Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 29 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா. கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில், சிங்களப் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் முயற்சியை, அரசாங்கம் மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ளதென, மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் (இலங்கை தமிழரசுக் கட்சி) முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம் முயல்கிறது. அதனோர் அங்கமாகவே, தொல்பொருள்களில் கைகள் வைக்கப்படுகின்றன என, ‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
மேலும், இனவழிப்பை மேற்கொண்ட அரசாங்கம், உரிமைகளைப் பகிரங்கமாக அபகரிக்கும் மிகச்சூட்சுமமான முயற்சிகளில் ஈடுபட்டு, தமிழரின் கண்களுக்குள் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கின்றது. அதற்கு, தமிழர் ஒருபோதும் அடிபணியக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதேசங்களில், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியது போல, கிழக்கு மாகாண தொல்பொருள் ஆராய்ச்சிச் செயலணி ஊடாக, சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்ற நோக்கம், அரசாங்கத்துக்கு இருக்கின்றது என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அவற்றையெல்லாம் எதிர்த்து, எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமாயின், தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.
அரசாங்கத்தில் இருந்துகொண்டுதான், எமது மக்களுக்கான தேவையைப் பூர்த்திசெய்ய முடியும் என்றில்லை; எதிர்க்கட்சியில் இருந்தாலும் செய்யமுடியும். அதற்கான தகுதியும் திட்டமிடலும் என்னிடம் உள்ளது. உரிமையுடன் கூடிய அபிவிருத்தியே என்றும் நிலையானது என்றும் அவர் தனது செவ்வியில் கூறியிருந்தார். செவ்வியின் விவரம் வருமாறு:
கே: மட்டக்களப்பு மாவட்டத்தில் உங்கள் வெற்றிவாய்ப்பு எவ்வாறு உள்ளது?
எனது வெற்றி உறுதி செய்யப்பட்டது. அதற்கான ஆதாரங்களை ஊடகங்களின் வாயிலாகக் காணமுடிகின்றது. மட்டக்களப்பில் 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் 100 வேட்பாளர்களே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்ற நோக்கத்துடன் போட்டியிடுகின்றனர்.
ஏனைய சுயேச்சைக் குழுக்கள், முகவர்கள் என்ற நோக்கத்தோடு இறக்கப்பட்டவர்களாவர். 100 வேட்பாளர்களில் 95 வேட்பாளர்கள் அதுவும் தமிழ் வேட்பாளர்கள், சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்களின் ஊடாகவும், தங்களின் தேர்தல் மேடைகளிலும் என்னைத்தான் விமர்சனம் செய்து அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
கே: மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசாரங்களின் போது, ஏனைய கட்சிகளால் முன்னெடுக்க ப்படும் விமர்சனங்கள் எவ்வாறு உள்ளன?
மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளைக் குறைக்க வேண்டுமானால், அது சாணக்கியனைத் தாக்கித்தான் செய்ய முடியும் என்ற நிலை வந்திருப்பது எனக்குப் பெருமையான விடயமாகும். நீங்கள், தொடர்ந்து என்னை விமர்சிக்க வேண்டும் என்பது, எனது வேண்டுகோளாகும்.
கே: இந்தத் தேர்தல் காலத்தில், எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றீர்கள்?
நான், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் என்பதை விட, வடக்கு, கிழக்கில் இருக்கின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எனது விருப்பு வாக்குக்கு அப்பால், செயற்பட்டு வருகின்றேன். தமிழரின் இருப்பு, பாதுகாக்கப்பட வேண்டும்; வடக்கு, கிழக்கில் எமது ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், இன்று அனைத்து விடயங்களிலும் நான் கவனம் செலுத்தி வருவது, என்மீதான விமர்சனங்களுக்குக் காரணமாக இருக்கின்றது. இந்தத் தேர்தல் முடியும்வரை, உங்களுடைய விருப்பு வாக்கைப்பற்றிச் சிந்தியுங்கள்; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கும் ஆசனங்களை அதிகரிப்பதற்கும் நீங்கள் செயற்படுங்கள் என, எனது ஆதரவாளர்கள் என்னிடம் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்கள்.
எமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைப் பெற்றால்தான், எதிர்காலத் திட்டங்களைச் சரியான முறையில் கையாள முடியும், வெறும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதைவிட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இலக்கை, நாங்கள் அடைய வேண்டுமானால் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை, நாங்கள் அதிகரிக்க வேண்டும்.
கே: மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய கட்சி வேட்பாளர்கள் தொடர்பிலான உங்கள் பார்வை, எவ்வாறு உள்ளது?
நாடாளுமன்றத் தேர்தலில் பலர் இன்று போட்டியிடக் காரணம், தங்களுடைய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காகவும் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் குறிப்பிட்டளவு வாக்குகளைப் பெற்று, சகோதர இனத்தவரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்வதனூடாகத் தங்களுக்கு எதிர்வரும் காலங்களில், தவிசாளர் பதவி, வாகனம், டீசல், பெற்றோல், சம்பளம் போன்ற விடயங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே சிலர் செயற்படுகின்றனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக இருக்கின்ற வாக்குவங்கி, இம்முறை எட்டாகப் பிரியப்போகின்றது. எந்தவொரு கட்சியும் ஐயாயிரம் வாக்குகளைவிடக் கூடுதலாகப் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது. அந்தவகையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரை உருவாக்குவதற்கான வேலைத்திட்டமே, இவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகும்.
கே: கிழக்கு மாகாணத்தின் நிலைமை எவ்வாறு உள்ளது?
இன்று கிழக்கு மாகாணத்தில், சில விடயங்களைக் கவனமாகச் சிந்திக்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில், சிங்கள நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவம் இருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில், சிங்கள நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே, சிங்கள நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லை. இது தென்மாகாணத்தில் இருப்பவர்களுக்குப் பெரிய தாக்கமாகும். தொல்பொருள் ஆராய்ச்சிக்கான செயலணி, கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டதற்குக் காரணம், கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காக ஆகும்.
கிழக்கு மாகாணத்தில், 1881ஆம் ஆண்டு ஒரு சதவீதமான சிங்களவரே இருந்திருக்கின்றனர். 1948ஆம் ஆண்டு 9 சதவீதம், இன்று 25 சதவீதம் வரை சிங்களவர்களின் விகிதாசாரம் அதிகரித்திருக்கின்றது. 30 வருட யுத்தகாலப் பகுதியிலும் யுத்தம் முடிந்து கடந்த பத்து வருடங்களிலும் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் வரையும் தொடர்ச்சியாக இருந்துவந்த சிங்கள அரசாங்கங்கள், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் கரங்களைப் பலப்படுத்தியமை, நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும்.
கிழக்கு மாகாணத்தில், தமிழர்களைப் பலவீனப்படுத்த வேண்டும். தமிழர்கள் வடக்கு, கிழக்கு இணைப்பைப்பற்றி கதைக்கக்கூடாது என்பதற்காக, கிழக்கில் முஸ்லிம்களின் கரங்களைப் பலப்படுத்திய அரசாங்கம், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு, தாங்கள் விரும்பியதைவிட கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கமும் பலமும் அதிகரித்து வருகின்றது என்பதை உணர்ந்து, யுத்த காலத்தில் தாங்கள் இழைத்த தவறுகளை மீண்டும் செய்யாமல், அதாவது யுத்த காலத்தில் தமிழர்களைப் பலவீனப்படுத்த முஸ்லிம்கள் பயன்படுத்தியதுபோல, இன்று முஸ்லிம்களைப் பலவீனப்படுத்த, தமிழர்களைப் பயன்படுத்துவதைவிட, கிழக்கு மாகாணத்தில் சிங்களவரைப் பலப்படுத்துவது, அவர்களின் நோக்கமாக இருக்கும்.
தொல்பொருள் ஆராய்ச்சிக்கான செயலணி ஊடாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 இடங்களை இனங்கண்டிருப்பதாகத் தகவல் வருகின்றது. குசனார் மலை என்ற இடத்தில் உள்ள கோவிலுக்குள் உள்ள வளங்கள் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. இதை யார் செய்தார்கள் என்பது தெரியாது. அதேபோல், கித்துள் பகுதியிலும் தொல் பொருள் ஆராய்ச்சிக்கான இடம் ஒன்றை இனங்கண்டிருப்பதாகத் தகவல் வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து, ஏன் இந்தச் செயலணி இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பது, சிந்திக்க வேண்டிய விடயமாகும். 1950, 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் கல்லோயா,வெலியோயா திட்டங்களினூடாக, சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியது போல, இன்று, கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிக்கான செயலணி ஊடாக, சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்ற நோக்கம் இருக்கின்றது என்பதை, அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கே: தமிழ்த் தேசிய கூட்டமைப்பை, தமிழ் மக்கள் ஏன் ஆதரவளிக்கவேண்டும் என விரும்புகின்றீர்கள்?
தமிழ் மக்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும், இந்த அரசாங்கத்தின் இந்தச் செயற்றிட்டங்களை எதிர்க்கின்ற ஒரு செயற்பாடாகவே இருக்கும். எங்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையே கிடைக்கும். தமிழன் எதற்காக வாக்களிக்கின்றான் என்பதைக் காட்டுவதற்கான சந்தர்ப்பம், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையே கிடைக்கும். இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் தவறவிட்டால் இன்னும் ஐந்து வருடங்களுக்குக் காத்திருக்க வேண்டியேற்படும்.
இந்தத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும், சிங்களக் குடியேற்றங்களை எதிர்க்கின்றதாக இருக்கும். இந்த மாகாணம், தமிழர்களுக்கான மாகாணம் என்ற செய்தியைச் சொல்வதாக இருக்கும்.
கே: இன்று உங்கள் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, நீங்கள் சிங்களத் தாயின் பரம்பரையைச் சேர்ந்தவர் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது?
இம்முறை தமிழரசுக் கட்சியில் எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருந்ததை உணர்ந்த ஒரு சிலர், அதாவது எனது வரவை விரும்பாத சிலர், என்னைப் பற்றித் தவறான கருத்துகளைத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்றனர். நானும் அக்கருத்துகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், என்னுடைய பிறப்பைப் பற்றியோ, என்னுடைய தாயைப் பற்றியோ கதைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லையென்று நான் நினைத்தேன்.
ஆனால், குறுகிய அரசியல் இலாபத்துக்காக மிகக் கேவலமான முறையில் என்னுடைய தாயை விமர்சித்து, இணையத்தளங்களின் ஊடாகவும் சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் பதிவுகளை இடும்போது, எனது தாயை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை, எனக்கு இருக்கின்றது. அரசியலுக்காக நீங்கள் இவ்வளவு கீழ்த்தரமாக எழுதுவீர்கள் என, நான் எதிர்பார்க்கவில்லை. மனிதனாகப் பிறக்கும் எவரும், தனது தாய்க்குக் களங்கம் ஏற்படுத்த விரும்பமாட்டார்கள்.
என்னுடைய தாயைப்பற்றி நீங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும்போதுகூட, நான் அதைப்பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம், இந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென நினைத்தேன். அதை வைத்துக்கொண்டு, எனது தாய் சிங்களவர் எனச் சிலர் விமர்சித்து வருகின்றனர். அரசியலுக்காக ஒருவரின் பிறப்பைப் பற்றிக் கதைப்பது, மிகக் கேவலமான விடயமாகும். நீங்கள் அரசியலில் வெல்லவேண்டுமானால் உங்களுடைய விடயங்களைப்பற்றி மக்களிடம் கூறுங்கள். இன்னொருவரை விமர்சித்து அரசியல் செய்யாதீர்கள். நீங்கள் இன்னொருவரை விமர்சிக்கும்போது, உங்களுக்கும் அந்த விமர்சனங்கள் வரும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
4 hours ago
7 hours ago