2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

கிழக்காசியாவில் கெடுபிடிப்போர் - அதிவலதுவாதத்தின் அடிநாதம்

Johnsan Bastiampillai   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 15: 

தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் தீவிரவலதுசாரிகளின் அணிதிரட்டலும் கிழக்காசிய அதிவலதுசாரி அரங்காடிகளின் நடத்தையும் அரசியல் உபாயங்களும், ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவில் உள்ள அவர்களது சகாக்களிடமிருந்து வேறுபடுகின்றன என்பதை, கடந்த இருவாரங்களில் பார்த்தோம். 

தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள தீவிரவலதுசாரி சக்திகள், கடந்துபோன எதேச்சதிகார அல்லது கொலனித்துவ காலத்தை மகிமைப்படுத்துவதில், அரசியல் ரீதியாக பிற்போக்குத்தனமாக உள்ளனர். 

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தசாப்தங்களில் இருந்து மாறாத கருத்தியல் கூற்றுகளை, தங்கள் அடிப்படைகளாகக் கொண்டுள்ளனர். இதன்வழி, ‘மற்றவர்களை’ பற்றிய வெறுப்புணர்வும் வரலாறு பற்றிய மாற்றுப்பார்வையும் கம்யூனிச எதிர்ப்பும், இவர்களது ஆதார சுருதியாகவுள்ளது. 

ஆசியாவில், அமெரிக்கா தலைமையிலான கெடுபிடிப்போர் தோற்றுவித்த புவிசார் அரசியலால், இந்த வேறுபாட்டை விளக்கவியலும். 

போருக்குப் பிந்தைய ஜப்பானிலும் தென்கொரியாவிலும் தீவிரவலதுசாரி உயரடுக்குகள் பலப்படுத்தப்பட்டன. ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவுக்கு எதிராக ஆசியாவில் முடிவடையாத கெடுபிடிப்போர், தீவிரவலதுசாரிகளின் நிறுவன நிலைத்தன்மையையும் அதன் பழைய கம்யூனிச எதிர்ப்பு மற்றும் கொலனித்துவ இனவெறியின் அரசியல் அதிர்வலையையும் அனுமதித்தது. எனவே, கிழக்கு ஆசியாவில் ஜனநாயக அரசியல் என்பது, கெடுபிடிப்போரின் அடிநாதத்தை முன்னிறுத்துகிறது.

தென்கொரியாவின் தீவிரவலதுசாரிகள், முதன்மையாக சர்வாதிகார உயரடுக்கினரையும் வயதான குடிமக்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் கடந்த எதேச்சதிகார தலைவர்களை மகிமைப்படுத்துகிறார்கள். வடகொரிய சார்பு கம்யூனிஸ்டுகள் என்று முத்திரை குத்துவதன் மூலம் ஜனநாயக, முற்போக்கு சக்திகளை கொச்சைப்படுத்துகிறார்கள். 

ஜப்பானில், நிறுவன மற்றும் நிறுவனத்துக்கு அப்பாற்பட்ட தீவிரவலதுசாரி குழுக்கள் இரண்டும் கொலனித்துவ தவறுகளை மறுப்பதில் ஒன்றுபட்டுள்ளன. பல தலைமுறைகளாக ஜப்பானில் வாழும் பழைமையான ‘ஜைனிச்சி கொரியர்’களை இலக்காகக் கொண்டுள்ளனர். 

இருநாடுகளிலும் உள்ள தீவிரவலதுசாரிகள் ஜனரஞ்சகத்தை நாடவில்லை; ஊழல் நிறைந்த அரசியல் ஸ்தாபனத்தை நிராகரிக்கவில்லை. மாறாக, தென்கொரியாவில் ஜனநாயகத்தையும் மக்கள் இறைமையையும்  நிலைநாட்டப் போராடும் முற்போக்கு சக்திகளை இலக்கு வைக்கின்றன. 

தென் கொரியாவில் உள்ள சீர்திருத்தவாத முற்போக்குக் குழுக்கள், மக்கள் இறையாண்மையை மீறி, தங்கள் சொந்தப் பைகளை செழுமைப்படுத்திக் கொண்ட சர்வாதிகார உயரடுக்குகளுக்கு எதிராக, ஜனநாயகத்தை மீட்டெடுப்பதிலும் ஆழப்படுத்துவதிலும் பொது மக்கள் பங்கை வலியுறுத்தி நீண்ட காலமாகப் போராடுகிறார்கள்.  இவர்களே தென்கொரியாவில்  ஜனநாயகமயமாக்கலுக்கு வழிசெய்து, 1987இல் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மக்கள் எழுச்சிகளை ஏற்பாடு செய்தனர். இவர்களை ஜனரஞ்சகவாதிகள் என்றும் ‘அரசின் எதிரிகள்’ என்றும்  தீவிரவலதுசாரிகள் முத்திரை குத்துகிறார்கள்.

கிழக்கு ஆசியாவில் தீவிரவலதுசாரிகள் தேசியவாத சாய்வுகளை எச்சரிக்கையோடு  பயன்படுத்துகிறார்கள். தேசியவாதம் என்பது, தென்கொரிய வலதுசாரிகளுக்கு மட்டும் பிரத்தியேகமானதல்ல; ஏனெனில், மத்திய-இடதுசாரி சக்திகளும் கொலனித்துவ அநீதிகளை சரிசெய்வதற்கும் அமெரிக்காவுடனான சமமற்ற உறவுகளை சரிசெய்வதற்கும், அவர்களின் விருப்பத்தில் தேசியவாதத்தின் சமத்துவத் தன்மையை ஆதரிக்கின்றன. 

பசுபிக் போரின்போது, ஜப்பானிய இராணுவத்தின் இராணுவ பாலியல் அடிமை முறை (‘ஆறுதல் பெண்கள்’) போன்ற தீர்க்கப்படாத கொலனித்துவ பிரச்சினைகள் வரும்போது, தென்​​கொரிய முற்போக்குவாதிகள் தீவிர வலதுசாரிகளை விட, தேசியவாதிகளாக உள்ளனர். 

ஜப்பானில் உள்ள தீவிரவலதுசாரிகள், ஜப்பான்-அமெரிக்க இராணுவக் கூட்டணிக்கு எதிரான, தங்கள் போராட்டத்தில் ஓர் அமைதிவாத தேசியவாதத்தை நாடியுள்ளனர். இது அமெரிக்க மேலாதிக்க சக்தியின் திணிப்பாகவும் ஜப்பானின் தேசிய இறையாண்மையின் சமரசமாகவும் பார்க்கப்படுகிறது. ஜப்பானிய தீவிர வலதுசாரிகளின் முக்கியமான அம்சம், அவர்களின் ஏகாதிபத்திய தேசியவாதமாகும். கொலனித்துவ தவறுகளை மறுப்பது, ‘ஜைனிச்சி கொரியர்’களை குறிவைப்பது ஆகியன அவர்களின் முக்கிய பணியாகவுள்ளது. 

தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள தீவிரவலதுசாரிகள், தங்கள் மேற்கத்திய சகாக்களிடமிருந்து வேறுபடுகிறார்கள். இவர்கள் கொலனித்துவ கடந்த காலத்தை மகிமைப்படுத்த, ‘திருத்தல்வாத’ வரலாற்றுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அவர்களின் கருத்தியல் கூற்றுகள், போருக்குப் பிந்தைய தசாப்தங்களில் இருந்து மாறாமல் உள்ளன. 

இதை ஆழமாக அவதானித்தால், அவர்கள் கெடுபிடிப்போரின் போது நிறுவப்பட்ட தங்கள் அரசியல், பொருளாதார, கருத்தியல் மேலாதிக்கம் ஆகியவற்றை மீண்டும் நிலைநிறுத்த விரும்புகிறார்கள். ஏனெனில், அவர்களின் அரசியல் பார்வை, கெடுபிடிப்போர் சகாப்தத்தின் உச்சக்கட்டத்துக்குத் திரும்புகிறது. அவர்களின் எதிரிகள், அந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட நீண்டகால உள்நாட்டு அரங்காடிகள். 

தென்கொரிய தீவிரவலதுசாரிகள், தாராளவாத ஜனநாயகத்துக்குத் திரும்புவதை ஆதரிக்கிறார்கள். இது கெடுபிடிப்போரின் போது, நிறுவப்பட்ட கம்யூனிச எதிர்ப்பு சர்வாதிகார அமைப்பைத் தவிர வேறில்லை. இதனால்தான் அவர்களின் கருத்தியல் அமைப்பு, இன்னும் வடகொரிய எதிர்ப்பு மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு, மக்கள் ஜனநாயகத்துக்காக வாதிடும் சீர்திருத்த-முற்போக்கு சக்திகளுக்கு கடுமையான எதிர்ப்பாக உள்ளது. 

தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள தீவிரவலதுசாரிகள் தனிப்பட்ட உரிமைகள், சமத்துவம், பன்மைத்துவம் போன்ற தாராளவாத நெறிமுறைகளின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானவர்கள், இவர்கள், வன்முறை வழிகளில் தங்கள் எதிரிகளை அகற்றுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள். இது, அவர்களின் வாய்மொழி அவதூறுகள், தனிப்பட்ட தாக்குதல்கள், உடல்ரீதியான ஊறுவிளைவிப்பு, போர்க்குணம்மிக்க முறைகளைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப்பட்டது.

மேற்கத்திய ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஆசியாவில் கெடுபிடிப்போர் எவ்வாறு வெளிப்பட்டது என்பதை ஆராய்வதன் மூலம், கிழக்கு ஆசியாவில் தீவிரவலதுசாரிகளின் கருத்தியல் உள்ளடக்கம் மற்றும் 21ஆம் நூற்றாண்டில் அவர்களின் அணிதிரட்டல் ஆகிய இரண்டும் விளக்கப்படலாம். 

இடதுசாரி-வலதுசாரி நிலைகள் என்பது, காலத்திலும் நாடுகளிலும் மாறுபடும் வரலாற்று மற்றும் சமூகக் கட்டமைப்பாகும். சமகால ஐரோப்பாவில், வெவ்வேறு உரிமைகோரல்களுடன் தீவிரவலதுசாரிகளின் மறுமலர்ச்சி, கிழக்கு ஆசியாவில் தற்போதைய தாராளவாதிகள் மத்தியில் அதே தீவிர சித்தாந்தங்களின் எதிரொலியை செயற்படுத்துகிறது. 

ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு, கெடுபிடிப்போர் என்பது 1989இல் பெர்லின் சுவரின் வீழ்ச்சியுடன் முறையாக முடிந்தது, அதேவேளை, அது குளிர்ந்த நெருக்கடியில்லாத போராக இருந்தது. கெடுபிடிப்போர் நிர்ப்பந்தங்கள் நாசிச அட்டூழியங்களை முழுமையாக விசாரிக்கவோ, நாஜி ஒத்துழைப்பாளர்களின் தண்டனையை நடைமுறைப்படுத்தவோ அனுமதிக்கவில்லை. 

கெடுபிடிப்போரின் இத்தகைய வித்தியாசமான அனுபவம், தீவிரவலதுசாரிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. கம்யூனிச எதிர்ப்பின் பெயரால் எந்தவொரு கொடுமையையும் செய்ய முடிந்தது. 

பல கொலனித்துவ நாடுகளுக்கு, கெடுபிடிப்போர் என்பது கொடூரமான உள்நாட்டுப் போர்கள் மற்றும் பிற அரசியல் வன்முறைகளை உள்ளடக்கிய சூடான போர்களின் சகாப்தமாக இருந்தது. கெடுபிடிப்போர் தொடங்கியவுடன், கிழக்காசியப் பிராந்தியத்தில் கம்யூனிச விரிவாக்கத்துக்கு எதிராக, வலுவான அரண் அமைப்பதற்கு அமெரிக்கா முன்னுரிமை அளித்தது. இந்த மேலாதிக்க நலன்களிலிருந்து, தென்கொரியாவில் கொலனித்துவ அரசையும் அதற்கு ஏதுவான சட்டக் கட்டமைப்புகளையும் மீண்டும் நிலைநிறுத்துவதை ஆதரித்தது. 

ஜப்பானிய பேரரசரையும் மற்றைய போர்க் குற்றவாளிகளையும் அரசியல் பொறுப்புக்கூறலில் இருந்து அமெரிக்கா காப்பாற்றியது. கிழக்கு ஆசியாவில் இராணுவவாதம், அரச வன்முறை மற்றும் இன-தேசிய ஒற்றுமையை இயல்பாக்குவதன் மூலம் கொலனித்துவத்துக்குப் பிந்தைய தீவிர வலதுசாரி அமைப்புகள் கம்யூனிசத்துக்கு எதிராக ஒரு முதலாளித்துவக் காட்சிப் பொலிவை உருவாக்குவதற்குப் பயன்பட்டன. இது பழைமைவாத ஸ்தாபனத்தின் வலுவூட்டலுக்கும் சட்டபூர்வமாதலுக்கும் மேலும் பங்களித்தது. 

கெடுபிடிப்போர் உத்தரவின் கீழ், தென்கொரியாவின் எதேச்சதிகார அரசு கம்யூனிச வடகொரியாவுக்கு எதிரான போராட்டத்தில், அதன் அரசியல் சட்டபூர்வமான தன்மையை உருவாக்கியது. அதேநேரத்தில் கம்யூனிச ஆதரவாளர்களை ஒழிக்கும் பெயரில், அரசியல் அதிருப்தியாளர்களை, விமர்சனத்தை  வன்முறை கொண்டு  அடக்குவதை நியாயப்படுத்தியது. இவற்றின் வழி கட்டற்ற வலது தீவிரவாதத்தை ஆசிர்வதித்தது. 

போருக்குப் பிந்தைய ஜப்பானை நிர்வகித்த சக்திவாய்ந்த பழைமைவாதக் கூட்டமானது, முதலாளித்துவ விரிவாக்கம் மற்றும் ஒற்றை இனத்துவக் கட்டுமானத்தில் வெறித்தனமாக இருந்தது. அதன் கீழ், ‘ஜைனிச்சி கொரியர்’கள் பரவலான சட்ட மற்றும் சட்டத்துக்குப் புறம்பான இனவெறிக்கு ஆளாகினர். 

சுருக்கமாக, கிழக்காசியாவில் கெடுபிடிப்போர் ஒழுங்கின் தொடர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல், தென்கொரியா மற்றும் ஜப்பானில் சமகால தீவிரவலதுசாரிகளின் கருத்தியல் கூற்றுகளையும் அணிதிரட்டல் முறைகளையும் எம்மால் முழுமையாக புரிந்து கொள்ளமுடியாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .