Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
எம். காசிநாதன் / 2020 ஜூன் 15 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூன் 25. 1975 ஆம் ஆண்டு. சுதந்திர இந்தியா, அவசர நிலைப் பிரகடனத்தைச் சந்தித்த தினம். காங்கிரஸ் கட்சியின் சார்பில், பிரதமராக இருந்த இந்திரா காந்தி, இந்தியாவில் 21 மாத காலம் 'எமெர்ஜென்சி' என்ற அடிப்படையில், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து சுதந்திரங்களையும் முடக்குவதற்கு, வழி அமைத்துக் கொடுத்த நாள் அது. இன்றைக்கும் அந்தத் தினம், ஜனநாயகவாதிகளின் மனதிலிருந்து விலகவில்லை.
அன்றைக்கு, ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் போராடிய 'பீஹார் சிங்கம்' என்று அழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண் இன்று இல்லை. அவருடன் போராடிய அடல்பிஹாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய், ஜோர்ஜ் பெர்ணான்டஸ், ஜோதிபாசு, பிஜூபட்நாயக், இராமகிருஷ்ண ஹெக்டே, காமராஜர், கருணாநிதி போன்ற தலைவர்கள் இப்போது இல்லை. ஆனால், அடுத்த தலைமுறைகளாக, நெருக்கடி நிலைக் கொடுமைகளை அனுபவித்த, அன்றைய இளம் தலைவர்கள் பலரும், இப்போது இருக்கிறார்கள்.
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட போது, இந்தியா குடியரசாகி 25 வருடங்கள் கடந்திருந்தன. சுதந்திரம் பெற்று 28 வருடம் என்ற நிலையில், அது ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு, மிகப்பெரிய சவாலாக எண்ணப்பட்டது.
என்றாலும், ஒரு மாநில உயர்நீதிமன்றம், பிரதமர் வெற்றிபெற்றிருந்த தேர்தலைச் செல்லாது என்று அறிவித்த சின்கா என்ற நீதிபதியைப் பெற்றிருந்தது. அந்தப் பெருமை, அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு இன்றைக்கும் இருக்கிறது.
இந்திரா காந்தி, பிரதமராக வெற்றி பெற்றிருந்த தேர்தலைச் செல்லாது என்று மட்டும் அறிவிக்கவில்லை; அவர், ஆறு வருடங்களுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் நீதிபதி சின்கா தீர்ப்பளித்தார். தேர்தல் முறைகேடுகள் செய்து, வெற்றி பெறுவதற்கு அன்றைக்கே தடை போட்டவர் சின்கா. நீதிபதி சின்கா, தற்போது உயிருடன் இல்லை.
இந்தத் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டை விசாரித்தவர் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர். ''பிரதமருக்கு, எம்.பி என்ற அடிப்படையில் உள்ள அனைத்து முன்னுரிமைகளும் ரத்துச் செய்யப்படுகிறது. அவர், நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் உரிமையும் ரத்துச் செய்யப்படுகிறது' என்று கூறியவர் கிருஷ்ண அய்யர். அவரும் தற்போது உயிருடன் இல்லை.
அலகாபாத் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும், அன்றைக்கு ஒரு பிரதமரின் வழக்கில், சட்டத்தின் பக்கம் நின்றது. நேர்மையான தேர்தல், ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்ற கோட்பாட்டை வகுத்துக் கொடுத்தது. ஆனால், அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பால் பதவி இழந்த இந்திரா காந்தியும் இன்றைக்கு இல்லை. அந்தத் தேர்தலை எதிர்த்து வழக்குப் போட்ட ராஜ் நாராயணனும் இன்றைக்கு உயிருடன் இல்லை.
ஆனால், நீதிபதி சின்கா அளித்த தீர்ப்பால், இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நெருக்கடியால், பிறப்பிக்கப்பட்ட அவசர நிலைப் பிரகடனத்தின் சுவடுகள் இன்னும் மறையவில்லை. 'இந்திய ஜனநாயகம்' என்ற அங்கத்தில், ஆங்காங்கே தழும்புகளாக இன்னும் காட்சியளிக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்த ஓர் அரசு, அந்த மக்களுக்கான அரசியல் சட்டத்தை வளைத்து, செயலிழக்க வைத்து, 42ஆவது திருத்தம் என்ற பெயரில் ஒரு 'மினி அரசியல் சட்டத்தையே' இந்த அவசர நிலைப் பிரகடன காலத்தில் உருவாக்கியதை, இன்றைக்கும் சட்ட வல்லுநர்கள் மறந்து விடவில்லை. ஏன், சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு 'எமெர்ஜென்ஸியும் அரசியல் சட்டமும் அதையொட்டி வந்த தீர்ப்புகளும்' இன்றைக்கும் இந்திய ஜனநாயகம் சந்தித்த சவால்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன.
இன்றைக்கும் எதிர்க்கட்சிகள், 'அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி' என்றெல்லாம் விமர்சனங்களை முன் வைக்கின்றன. ஆனால், அந்த 'எமெர்ஜென்ஸி' அறிவிக்கப்பட்டது மட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் ஆண்ட குஜராத், தமிழ்நாடு போன்ற மாநில அரசாங்கங்களைக் கலைக்கவும் நாடு முழுவதும் தலைவர்களைக் கண்மூடித்தனமாக 'மிசா' என்ற சட்டத்தில் கைது செய்யவும் வழி வகுத்தது.
'மிசா' காலத்தில், சிறைக் கொடுமைகளுக்காக, எமெர்ஜென்ஸி கால முறைகேடுகளுக்காக, அதிகார துஷ்பிரயோகங்களுக்காக, அகில இந்திய அளவில் உச்சநீதிமன்ற நீதிபதி 'ஷா' தலைமையில் விசாரணை ஆணைக்குழுவும் தமிழ்நாட்டில் சிறைக் கொடுமைகள் பற்றி விசாரிக்க நீதியரசர் 'இஸ்மாயில்' ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டன. அந்த அறிக்கைகள், 1975 எமெர்ஜென்ஸியின் அதிகார துஷ்பிரயோகங்களை, வெளிச்சமிட்டுக் காட்டும் இன்றைய ஆவணங்களாக, நூலகங்களில் இருக்கின்றன.
ஆனாலும், 'ஷா ஆணைக்குழு' அறிக்கை மட்டும், அரசாங்கத்திடம் கூட இல்லை என்ற அடிப்படையில், முன்னாள் எம்.பியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த இரா. செழியன் 'ஷா கமிஷன் அறிக்கை- தொலைந்ததும் மீட்டதும்' என்று, 284 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டு, நெருக்கடி நிலைமை தொடர்பான வரலாற்று ஆவணத்தை, வருங்காலத்துக்குப் படைத்து விட்டு, அவரும் மறைந்து விட்டார்.
நெருக்கடி நிலைமை பிறப்பிக்கப்பட்டு, இன்றைக்கு 45 வருடங்கள் உருண்டோடி விட்டன. இந்தக் காலகட்டத்தில், இந்திய ஜனநாயகம் எவ்வளவு முதிர்ச்சி பெற்றுள்ளது என்பதை, தற்போது 3,21,557 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ள நிலையில் காண முடிகிறது. இப்போது அறிவிக்கப்பட்டது நெருக்கடி நிலைமை இல்லை. நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ''கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, மார்ச் 22ஆம் திகதி, மக்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று காலை ஏழு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை இதைக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தியாவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். நம்முடைய இந்த முயற்சி, நமது சுய கட்டுப்பாட்டின் அடையாளமாகவும் நாட்டு நலனுக்குச் செய்யும் கடமையாகவும் இருக்கும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
எவ்வித அவசர நிலைப் பிரகடனமும் இல்லை. தனியாகச் சட்டம் போட்டுத் தடுக்கவும் இல்லை. ஆனால், மக்கள் அமைதியாக வீட்டிற்குள்ளே இருந்து, ஊரடங்கைக் கடைப்பிடித்தார்கள். ஒரு நாட்டின் பிரதமர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, 'சுய ஊரடங்கை' முழுமையாகக் கடைப்பிக்கும் அளவுக்கு ஜனநாயக முதிர்ச்சி இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என்பதை, உலக நாடுகள் கூட அன்றைக்கு உணர்ந்திருக்க முடியும்.
அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஊரடங்கு சில பல தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டு, தற்போது ஜூன் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டுடன் இன்றைக்கும் மக்கள் தங்களது அன்றாட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏறக்குறைய மார்ச் 22ஆம் திகதியிலிருந்து ஜூன் 30ஆம் திகதி வரை, 101 நாள்கள் ஊரடங்கு என்பது, இந்திய வரலாற்றில் முதல் முறை; குறிப்பாக, ஜூன் 1975இல் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலைப் பிரகடனத்திற்கு பின்னர்!
இந்த 101 நாள்களில், ஊரடங்கை மீறுவோருக்கு அபராதம் உண்டு. ஆனால், 'மிசா' காலம் போல், சிறைத் தண்டனையும் இல்லை; சிறைக் கொடுமையும் இல்லை! அன்று நேரில் நடைபெற்ற நிர்வாகம், இன்றைக்கு முழுக்க முழுக்க காணொளிக் காட்சிகள் மூலம் நடக்கிறது. அந்த அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்து, அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் கூட, பெரும்பாலும் மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமாகவே இருக்கிறார்கள்; அவருடன் ஆலோசனை நடத்துகிறார்கள்; நிதியுதவி செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.
மத்திய குழுக்கள், ஒரு மாநிலத்துக்கு ஆய்வு செய்யச் சென்றாலே, ''நில சுயாட்சிக்கு எதிரானது, மாநில உரிமைகளை மீறுவது'' என்று குரல்கள் எழும்பும் நாடு இந்தியா. ஆனால், இந்தக் காலகட்டத்தில், பல மத்திய குழுக்கள் மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே அவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்து மாநில அரசாங்கங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் செய்கிறார்கள்; ஆலோசனை சொல்கிறார்கள். இதுதான், மத்திய- மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான 'ஆரோக்கியமான' உறவு என்பது போல், காட்சிகள் அரங்கேறுவதும் இந்திய ஜனநாயகம் பெற்ற இன்னொரு பரினாம வளர்ச்சியே என்றால் மிகையாகாது.
அன்றைக்கு ஒரு பிரதமர், நடத்தியது அறிவிக்கப்பட்ட 'எமெர்ஜென்ஸி' என்றால், இன்றைக்கு 'எமெர்ஜென்ஸி'யே இல்லாமல், ஜனநாயகம் வழி நடத்தப்படுகிறது. மக்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் ஒரு ஜனநாயகக் குடியரசு செயற்படுகிறது. மாநில அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்துடன் இணங்கிப் போகின்றன. எதிர்க்கட்சிகள் 'அரசியலை' நிறுத்தி விட்டு, ஆக்கபூர்வமான விமர்சனங்களில் ஈடுபடுகின்றன. எல்லா புகழும், கொரோனா வைரஸுக்கே!
கொரோனா வைரஸ் தொற்று, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி, இதுவரை இந்தியாவில் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்கச் செய்திருக்கிறது. ஆனால், இந்திய ஜனநாயகத்துக்கு புதுவித அனுபவத்தை, முதிர்ச்சியைக் கொடுத்திருப்பது மட்டுமின்றி, ஆக்கபூர்வமான அரசியல் களத்தை, நாட்டுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இந்தக் களம் எதிர்காலத்தில், இதே மாதிரி நீடிக்குமா, மீண்டும் 'ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும்' 'எலியும் பூனைகளுமாக' மாறி, கொரோனா வைரஸ் காலத்திலும் 'அறிவிக்கப்படாத எமெர்ஜென்ஸி' என்று, விமர்சனங்களைக் கையில் எடுக்குமா?
எல்லாம், கொரோனா வைரஸ் தொற்றின் வீரியத்திலும், எதிர்வரும் நாள்களில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சிகளின் போக்கிலும் வெளிப்படும். ஆனால், கொரோனா வைரஸ் இந்திய ஜனநாயகத்தில், ஒரு புதிய சகாப்தம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago