Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 ஜூலை 01 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஐயூப்
ஐரோப்பிய நாடாளுமன்றம், ஜூன் 10 ஆம் திகதி, இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய பிரேரணை, இலங்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது போலும்!
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாகவும் எனவே, இலங்கைக்கு வழங்கும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகைகளை நிறுத்த வேண்டும் எனவும், அந்தப் பிரேரணை மூலம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்திருந்தது.
அது தொடர்பாக, ஐரோப்பிய ஆணைக்குழு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நிலைமையைச் சீர்செய்வதற்காக, இலங்கைக்கு அவகாசம் கொடுத்துவிட்டே, ஐரோப்பிய ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும். அதற்குள் இலங்கை அரசாங்கம், அந்தப் பிரேரணையால் சற்றுப் பின்வாங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
அந்தப் பிரேரணையின் மூலம், ஐரோப்பிய நாடாளுமன்றம் முக்கிய சில விடயங்களை, இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல், இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம், மோசமாகி வருவதாகக் குறிப்பிடும் அந்தப் பிரேரணையில் குறிப்பாக, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரைக் கைது செய்து தடுத்து வைப்பதற்காக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் திட்டமிட்டு பாவிக்கிறது எனக் குற்றஞ்சாட்டுகிறது.
அதிலும் முக்கியமாக, ஒரு வருடத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீம் ஆகியோரின் பெயர்கள் அப்பிரேரணையில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தோடு, சிவில் சமூக ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு எதிராக, இலங்கை அரசாங்கம் அச்சட்டத்தைப் பாவிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
வாய் மூலமாகவோ எழுத்து மூலமாகவோ, சமூகங்களுக்கிடையே வெறுப்பைத் தூண்டுவதாகச் சந்தேகிக்கப்படுவோர், வழக்கு விசாரணையின்றி மறுவாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்க, பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரேரணையில், இதுவும் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயமாகும்.
பொதுவாக, கடந்த மார்ச் மாதம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அடிப்படையாகக் கொண்டே, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரேரணை இருந்தபோதிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பற்றி, ஐரோப்பிய நாடாளுமன்றம் கூடுதலாகக் கவனம் செலுத்தியிருந்தது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கடந்த ஒரு வருடத்துக்குள் சுமார் 100 பேர், சிறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அண்மையில் கூறியிருந்தார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதோடு, அரசாங்கத்தின் நிலைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது நிலையானதா என்பது இன்னமும் தெளிவில்லை.
ஜூன் 23 ஆம் திகதி, பாராளுமன்றத்தில் உரையாற்றிய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஏதோ ஒரு புதிய விடயத்தைக் கண்டு பிடித்ததைப் போல், மிக நீண்ட காலமாகச் சில தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் கூறினார். சில கைதிகளுக்கு, அவர்களுக்கு எதிராக எத்தகைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது என்பதுகூடத் தெரியாது என்றும், 35 கைதிகள், தமக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனைக் காலத்தை விட, நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் 38 கைதிகளின் வழக்குகள், 20 வருடங்களுக்கு மேலாக மேல் நீதிமன்றங்களில் நீடித்துக் கொண்டு சென்றுள்ளதாகவும் சில கைதிகள் தமது (நாமலின்) வயதைப் (35) பார்க்கிலும் நீண்ட காலம் விளக்கமறியலில் உள்ளதாகவும் அவர் உரையாற்றியிருந்தார்.
இந்த விடயங்கள், ஏற்கெனவே தமிழ் எம்.பிக்களால், குறிப்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனால் பாராளுமன்றத்தில் பல முறை எடுத்துரைக்கப்பட்டவை ஆகும்.
ஆனால், தண்டனைக் காலத்தைப் பார்க்கிலும் நீண்ட காலமாக, ஒரு கைதி விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் 20 வருடங்களாக சில வழக்குகள் நீடித்துச் சென்றுள்ளமையும் சில கைதிகள் நாமலின் வயதைப் பார்க்கிலும் நீண்ட காலமாக விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளமையும் நியாயமல்ல என்பதை, நாமல் கூறிய போதே ஆளும் கட்சிக்கு விளங்கியிருக்கிறது; மற்றவர்கள் கூறிய போது விளங்கவில்லை.
அதேவேளை, இந்தக் கைதிகள் விளக்கமறியலில் இருந்த காலத்தில், ஐந்து வருடங்களுக்கு சற்று குறைந்த காலத்தைத் தவிர்ந்த மிகுதிக் காலத்தில், தற்போதைய ஆளும் கட்சியினரே வேறு கட்சிப் பெயரில் ஆட்சியில் இருந்தனர். அப்போது இவர்களுக்கு இந்த நீதி விளங்கவில்லை.
நாமல் இவ்வாறு கூறியபோது, உடனே எழுந்திருந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, சர்வதேச தரத்துக்கு அமையத் திருத்த, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறினார். இவை, பாராட்டக் கூடிய நடவடிக்கைகள் தான். ஆனால், இந்தத் தருணத்தில் அரசாங்கம், ஏன் இந்த நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதும் முக்கியமான விடயமாகும்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில், இந்தத் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, “பயங்கர புலிகளை அரசாங்கம் விடுதலை செய்யப் போகிறது” என, சிங்கள மக்களைக் குழப்ப, தற்போது ஆளும் கட்சியில் உள்ளவர்கள், அப்போது முயன்றனர். அதன் காரணமாகத் தனித் தனி வழக்காக எடுத்து, தனித் தனியாகக் கைதிகளை விடுதலை செய்ய, நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
நல்லாட்சி அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, சர்வதேச தரத்துக்கு அமைய, திருத்த நடவடிக்கை எடுத்த போது, பயங்கரவாதிகளுக்குச் சலுகை வழங்கப் போவதாக, தற்போது ஆளும் கட்சியில் உள்ளவர்கள் நாட்டைக் குழப்ப முயன்றனர். அதன் காரணமாக, அந்தப் பணியை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அந்தக் காலகட்டத்தில், நாமல் ராஜபக்ஷவைப் போல் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர், தமிழ்க் கைதிகளுக்காகப் பரிந்து பேசியிருந்தால் அவர், புலிகளின் ஏஜண்டாகவே முத்திரை குத்தப்பட்டு இருப்பார். இப்போது அவ்வாறு எவரும் முத்திரை குத்த முயற்சிக்கவில்லை.
ராஜபக்ஷர்கள் வழங்கினால், அது தமிழ் ஈழமாக இருந்தாலும், அதில் தவறில்லை என்று சிங்கள மக்களில் சிலர் ஏளனமாகக் கூறுவது, இப்போது ஞாபகம் வருகிறது. அதேவேளை, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரேரணையே, தற்போது இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்குக் காரணம் என்பதும் தெளிவாகிறது.
காரணம் எதுவாக இருந்தாலும், இந்த விடயத்தில் சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ளாதிருந்த ஒரு விடயத்தை, அவர்களுக்கு எடுத்து உரைத்தமையையிட்டு, நாமல் பாராட்டப்படத் தான் வேண்டும். கைதிகளின் நன்மைக்காக, அதன் பின்னாலுள்ள அரசியலைப் புற்கணித்துவிடுவது நலம்!
தமிழ்க் கைதிகளில் 16 பேர், பொசன் போயா தினத்தில் (ஜூன் 24) விடுதலை செய்யப்பட்டனர். கைதிகளின் விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்துவது ஆவியவற்குப் புறம்பாக, சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்த ஜஸீம், இரகசியப் பொலிஸ் காவலில் இருந்து விளக்க மறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரேரணையில் பெயர் குறிப்பிடப்பட்ட இரகசியப் பொலிஸின் முன்னாள் அத்தியட்சகர் ஷானி அபேசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனவே தான், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரேரணை செயற்பட ஆரம்பித்துள்ளது என்று குறிப்பிட்டோம்.
இங்கு, எமக்கு எந்த வகையிலும் விளங்காத ஒரு விடயம் இருக்கிறது. இவ்வளவு நீண்ட காலமாகக் கைதிகளை வழக்கு விசாரணையின்றித் தடுத்து வைத்ததில், முன்னாள் அரசாங்கங்களும் இந்த அரசாங்கமும் என்ன இலாபத்தை அடைந்தன?
நியாயமற்ற சட்டமொன்றை, இவ்வளவு காலம் வைத்திருந்ததில், கடந்த காலத்தில் அரசாங்கங்கள் என்ன இலாபத்தை அடைந்தன? வழக்கு விசாரணையின்றி ஒருவரை, புனர்வாழ்வு முகாமுக்குள் அடைத்து வைப்பதில், ஓர் அரசாங்கம் என்ன இலாபத்தை அடையலாம்?
ஐரோப்பிய நாடாளுமன்றம் சுட்டிக் காட்டியிருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் நிறுவனங்களில் நியமனங்களை வழங்கும் விடயத்தால், என்ன இலாபம் இருக்கிறது? அவர்கள் எவரும் விசேட திறமைகளைக் காட்டவில்லை.
காணாமற்போனோருக்கான அலுவலகத்துக்கு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரைத் தலைவராக நியமித்ததால் விசேட பயன் ஏதும் இருக்கிறதா? அவ்வாறு இல்லையாயின், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் எச்சரிக்கைகளுக்கு இலக்காகும் வகையில், இந்த நடவடிக்கைகளை ஏன் எடுக்க வேண்டும்?
இவை எம்மால் விளங்கிக் கொள்ள முடியாத விடயங்களாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
22 minute ago
40 minute ago