Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2020 ஜூலை 31 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் காரணமாக, இந்த நாடு இன்று பாரிய பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினை எப்போது முடியுமென்று தெரியாது. ஆனால், அதிலிருந்து மீள்வதற்கான இயலுமையை, ஐக்கிய தேசிய கட்சியாலேயே முன்னெடுக்க முடியுமென, அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்தப் பொருளாதாரப் பிரச்சினை, இனம் சார்ந்தது அல்ல; தமிழர்களோ சிங்களவர்களோ முஸ்லிம்களோ யாராக இருந்தாலும் பொருளாதார ரீதியில், தற்போதுள்ள நிலைமையிலிருந்து மீண்டுவர வேண்டும். அப்போதுதான், வேலைவாய்ப்புப் பிரச்சினையிலிருந்து அனைவரையும் மீட்க முடியும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பிரச்சினையால் வடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிறந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது. அதாவது, விவசாயத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்பே அது! அந்த வாய்ப்பை, தமிழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவர் கூறினார்.
தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். செவ்வியின் முழு விவரம் வருமாறு,
கே: இதுவரை இல்லாத வகையில், நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில், கொரோனாவும் ஐக்கிய மக்கள் சக்தியும் மிகப்பெரிய சவால்களாக அமைந்துள்ளனவா?
நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகொண்டு, ஆட்சியமைப்பதைத் தவிர, வேறு எந்தவொரு சவாலும் ஐ.தே.கவுக்கு இல்லை.
கே: கட்சியின் பிளவு சவால் இல்லையா?
கட்சி உறுப்பினர்கள் பிரிந்து செல்வது, இதற்கு முன்னரும் நடந்துள்ளது. அதைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பதால், நேரம் மட்டுமே செலவாகும். தற்போதைய அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், அதைப்பற்றி பேசலாம்; இல்லாவிட்டால், அடுத்த விடயத்துக்கு நகரலாம்.
கே: ஒவ்வொரு தேர்தலுக்கும் புதிய விஞ்ஞாபனங்களை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றில் சிறியளவான கோரிக்கைகள் மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன; அது ஏன்?
ஜனாதிபதித் தேர்தலில் நாம் போட்டியிடவில்லை. மற்றுமொரு கூட்டணியில் போட்டியிட்ட எமது கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்தோம். அந்தத் தேர்தலுக்காக, ஐ.தே.கவால் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவில்லை. இப்போது, நாட்டில் கொரோனா வைரஸ், பொருளாதாரப் பிரச்சினைகளே உள்ளன.
கே: ஐ.தே.க ஆட்சியில் பொருளாதாரம் மீட்கப்படும் என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். கடந்த நான்கு வருடங்களில் என்ன செய்தீர்கள்?
முதல் முறையாக 40 வருடங்களுக்குப் பின்னர், நாட்டின் அடிப்படை வரவு - செலவில், அந்த நான்கு வருடங்கள் தன்னிறைவு நிலைமை காணப்பட்டது. கடன் வட்டிகளைச் செலுத்துவதற்காக மாத்திரமே கடன்களைப் பெற்றுக்கொண்டோம். இதே நிலை நீடித்திருந்தால், நாட்டின் வருமானத்திலேயே கடன்களைச் செலுத்தியிருக்கலாம்.
கே: “நல்லாட்சியின் பாவங்களையும் சேர்த்துச் சுமக்கிறோம்” என்றே இப்போதைய அரசாங்கம் கூறுகிறது?
பாவங்களைச் சுமப்பது பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. 2014ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாமல், தேர்தலை நடத்தியிருந்த போது, அந்தச் சவாலை நாம் ஏற்றுக்கொண்டோம். 2030ஆம் ஆண்டு ஆகும்போது, நாட்டின் மொத்தக் கடன்களையும் செலுத்துவதே எமது இலக்காக இருந்தது. அதனை நோக்கிப் பயணிக்கையில், ஈஸ்டர் தாக்குதலால் தடை வந்தது.
கே: ஆட்சிக்கு வந்தவுடனேயே மத்திய வங்கியைச் சுரண்டியதாக, பொருளாதார நிபுணர்களால் குற்றஞ்சாட்டப்படுகிறதே?
என்ன குற்றச்சாட்டு?
கே: மத்திய வங்கி மோசடி?
அது என்ன மோசடி?
கே: மத்திய வங்கி மோசடி என்ற ஒன்றே நடக்கவில்லை என்று கூற முற்படுகிறீர்களா?
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன், பேபர்ச்சுவல் நிறுவனத்தின் தலைவராக இருந்த அவருடைய மருமகனுக்கு, மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகம் தொடர்பாக சமிஞ்ஞை காட்டினாரா என்பதிலேயே பிரச்சினை உள்ளது. அவர் அவ்வாறு செய்திருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விடயத்தில் மோசடி செய்யப்பட்ட தொகை 11 பில்லியன், 6 பில்லியன் என்று பல கருத்துகள் உள்ளன. ஆனால், இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 12 பில்லியன்களை மத்திய வங்கி தன்னகப்படுத்தியுள்ளது. அதனால், இந்த விடயத்தில் நாட்டுக்கு எந்த நட்டமும் ஏற்படவில்லை. இந்த நிறுவனம் ஈட்டிக்கொண்ட பணம் யாருக்குச் சொந்தமாகும் என்பதிலேயே பிரச்சினை இருக்கிறது. இது தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம், நாம் உள்ளகக் கணக்காய்வொன்றையும் செய்திருந்தோம். அந்தக் கணக்காய்விலும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு, 2014- 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், பிணைமுறி விநியோகச் செயற்பாடுகளால் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்திருந்தது.
கே: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது சேவைகளை முன்னெடுக்க முற்பட்டபோது, நீங்களும் அமைச்சரவையும் தடையாக இருந்தாகக் கூறிகிறார்களே?
19ஆவது திருத்தத்தின்படி, பிரதமருக்கும் அமைச்சர்களுக்குமே நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுக்கும் அதிகாரம் காணப்படுகிறது. அதன்படியே, மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தை, மைத்திரி நிர்மாணித்தார். அந்த விடயத்தில், அமைச்சரையின் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னிச்சையாகச் செயற்படுவதற்கு இடமளிக்கவில்லை எனக் கூறமுடியாது. பாதுகாப்பு அமைச்சின் கீழ், முப்படையினரையும் அவரே தக்கவைத்துக் கொண்டார். அங்கிருந்துதான் இந்தப் பிரச்சினைகள் ஆரம்பித்தன.
கே: ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலிருந்து உங்களால் விடுபட முடியுமா?
தாக்குதல் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதே எனது பதில்; எனக்கு அறிவிக்கப்படவும் இல்லை. அப்போதைய அரசாங்கம் என்ற வகையில், குறைபாடுகள் இருந்ததை ஏற்றுக்கொள்கிறேன். அன்றைய நாள், கலந்துகொள்ளவிருந்த பல நிகழ்ச்சிகளும் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கே: அது பற்றிய விசாரணைகள் தொடர்பாக, என்ன நினைக்கிறீர்கள்?
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். விசாரணைகள் இன்றும் இடம்பெற்று வருகின்ற நிலையில், முன்பு விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் பலர் நீக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுடைய முன்னைய தொடர்பாடல்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.
கே:தற்போது, ஐ.தே.கவில் உள்ளவர்களைக் கொண்டு தேர்தலை வெல்ல உங்களால் முடியுமா?
என்னுடன் நல்ல அணியொன்று உள்ளது. அவர்களைக் களமிறக்கி, தேர்தலை வெற்றி கொள்வேன்.
கே: பிரபலமான முகங்கள் குறைவாக உள்ளனவே?
பிரபலமான முகங்களைவிட, மக்களின் நம்பிக்கையை வெற்றிகொண்டவர்களே அவசியம். அதன்படியே வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கே: ஐக்கிய தேசிய கட்சிக்குள் மீண்டும் அதிகாரப் போராட்டம் ஆரம்பித்துள்ளது அல்லவா? ரவி, தயா கமகே, நவீன் ஆகியோர், தலைவராக முனைகின்றார்களே?
அது அவர்களின் எதிர்கால எதிர்பார்ப்பாக இருக்கலாம். அவர்கள் சகலரும் ஒன்றுபட்டு கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பதோடு, ஒருவர் மட்டுமே தலைவராகலாம் என்பதை, அவர்கள் உணர்ந்துகொள்வது அவசியம்.
கே: ஐ.தே.கவுக்கு வாக்களிக்க முடியாதவர்கள், மொட்டுக்கு வாக்களிக்க வேண்டுமென ரவி கூறியிருந்தாரே?
ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து, ஆட்சியமைக்க வழிசெய்து தாருங்கள் என்றே கூறுவேன். மற்றைய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு என்னால் கூற முடியாது.
கே: உங்களுடைய தலைமைத்துவம், இனியும் ஐ.தே.கவுக்கு பலமாக அமைந்திருக்குமென நம்புகிறீர்களா?
ஆம்! நான் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளேன். புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்தவன் அல்ல.
கே: தேர்தலில் வாக்களிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையே?
இப்போது இருக்கும் சந்ததியினர், வாக்களிப்பில் ஆர்வம் காட்டத் தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் வருவோரும் அதேநிலைக்கு ஆளாகுவர் என்பதால், இளையவர்கள் வாக்களிப்பது அவசியம் என்பதோடு, ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளை விரும்பினால், அக்கட்சிக்கும், இல்லாவிட்டால் மற்றைய கட்சிகளுக்கும் அவர்களுடைய வாக்குகளைக் கட்டாயமாகப் பிரயோகிக்க வேண்டியது அவசியம்.
கே: கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஐ.தே.கவால் முடியும் என்கிறீர்களே, அவ்வாறு ஐ.தே.வுக்கு இருக்கும் விசேட இயலுமை என்ன?
கொரோனா வைரஸ் விடயத்தில், அரசாங்கத்தின் ஆரம்பகாலப் போக்குகள் திருப்திகரமாக இருந்தபோதும், அடுத்தடுத்த கட்டங்களில் அவ்வாறு இல்லை. நாம் தான் பரிசோதனைகளை நடத்துமாறு முதலில் பரிந்துரை செய்திருந்தோம்.
கே: இனியாவது உங்கள் கட்சியில், இரண்டாம் தரப்புக்கு இடமுண்டா?
அந்தத் தரப்பு வலுவாகி வருகிறது. இனிவரும் நாள்களில், முன்னாள் எம்.பிக்கள் சிலர் அந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். எம்.பிக்களாக இல்லாதவர்களும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கே: ஆட்சி அதிகாரம் கிடைத்தால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் எவ்வாறு செயற்படப் போகிறீர்கள்?
19ஆவது திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதி, அமைச்சரவையுடனும் நாடாளுமன்றத்துடனும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம், ஜனாதிபதி, அரசமைப்புபடி செயற்படுவாரென நம்புகிறேன். அதேபோல், மற்றைய கட்சிகளுடன் முரண்பாடுகள் இன்றிச் செயற்பட வேண்டிய அவசியமும் உள்ளது.
கே: கடந்த ஐந்து வருடங்களில், அந்த நிலைமையைக் காண முடியவில்லையே?
கடந்த ஐந்து வருடங்களில், விடாப்பிடியாக ஆட்சியை நடத்தினேன். தேர்தல் காலம் வரையில், தடைகளுக்கு மத்தியில் ஆட்சியை முன்னெடுத்துச் சென்றேன்.
கே: ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஒழுக்கத்தை மீறியவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுக்கமின்றிக் கட்சியை நடத்த முடியாது. மற்றைய கட்சிகளுக்குச் சென்றவர்களுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம்.
கே: இதுவரையில், ஐக்கிய தேசிய கட்சிக்குள், இந்தளவான உறுப்பினர்கள் வெளியில் செல்லவில்லையே?
கட்சியிலுள்ள பலர் சென்றுள்ளனர். சிலர் மொட்டுக்கும் சென்றார்கள். ஐக்கிய மக்கள் சக்திக்குச் சென்றவர்களைப் பற்றி மாத்திரம் எதற்காகக் கேட்கிறீர்கள்? எமது வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மக்கள் வாக்களிப்பர்.
கே: ஐ.தே.கவுக்குள் கட்சி ஜனநாயகம் இல்லையெனக் கூறப்படுகிறதே?
கட்சிக்குள் ஜனநாயகம் உள்ளது. கட்சியின் யாப்பை மீறிச் செயற்பட்டவர்கள், ஜனநாயகம் பற்றிப் பேசுவது வேடிக்கையானது.
கே: ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால், பொருளாதாரத்தைச் சீரமைக்கலாம் என்ற கூற்று இனியும் வலிதானதாக இருக்குமென நம்புகிறீர்களா?
உண்மையாகவே! அது ஐக்கிய தேசிய கட்சியால் மட்டுமே முடியும். நாட்டு மக்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்.
கே: கோட்டாவின் ஆட்சி திருப்தியளிக்கவில்லையா?
சரியாகச் செய்தார் என, நான் நம்பவில்லை.
கே: மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றிலிரண்டு கோரிக்கை நிறைவேறுமா?
எந்தத் தரப்புக்கும் 2/3 கிடைக்காது. நாமும் அறுதிப் பெரும்பான்மையை மட்டுமே கோருகிறோம்.
கே:ஐக்கிய தேசிய கட்சியால் எத்தனை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்?
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் எத்தனை பேர் வாக்களிப்பர் என்பதே கேள்விக்குரியதாக உள்ள நிலையில், எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் என்பது, சகல கட்சிகளுக்குமே பிரச்சினைக்குரிய காரணமாக உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago