Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2021 ஜனவரி 28 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஐயூப்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை, 2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து, சுட்டுக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, ஐந்தாண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ‘பிள்ளையான்’ என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமது திணைக்களம், இந்த வழக்கை மேலும் தொடர்வதில்லை என்று, சட்ட மா அதிபர் கடந்த 11ஆம் திகதி, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்தே, அதற்கு இரண்டு நாள்களுக்குப் பின்னர், அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட போது, விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியில் இணைந்து, பிள்ளையான் செயற்பட்டு வந்தார்.
அதன் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் ஆதரவுடன், 2008ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு மாகாண முதமைச்சராகப் பதவி ஏற்றார். மஹிந்த அரசாங்கம் 2015 ஆண்டு கவிழ்ந்த பின்னர், அதே ஆண்டு ஒக்டோபர் மாதம், அதாவது பரராஜசிங்கம் கொலை நடைபெற்று சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர், அக்கொலை தொடர்பாகப் பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.
அன்று முதல் விடுதலையாகும் வரை, பிள்ளையான் விளக்க மறியலில் வைக்கப்பட்டு இருந்தார். கடந்த வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரகாந்தன், தற்போது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் செயற்படுகிறார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில், பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடரப்பட்ட பல அரசியல்வாதிகள், நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையிலேயே, பிள்ளையானும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எந்தக் காரணத்துக்காக, பிள்ளையானுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறோம் என்பதை, சட்ட மா அதிபர் திணைக்களம் உடனடியாகத் தெரிவிக்கவில்லை. அத்திணைக்களத்துக்கு அதற்காகப் பலமான காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், இங்கே ஒரு முக்கிய பிரச்சினை இருக்கிறது. அதாவது, ஒரு நபர், அதிலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளார். அந்தக் கொலை தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர், விடுதலையாகி இருக்கிறார். அவர் அந்தக் கொலையைச் செய்யவில்லையாயின் அக்கொலையைச் செய்தவர் யார்? பொது இடமொன்றிலேயே, பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டார். எனவே அது, தற்கொலை அல்ல என்பது உறுதியான விடயம்.
எனவே, நிச்சயமாக ஒரு கொலையாளி இருக்க வேண்டும். பிள்ளையான் அக் கொலையை செய்யவில்லையாயின், அக்கொலையாளியைக் கண்டுபிடிக்கும் விசாரணைகளை, உரிய அதிகாரிகள் மீண்டும் ஆரம்பிப்பார்களா? இல்லையாயின், ஏன்? கொலையாளியைக் கண்டுபிடிக்கும் விசாரணைகளை ஆரம்பித்தால் மட்டுமே, சட்டத்தின் ஆதிக்கம் உள்ள நாடாக, இலங்கை இருக்க முடியும்.
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இது போன்ற தீர்வு இல்லாத, அதாவது குற்றவாளிகள் இல்லாத பல குற்றச் செயல்களைக் காண முடியும். முதலில், அவ்வாறான அண்மைய சில சம்பவங்களைப் பார்ப்போம்.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய அழிவை ஏற்படுத்திய சுனாமியின் போது, இந்நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பும் திருகோணமலையும் முக்கியமானவை. அவற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 800 வீடுகளைக் கட்டிக்கொடுக்க, 2005 ஆம் ஆண்டு, அப்போதைய அரசாங்கம் ‘ராடா’ என்றழைக்கப்படும் மீளமைப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துக்கு, 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.ஆனால், அந்நிதி மோசடி செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, சட்ட மா அதிபர் திணைக்களம், முன்னாள் ‘ராடா’வின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸ், புலிகள் அமைப்பின் வடக்கு, கிழக்கு நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தன் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக, முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
ஆனால், பிரதான சாட்சியின் சாட்சியம் முன்னுக்குப் பின் முரணானது என்ற அடிப்படையில், 2020 ஜூலை 11 ஆம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றம், பிரதிவாதிகளை விடுதலை செய்தது. சாட்சியங்கள் முரணாக இருந்தால், நீதிபதிக்கு அவர்களை விடுதலை செய்வதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. ஆனால், ஒதுக்கப்பட்ட பணத்தைக் கொண்டு, வீடுகள் கட்டப்படாவிட்டால் அந்த 200 மில்லியன் ரூபாய் எங்கே, அதற்கு என்ன நடந்தது? இது, பொது மக்களின் பணம்.பிரதிவாதிகள் விடுதலையானாலும், முறையாக மீண்டும் வழக்குத் தாக்கல் செய்ய, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில், அமைச்சராக இருந்த போது, அரசியல் பணிகளுக்காக 153 சதோச ஊழியர்களைப் பணிக்கமர்த்தி, அரசாங்கத்துக்கு 40 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக, கடந்த அரசாங்கத்தின் காலத்தில், ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக, இலஞ்ச ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்தது. இலஞ்ச ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களும், மனுவில் கையொப்பம் இடவில்லை என்ற காரணத்துக்காக, கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.
ஆனால், இந்த முறைகேடான செயலில் ஜொன்ஸ்டன் ஈடுபடவில்லை என்றோ, அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தவில்லை என்றோ நீதிமன்றம் கூறவில்லை. அவ்வாறாயின், முறைப்படி மீண்டும் இந்த வழக்கைத் தாக்கல் செய்வதே சரியான நடவடிக்கையாகும். ஆனால், அது நடைபெறப் போவதில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், 2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி, நாராஹேன்பிட்டி, மாத்தா வீதியில், வாகனத்தில் செல்லும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், ஆட்சி மாறும் வரை, அதற்கு எதிராக எவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பின்னர், 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மூன்று கடற்படை உளவு அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதே ஆண்டு, டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றம் சந்தேக நபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நியமிக்கப்பட்ட சிங்களம் பேசும் ஜூரர்களின் ஆலோசனைப்படி, பிரதிவாதிகளை விடுதலை செய்தது.அப்பிரதிவாதிகள் குற்றவாளிகள் அல்ல என்றால், ரவிராஜூக்கு என்ன நடந்தது? கொலையாளிகள் யார்? அரசாங்கம் ரவிராஜின் குடும்பத்துக்கு, எவ்வாறு நீதி வழங்கப் போகிறது? சட்டத்தின் ஆட்சி என்றால், நீதி வழங்கப்பட வேண்டும்.
2006ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி, திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டனர். அது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே, 2013 ஆம் ஆண்டு மஹிந்தவின் அரசாங்கத்தின் கீழ், 12 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உட்பட 13 பேரை, இரகசியப் பொலிஸார் கைது செய்தனர். ஆனால், 2019ஆம் ஆண்டு ஜூலை நான்காம் திகதி, திருகோணமலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சகல சந்தேக நபர்களையும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து, விடுதலை செய்தது.
அந்தக் கொலைகளைப் பற்றி, மீண்டும் விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது, அதிகாரிகளின் கடமையாயினும் அந்த விடயம் அத்தோடு கைவிடப்பட்டது. இந்த விடுதலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமைப் பேரவையின் மூன்று பிரேரணைகளுக்கு, இணை அனுசரணை வழங்கிய கடந்த அரசாங்கத்தின் காலத்தில், இடம்பெற்றமையும் முக்கியமான விடயமாகும்.
இதேபோல், 1999ஆம் ஆண்டு ஐ.தே.க ஆதரவாளர் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், கடந்த வருடம் நவம்பர் மாதம் 20ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
1950களில், மிகவும் பேசப்பட்ட சதாசிவம் வழக்கில், தமது மனைவியான ஆனந்தம் ராஜேந்திராவைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கிரிக்கெட் வீரர் மகாதேவா சதாசிவம் விடுதலை செய்யப்பட்டார்.
புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர், ‘கேபி’ என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதை அடுத்து, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்ற பின்னர், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என, மேன்முறையீட்டு நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இவ்வாறு, குற்றங்கள் இடம்பெற்றும் குற்றவாளிகள் இல்லாத நூற்றுக் கணக்கான சம்பவங்களை, வரலாற்று ஏடுகளைப் புரட்டினால் கண்டுபிடிக்கலாம்.
குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் பிரதிவாதிகளை விடுவித்தால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் நடைமுறை அத்தோடு கைவிடப்படுகிறது. இது எமது நீதித் துறையின் மிகப் பெரும் குறைப்பாடாகும். இது சட்டத்தின் ஆட்சி என்ற சித்தாந்தத்துக்கும் முரணானதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago