2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

‘கடலட்டை’ போர்வையில் வடக்கில் நுழைந்த சீனா

Editorial   / 2022 ஒக்டோபர் 19 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வடக்கில், கடலட்டை பண்ணை நிறுவ எடுக்கப்பட்ட தீர்மானத்தை தமிழ்க்கட்சிகளின் பிரநிதிகள் பலரும் கடுமையாக எதிர்த்தனர். இதனூடாக சீனாவின் ஆதிக்கம் வடக்கில் நிலைக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகுமென எச்சரித்தனர்.

எனினும், கடலட்டை பண்ணைக்கு பணியாளர்களை கொண்டுவருவது போல, சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் பணியாளர்கள் போல களமிறக்கப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வடக்கில் தங்களின் கால்கள் இறுக்கமாக ஊன்றப்பட்டுவிட்டால், இந்தியாவை நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கலாம். கடுமையான கண்காணிப்பு வலையத்துக்குள் இந்தியாவை வீழ்த்திவிடலாம் என்பது சீனாவின் கனவாகும்.

அதனால்தான், இலங்கைக்கான சீன தூதுவர், வடக்கில் இந்தியாவுக்கு மிக அண்மையில் உள்ள தீவுக்கு அதிரடியாக விஜயத்தை மேற்கொண்டிருந்ததை அடுத்து, இந்தியாவும் விழிப்படைந்து கொண்டது.

அதற்குப்பின்னர் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக, சீனாவினால் வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்த திட்டங்கள் பல நிறுத்திவைக்கப்பட்டன. அதுமட்டுமன்றி மாற்று தரப்பினருக்கு அவை கைமாறப்பட்டன என்றெல்லாம் சொல்லப்படுகின்றது.

இதனிடையே, சீனாவின் யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி கப்பல் வருகையால். இலங்கை, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியில் முரண்பாடுகள் ஏற்பட்டன. எனினும், குறித்தொதுக்கப்பட்ட காலத்தில் இலங்கைக்கு வருகைதராத சீனாவின் யுவான் வாங் 5 கப்பல், காலந்தாழ்த்தி வந்து ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிட்டு சென்றது.

இந்நிலையில்தான்,  இலங்கையின் வடக்கில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளமை தீவிர பாதுகாப்புக் கவலைகளை கவலையளிப்பதாக  தமிழகம் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் சீனர்களின் செயல்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடற்கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரச புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு இலங்கையில் மக்கள் விடுதலை இராணுவ பணியாளர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் வடக்கில் கடலட்டை பண்ணையை ஆரம்பிப்பதற்கு அதிநவீன கருவிகளை சீனா பயன்படுத்தியதாகவும் புலனாய்வு அமைப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி எச்சரித்துள்ளது.

இலங்கையின் வடமாகாணத்தில் கடலட்டை பண்ணை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துவதாக தமிழ்நாடு புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது

    இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை தொடர்பாக தமிழ்நாடு கரிசனை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மாநில புலனாய்வு பணியகம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

    அயல் நாட்டில் சீனாவின் ஆதிக்கம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதென கூறியுள்ள மாநில புலனாய்வு பணியகம் கரையோர பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் கோரியுள்ளது.

    சீன இராணுவத்தினரின் நடமாட்டம் செய்மதிகள் போன்ற உயர் தொழிநுட்ப சாதனங்களின் பயன்பாடு இலங்கையின் வடபகுதியில் ஆளில்லா விமானங்கள் ஏனைய சாதனங்களின் பயன்பாடு போன்றவற்றினால் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் எனவும் மாநில புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்களது உதவியுடன் சீன இராணுவத்தை சேர்ந்த சிலர் இரகசியமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

    முல்லைத்தீவு, அனலைதீவு, மீசாலை, சாவகச்சோி உள்ளிட்ட வடக்கில் பல பகுதிகளில் சீன பிரஜைகளின் நடமாட்டம் தமிழ் மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

    தங்கள் ஒரேயொரு வாழ்வாதாரத்திற்கான வழியாக காணப்படுகின்ற கடல்வளத்தை சீனர்கள் பயன்படுத்துகின்றனர் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தற்போதைய நிலையில் இலங்கை மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தலாம்.

     வடக்கு கிழக்கு பகுதியில் இந்தியாவின் செல்வாக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என தமிழ் மக்கள் அஞ்சுவதாக புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்

  ரொக்கட்கள் கண்டங்களுக்கு இடையிலான செய்மதிகள் போன்றவற்றை கண்காணிப்பதற்கான சீனா கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் குறித்து தமிழ்நாடு எல்லை பாதுகாப்பு குழு மத்திய புலனாய்வு பணியகத்தை மேற்கோள்காட்டி எச்சரித்திருந்தன.

தமிழ்நாட்டில் அணுசக்தி நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளதால் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என தெரிவித்திருந்தது.  தற்போதைய நிலை இலங்கை மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தலாம் வடக்கு-கிழக்கு பகுதியில் இந்தியாவின் செல்வாக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர் என புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

ஓகஸ்ட் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனாவின் யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி கப்பல் வருகையை தொடர்ந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு தனது தென்கிழக்கு கரையோர பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இந்த கப்பல் விண்வெளி – செய்மதி கண்காணிப்பு திறன்கொண்டதாகவும் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை ஏவக்கூடிய திறன் கொண்டதாகவும் காணப்பட்டது. இதன் காரணமாக தனது 1076 கிலோமீற்றர் கரை யோரப்பகுதியில் உள்ள முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளிற்கான பாதுகாப்பை தமிழ்நாடு அதிகரித்திருந்தது.

இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கப்பல் வருவதற்கான அனுமதியை இலங்கை வழங்கியதும் இது குறித்து இந்தியா கவலை வெளியிட்டிருந்தது. தனது பாதுகாப்பு பொருளாதார நலன்களில் தாக்கத்தை செலுத்தக்கூடிய விடயங்கள் குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

சீன பிரஜைகள் இலங்கையில் பிரசன்னமாகியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் நாயகம் இலங்கையில் சீன பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்பது சர்ச்சைக்குரிய உண்மை என தெரிவித்துள்ளார்.

இலங்கை-இந்திய சர்வதேச கடல்பரப்பிற்கு அருகில் உள்ள பகுதிகளிற்கு சீனத் தூதுவர் அடிக்கடி விஜயம் மேற்கொள்வது கடலட்டை பண்ணைகள் என்ற பெயரில் ஆளில்லாத விமானத்தை பயன்படுத்தி ஆய்வு செய்வது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் பல்கலைக்கழககல்வியை தொடர்வதற்கு இலங்கை மாணவர்களிற்கு இந்தியா புலமைப்பரிசில்களை வழங்குகின்ற அதேவேளை சீனா தனது நாட்டில் பட்டப்பின்படிப்பை தொடரும் மாணவர்களுக்கு நிதியை வழங்குகின்றது.சீனா தனது எதிர்கால திட்டத்திற்காக இலங்கை இளைஞர்களை கவரமுயல்கின்றது என்பது வெளிப்படை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கடல்சார் இயக்குநராகவும் பணியாற்றும் மிட்டல் இந்திய கடல்பரப்பிற்குள் சீன நாட்டவர்கள் மாத்திரம் ஊடுருவார்கள் என்ற உத்தர வாதமில்லை . சீனா தனது நடவடிக்கைகளுக்காக பயிற்சி வழங்கிய எவரும் தென்கிழக்கு இந்திய கடற்பரப்பிற்குள் நுழையலாம் என தெரிவித்துள்ள அவர் தமிழ்நாடு புலனாய்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் கரையோரங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் தனது அனைத்து கரையோர மாவட்டங்களிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு கடற்கரையோரத்தில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரை நிறுத்துவதற்காகவும் உருவாக்குவதற்கும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசாங்கம் உதவவேண்டும் என சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு என அனுமதிக்கப்பட்ட 800 பேரில் 50 சதவீதமானவர்களுக்கான வெற்றிடம் உள்ளது. தற்போது பணியில் இருப்பவர்கள் 42 பொலிஸ் நிலையங்களில் பணிபுரிகின்றனர் குறைந்தளவு ஆள்பலத்துடன் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

தமிழ்நாடு அரசாங்கம் ஏற்கெனவே இராமேஸ்வரம் அருகே 240 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருந்தாலும் பிராந்திய கடல்சார் கடலோர பாதுகாப்பு பயிற்சி கல்லூரியை ஆரம்பிப்பதற்கு மத்திய அரசாங்கம் இன்னமும் அனுமதி வழங்கவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார் என்றும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் வடக்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து செல்வது தொடர்பில், இலங்கை பாராளுமன்றத்தில் ​செப்டெம்பர் 18 ஆம் திகதியன்று தமிழ்த் தரப்பினர் தங்களுடைய கடுமையான எச்சரிக்கையை பதிவு செய்திருந்தனர்.

   கடலை அண்மித்த 36,000 ஏக்கருக்கும் அதிகமான நில பரப்பில் பெரும் கடலட்டை பண்ணைகளை உருவாக்கும் திட்டம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் மீனவர்களிடையே தமது வாழ்வாதாரம் குறித்து அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.  

இலங்கையில் வணிகரீதியிலான மீன்வளர்ப்புக்கான உந்துதலைப் பயன்படுத்தி, சீனா அத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது. பல்வேறு சீன நிறுவனங்களும்  இலங்கை கடல் வளங்களை நீண்டகாலமாக கட்டுப்படுத்தும் நோக்கில் முன்மொழிவுகளை உறுதிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக கடலட்டை பண்ணைகள் பெய்ஜிங் கவனிக்கும் ஒரு முக்கிய பகுதியாகும்.   2021 ஆம் ஆண்டில் சீனா, சிங்கப்பூர் மற்றும் ஹொங்காங் ஆகிய நாடுகளுக்கு இலங்கை சுமார் 336 தொன் கடலட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

எனவே, இவ்வகையான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வது இலாபகரமானது. இந்த துறையில் சீன வணிக நிறுவனங்கள் பல தற்போது இலங்கையில் செயற்படுகின்றன.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான வணிக கடலட்டை பண்ணை திட்டங்களுக்கு கடந்த ஜூன் மாதம் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.  நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த அனுமதியை கொழும்பு காண்கின்றது.

தென் சீனாவின் மக்காவ்வை தளமாகக் கொண்ட  சுன்மான் கலாசார வணிகம் குழு என்ற நிறுவனம் (Chunmanm Cultural Business Group) புத்தளம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பாரிய அளவிலான கடலட்டை பண்ணை திட்டத்தை அமைக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

450 மில்லியன் டொலர் மதிப்புள்ள 8.6 மில்லியன் கிலோ கிராம் கடலட்டை உற்பத்தி செய்ய முன்மொழியப்பட்ட திட்டம் 36,000 ஏக்கருக்கும் அதிகமான கடலை உள்ளடக்கியது. 10 ஆண்டுகால இந்த திட்டமானது ஆண்டுக்கு 5,000 ஏக்கர் மீன்வளர்ப்பு நீரைப் பயன்படுத்த கூடும் என்பதால் இது கடல் வளத்தை கடுமையாக பாதிக்கும் என சூழலியளாளர்கள் கூறுகின்றனர்.

எனவேதான் வடக்கு மீனவர்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஏற்கெனவே வடக்கில் காணப்படுகின்ற சீன கடலட்டை பண்ணைகளுக்கு எதிராகவும் அவர்கள் ஏற்கெனவே எதிர்த்து வருகின்றனர்.

இந்தப் பண்ணைகளால் கடல் வளம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அஞ்சும் வடக்கு மீனவர்கள், கடலட்டை  பண்ணைககளால் சுற்றுச்சூழலுக்கும், மீனவ மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போன்று அந்த திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட இலங்கையைச் சேர்ந்த உள்ளூர் மீனவர்கள், சீன வணிக மீன் வளர்ப்பு மீதான அரசாங்கத்தின் உந்துதலை தங்கள் வாழ்வாதாரத்துக்கும் நிலத்திற்கும் அச்சுறுத்தலான விடயமாகவே கருதுகின்றனர். முன்மொழியப்பட்ட கடலட்டை பண்ணைகள் நன்மையை விட தீமையையே ஏற்படுத்தும் என யாழ். மீனவ சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறி அரசாங்கம் திட்டங்களை ஊக்குவிக்க முயற்சிக்கும் அதே வேளையில், இந்த பண்ணைகள் தங்கள் வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் உள்ளூர் கடல் சூழலுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என்று மீனவர்கள் நம்புகிறார்கள்.

2021 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் இதேபோன்ற சீனத் திட்டத்திற்காக் கடலை ஒட்டியுள்ள நிலத்தில் வேலி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  மீனவர்களும் மக்களும் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்தத் துறையில் சீன முதலீட்டின் தீவிரத் தேவைக்கு எதிர்வினையாற்றிய உள்ளூர் மீனவர்கள், சமீபத்திய ஆண்டுகளில் வடக்கில் சுமார் 250 கடலட்டை பண்ணைகளின் பெருக்கத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய சீன முதலீடுகள் குறைவாகவே உள்ளன. உள்ளூர் முதலீட்டாளர்கள் கூட மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அரசியல் ரீதியிலான செல்வாக்கு மிக்கவர்கள் என்றும் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டினார்.

சீனத் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய குற்றச்சாட்டுகள் இலங்கைக்கு புதிதல்ல. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளின் போது பொது விவாதங்களில் இடம் பெற்ற பல சூழல் மீறல்கள்; குறித்த சம்பவங்கள் வெளிவந்தன. இந்த விமான நிலையம் யானைகளின் வாழ்விடத்தில் கட்டப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த விலங்குகள் ஓடுபாதைக்கு அருகில் அடிக்கடி சுற்றித் திரிகின்றன. அதேபோன்று, தெற்கு நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஆகியவற்றின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் தீவிரமான கவலைகளை எடுத்துக்காட்டுகின்றன.

வடக்கில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய சீனா

வடக்கில் தற்போது இந்தியாவுக்கு எதிராக சீனர்கள் களமிறங்கியுள்ளனர் என்றும் அவர்கள் புதிய தொழில்நுட்பங்களை அங்கு பயன்படுத்துகின்றனர் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊர்காபவற்றுறையில் பருத்தித்தீவு எனுமிடத்தில் சட்டவிரோதமாகக் கடலட்டை பண்ணை சீனர்களினால் மமுன்னெடுக்கப்படுவதாக வடக்கு மீனவர் சங்க தலைவர் முறைப்பாடு செய்துள்ளார். இது இந்தியாவுக்கு ஆபத்து என பல்வேறு புலனாய்வுத் துறையினர் கூறுகின்றனர் என்றார்.

சீனர்களின் கடலட்டை பண்ணைகளுக்கு யாரிடம் அனுமதியை பெற்றனர்.பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா எங்களுக்கு நிதி உதவி வழங்கியது. அவ்வாறானவர்களை பகைத்துக்கொள்ளக் கூடாது. இந்திய முதலீட்டாளர்களை அங்கு முதலிடுவதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வடக்கில் சீன இராணுவம் நிற்பது குறித்து பதிலளிக்கவும் 

நாட்டு மக்களை ஏமாற்றும் நாடகங்களை அரசாங்கம் கைவிட வேண்டுமென தெரிவித்துள்ள கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், பூகோள அரசியல் தொடர்பில் அரசாங்கம் தவறானத் தீர்மானங்களை எடுக்கக்கூடாது என்றும் 18ஆம் திகதியன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றுகையில் வலியுறுத்தினார்.

பூகோள அரசியல் தொடர்பில் அரசாங்கம் தவறான தீர்மானங்களை எடுத்து நாட்டை மேலும்நெருக்கடி நிலைமைக்கு தள்ளி வருகிறது. இவ்வாறான நிலையில் வடக்கில் முதலீடு என்கிற பெயரில் சீன இராணுவம் பல்வேறு இடங்களில் தரித்து நிற்பதாகவும், இதனால் தமிழ் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளதாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது என்றார்.

பூகோள அரசியல்ரீதியான இதுபோன்ற தவறான தீர்மானங்கள் எடுப்பதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள அவர், மக்களின் ஆணை இந்த அரசாங்கத்துக்கு இல்லை. எனவே தான் மக்கள் ஆணையைக்கொண்ட அரசாங்கத்தை அமைக்க தேர்தல் வேண்டும் என்றார்.

இலங்கையில் சீனர்களின் ஆதிக்கம் அதிகரித்து செல்வது ஒன்றும் புதிதல்ல. எனினும், வடக்கில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளமையானது தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் வடக்குவாழ் மீனவர்களுக்கும் வடக்குக்கும் எப்போதாவது பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதை நினைவில் கொள்வதே புத்திசாலிதனமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .