2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

குடும்ப அரசியலின் புதிய பரிமாணங்கள்

Johnsan Bastiampillai   / 2022 ஜனவரி 24 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 03

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையில், அரசியல் கட்சிகளிடையே குடும்ப அரசியல் தவிர்க்கவியலாத ஒன்றாகியது.

1970களின் பின்னர், அது புதிய கட்டத்தை அடைந்தது. 1970களில் ஐக்கிய தேசிய கட்சியிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் இதேவகையிலான குடும்ப அரசியல், வெவ்வேறு வழிகளில் செல்வாக்குச் செலுத்தியது. இவை, இவ்விரு கட்சிகளின் இருப்புக்குமே ஆப்பு வைக்கும் நிலைக்கு, இறுதியில் சென்றுள்ளதை தற்போதைய அரசியல் நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன.

சுதந்திரத்துக்குப் பிந்தைய ஏழு தசாப்தகால தேர்தல் அரசியலில், இருபெரும் மையங்களாக நிலைபெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், அவற்றின் முடிவைக் கிட்டத்தட்ட எட்டிவிட்டன.

இதற்குப் பல விடயங்கள், பங்களித்திருந்தாலும் கட்சிகளுக்குள் நிலவிய குடும்ப ஆதிக்கமும் மேட்டுக்குடிசார் மனோநிலையும் கணிசமாகப் பங்களித்துள்ளன. அடித்தட்டு மக்களிடமிருந்து தொடர்ச்சியாக விலகி வந்த இக்கட்சிகளின் அஸ்தமனம் எதிர்பார்க்கப்பட்டதே!

கொலனியாதிக்க காலந்தொட்டே குடும்ப அரசியல், இலங்கை அரசியலின் பகுதியானது. எதுவுமற்றவர்கள் எவ்வாறு செல்வாக்குள்ள அனைத்துமுடையவர்களாக மாறினார்கள் என்பதை, குமாரி ஜெயவர்தனவின் ‘Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka’ என்ற நூல் மிக ஆழமாகவும் விரிவாகவும் பதிவிட்டுள்ளது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையிலும் சில முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. இதன்வழி 1970ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னரான சில நிகழ்வுகளை நோக்குவோம்.

தேர்தலில் வெற்றிபெற்று சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராயிருந்த நிலையில், 1971ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜே.வி.பி கிளர்ச்சியின் விளைவால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.
சிறிமாவுக்குப் பின்னர் கட்சியை யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் என்ற கேள்வி இருந்தது. சிறிமாவோவின் ஆதரவாளர்கள், சிறிமா, கட்சியைத் தனது மகனான அநுர பண்டாரநாயக்கவிடமே கையளிப்பார் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால், குறித்த காலப் பகுதியில்  அநுர, இலங்கையில் இருக்கவில்லை. அவர், தனது மேற்படிப்பை இலண்டனில் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், சிறிமாவோவின் மூத்த மகள் சுனேத்திரா பண்டாரநாயக்க, பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக இருந்தார். மெதுமெதுவாக அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்குள்ளவராக அவர் மாறினார்.

இப்பின்புலத்தில், 1972ஆம் ஆண்டு செப்டெம்பரில், குமார் ரூபசிங்க என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து சிறிமாவோவின் அரசாங்கத்தில், மறைமுகமாகச் செல்வாக்குச் செலுத்துபவர்களாக மாறினார்கள்.

1971 கிளர்ச்சி சுதந்திரக் கட்சிக்குள் ஏற்படுத்தியிருந்த நெருக்கடியால், கட்சியில் இருந்த சில இடதுசாரிகள், குமார் ரூபசிங்கவை அடுத்த தலைவராக்கவியலும் என நினைத்தார்கள். அதன்படி அவர்கள் ‘ஜனவேகய’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அதன் தொடர்ச்சியாக, ஜனவேகய’ என்ற சிங்கள இதழையும் ‘ஜனவேகம்’ என்ற தமிழ் இதழையும் வௌியிட்டார்கள்.

ரூபசிங்க, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். சுனேந்திரா பண்டாரநாயக்க - குமார் ரூபசிங்க தம்பதிகள் அரசாங்கத்தில் செலுத்திய ஆதிக்கம் குறித்து, 1974ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி, ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை ஒரு கட்டுரையை எழுதியது. ஒரு கட்டத்தில் ரூபசிங்க, அரசாங்கத்தில் செல்வாக்குள்ள அமைச்சரும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் மைத்துனரும் சிரிமாவோவின் ஆலோசகராகவும் இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாநாயக்கவுடன் முரண்பட்டார். இது அரசாங்கத்தில் தம்பதிகளின் அதிகரிக்கும் செல்வாக்கைக் காட்டுவதாகக் கருதப்பட்டது.  

இந்நிலையில், தனது கல்வியை முடித்து 1974இல் நாடுதிரும்பிய அநுர பண்டாரநாயக்க, அம்மாவுக்குப் பின்னர் தனக்கே தலைமைப்பதவி என நினைத்திருந்தார்.

அவர் நேரடியாக அரசியலில் இறங்கினார். சிறிமாவோ, அவரை சுதந்திரக் கட்சியின் இளையோர் அணித் தலைவராக நியமித்தார். பின்னர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இயக்குநர் பதவி, ரூபசிங்கவிட மிருந்து அநுரவுக்குக் கைமாறியது.

‘ஜனவேகய’ க்குப் போட்டியாக அநுர, தனது ஆதரவாளர்களின் உதவியுடன் ‘அத’ என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். இவருக்கு பீலிக்ஸ் டயஸ் பண்டாநாயக்க உதவியாக இருந்தார். இவ்வாறு, வாரிசு அரசியல் இருவருக்கும் இடையிலான நேரடிப் போட்டியானது.

கலாவெவ தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.பி. ரட்ணமலல 1974இல் இறந்ததையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட அநுர விரும்பினார். ஆனால் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இக்காலகட்டத்தில் அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது. போட்டியிடுகின்ற முதலாவது தேர்தலிலேயே தோல்வியடையக் கூடாது எனவும் அறிமுகமில்லாத ஒரு தொகுதியில் போட்டியிடுவது உசிதமல்ல எனவும் சிறிமாவோ நினைத்தார் எனப் பின்னாளில் சொல்லப்பட்டது. இக்காலப்பகுதியில் ‘ஜனவேகய’ வேகமிழக்கத் தொடங்கியது.

1977ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, ரூபசிங்கவின் அரசியல் கனவு கலைந்தது. இதே காலப்பகுதியில் ரூபசிங்கவுக்கும் சுனேத்திராவுக்கும் இடையில் மணமுறிவு ஏற்பட்டது. இலங்கையில், ரூபசிங்கவின் இரண்டாவது இனிங்ஸ் 1998ஆம் ஆண்டு தொடங்கியது.

அதற்கிடையில் நடைபெற்ற சில விடயங்கள் சுவையானவை. தேர்தல் முடிவுகள், தனது அரசியல் எதிர்காலத்துக்கு முற்றுப்புள்ளியிட்ட நிலையில், நோர்வேயில் இயங்கும் சமாதான ஆய்வு நிறுவகத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்கிருந்த காலத்தில், எரிக் சொல்ஹெய்முடன் பழக்கம் ஏற்பட்டது. பல அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றிய ரூபசிங்க, 1992ஆம் ஆண்டு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் International Alert (IA) என்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தில் செயலாளர் நாயகமாகப் பொறுப்பேற்றார். IA உலகின் பல மூன்றாமுலக நாடுகளில் மோதல் தவிர்ப்பு, சமாதான முன்னெடுப்பு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டிருந்தது. 

1997ஆம் ஆண்டு சியாரா லியோனில் நடைபெற்ற சதியின் விளைவாக, ஜனநாயக முறைப்படி தெரியப்பட்ட ஜனாதிபதியான Dr. Ahmad Tejan Kabbah பதவி நீக்கப்பட்டார். அங்கிருந்து அண்டை நாடான கினியாவுக்குத் தப்பிச்சென்ற ஜனாதிபதி, அமெரிக்க ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் ஐந்தாம் திகதி ஒரு நேர்காணலை வழங்கினார்.

அதில் அவர் “கடந்த ஆறு ஆண்டுகளாக எங்கள் நாட்டில் கிளர்ச்சிப்படையொன்று உருவாக்கப்பட்டு, செயற்பட்டு வருகிறது. அதை மூன்றாம் தரப்பொன்று இயக்குகிறது. அத்தரப்பு IA. அதன் செயலாளர் நாயகமாக ஓர் இலங்கையர் உள்ளார்” என்றார். இது சர்வதேச ரீதியில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது.

சியாரா லியோனின் ஜனாதிபதி குறிப்பிட்ட கிளர்ச்சிக்குழுவின் பெயர் புரட்சிகர ஐக்கிய முன்னணி (Revolutionary United Front-RUF). 1991ஆம் உருவாகிய இவ்வாயுதக் குழுவுக்கு லைபீரியாவில் மிகப்பெரிய ஆயுதக்குழுவான தேசிய தேசபக்தி முன்னணியின் தலைவரான சார்ள்ஸ் டெயிலரின் ஆதரவு, மிகப்பெரிய பலமாக இருந்தது.

இவ்விரண்டு குழுக்களும் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து விற்பதையே தொழிலாகக் கொண்டிருந்தன. சியோரா லியோனின் வைரம், தங்கச் சுரங்கங்கள் நிறைந்த பகுதிகளை புரட்சிகர ஐக்கிய முன்னணி கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அவர்களின் துணையுடனேயே ஜனாதிபதி கப்பாவுக்கு எதிரான சதி அரங்கேறியது.

தனது நேர்காணலில் ஜனாதிபதி கப்பா, ‘‘IA வைரத்தையும் தங்கத்தையும் இங்கிருந்து கடத்திச் செல்வதில் ஆர்வமாக இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இதனால் அவர்கள் புரட்சிகர ஐக்கிய முன்னணி ஆட்களுடன் நெருங்கிப் பழகியதோடு அவர்களுக்கு உதவியும் செய்தார்கள். 1995இல் சட்டவிரோதமான முறையில் குமார் ரூபசிங்க புரட்சிகர ஐக்கிய முன்னணி ஆட்களுடன் தங்கியிருந்துள்ளார்” என்றார்.
இக்குற்றச்சாட்டுகள் பிரித்தானியப் பாராளுமன்றில் கேள்விக்குள்ளாகின. 1998இல் குறித்த நிறுவனத்தை விட்டு இலங்கை மீண்டார் ரூபசிங்க. 

இலங்கையில் புதிய அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, பத்தாண்டுகள் நடத்தினார். அந்நிறுவனத்திற்கு பிரதான நிதி வளங்குநர்களாக நோர்வேஜிய அரசாங்கம் இருந்தது. 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்தமும் பேச்சுவார்த்தை முயற்சிகளும் ரூபசிங்கவின் நிறுவனத்துக்கு வாய்ப்பானது.

அனேகமான மேற்குலகத் தூதராலயங்கள் அந்நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்கின. 2008ஆம் ஆண்டு நோர்வேஜியத் தூதராலயத்தால் குறித்த நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதைடுத்து அவருக்கான நிதிகள் நிறுத்தப்பட்டதோடு நிதி மோசடியில் ஈடுபட்ட பணம் மீளக் கோரப்பட்டது.

தான் சிக்கலில் இருப்பதை உணர்ந்த ரூபசிங்க, அரசாங்கத்திடம் தஞ்சமடைந்தார். நோர்வே தூதராலயத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இராஜதந்திரிகளுக்கு இருக்கும் விடுபாட்டுரிமையை (diplomatic immunity) மீறி அவர்களுக்கு பிடிவிறாந்து அனுப்பினார்.

இது இலங்கைக்கு, இராஜதந்திர ரீதியில் அவமானத்தைத் தேடித்தந்தது தான் மிச்சம். 1970களில் நடைபெற்ற இன்னொரு குடும்ப அரசியல் சண்டையோடு அடுத்தவாரம் சந்திப்போம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .