Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2022 ஏப்ரல் 12 , பி.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
நாட்டில், மக்கள் போராட்டங்கள் தொடர்ந்தும் நடந்த வண்ணமுள்ளன. ஆனால், மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் கொஞ்சமேனும் குறையவில்லை; ஆட்சி மாற்றம் ஏற்படவும் இல்லை; ஆட்சியாளர்களின் மனம் இன்னும் மாறவும் இல்லை. நம்பிக்கை தரும் கட்டமைப்பு மறுசீரமைப்புகளும் இடம்பெறவில்லை.
இதற்கிடையில், “பிரதமர் பதவி விலகமாட்டார்” என்றும், “ஜனாதிபதிக்கு மக்கள் வழங்கிய ஆணை இன்னும் இருக்கின்றது. எனவே காலம் முடியும் மட்டும் அதிகாரத்தில் இருப்பார்” என்றும் ஆளும் தரப்பினர் கூறுகின்றனர்.
இதேவேளை, “நாட்டு மக்கள் எமக்கு எதிராகப் போராடவில்லை” என்ற பாணியிலான கதையை, ஆளும்தரப்பு கூறத் தொடங்கியுள்ளது. புதிய வகை கருத்தியலைக் கட்டியெழுப்புவதன் ஊடாக, மக்களை உளவியல் ரீதியாகப் பலவீனப்படுத்துகின்ற ஒரு முயற்சியாகவே கருதப்படுகின்றது.
நாட்டின் எல்லாப் பாகங்களிலும், சிறியதும் பெரியதுமாக பல போராட்டங்கள், இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கொழும்பு, காலி முகத்திடலில் என்றுமில்லாத அளவுக்கு தொடர் போராட்டம் இடம்பெறுகின்றது. இதில் பங்குபற்றுகின்றவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் சாதாரண மக்கள் அன்றி வேறு யார்?
இன்று, நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இதில் இனம், மதம், கிராமம், நகரம், கட்சி வேறுபாடு என்று எந்தப் பேதங்களும் இல்லை. அவர்கள் எல்லோரும் வீதிக்கு வர முடியாது. அது எங்கும் நடப்பதும் இல்லை. அவர்களில் ஒரு பகுதியினரே வீதிக்கு வருவார்கள்; அதாவது, தேர்தல் பிரசார கூட்டம் பார்க்க வரும் சனம்போல! யதார்த்தம் இவ்வாறிருக்க, “இது மக்கள் போராட்டமல்ல” என்று கூறுவதன் மூலம், ஆளுந்தரப்பு ஓர் உத்தியைக் கையாள்கின்றது.
முன்னதாக, மிரிஹான ஆர்ப்பாட்டக்காரர்களை அடிப்படைவாதக் குழு என்று அரசாங்கம் கூறியது. இதனை ஒரு குழுவாகச் சித்திரித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் மக்களையும் அவர்களுடன் இணையவிடாமல் தடுக்கலாம் என்று அரசாங்கம் கணக்குப் போட்டிருக்கலாம்.
ஆனால், அது நிறைவேறவில்லை. மாறாக, அதன் பின்னரே பரந்தளவான எதிர்ப்புகள் கிளம்பின. இதன்பிறகு, போராட்டங்களுக்குப் பின்னால், அரசியல் கட்சிகள் இருப்பதான ஒரு விமர்சனத்தை ஆளுந்தரப்பு முன்வைத்தது. அதையும் தாண்டி, எல்லா பேதங்களையும் கடந்து, துறைசார்ந்தோரும் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால், இந்த நிலைமைகளைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் தமது நலன்களை நிறைவேற்ற காய்நகர்த்தல்களை மேற்கொள்வது, சர்வசாதாரணமான அரசியல் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்நிலையிலேயே, சாதாரண மக்கள் தமக்கு எதிராக களமிறங்கவில்லை என்ற தோரணையிலான கற்பிதத்தை, இப்போது ஆளுந்தரப்பினர் சொல்லத் தொடங்கியுள்ளனர். மக்களிடையே கருத்தியல் தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு, அரசாங்கம் எடுத்துள்ள இன்னுமொரு பிரயத்தனமாக இதனைக் குறிப்பிட முடியும்.
நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு போராட்டங்களும் இடம்பெறுகின்றனதான். ஆயினும், கொழும்பில் மற்றும் ஏனைய நகர்ப் புறங்களில் இடம்பெறுவது போல ஆர்ப்பாட்டங்கள், மிகவும் பின்தங்கிய சிங்கள கிராமங்களில் இடம்பெறவில்லை. இதற்குப் பல யதார்த்தபூர்வமான காரணங்கள் உள்ளன.
அதேநேரம், ராஜபக்ஷவின் வாக்குவங்கிகள் கிராமப் புறங்களில் இருந்தன. இப்போதும் மிகத் தீவிர எண்ணமுள்ள ராஜபக்ஷ பக்தர் கூட்டமும் பிரச்சினைகளின் பாரதூரத்தை விளங்கிக் கொள்ளாத அப்பாவி மக்களும், அரச எதிர்ப்பாளர்களாக மாறவில்லை.
மறுபுறத்தில், ‘கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்ற ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக, ‘கோட்டபாய எங்களுக்கு வேண்டும்’ என்ற ஆர்ப்பாட்டமும் நடத்தப்படுகின்றது. இந்தச் சூழலிலேயே, மக்கள் எமக்கு எதிராகப் போராடவில்லை என்ற ஒரு கருத்தை, அரசாங்கம் அழுத்திக் கூற முற்படுகின்றமையின் சூட்சுமத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தளவுக்கு எதிர்ப்பும் வெறுப்பும் நையாண்டியும் மேற்கிளம்பியுள்ள நிலையிலும், ‘பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடிப்பது’ போன்ற அறிக்கைகள், அரச தரப்பில் இருந்து வெளியாகின்றமை அவர்கள் இன்னும் திருந்தவில்லை என்பதையே குறிப்புணர்த்துகின்றது.
நாட்டு மக்களுக்கு உரையாற்றுமாறு ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபயவிடம் கேட்டுக் கொண்டபோது, அவர் அதனை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. எது எவ்வாறிருப்பினும், இன்னும் “மக்கள் போராடவில்லை” என்று அரசாங்கம் இப்போதும் நினைத்துக் கொண்டிருக்குமானால், அந்தப் போராடாத மக்களுக்காகவேனும் அரசாங்கம் ஓர் அறிவிப்பைச் செய்திருக்க வேண்டும்.
“கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எங்களுக்கு இன்னும் இரு வாரங்கள் அல்லது ஒரு மாதம் சலுகைக் காலம் தாருங்கள். எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கின்றோம். அவ்வாறு எம்மால் செய்ய முடியாவிட்டால் உங்களது வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கின்றோம்” என்று அரசாங்கம் கூறியிருக்கலாம்.
அதைவிடுத்து, “மக்கள் எமக்கு எதிராகப் போராடவில்லை” என்று அரசாங்கத்தில் இருப்பவர்கள் கூறுகின்றார்கள் என்றால், அதன் அர்த்தம்தான் என்ன? மக்கள், மக்கள் அல்லாதோர் என்று எதை வைத்து அரசாங்கம் அளவீடு செய்கின்றது?
அப்படியென்றால், இப்போது எதிர்ப்புக்காட்டுகின்ற எல்லோரும் ஒரு கட்சியின், அமைப்பின், குழுவின் பிரதிநிதிகள் என்றும், தமக்கான சுயலாப நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டிருப்போர் என்றும் அரசாங்கம் கூற வருகின்றதா?
கணிசமானோர் எரிபொருளுக்காகவும் எரிவாயு சிலிண்டர், பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் கொள்வனவு செய்வதற்காகவும் வீதிகளில் நாள்கணக்காக தவம்கிடக்கின்றார்கள். சிலர் வரிசையில் நின்றவாறே மரணித்தும் விடுகின்றனர்.
இந்நிலையில், தமது பிள்ளைகளுக்கு உணவளிக்காமல், தமக்குத் தேவையான பொருட்களை பெற்றுக் கொள்வதை விடுத்து, எல்லோரும் வீதிக்கு வர வேண்டும் என அரசாங்கம் நினைக்கின்றதா? நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களும் தமது வேலை, வெட்டியை விட்டு விட்டு வீதிக்கு வந்தால் மட்டும்தான், ‘இது மக்கள் எதிர்ப்பு’ என்று ஏற்றுக் கொள்வார்களா? என்று கேட்கத் தோன்றுகின்றது.
இதுவரை சிறியதும் பெரியதுமாக சுமார் 700 ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக்காட்டல்கள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழியும் விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் கணக்கில்லை. இலங்கையில் இதுபோன்றதோர் எதிர்ப்பையும் அவமானத்தையும் எந்த ஆட்சியாளர்களும் சந்தித்தில்லை.
இவற்றுள் ஒரு சில முன்னெடுப்புகளுப் பின்னால், அரசியல் கட்சிகள் திரைமறைவில் இருக்கலாம். சிலவற்றுக்குப் பின்னால் ஏதாவது ஓர் அமைப்பு இயங்கலாம். இது உலக வழக்கம்தான். உதாரணமாக, 2019 ஏப்ரல் தாக்குதலால் ஏற்பட்ட அலையைப் பயன்படுத்தி, மொட்டுக் கட்சி ஆட்சியமைத்தது போல, இந்நிலைமையைப் பயன்படுத்தி ஆட்சியை வீழ்த்துவதற்கான நகர்வுகளும் இடம்பெறலாம்.
இப்போது மட்டும் ராஜபக்ஷ தரப்பு எதிரணியாக இருந்திருந்தால், பல மாதங்களுக்கு முன்னரே அது நடந்திருக்கும். சஜித் பிரேமதாஸ தலைமையிலான பலவீனமான எதிரணி இருப்பதாலேயே இன்னும் அது நடக்காமல் இழுபறியாக உள்ளது என்பது வேறுகதை.
எது எவ்வாறிருப்பினும், நாட்டு மக்கள் இன்று நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள். அரசாங்கத்தின் மீது கடுமையான அதிருப்தி, வெறுப்பு அடைந்துள்ளார்கள். இது வெளிப்படையானது.
இதனை உணர்ந்து கொள்வதற்கு அறிவார்ந்த ஆட்சியாளர்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் தேவையும் இல்லை; எதிர்ப்புக்காட்டல் அவசியமும் இல்லை. எதனை மக்கள் வரவேற்பார்கள், எதனை எதிர்பார்ப்பார்கள் என்ற முன்னறிவு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் புலனாய்வு அறிக்கை ஊடாகவாவது அதனை அறிந்து கொண்டிருக்க முடியும்.
உண்மையில், நாட்டிலுள்ள எந்தப் பொதுமகனுக்கும், கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்குப் போக வேண்டும் என்றோ ஆட்சி மாற வேண்டும் என்றோ ஒரு தேவைப்பாடும் இருந்ததில்லை. இன்னும் பல வருடங்களுக்கு ராஜபக்ஷர்கள் கோலோச்சுவார்கள் என்றே பரவலாகக் கருதப்பட்டது.
ஆனால், இப்படியான ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தியது, ஆட்சியாளர்களும் அவர்களை பிழையாக வழிநடத்திய அமைச்சர்களும்தான். 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஆளும்தரப்பை திருத்தாமல் வாழாவிருந்த, 50 இலட்சம் வாக்குப் பெற்ற எதிரணியும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
இப்போது இந்த நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் என்று இலங்கையர் அனைவரும் கருதுகின்றார்கள். அது எந்த வழிமுறை ஊடாக நடக்கின்றது என்பதில் அவர்களுக்குப் பிரச்சினை இல்லை. ராஜபக்ஷர்களை விட சஜித், ரணில், மைத்திரி ஆகியோரும் அவர்களது அரசியல் அணியும் நூறுசதவீதம் சிறப்பானவை என்று கூறவும் முடியாது.
ஆகவே, கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தன்னைத் திருத்திக் கொண்டு, சில கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், ஓரளவுக்கு நிலைமைகளை சமாளிக்கலாம். இதைச் செய்வதற்கு இப்போது கூட நேரம் கடந்து விடவில்லை. அல்லது, இடைக்கால, காபந்து அரசாங்கத்துக்கு வழிவிடுவதன் மூலம் அதனைச் செய்யலாம். அல்லது நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலொன்றுக்கு செல்லலாம்.
எந்தவழியிலேனும் நிலையான தீர்வு வேண்டும் என்பதே அனைத்து மக்களின் நிலைப்பாடுமாகும். அதைவிடுத்து, முழுப்பூசணிக்காயை ஒரு பீங்கான் சோற்றுக்குள் மறைக்க முயற்சி செய்து கொண்டு, காலத்தை வீணே இழுத்தடிப்பது எந்தத் தரப்புக்கும் நல்லதல்ல.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
24 Nov 2024
24 Nov 2024