Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Mayu / 2024 நவம்பர் 03 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு செயற்படப் போவதாக சனிக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற அக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட தீர்மானமாகவே பொது வெளியில் பார்க்கப்படுகிறது. இத் தீர்மானத்துக்கான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற தமிழரசுக் கட்சியால் எவ்வாறு எடுக்கப்படமுடியும் என்பது இந்த இடத்தில் கேள்விதான்.
எது எவ்வாறானாலும், தமிழ்த் தேசியம் பலப்படுதலொன்றே காலத்தின் தேவை என்பதனை உணர்ந்துகொள்ளத் தலைப்படுதலை முக்கியப்படுத்தல் வேண்டும்.
தனிப்பட்ட கோப, தாபங்களையும், வெப்பு சாரங்களையும் காண்பிப்பதற்கான இடமாகத் தமிழ் அரசியல் தளத்தினைப் பயன்படுத்தும் தனிப்பட்ட நலனினை மாத்திரம் முதன்மைப்படுத்துபவர்கள் எவ்வாறு தமிழ்த் தேசிய அரசியல் பற்றிப் பேச முடியும் என்பதனைக் கேள்வியாக எழுப்புவதற்கு மக்கள் மத்தியில் ஏதுக்கள் எதனையும் காணமுடியவில்லை. அது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சலிப்பும் காரணமாக இருக்கலாம்.
தமிழர்களின் தேசியம் என்பது உணர்வு ரீதியானதே! இந்த உணர்வினை சரியாகக் கைக்கொள்ளவும் கையாளவும் தெரியாதவர்களாகவும், அதனைப் பற்றிப் புரிந்துகொள்ள முயலாதவர்களாகவும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது பல தடவைகளில் நிரூபணமாகி விட்டாலும், அதனை ஏற்றுக்கொள்ள யாரும் தயாரில்லை.
இந்த யதார்த்தத்தினை உணராது நடந்து கொள்வதுதான் தற்போது தமிழ்த் தேசியம் பற்றிப் பேச முனைபவர்களின் நிலையாக இருக்கிறது என்பது பெரும் குறையே.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டார். தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமை அரசியல் இதிலிருந்து தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்த் தேசியம் சார்ந்து சிந்திப்பவர்களிடம் பொதுவாக இருந்தது என்னவோ உண்மைதான்.
ஆனால், சுமந்திரன் அணியினர் அதனை நிர்மூலமாக்கி வழக்குத் தொடர்ந்து அவருடைய தலைவர் பதவியை வறிதற்றதாக்கியிருந்தனர். அதன் பின்னர் உருவான தேர்தல் அரசியல் களத்தில் தமிழ்ப் பொது ஜனாதிபதி வேட்பாளர் தமிழ்ப் பொதுக் கட்டமைப்பினால் களமிறக்கப்பட்டார். அந்தக் களமிறக்கலிற்குப் பாதகம் ஏற்படுத்தாது ஒதுங்கியிருக்கும் நிலைப்பாட்டை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எடுத்திருக்கலாம்.
ஆனால், நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பொது வேட்பாளரான அரியநேத்திரன் விலக வேண்டும் என்று அக் கட்சி அறிவித்தது. அது தவிரவும் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் களத்தினைப் புரிந்து கொள்ளாது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது.
தமிழ் மக்களது அரசியலுரிமைக்கான அரசியலை நடத்துவதற்குப் பதிலாகத் தொடர்ச்சியாகவும் எனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணேனும் போகவேண்டும்.
சகுனப் பிழையாயினும் ஏற்படவேண்டும் என்று சிந்திக்கின்ற தூற்றி, விமர்சித்து, அவமானங்களுக்கு உட்படுத்துவது என தொடரும் அரசியல் நடைமுறையில்
மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியலில் மாத்திரமல்ல, தேசிய அரசியலிலும் ஒவ்வொரு கட்சியிலுமிருக்கின்ற ஒரு சிலரே தீர்மானிக்கின்ற நிலைமைக்கப்பால் மக்களின் அரசியல் உரிமை, நலன்களை முக்கியப்படுத்துகின்ற தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடு ஒன்று உருவாக்கப்படவேண்டும். அது அரசியல் கள நிலைமைகளை உணர்ந்து முன்னெடுக்கவும்பட வேண்டும்.
அல்லாது போனால் நீண்டகாலத்தில் எதுவும் பயனற்றதாகிப்போய் தமிழ்த் தேசிய அரசிலை தேவையில்லை என்ற முடிவினையே மக்கள் எடுத்துவிடுவார்கள்.
சுயநலன்களுக்கப்பால் மக்களுக்கான அரசியல் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாக இருந்தாலும், அண்மைய காலங்களாகத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய பேச்சுக்கள் எழுந்தாலும் அதனை மேவும் வகையில் போராட்ட ஆயுத இயக்கங்களாக இருந்து அரசியல் நீரோட்டத்துக்குள் இணைந்தவர்களை விமர்சிக்கின்ற நிலை உருவாகியிருக்கிறது.
இது காலத்தின் தேவையற்றது என்பதும், இது மேலும் தமிழ்த் தேசிய அரசியலில் முரண்பாட்டை ஏற்படுத்தும் என்பதும் மறக்கப்பட்டதனால் நடைபெறுவதாகவே உணர முடிகிறது. இது ஒருவகையில் கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து இன்னமும் தமிழ்த் தேசிய அரசியலைச் செய்துகொண்டிருப்பவர்கள் கற்றுக் கொள்ளத் தலைப்படவில்லை என்பதனையே புலப்படுத்துகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அனைவரும் ஒரே நோக்கத்திற்காகவே போராடத் தொடங்கியிருந்தனர். சகோதர இயக்க எதிர்ப்பு, படுகொலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பலனாக உருவான பல விரோதச் செயல்கள் பலராலும் மறக்கப்பட முடியாதவை என்பதனை யாரும் மறுக்கமாட்டார்கள்.
ஆனால், 2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் கடந்தகால செயற்பாடுகளை, தவறுகளை மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் என்ற முடிவினை மேற்கொண்டிருந்தார்.
இதனை யாரும் மறுப்பதற்கில்லை. மீண்டும் மீண்டும் பழைய விடயங்களைத் தூண்டி வீணான விமர்சனங்களுக்குள் செல்வது அரசியல் மயப்படுதலில் தடைக்கல்லாகவே இருக்கும்.
காலம் கடந்த முடிவுகள் பல தமிழ்த் தேசிய அரசியலில் நடைபெற்றே இருக்கின்றன. இவற்றினால் விளைந்த பயன் ஒன்றுமில்லை.
திம்புப் பேச்சின் ஊடாக அதன் பின்னர் 13ஆவது திருத்தம், வடக்கு கிழக்கை முதன்மைப்படுத்திய மாகாண சபை முறைமை, சந்திரிகா அம்மையாரின் இடைக்கால சபை, அதன் பின்னர் ஒஸ்லோ பிரகடனம் என பல வாய்ப்புகள் வீணானதே நம் வரலாறு என்று ஒரு சிலர் கருத்து வெளியிட்டாலும் சுதந்திர வடக்கு கிழக்கு என்ற கோதாவிலேயே தொடர்ச்சியாகத் தமிழ் அரசியல் முன்னெடுப்புகள் அமைந்திருந்தன. ஆனால், அதனால் பயனேதுமில்லை.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக நடந்து முடிந்து விட்டிருக்கின்ற தமிழ்த் தேசிய அரசியல் பயணத்தில் மேலும் மேலும், முரண்பாடுகள் வளர்ந்துகொண்டு செல்வது காலத்துக்கேற்றதல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழர்களுக்கான அரசியல் செயற்பாட்டுக்கானதாக ஆக்கி ஆரம்பத்தில் உதய சூரியன் சின்னம் தீர்மானிக்கப்பட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவை இணைந்து 2001 தேர்தலில் போட்டியிட்டன.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 22 பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொள்ள முடிந்திருந்தது. ஆனால், அதனை அடுத்த தேர்தல்களிலிருந்து தொடங்கிய கட்சி விலகல்களால் அப் பிரதிநிதித்துவங்கள் குறைவடையவே தொடங்கியிருந்தது.
இறுதியாக நடைபெற்ற தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் 10 ஆசனங்களையே பெற்றுக் கொள்ளமுடிந்திருந்தது, அதற்கு ஒற்றுமைக் குலைவே காரணமாகும்.
இதனை முதலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
உதய சூரியன் சின்னத்தில் ஏற்பட்ட பிரச்சினையாலேயே, 1976களிலேயே கிடப்பில் போடப்பட்டிருந்த வீட்டுச் சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
அச்சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் சின்னமாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் அதனை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இது பெரும் முரண்பாடாகத் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இறுதியில் கடந்த வருடம் அக்கட்சி தனிவழி சென்றது. ஆனாலும், அவர்கள் இணைய வேண்டும் என்ற வேண்டுகோள்கள் வராமலில்லை. இந்நிலையிலேயே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எம்மோடு இணையுங்கள் என்ற வேண்டுகோளை வெளியிட்டுள்ளனர்.
சிலவேளைகளில் அவ்வாறான ஒரு இணைவு ஏற்படுவதாக இருந்தால் வீட்டுச் சின்னம் பொதுச் சின்னமாக மாற்றப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மாறுவதனையே அனைவரும் விருப்பங்கொள்வர். இந்த விருப்பத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி இடம் கொடுக்குமா என்பது தமிழ் அரசியல் களம் இடம் கொடுக்கவேண்டும்.
பார்த்துக் கொள்வதற்கு ஆள் இருந்தவேளையில், இருந்த ஒற்றுமையை 2009க்குப் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏகாதிபத்திய தமிழ்த் தேசிய அரசியலை நடத்த முனைந்தமையால் ஏற்பட்ட பிரச்சினைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி என்ன முடிவினை வழங்கும் என்பதிலேயே தமிழ் மக்களின் தேசிய அரசியல் தங்கியிருக்கிறது.
விடுதலைப் புலிகள் தங்களது கடந்தகால தவறுகளை மறந்து ஏனைய போராட்ட இயக்கங்களையும் இணைத்து தமிழர்களின் தேசிய அரசியல் நடைபெறவேண்டும் என்று எடுத்த முடிவினை அனைவருக்கும் சமமான அந்தஸ்த்தும் அதிகாரமும் இருக்கக் கூடியதான தமிழ்த் தேசிய அரசியலுக்குக் காலத்துக்கேற்ற முடிவாக இருக்கும்.
மீண்டும் மீண்டும் பிரிவுகள் இல்லாத தமிழர்களின் நீண்டகால அரசியல் போராட்டத்திற்கான தீர்வு, எதிர்கால நலன், விட்டுக் கொடுப்பு, அனுசரிப்புடன் கூடியதாக அது இருக்கவும் வேண்டும்.
09.30.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago