Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
சுகாதாரத்துறையை பொறுத்தவரையில், தெற்காசியா நாடுகளில் இலங்கை முதற்தர நாடாக திகழ்கின்றது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக சிறுவர்களின் போசாக்கு நிலைமையை நாம் பேணுவதை சிறந்ததாகக் குறிப்பிடலாம். இலங்கையை பொறுத்தவரையில் தற்போது ஆறு மாதம் வரைக்கும் தாய்ப்பால் ஊட்டுகின்ற தாய்மார்களின் எண்ணிக்கை அதாவது, ஆறு மாதம் வரைக்கும் முற்று முழுதாக தாய்ப்பாலில் தங்கியிருக்கும் தாய்ப்பாலைப் பெறும் குழந்தைகள் அதிகம். அது அவர்களுடைய பிற்கால முளை வளர்ச்சி அவர்களின் தேக ஆரோக்கியத்துக்கும், உளவளத்துக்கும் உறுதுணையாக இருக்கும்.
ஆறு மாதம் முடிந்த பின்னர் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து ஏனைய திண்ம ஆகாரங்களை கொடுப்பது சாலச்சிறந்ததது. அதேபோல், பசுப்பாலை ஒரு வயது முடிந்த பின்னர் அறிமுகப்படுத்தலாம். ஏனென்றால், பசுப்பாலில் அதிகமான புரதங்களும், கனியுப்புக்களும் செறிந்து காணப்படுகின்றது. எனவே, சிறுவர்களின் சிறுநீரகத்துக்கு மேலதிகமாகச் செல்கின்ற கனியுப்புக்கள் அல்லது புரதத்தின் மூலம் வருகின்ற பதார்த்தங்களினால் வேலைப்பளு அதிகரித்து அவர்களுடைய சிறுநீரகங்கள் பாதிப்படைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்று கூறுகின்றார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணரும் கிழக்குப் பல்கலைக்கழக விகுழந்தை நல வைத்தியப் பிரிவு விரிவுரையாளருமான டொக்டர் விஷ்ணு சிவபாதம் MBBS, DCH, MD. தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் குழந்தைகள் நலன் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:
அதேவேளை பசுப்பாலில் இரும்புச்சத்தின் அளவும் மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. எனவே, பசுப்பாலை உட்கொள்கின்ற குழந்தை இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகின்ற இரத்தச் சோகை நோய்க்கு உள்ளாகின்ற வாய்ப்புகள் காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல், பசுப்பாலை ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களின் குடலில் இருந்து குருதி இழப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றதால் இதுவும் குருதிச் சோகையை அதிகரிக்கும்.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சிய பசுப்பாலைக் கொடுப்பது அதாவது அதில் நீர் கலந்தோ அல்லது கலக்காமலோ கொடுப்பது சுகாதாரத்துறையினரால் பரிந்துரைக்கப்படாத ஒரு விடயமாகும். எனவே, தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஒரு வயது முடியும்வரை பசுப்பாலை கொடுக்காமல் இருப்பதே சிறந்ததாகும். இருந்தபோதும், தயிர் அல்லது யோக்கட் போன்றவற்றை ஆறு மாதம் முடிவின் பின்னர் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
கேள்வி: இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்குக் காரணம் என்ன?
கொவிட் 19 வைரஸ் தற்போது திரிவடைந்து மிக அதிகமாக பரவிக்கொண்டும் வருகின்றது. இந்தத் தொற்று பரவுவதற்குக் காரணம் பொதுமக்களே ஆகும். ஏனென்றால், கொரோனா வைரஸ் தொடர்பாக இலங்கை அரசும், சுகாதாரப் பிரிவினரும் அவ்வப்போது பொதுமக்களுக்கு அறிவுருத்துகின்ற சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றாமல் நடந்து கொள்வதாலேயே இந்த கொரோனா வைரஸ் பரம்பலுக்கும், திரிவுக்கும் காரணம் என்று சொல்லலாம்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் எமது அரசாங்கம் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்காக பொதுமுடக்கத்தை அறிவித்து சுகாதார நடைமுறைகளையும் அறிவுறுத்தி வருகின்றது. இதனை பொதுமக்கள் பின்பற்றி மதித்து நடந்துகொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினரால் அறிவுருத்தப்படுகின்ற விடயங்களை முறையாக கடைப்பிடிப்பதன் ஊடாக, கொரோனாத் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். தவறும் பட்சத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.
கேள்வி: குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றைப்பற்றி என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்?
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை பார்ப்போமானால் 18 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு ஏற்பட்ட தொற்று உலகளாவிய ரீதியில் 8.4 சத வீதமாக காணப்படுகின்றது. இதற்கு பல காரணங்கள் உண்டு. அதாவது, பெரியவர்களின் நிர்பீடனத் தொகுதி குழந்தைகளின் நிர்பீடனத் தொகுதியைவிட சற்று வித்தியாசமாகக் காணப்படுவதாலும், குழந்தைகள் வீட்டில் இருப்பதாலும், வீட்டிலுள்ளவர்கள் வெளியே சென்று வரும்போது சுகாதார நடைமுறைகளைப் பேணி வருதாலும் கொரோனாத் தொற்றுப் பாதிப்பு குறைவாகவே காணப்படுகின்றது. பெரியவர்களுடன் குழந்தைகளை ஒப்பிடும்போது குறைந்தளவிலான தொற்றுத்தான் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது. கொரோனாத் தொற்றுக்குள்ளான குழந்தை பெரும்பாலும் சிறிதளவான நோய் அறிகுறிகளை மட்டுமே கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் சுவாசப் பாதையை, சுவாசத் தொகுதியை பாதிக்கும் ஒரு தொற்றாகும். குழந்தைகளுக்கும் பெரியவர்கள் போலவே சுவாசம் சம்பந்தமான நோய் அறிகுறிகள் காணப்படும். அதாவது, தொண்டை நோவு, சுவாசிப்பதில் சிரமம், இருமல், தடுமல், மூக்கடைப்பு போன்றவற்றை குறிப்பிடலாம். அத்துடன் காய்ச்சல் ஏற்பட்டு அதிகமான உடல் வலியும் காணப்படலாம்.
மேலும், சில குழந்தைகளுக்கு வயிற்றோட்டம் கூட கொரோனாவின் அறிகுறிகளாகக் காணப்படலாம். ஆனாலும் நான் மேற்குறிப்பிட்டது போன்று தொற்றை வெளிக்காட்டாத குழந்தைகள்தான் மிக அதிகமாகக் காணப்படுகின்றனர்.
கொரோனா வைரஸிக்கு எதிரான மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் குழந்தைகளுக்கும் பெரியவர்களைப் போலவே அவர்களின் நோய் அறிகுறிகளுக்கு ஏற்றாப்போல் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, தடுமல் அல்லது இருமல் இருக்கின்ற குழந்தைகளுக்கு தடுமல் அல்லது இருமலுக்குரிய மருந்துகளை வழங்குவோம். சுவாசத்தில் ஏற்படுகின்ற களைப்பு அல்லது சுவாசிக்க மறுக்கின்ற நிலைமை காணப்படும்போது அதற்கேற்றாப்போல் வைத்திய சிகிச்சை வழங்கப்படும்.
கேள்வி: ரோனா தொற்றுக்குள்ளான குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிக்கும்போது கடைப்பிடிக்கவேண்டியவை யாது?
இலேசான அல்லது நோய் அறிகுறிகள் காட்டாத குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிப்பதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் வைத்து பராமரிக்கப்படும் அக்குழந்தையை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியமாகும். அதாவது, அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கின்றபோது இயலுமானவரை ஒருவர் மாத்திரமே அவரைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
அவருக்கு தனியான குளியலறை, தனியான துவாய் போன்ற பாவனைப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் இந்தத் தொற்று குடும்பத்திலுள்ள ஏனையவர்களுக்கும் பரவாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். வீட்டில் வைத்து பராமரிக்கும்போது, அக்குழந்தைக்கு போதுமான அளவு நீர் ஆகாரங்கள், சுகாதாரமான உணவுகள் (புரதம் கூடிய உணவுகள்) சேர்த்துக்கொள்வதன் மூலம் அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளலாம்.
குறிப்பாக, குழந்தை ஆபாத்தான அறிகுறிகளை வெளிப்படுத்தும்போது, அதாவது கடுமையான காய்ச்சல், சோர்வாகக் காணப்படும் தன்மை, நீர் ஆகாரங்களை அருந்தாத வேளை அல்லது சிறுநீரின் அளவு குறையும்போது, அல்லது வயிற்று வலி அதிகமாக இருக்கும்போது குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவேண்டும்.
இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற அதீத பயம் காரணமாக தங்களின் குழந்தையை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு முனைப்பில் இருக்கின்றார்கள். இதனால் வைத்தியர்களினால் பரிந்துரைக்கப்படாத மாத்திரைகளையும், அதேபோல் இயற்கை முறையில் கிடைக்கின்ற கொத்தமல்லி போன்றவற்றை கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றார்கள். இது ஒரு சிறந்தமுறை அல்ல. கொரோனா வைரஸ் வந்த பின்னர் அதைக் குணப்படுத்துவதற்கு மருந்துகள் ஏதும் இல்லை. இது வைரஸ் காய்ச்சல் என்பதால் சுயமாகவே அவர்கள் இதிலிருந்து குணமடைவார்கள். வைத்தியர்களினால் பரிந்துரைக்கப்படாத மாத்திரைகளை தாங்கள் பயன்படுத்தும்போது அதனால் ஏற்படுகின்ற பக்கவிளைவுகளும் அதிகமாகக் காணப்படும். எனவே, விற்றமின் “சி” விற்றமின் “டி” போன்ற மருந்துகளை வைத்தியரின் ஆலோசனை இல்லாமல் பெற்றுக்கொள்வது சிறந்ததல்ல. விற்றமின் “சி” போன்ற மாத்திரைகளை தொடர்ந்து பாவிப்பதனால் குழந்தையை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கலாம் என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாத ஒரு விடயமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago