2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

குழப்பகரமான ‘பெட்டி’க் கதைகள்

Johnsan Bastiampillai   / 2021 மார்ச் 23 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா

“கொரோனா வைரஸால் மரணித்த 181 முஸ்லிம்களின் ஜனாஸாக்களே தகனம் செய்யப்பட்டன. இதற்குள் வெளியில் சொல்ல முடியாத மறைமுக விடயங்கள் உள்ளன” என்று, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டிருக்கின்றது.

முஸ்லிம் அரசியலில், ‘பெட்டி’கள் பற்றிய நிறையக் கதைகள் இருக்கின்றன. பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற, ஒரு ‘பெட்டி’க் கதை நினைவுக்கு வருகின்றது.தேர்தல் தினத்தன்று இடம்பெற்ற களேபரத்தில், வாக்குப் பெட்டிகள் கொண்டு சென்ற வாகனமும் தாக்குதலுக்கு இலக்கானது. அன்றைய சம்பவத்தில், ஒரு சில ஆதரவாளர்களும் உயிரிழந்தனர். ஆனால், இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட அரசியல்வாதி, “பெட்டிக்கு என்ன நடந்தது” என்றுதான் முதலில் கேட்டதாக, அரசியல் அரங்கில் பேசிக் கொள்வார்கள்.

உண்மையில் இது கதையல்ல; இதுபோல, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஆட்சியமைக்கும் தருணங்களில் அல்லது, ஒரு குறிப்பிட்ட பெருந்தேசியக் கட்சிக்கு ஆதரவு தேவைப்படுகின்ற சந்தர்ப்பங்களில் ‘பெட்டி’கள் கைமாறப் பட்டதாக ஏராளம் கதைகள் உலா வருவதுண்டு. 

அந்த வரிசையில், இன்னுமொரு ‘பெட்டி’க் கதையாகவே பிரேத (ஜனாஸா) பெட்டிகளின் கதையும் அமைந்துள்ளது. ஆயினும், மேற்குறிப்பிட்ட வாக்குப்பெட்டிக் கதைகளை விட, இது மிகவும் பாரதூரமானதும், முஸ்லிம் சமூகத்துக்குத் தேவையற்ற சிக்கலைக் கொண்டு வரக் கூடியதுமாகும். 

நீண்டதொரு போராட்டத்துக்குப் பிறகு, கொவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்படும் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருக்கின்றது. முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனைய சகோதர இன மக்களும் இதற்காகக் குரல் கொடுத்தனர். இப்போது முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் மட்டுமன்றி, கத்தோலிக்கரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையிலேயே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.அதாவது, “181 ஜனாஸா பெட்டிகளே எரிக்கப்பட்டன”  என்று கூறியுள்ளார். “இதற்குப் பின்னால், மறைவான விடயங்கள் உள்ளன” என்றும் அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இது ஒரு மயக்கமான கருத்தாகும். அப்படியாயின், சுமார் அரைவாசி மரணங்கள் முஸ்லிம்களுடையவை என்று கூறப்பட்டு வந்த நிலையில், 181 பேரின் ஜனாஸாக்கள்தான் எரிக்கப்பட்டன என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் 181 ஜனாஸாக்களே எரிக்கப்பட்டன என்று கூற வருகின்றாரா அல்லது வெறும் பெட்டிகள் எரிக்கப்பட்டன என்று குறிப்பிடுகின்றாரா என்பதே சர்ச்சைக்கு காரணமாகும். 

இதனையடுத்து, முஸ்லிம் அரசியல், சமூக செயற்பாட்டாளர்களிடையே இவ்விடயம் பேசு பொருளாகியுள்ளது. மு.கா தலைவர் உட்பட பலரும் இக்கருத்தை விமர்சித்துள்ளனர். இது விடயத்தில் சிங்கள அமைப்புகளும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. 

இவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டன. இது சட்டப்படியான நடவடிக்கை என்றாலும், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் உரிமையை மேவுகின்ற ஒரு செயற்பாடாக அமைந்திருந்தது. இதனாலேயே இதற்கெதிரான ஜனநாயக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

2020 மார்ச் மாதத்துக்கும் ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்ட 2021 பெப்ரவரி 25ஆம் திகதிக்கும் இடையில் இலங்கையில் சுமார் 450 மரணங்கள்  பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் கணிசமானவர்கள் முஸ்லிம்கள் எனத் தகவல்கள் வெளியாகின.  

கொவிட்-19 நோய் காரணமாக உயிரிழந்த பிறகு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்களில் பெரும்பாலானவை எரிக்கப்பட்டன.20 நாளான பச்சிளம் சிசு முதல் வயதானவர், பெண்கள் எனச் சகலரது ஜனாஸாக்களும் தகனம் செய்யப்பட்டதை நாடறியும்.

இவ்வாறான தருணங்களில், பல குடும்பங்களுக்கு ஜனாஸாக்களைக் கொண்ட பிரேதப் பெட்டிகளே காண்பிக்கப்பட்டன. குடும்பங்கள் சிலவற்றுக்கு பிரேதப் பெட்டிகளுக்குச் சற்றுத் தொலைவில் நின்று, சமயக் கடமைகளைச் செய்ய இடமளிக்கப்பட்டது; வேறு சிலருக்கு அந்த வாய்ப்புக் கூடக் கிடைக்கவில்லை.  

இந்தப் பின்னணியிலேயே, கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் ஜனாஸாக்களை, இறுக்கமான சுகாதார விதிமுறைகளின் கீழ்,  நிலத்தில்  அடக்கம் செய்யும் அனுமதியை அரசாங்கம் வழங்கியது. வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் தவிர்ந்த, மாதக் கணக்காக வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் உறைந்து கிடந்த ஜனாஸாக்கள் மட்டுமல்லாமல், ஒரு கத்தோலிக்க சகோதரரின் உடலும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. 

இதனால், கொவிட்-19 நோயால் ஏற்பட்ட மரணம் பற்றியும் இறுதிச் சடங்கு பற்றியும் மனதில் இருந்த பயமும் கவலையும் நீங்கி இருந்த சூழ்நிலையிலேயே, குறிப்பிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர், இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டு, சர்ச்சைகளைக் கிளறி விட்டிருக்கின்றார்.  

அரசியல் பரபரப்பு சார்ந்த காரணங்களுக்காக, இந்தக் கருத்தை அவர் வெளியிட்டு இருக்கின்றார் என்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் இலாபம் தேடுவதற்காக, குட்டையைக் குழப்பி விட்டிருக்கின்றார் என்று இன்னுமொரு தரப்பினர் கூறுகின்றனர். 

பொதுவாக, இலங்கை அரசியலிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியலிலும் அடிப்படையற்றதும் நகைப்புக்கிடமானதும் பக்குவமற்றதும் மக்களைக் குழப்புகின்ற கருத்துகளுக்கு எப்போதும் தட்டுப்பாடு இருந்ததில்லை. மக்களுக்கு எவ்வாறு சேவையாற்றலாம் என்பதை விட, சேவையாற்றாமல் விட்டதற்கு என்ன காரணத்தைக் கூறித் தப்பித்துக் கொள்ளலாம் என்பதை, முஸ்லிம் தலைவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். 

எனவே, இதை ‘அந்த ரகம்’ சார்ந்த ஒரு கதையாகக் கணக்கெடுக்காமல் விட்டு விடலாம். ஆனால், அதையும் தாண்டி  குறித்த கருத்து பலவிதமான சலசலப்புகளையும் தேவையற்ற குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது. 

முஸ்லிம் காங்கிரஸோ, மக்கள் காங்கிரஸோ வெளிப்படையாக அரசாங்கத்துடன் உறவு கொண்டாடவில்லை என்றாலும், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் தரப்புடன் திரைமறைவு நட்பைக் கொண்டுள்ளனர். அவ்வாறான எம்.பிக்களுள் ஒருவராகவே இவரும் கருதப்படுகின்றார். 

எனவே, இவர் எந்த விதமான அடிப்படையும் இல்லாமல் பொய்யாக ஒரு கதையைக் கூறியிருப்பார் என்ற முடிவுக்கு, உடனேயே வந்து விட முடியாது. அவர் கூறிய கருத்தை விளக்கமாகச் சொல்லா விட்டாலும், அவர் என்ன கூற வருகின்றார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஏதோவொரு தகவலின் அடிப்படையில், அவரது வாயால் இந்த வார்த்தைகள் தவறி விழுந்திருக்கவும் கூடும். 

தவறுதலாக நடந்திருந்தால், அவர் உடனேயே அந்தக் கதையை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் அதைத் தெளிவுபடுத்தவோ, தவறுதலாகக் கூறி விட்டதாக இதுவரை வாபஸ் பெறவோ இல்லை. உண்மையில், இக் கருத்து இரண்டு விதமான குழப்பங்களைத் தோற்றுவித்துள்ளது.

 ஒன்று, முஸ்லிம் சமூகத்துக்குள்  ஏற்பட்டுள்ள கருத்தாடல்கள், கேள்விகள். 
இரண்டாவது, பெருந்தேசிய, கடும்போக்கு சக்திகளின் எதிர்வினைகளாகும். 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், நஸீர் எம்.பியின் இக்கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். வெள்ளைத் துணிப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த முன்னாள் எம்.பி அலிசாஹிர் மௌலானா உள்ளிட்டோரும் விமர்சித்துள்ளனர். 

சிங்கள தேரர் தரப்பொன்று, இது தொடர்பில் விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமகாலத்தில், இனவாதிகளின் வாய்க்கு அவலாகவும் இவ்விவகாரம் அமைந்துள்ளது. “பெட்டிகள் எரிக்கப்பட்டால், உடல்களுக்கு என்ன நடந்தன” என அவர்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர். 

அதேவேளை, 181 ஜனாஸாக்கள்தான் எரிக்கப்பட்டனவா என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், உடல்கள் வைக்கப்பட்ட பெட்டிகள் என்று கூறப்பட்டு எரிக்கப்பட்ட பிரேதப் பெட்டிகளுக்குள் அவர்களது ஜனாஸாக்கள் உண்மையிலேயே இருந்தன என உறவினர் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில், பெட்டிகளுக்குள் உடல்கள் இல்லை என்றால் எங்கே சென்றன? என்ற வினாவும் எழ இக்கருத்து காரணமாகியுள்ளது.  

மேற்குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சொன்ன விடயத்தில் ஒரு சதவீதம் உண்மை இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இரகசியமாகப் பேண வேண்டிய விடயத்தை, இரகசியமாகப் பேணாமலும், வெளியில் சொன்ன விடயத்தை தெளிவாக விளக்காமலும் இருப்பதானது தேவையற்ற குழப்பங்களுக்கே வித்திட்டுள்ளது. 

நிகழ்காலத்தில் முஸ்லிம் சமூகம், கடுமையான சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பாங்கிலும், நாட்டில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் பாங்கிலும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. சட்டத்தின் கெடுபிடிகள் பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தை நோக்கியே நகரும் வாய்ப்புள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் முஸ்லிம் சமூகம் தமது சிவில், அரசியல் பலத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய காலப்பகுதியில், இவ்வாறான குழப்பகரமான பேச்சுகளும், நேரத்தை விரயமாக்கும் அரசியலும் தவிர்க்கப்பட வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .