Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
‘தாய் கூட, அழுகின்ற பிள்ளைக்குத் தானே, பசி என்று பரிவோடு பாலூட்ட வருவாள். உன் வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட, முன்வந்து நின்றால் தான் முகம் காட்டும். இங்கே, மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும், உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்....’ இது திரைப்பாடல் ஒன்றுக்காக, வாலி எழுதிய வரிகளாகும்.
இதைத்தான், ‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்று, நமக்கு பாலர் வகுப்பில் இருந்தே சொல்லித் தந்திருக்கின்றார்கள். ஆனால், இன்னும் அரசியலில் ‘பால்குடி மறவாத’ பிள்ளைகளைப் போல, சிறுபிள்ளைத்தனமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், தமக்குத் தேவை எனும் போது மட்டும் அழுது ஆர்ப்பரித்து, அவசியமானவற்றைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இருப்பினும், சமூகத்தின் தேவைகளுக்காகக் குரல்கொடுக்காமல், அவை எல்லாம் தானாகக் கிடைக்கும் என்ற தோரணையில் வாழாவிருக்கின்றனர்.
தேர்தல் காலத்தில், மக்களிடம் வாக்குக் கேட்டு வருகின்றார்கள். பதவி தேவையான போது, அதற்காக அழுத்தங்களைக் கொடுக்கின்றார்கள். அமைச்சு, பிரதியமைச்சு பதவிகளை பெறுவதற்காக ஆலாய்ப் பறக்கின்றார்கள். வாகனம், நிதி தேவையாகின்ற போது, அவற்றைப் பெறவும் சூட்சுமமாகச் செயற்படுகின்றார்கள்.
ஆனால், முஸ்லிம் மக்களின் தேவைக்காக, பிரச்சினைகளுக்காக, அபிலாஷைகளுக்காகப் பேசுவதற்கு மட்டும் பின்வாங்குகின்றார்கள். முஸ்லிம் அரசியல் பரப்பில், மூன்றுக்கும் குறைவான அரசியல்வாதிகளே கொஞ்சமாவது சமூகப் பிரச்சினைகளுக்காக பேசுகின்றார்கள். மீதமுள்ளோர் அரசியல் ஜடங்களைப் போலவோ, யாரோ ஆட்டுவிக்கும் பொம்மைகளைப் போலவோ காலத்தை வீணடித்து விட்டுப் போகின்றார்கள்.
இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போது, அவர்கள் ஒரு ‘ரெடிமேட்’ பதிலை எப்போதும் சொல்வதுண்டு. அதாவது, “நாங்கள் பேசாமல் இல்லை; பேச வேண்டிய இடத்தில் இரகசியமாகப் பேசிக் கொண்டே இருக்கின்றோம்” என்பார்கள். அல்லது, “பேசுவதற்கான உரிய நேரம் வரும்வரை காத்திருக்கின்றோம்” என்பார்கள்.
ஆனால், அவ்வாறு இரகசியமான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு, முஸ்லிம் கட்சித் தலைவர்களும் முஸ்லிம் எம்.பிக்களும் பெற்றுக் கொடுத்த உரிமைகள், வென்றெடுத்த அபிலாஷைகளைப் பட்டியலிட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டால், அந்தக் கேள்வியே விளங்காத மாதிரி, மறுபக்கம் திரும்பிக் கொள்வதையே தொடர்ச்சியாகக் காண்கின்றோம்.
முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் பேசாமடந்தைகளாக இருந்தமையால், முஸ்லிம் சமூகம் நிறையவற்றை இழந்திருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால அடிப்படைப் பிரச்சினைகள், இன்னும் தீர்க்கப்படாதிருக்கின்ற பின்னணியில், அண்மைக்காலமாகப் புதுப்புது பிரச்சினைகள், நெருக்கடிகள் உருவெடுத்துக் கொண்டிருப்பதையும் காணலாம்.
வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு இலட்சக்கணக்கான ஏக்கர் காணிப் பிரச்சினைகள் உள்ளன. இன ரீதியான விகிதாசார அடிப்படையில் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுவதில் பாராமுகம் உள்ளது. வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களின் இருப்பும் வாழ்வும் சார்ந்த சிக்கல்கள் உள்ளன. இவையெல்லாம் இன்னும் தீர்க்கப்படவில்லை.
ஆயுதக் குழுக்களாலும் இனவாதக் கும்பல்களாலும் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பலியெடுப்புகளுக்கு நீதி கிடைக்கவில்லை. நிகழ்த்தப்பட்ட உரிமை மீறல்கள், குறைந்தபட்சம் முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஆவணப்படுத்தப்படவோ, பொதுவெளியில் முன்வைக்கப்படவோ இல்லை.
இப்போது அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றியும் தேர்தல் முறைமை மீளாய்வு பற்றியும் பேசப்படுகின்றது. ஆனால், முஸ்லிம் கட்சிகளும் எம்.பிக்களும் கூட்டாகச் சந்தித்து, இதுபோன்ற விடயங்களைக் கலந்து பேசி, ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வருவதற்கு, காத்திரமான நடவடிக்கைகளை எடுத்ததாகத் தெரியவில்லை.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில், ஆரம்பத்தில் இருந்தே கவனம் செலுத்தாமல் உறக்கத்தில் இருந்து விட்டு, கடைசிக் கட்டத்தில் தலையில் அடித்துக் கொண்டு ஓடிவந்து, “முஸ்லிம்களுக்கும் பங்கு வேண்டும்”, “முஸ்லிம்களின் நிலைப்பாடு இதுதான்” என்று கூற முற்பட்டமையால், முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைக்க வேண்டிய பல அனுகூலங்கள், கடந்த காலத்தில் கிடைக்காமல் போன அனுபவங்கள் ஏராளம் உள்ளன.
இவ்வாறான விடயங்களில், முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஒருபுறமிருக்க, முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை இன, மத அடையாளமும் தனித்துவமும் கேலிக்கு உள்ளாக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில், அதற்கான விளக்கத்தை வழங்குவதற்குக் கூட, முஸ்லிம் எம்.பிக்கள் ஆகக் குறைந்தபட்ச முனைப்பையும் வெளிக்காட்டாத போக்கும் அவதானிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை ஒரு பல்லின நாடென்ற அடிப்படையில், ஏனைய இனங்களைப் போலவே முஸ்லிம்களும் பல விடயங்களில் நெகிழ்ச்சிப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அரபு தேசங்களைப் போல, இங்கு செயற்படுவது நடைமுறைச் சாத்தியமற்றது. ஆயினும், இலங்கையில் அதையும் தாண்டிய மிதமிஞ்சிய ஒடுக்குமுறை, முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப்படுகின்றமை கண்கூடு.
ஏற்கெனவே, ஹலால் சான்றிதழ், ஹபாயா போன்ற பல விடயங்கள், சிதைக்கப்பட்டு விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் உளவியல் ரீதியாகப் பலவீனப்பட்டிருந்த சூழலில், இஸ்லாமிய சமயத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து இனவாதிகள், முஸ்லிம்களுக்கே அறிவுரை கூறும் பாங்கில் செயற்படுவதைக் காண முடிகின்றது.
இந்நிலையில், தனியார் சட்டத்தின் பிரதான கூறாகத் திகழ்கின்ற காதி நீதிமன்றங்களை, முழுமையாக இல்லாதொழிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட எம்.பியும் ஒரேயொரு முஸ்லிம் அமைச்சருமான நீதியமைச்சரின் மூலம், அரசாங்கம் இந்த அறிவிப்பைச் செய்துள்ளது.
முன்னதாக, முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்புத் தொடர்பில், ஓய்வுநிலை நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழு, 10 வருடங்கள் ஆராய்ந்து அறிக்கையை கையளித்தது. இதனுடன் முரண்பட்டுக் கொண்டு, உலமா சபை சார்ந்த குழு, இன்னுமோர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. பின்னர், நீதியமைச்சரான அலிசப்ரியும் ஒரு குழுவை நியமித்திருந்தார்.
தனியார் சட்டத்தின் கீழ்வரும் பல விடயங்களில், காலத்துக்கேற்ற மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே, முஸ்லிம்களின் நிலைப்பாடாகும். அதனடிப்படையில், இச்சட்டத்தில் பல ஏற்பாடுகளைத் திருத்துவதற்கான பொதுவான இணக்கப்பாடு காணப்படுகின்றது. அந்த விடயங்களைத் திருத்துவதை விட்டு விட்டு, ஒட்டுமொத்தமாக காதி நீதிமன்ற முறைமையை வலிதாக்குவதில், ஆட்சியாளர்கள் முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளனர்.
முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலைமையை, இன்னுமொரு வகையிலும் நோக்கலாம். அதாவது, முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட விடயங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு, சமூகத்தின் உரிமைகள், அபிலாஷைகள், அரசியல் அணுகுமுறை என்பன தொடர்பில், முஸ்லிம் அரசியல்வாதிகள், அங்கிகரிக்கப்பட்ட மத கட்டமைப்புகள், தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறியதன் விளைவாக, இன்று வெளியில் இருந்து அவை திணிக்கப்படுகின்ற நிலை தோன்றியுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான நெருக்குவாரங்கள் குறித்து, இன்னும் பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் வாய் திறக்கவில்லை. செயல்வீரர்களாக அன்றி, ‘காட்போட்’ வீரர்களாகவே அவர்கள் தெரிகின்றனர்.
அண்மையில், ஒரு பௌத்த துறவி கூறிய கருத்துகள், முஸ்லிம் சமூகத்துக்குள் பெரும் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், “சமூகத்துக்காக உயிரைக்கூட கொடுப்போம்” என்று வாய்ச்சொல்லில் வீராப்புக் காட்டுகின்ற முஸ்லிம் எம்.பிக்கள், ‘இதுபற்றிப் பேசினால் இனவாதம் தூண்டப்பட்டு விடும்’ என்ற காரணத்தின் அடிப்படையில், தமது எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் கூட வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், சகோதர சமூகத்தைச் சேர்ந்த எம்.பி உரையாற்றுவது, கணிசமான முஸ்லிம் மக்களுக்கு, ஓர் ஆறுதலாக அமைகின்றது. இருப்பினும், முஸ்லிம் எம்.பிக்கள், ‘நாங்களும் பேச மாட்டோம்; நீங்களும் பேசக் கூடாது’ என்ற மனநிலையில் இருப்பது போலவே, அவர்களது எதிர்வினைகள் உணர்த்துகின்றன.
“இந்த ஆட்சியில், நாடாளுமன்றத்தில் பேசி என்ன நடக்கப் போகின்றது”? என்று முஸ்லிம் எம்.பிக்கள் சொல்வது நமக்குக் கேட்கின்றது. ஆனால், அப்படியென்றால் விமர்சனங்கள் வலுப்பெறத் தொடங்கிய பிறகு, முறைப்பாடு செய்வதும் முரண்நகையாகத் தெரியவில்லையா?
நிலைமைகளைக் கவனமாகக் கையாள வேண்டும். அந்தவகையில், முஸ்லிம் சமூகத்தை உரசிச் சூடாக்க முற்படுகின்ற இனவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும், சாதகமான களச்சூழலை மறைமுகமாக உருவாக்காத வகையில், நிலைமைகளைக் கவனமாகக் கையாள வேண்டும்.
அந்த வகையில், முஸ்லிம் சமூகத்தை உரசிச் சூடாக்க முற்படுகின்ற இனவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும், மறைமுகமாக சாதகமான களச்சூழலை ஏற்படுத்தக் கூடாது என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அப்படியானால், மாற்றுவழிகளில் காய்களை நகர்த்துவது அவசியம்.
அதுபோல, எல்லாக் காலமும் எல்லா விவகாரங்களுக்கும் எதிராகப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவ்வாறு, முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால், பேச வேண்டிய விடயத்தை, பேச வேண்டிய இடத்தில், பேச வேண்டிய நபருடன் பொருத்தமான விதத்தில், பேசியே ஆக வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago