Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 31 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு இடம்பெறும்போது, அது எம் போன்ற பல நாடுகளை ஆட்டம் காணச்செய்யும். குறிப்பாக இந்த விலை அதிகரிப்புகளால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதன்பின்னர், ஒரு கோப்பை தேநீரிலிருந்து ஒரு பார்சல் சோறு வரை அனைத்துப் பொருள்களின் விலைகளும் கிடுகிடுவென எகிறிவிடும்.
இப்போது இலங்கையின் நிலையும் இதுவே. கொரோனா தொற்றால் உலக சந்தையில், சமையல் எரிவாயுவின் விலையேற்றத்தால் இலங்கையின் பிரதான சமையல் எரிவாயு நிறுவனங்களான 150 வருட வரலாற்றைக் கொண்டதும் முழுமையாக அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் காப்புறுதி நிறுவனத்துக்கு இணைவான நிறுவனமுமான லிட்ரோ மற்றும் 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இலங்கையின் சமையல் எரிவாயு நுகர்வில் 30 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் தனியார் நிறுவனமான லாப் நிறுவனமும் பாரிய நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
கடந்த காலங்களில் உலக வர்த்தக சந்தையில், சமையல் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரித்த நிலையில், பரிமாற்ற வீதம், ஏனைய செலவுகள் போன்ற காரணங்களால் தமது நிறுவனங்கள் பாரிய நட்டத்தை எதிர்நோக்கி வருவதால், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலையை 750 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற இந்த நிறுவனங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை.
அத்துடன், கடந்த 6 வருடங்களாக எரிவாயுக்கான போதிய விலை அதிகரிப்பு முன்னெடுக்கப்படவில்லை. இதனால் தமது நிறுவனங்கள் மாதம் பில்லியன் கணக்கில் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டியபோதும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு, அரசாங்கமோ நுகர்வோர் அதிகார சபையோ அனுமதி வழங்காத நிலையில், உலக சந்தையில் சமையல் எரிவாயு விலையை காரணம் காட்டி, இந்த வாரத்திலிருந்து தமது இறக்குமதியை நிறுத்திக்கொள்வதாக லாப் எரிவாயு நிறுவனம் அதிரடியாக அறிவித்ததால், உள்ளூர் சந்தைகளில் மஞ்சள் நிற லாப் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஆனால், இந்த நிலைமை ஏற்படுவதற்கு முன்னரே சுதாகரித்துக் கொண்ட லிட்ரோ நிறுவனம், லிட்ரோ சமையல் எரிவாயுவின் நுகர்வோர் தேவையைப்பூர்த்தி செய்ய, புதிய முயற்சியாக சந்தைக்கு 18 லீற்றர் பிரிமியம் ஹைபிரட் சிலிண்டரைஅறிமுகப்படுத்தியதுடன், இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரி சபைக்கும் அறிவுறுத்தியது.
அத்துடன், இந்த பிரிமியம் 18 லீற்றர் சமையல் எரிவாயு நால்வரைக் கொண்ட குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு தாரளமாக போதுமென்ற நியாயத்தையும் வலியுறுத்தியது மாத்திரமல்லாமல், நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியில்லாமலேயே, 18 லீற்றர் சமையல் எரிவாயுவை நுகர்வோருக்கு விநியோகிக்கும் செயற்பாட்டையும் முன்னெடுத்து வந்தது.
இவ்வாறான பின்னணியில், லாப் நிறுவனம் சமையல் எரிவாயு இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்த மறுகணமே, அறிக்கையொன்றை வெளியிட்ட லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனமானது, இறக்குமதியை லாப் நிறுவனம் நிறுத்தினாலும் பற்றாக்குறையின்றி நுகர்வோருக்கு சமையல் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் விநியோகிக்கும்.
அத்துடன் நுகர்வோரிடம் எந்த நிறத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் இருந்தாலும் நிறம் பாராது சமையல் எரிவாயு விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் முன்னெடுக்கும் என்ற அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் வெளியிட்டிருந்தார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டதை நம்பி, தம்மிடம் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் விநியோக நிலையங்களுக்கு சென்றவர்கள் வெறுங்கையுடனே திரும்பிவந்தனர். காரணம், விநியோகஸ்தர்களுக்கு அவ்வாறான எந்தவொரு அறிவுறுத்தல்களும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்திய 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டர்களும் தற்போது சந்தையிலிருந்து மீண்டும் திடீரென காணாமல் போய், தற்போது மீண்டும் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தலைக்காட்டத் தொடங்கியுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் 12.5 கிலோ கிராம் சிலிண்டர்களுடன் சென்றவர்களுக்கு பல நியாயப்படுத்தல்களை முன்வைத்து, 18 லீற்றர் சிலிண்டரை லிட்ரோ விநியோகித்தஸ்தர்கள் விநியோகித்த நிலையில், தற்போது நுகர்வோர் விரும்பி 18 லீற்றர் சமையல் எரிவாயுவை கோரினாலும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களால் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்களே 1,400 ரூபாய்க்கு மேல் (இது மாவட்டங்களுக்கிடையில் மாறுபடும்) பலவந்தமாக விநியோகிக்கப்படுகின்றன.
18 லீற்றர் பிரிமியம் சிலிண்டருக்கு உத்தரவாத விலையொன்றை அரசாங்கம் வர்த்தமானி ஊடாக வெளியிட்டமையே, இவ்வாறு 18 லீற்றர் பிரிமியம் சிலிண்டர்கள் பதுக்கப்பட்டுள்ளமைக்கான காரணமாகும். இதற்கமைய, மாகாண மட்டங்களுக்கிடையில் வேறுபட்ட வகையில் 150 ரூபாய் உத்தரவாத விலையை அறிவித்து, அரசாங்கம் வர்த்தமானியொன்றை வெளியிட்டது. இதற்கமைய, ஆக்க குறைவாக கொழும்பில் 1,150 ரூபாய். யாழ்ப்பாணத்தில் 1,259 ரூபாயாகும்.
இந்த உத்தரவாத விலையையடுத்தே 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தையிலிருந்து காணாமல் போயுள்ளன.
ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி 18 லீற்றர் பிரிமியம் ஹைபிரட் சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் குறித்த சிலிண்டர் நுகர்வோர் அதிகார சபை சட்டத்துக்கு அமைவானது அல்ல என நுகர்வோர் சபை அறிவித்ததுடன், சந்தையிலிருந்து இந்த சிலிண்டரை விலக்கிக்கொள்ளமாறும் அறிவித்தாலும், கடந்த 2 மாதங்களாக இந்த சிலிண்டர்களே விற்பனைசெய்யப்பட்டு வந்தன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் (90/269 EEC) சரத்துக்கு அமைய, நபர் ஒருவர் சுமக்கக் கூடிய அதிகபட்ச நிறை 25 கிலோ கிராம் என்பதற்கமைய, இந்த பிரிமியம் சமையல் எரிவாயு சுமப்பதற்கு இலகுவானதென லிட்ரோ நிறுவனத்தின் சுகாதார பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பணிப்பாளர் ஜயந்த பஸ்நாயக்க வலியுறுத்தியிருந்தார்.
ஒரு கிலோ கிராம் சமையல் எரிவாயுவில் 1. 8 லீற்றர் உள்ளடங்கியுள்ளது.என்றும் அவ்வாறு பார்க்குமிடத்து இந்த பிரிமியம் சிலிண்டர் நிறுவனங்களுக்கு 600 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தும் அதேவேளை, நுகர்வோருக்கு இலாபமே எனவும் நியாயப்படுத்தப்பட்டிருந்தது.
1,493 ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்ட 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுக்கு பதிலாக 18 லீற்றர் பிரிமியம் ஹைபிரட் சிலிண்டரை அறிமுகப்படுத்தி 1,395 ரூபாய் விலை குறைப்பை செய்ததாக காட்டிக்கொண்ட நிலையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் நிறை 18 லீற்றராக மாற்றப்பட்டாலும் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுடன் ஒப்பிடுகையில் 9.18 கிலோ கிராம் நிறை குறைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் மேல் மாகாணத்தில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் அதிகூடிய விலை 1,493 என்ற நிலையில், எரிவாயு கிலோ கிராம் ஒன்றின் விலை 119.44 ரூபாவாகின்றது.
எனவே, புதிய ஹைபிரட் பிரிமியம் எரிவாயு சிலிண்டர் மூலம் விலை குறைப்பு, நிறை அதிகரிப்பு, என்ற போர்வையில், மிகவும் சூட்சுமமான மோசடி ஒன்று இடம்பெற்றதுடன், எரிவாயு கிலோ கிராம் ஒன்றுக்கு 32 ரூபாய் மேலதிகமாக செலுத்த வேண்டும் என்பதுடன், குறித்த சமையல் எரிவாயுக்காக நுகர்வோரிடமிருந்து 406.50 ரூபாய் மேலதிகமாக மறைமுகமாக அறிவிடப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் நால்வர் அடங்கிய குடும்பமொன்று குறித்த சிலிண்டர் ஒரு மாதத்துக்கு போதுமானதென்ற நியாயத்தை லிட்ரோ முன்வைத்திருந்த நிலையில், 3 கிழமைகளில் இந்த சமையல் எரிவாயு தீர்ந்து விட்டதென நுகர்வோர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
தற்போது 1,493 ரூபாய்க்கு விற்பனை செய்யும்12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரை உலக விலையேற்றத்துக்கு அமைய, 2,250 ரூபாய்க்கே விற்க வேண்டிய நிலையில், 700 ரூபாய் நட்டத்துக்கே விற்பனை செய்து வரும் லிட்ரோ நிறுவனம் வருடாந்தம் 4 பில்லியன் இலாபத்தை திறைசேறிக்கு பெற்றுக்கொடுக்கும் நிறுவனம் என்பதையும் நினைவுப்படுத்தியுள்ளது.
எனினும், தற்போதைய நிலையில், குறித்த நிறுவனம் மாதம் 1.2 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், லாப் நிறுவனத்துக்கு வருடாந்தம் 480 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் லிட்ரோ நிறுவனம் கடந்த சில மாதங்களில் 20 பில்லியன் ரூபாய் வங்கிகளுக்கு கடன் செலுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளாகியுள்ளது.
எனினும், நுகர்வோர் அதிகார சபையின் தற்போதைய தலைவர் டி.எம்.எஸ். திசாநாயக்க ஓய்வுப்பெற்ற இராணுவ ஜெனரல் என்பதால் அவருக்கு வர்த்தக நடவடிக்கை தொடர்பில் எவ்வித அனுபவமோ தெளிவோ இன்மையாலேயே விலை அதிகரிப்புக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் இதனாலேயே தமது நிறுவனங்கள் நட்டமடைந்து செல்வதாகவும் லாப் மற்றம் லிட்ரோ நிறுவனங்கள் சுட்டிக்காட்டியும் உள்ளன.
இந்த நேரத்தில், நல்லாட்சியின் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்திய விலைச்சூத்திரத்தைப் பின்பற்றுவது சரியான தருணம் என எரிவாயு நிறுவனங்கள் உணர்ந்துள்ளதுடன், அந்த விலை சூத்திரம் விஞ்ஞானப்பூர்வமானது என்றும் சர்வதேச சந்தையில் விலை குறைவடையும் போது அதன் பயனை நுகர்வோர் பெறும் அதேவேளை, நிறுவனங்களும் குறைந்த பட்ச இலாபத்துடன், நியாயமான விலையைப் பெற்றுக்கொள்ளும் என சமையல் எரிவாயு நிறுவனங்கள் இரண்டும் மறைமுகமான கருத்துகளை முன்வைத்து வருகின்றன.
எனவே, இந்த சமையல் எரிவாயு பிரச்சினைக்கு நல்லாட்சி போன்று, இந்த அரசாங்கமும் ஏதேனும் சூத்திரத்தையோ நிவாரணத் திட்டத்தையோ அறிமுகப்படுத்தி, சமையல் எரிவாயு இறக்குமதி நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், அரசாங்கம் ஏதேனும் திட்டங்களை கொண்டு வரவேண்டும் என நுகர்வோரைப் போலவே, , சமையல் எரிவாயு இறக்குமதி நிறுவனங்களினதும் எதிர்பார்ப்பில் தவறில்லை.
கிலோகிராமுக்கும் லீற்றருக்கும் இடையில் எப்போதுமே நுகர்வோரை சிக்கி விழிப்பிதுங்கி நிற்பர் என்பது மட்டுமே உண்மை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago