கூடிய மிகவும் பொருத்தமானவரையே அவர், பிரதமராக நியமித்துள்ளார். ஏனெனில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியல் மேடைகளில் ராஜபக்ஷர்களை விமர்சித்தாலும் அவர், ராஜபக்ஷர்களுக்கு மிகவும் விசுவாசமானவர்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து, தமது பாதுகாப்பைப் பற்றி அச்சமடைந்து இருந்தபோது, மறுநாள் அதிகாலை அலரி மாளிகைக்குச் சென்று, அவரது பாதுகாப்பை உறுதி செய்து, ஹெலிகொப்டர் மூலம் அவரை ஹம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைத்தவர் ரணிலாவார்.
ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட மஹிந்த அரசாங்கத்தின் தலைவர்களின் ஊழல்களை விசாரித்து, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதே, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரியும் ரணிலும், மக்களுக்கு அளித்த பிரதான வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
போருக்குப் பின்னர், சர்வதேசக் கடலில் வெளிநாட்டு கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் தொழிலை, கடற்படை செய்து வந்திருந்தது. இதை, அப்படையிடமிருந்து பறித்து, ‘அவன்ட்காட்’ தனியார் நிறுவனத்துக்கு வழங்கியமை, ராஜபக்ஷர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ஒரு பிரதான குற்றச்சாட்டாகும்.
அவ்வாறு இருக்க, அன்று புதிய அரசாங்கத்தை பொறுப்பேற்ற பிரதமர் ரணில், குற்றங்களைத் தடுக்கும் பிரதான இரண்டு அமைச்சுகளான சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சுகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களாக, ‘அவன்ட்காட்’ நிறுவனத்தின் முன்னாள் சட்டத்தரணிகளான திலக் மாரப்பன, விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோரை நியமித்தார். அமெரிக்காவில் ‘டிஸ்னிலான்ட்’டுக்கு, ‘அவன்ட்காட்’ நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன், விஜேதாஸ குடும்பத்தினர் உல்லாசப் பயணமும் சென்றிருந்தனர். இதன் காரணமாகவே, மஹிந்தவின் காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகவும் ‘அவன்ட்காட்’ விவகாரம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, “கோட்டாபயவை கைது செய்ய, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை” என, விஜேதாஸ பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
நீதி அமைச்சர் ஒருவர், ஒருவரை கைது செய்யவோ அல்லது, கைது செய்வதை தடுக்கவோ எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்? இன்றும் கோட்டாபயவினதும் ரணிலினதும் அரசாங்கத்தில், நீதி அமைச்சராக விஜேதாஸவே கடமையாற்றுகிறார்.
இப்போதும் ராஜபக்ஷர்களுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை விசாரித்து, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என காலிமுகத்திடலில் (கோட்டா கோ கம) ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் கூறி வருகின்றனர். ‘கோட்டா கோ கம’வை பாதுகாப்பதாக உறுதியளிக்கும் ரணில், அவ்வாறான விசாரணைகளை நடத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்பது திண்ணமாகும்.
இவற்றுக்குப் புறம்பாக ரணிலுக்கு, நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி நல்ல அறிவு இருக்கிறது. சிறந்த ஆங்கில அறிவும் இருக்கிறது. வெளிநாட்டுத் தலைவர்களை அணுகும் திறமையும் இருக்கிறது. எனவே, ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதிலும் ரணில் மீது, ஜனாதிபதி நம்பிக்கை வைக்க முடியும்.
ரணில், தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து, நாட்டில் சுபீட்சத்தைக் கொண்டு வருவார் என்பது இதன் அர்த்தமல்ல. ஆனால், பொருளாதார விடயங்களைப் பற்றி ஆழ்ந்த அறிவில்லாத ஜனாதிபதிக்கு, ரணில் மீது நம்பிக்கை ஏற்பட்டு இருக்கும். எனவே, ஜனாதிபதியின் பார்வையில் ரணிலே தற்போதைய நிலையில் சிறந்த பிரதமராவார்.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கவும் தாம் விரும்பும் சட்ட திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மீதே, ரணில் தங்கியிருக்க நேர்ந்துள்ளது. அதாவது அவர், பொதுஜன பெரமுனவினதும் ஜனாதிபதியினதும் பணயக் கைதியாகவே உள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சி, பெரும்பாலும் ஜனாதிபதியின் இளைய சகோதரரான பசில் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே கூறப்படுகிறது. அதாவது ரணில், பசிலினதும் பணயக் கைதியாகவே இருக்கிறார்.
கடந்த வாரம், பிரதி சபாநாயகர் தெரிவின் போது, அப்பதவி ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் கூறியிருந்தார். எனினும், பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் வேட்பாளரான ரோஹிணி கவிரத்னவுக்கு வாக்களிக்காமல், தமது கட்சியைச் சேர்ந்த அஜித் ராஜபக்ஷவுக்கே வாக்களித்தற்கான காரணம், பசில் என்றே கூறப்படுகிறது. அதாவது, ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவும் தம்மால் முடியாதவற்றை மட்டும் ரணிலைக் கொண்டு செய்தவாறு, அவரைத் தமது கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்துக் கொள்வர்.
‘கோட்டா கோ கம’ மீது தாக்குதல் நடத்துவதற்கு, அப்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவே, ஆயிரக்கணக்கான தமது ஆதரவாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து வந்தார் என்பது, இப்போது சகலரும் அறிந்த உண்மையாகும். ஆனால், அன்று அலரி மாளிகைக்கு வந்திருந்த பொதுஜன பெரமுனவின் ஏனைய தலைவர்களுக்கு எதிராக, இரகசியப் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்தவொரு விசாரணையும் இல்லை. பிரதமராக இருந்தும் ரணில், அது தொடர்பாக எதையும் செய்வதில்லை; அதுதான் விசுவாசம்!
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து, அமைச்சர் விஜேதாஸ தயாரித்த அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்ட வரைவை, அமைச்சரவையில் சமர்ப்பித்து, அரசியல் கட்சிகளாலும் ஆராய்ந்து, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக பிரதமர் ரணில், திங்கட்கிழமை (23) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அந்தச் சட்டவரைவில், வெளிநாட்டு அல்லது இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள், தேர்தல்களில் போட்டியிடவோ வேறு வழிகளில் மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படவோ முடியாது எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது 19ஆவது திருத்தத்திலும் இருந்த சட்டப் பிரமாணமாகும்.
அமெரிக்கப் பிரஜையான பொதுஜன பெரமுனவின் அமைப்புச் செயலாளர் பசில் ராஜபக்ஷ, இதனால் பாதிக்கப்படப் போகிறார். பசில் விரும்பாத ஒன்றை நிறைவேற்றிக் கொள்ள, பிரதமர் ரணிலால் முடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பசிலுக்கு ஆதரவாக ஜனாதிபதி இருந்தால் அல்லது, பசில் இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்தால், பிரதமர் ரணிலால் எதையும் செய்ய முடியாது. ரணில், ராஜபக்ஷர்களுக்கு விசுவாசமாக இருக்கலாம்; அதேவேளை, பணயக் கைதியாகவும் இருக்க வேண்டி இருக்கிறது.
ரணில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல என்பதற்குப் புறம்பாக, ரணிலை பிரதமராக, கோட்டாபய நியமிக்க மற்றொரு காரணமும் இருந்தது. மஹிந்த இராஜினாமாச் செய்ததன் பின்னர், புதிய பிரதமர் ஒருவரை, ஜனாதிபதி தேடிக் கொண்டு இருந்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய மக்கள் சக்தியும், கோட்டாபய பதவி விலகினால் மட்டுமே தாம் அரச பொறுப்பை ஏற்பதாகக் கூறின. சஜித், பின்னர் அந்த நிபந்தனையை சற்று தளர்த்தினார்.
கோட்டாபய பதவி விலக வேண்டும் என்று ரணில் உறுதியாக ஒருபோதும் கூறவில்லை. எனவே, ரணிலை பிரதமராக நியமிப்பதால், தமக்குத் தொடர்ந்தும் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும் என்று கோட்டாபய நினைத்திருக்கலாம்.
இவ்வாறு, தமக்குப் பாதுகாப்பான ஒருவரை பிரதமராக நியமித்து, ஆறு மாத காலத்தை எவ்வாறோ கடத்தினால், அத்தோடு அரச எதிர்ப்பு போராட்டங்களைப் பற்றிய மக்களின் கவனம் குறையும் வண்ணம், அவற்றை குழப்பாமல் இருந்தால், அப்போராட்டங்கள் பிசுபிசுத்துப் போகும் என ஜனாதிபதி கோட்டாபய கணக்குப் போட்டிருக்கலாம்.
உண்மையிலேயே, போராட்டங்கள் வன்செயல்களாக மாறவிடாமல் பார்த்துக் கொண்டால், அவை மக்களுக்கு சர்வ சாதாரணமாகிவிடும். அத்தோடு, ஆறு மாதங்களில் பல நாடுகளின் உதவிகளும் இலங்கைக்கு கிடைக்கலாம்.
அரசாங்கத்தின் இந்தக் கணக்குப் பிழைப்பதற்கு, வாய்ப்பை உருவாக்கும் ஒரு முக்கிய காரணி இருக்கிறது. அதாவது, நாளாந்தம் நாட்டின் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினை உக்கிரமடைவதேயாகும். நேற்றும் (24) எரிபொருள் விலை வெகுவாக உயர்ந்தது. அதன் காரணமாக, பொருளாதார நிலைமை எதிர்வரும் வாரங்களில் மேலும் மோசமாகும். மக்கள் இதனால் மேன்மேலும் கொதித்தெழுவர். அப்போது மக்கள் போராட்டங்களும் மேன்மேலும் உக்கிரமடையலாம்.
பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் போது, அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும் தீவிரமடையும். அதைத் தடுப்பதற்காகவே ஜனாதிபதியும் பிரதமரும் சகல கட்சிகளையும் சேர்ந்தவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்கின்றனர். எனவே, ரணில் தான் தற்போது ஜனாதிபதிக்குப் பொருத்தமான சிறந்த பிரதமர் என்பது அதன் மூலமும் நிரூபணமாகிறது.
ஆனால், எதைச் செய்தாலும் எதிர்வரும் ஏழு, எட்டு மாதங்களில், அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் வரை, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் தீர்வு காண முடியாது. ஜூன் மாதத்தில் பாரியதோர் உணவு நெருக்கடியும் வரப் போகிறது எனப் பிரதமரே கூறுகிறார். எந்தக் கூட்டரசாங்கத்தை அமைத்தாலும், அரசாங்கமும் ஜனாதிபதியும் அந்த நிலைமையை தாக்குப் பிடிப்பார்களா என்பது சந்தேகமே!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago
24 Nov 2024