2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

’ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வேன்’

Editorial   / 2020 ஜூலை 27 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியைப் பிளவுபடுத்திவிட்டு, அந்தக் கட்சியின் தலைவர் பதவியை அடைந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கம், என்னிடத்தில் இல்லை. அதனால், கட்சியின் ஆதரவாளர்களும் தற்போது கட்சியின் தலைவராக இருப்பவரும் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளேன்” என, முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 
 
கே: தற்கால அரசியல் நிலைவரம் பற்றி எவ்வாறு நோக்குகிறீர்கள்?  

தற்போது நாம் தேர்தலொன்றை எதிர்கொள்ளவுள்ள சந்தர்ப்பத்தில், நாட்டு மக்களுக்கு அரசியல் கசந்துபோயுள்ளதெனவே கருதுகிறேன். எல்லாக் கட்சிகளுமே அந்த நிலைப்பாட்டை அறிந்துகொண்டுள்ளன. நாட்டு மக்களின் தேவைகள் எவையும் பூர்த்தி செய்யப்படாத காரணத்தாலேயே இந்த நிலைமை உருவாகியுள்ளது. அதனால், புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்கி, அதனூடான பயணமொன்றைத் தொடர வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. அதனால், நாட்டு மக்களின் இதயத்தைத் தட்டிப்பார்த்து, அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கிறோம். அத்தோடு, நாட்டில் இன்று காணப்படும் இனவாதத்தைத் தோற்கடிக்க வேண்டும். அதனை தோற்கடித்தால் மாத்திரமே, சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின சமூகத்தையும் பாதுகாக்க முடியும். 

கே: இப்போது அரசியலில் ஐக்கிய தேசிய கட்சியின் வகிபாகம் எவ்வாறானதாக இருக்கிறது? 

நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்ற நாள் தொடக்கம்,  டி.எஸ் சேனநாயக்கவால் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியானது, தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை மய்யப்படுத்தியே ஆரம்பிக்கப்பட்டது. இன்றும் அதே நோக்கத்தை மய்யப்படுத்தித்தான் ஐக்கிய தேசிய கட்சி பயணிக்கிறது. 

கே:நாட்டில் இனவாதம் உள்ளதென கூறினீர்கள். எவ்வகையான இனவாதத்தைச் சுட்டிக்காட்டுகிறீர்கள்? 

இலங்கையில் இனவாதம் என்னும்போது, சிங்கள இனவாதத்தையே பிரதானமாகக் கூற முடியும். சிங்களவர்கள் இந்த நாடு அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற நிலைப்பாட்டிலிருந்து விடுபட வேண்டும். மறுதிசையில், பயங்கரவாதச் செயற்பாடுகள் மூலமும் இனவாதம் தூண்டப்படுகிறது.  அதனால் இனவாதம், மதவாதம், பிரிவினைவாதம் உள்ளிட்ட சகல பாதகமான செயற்பாடுகளையும் ஒழித்துகட்ட வேண்டும் என்பதோடு,  தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் சகலரும், இலங்கை தமது நாடு எனக் கூறும் நிலைமையை உருவாக்க வேண்டும். அதனால், இலங்கை சிங்கள பௌத்த நாடு மட்டும்தான் எனக் கூறுவது தவறானது. இந்த நாடு, எல்லா இனத்தவருக்கும் சொந்தமானது. 

கே:நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க களமிறக்கப்போகும் புதிய முகங்களை மக்கள் ஏற்றுகொள்ளவரா? 

ஜே.ஆர். ஜெயவர்தனவின் காலத்திலும் இதேபோன்ற நெருக்கடியை ஐக்கிய தேசிய கட்சி எதிர்கொண்டது. ஆனால் அந்தச் சவாலை எதிர்கொண்ட பின்னர், ஐக்கிய தேசிய கட்சி புதிய வடிவில் மீண்டும் உயிர்ப்படைந்தது. அதனால் ஐக்கிய தேசிய கட்சி என்பது, பெரும் இயலுமையை கொண்ட நீர்த்தேக்கமாகும்.ஓரிருவர் சென்றுவிட்டதால் நீர்த்தேக்கம் வற்றிபோய்விடாது. 

கே:  ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்க ஐ.தே.கவின் அனுமதி கிடைத்துள்ளதென கூறப்படுகிறதே? 

அவ்வாறு கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானதாகும். ஒரு கட்சி இன்னுமொரு கட்சியை உருவாக்குவதற்கான அனுமதியை என்றுமே வழங்குவதில்லை. ஐக்கிய மக்கள் சக்தி என்பது இனவாத கூட்டணி. குறிப்பாக, சம்பிக்க ரணவக போன்றவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அடித்தளத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இனவாதத்தை ஊக்குவிக்க முயல்கிறார்கள், சம்பிக்க போன்றவர்கள், சிங்களவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் கூறினாலும், வாக்குகளுக்காக தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவையும் கோருகிறார்கள். வாக்குகளுக்குத் தமிழ், முஸ்லிம் மக்களைப் பயன்படுத்திக்கொள்வோருக்கு, அவர்களுக்கு உதவிகளை வழங்க விரும்புவதில்லை என்பதே உண்மையாகும். அத்தோடு, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் சகலரும் அநாதரவான நிலைமைக்கே தள்ளப்பட்டுள்ளனர். ருக்மன் சேனநாயக்க, நியதபால, காமினி திஸாநாயக்க, சிறி​சேன குரே போன்றவர்கள் இந்த அனுபவத்துக்கு முகம்கொடுத்தவர்கள்.  

கே: ஐ.தே.கவின் 90 இற்கு அதிகமான உறுப்பினர்கள் அங்குதானே உள்ளனர்?

தேர்தல் காலத்தில் ஐ.தே.கவிடம் 281 வேட்பாளர்கள் இருப்பர். அந்த வகையில் ​90 பேர் மாற்றுக் கட்சிக்குச் சென்றுவிட்டனர் என்பதால், ஐக்கிய தேசிய கட்சிக்கு பாதிப்பாக அமையாது. அத்தோடு அவ்வாறு சென்றவர்களில் முன்னாள் எம்.பிக்கள் 45 பேர் மாத்திரமே உள்ளனர். அதிலும் அதிகமானோர் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால், ஐக்கிய தேசிய கட்சி இப்போதும் தமது அமைப்பாளர்களின் கீழ் பயணத்தைத் தொடர்கிறது. மரம் ஒன்று வளர்ந்த பின்னர், அதன் இ​​லைகள் உதிர்ந்து விட்டால், மரம் பட்டுவிடாது. மாறாக, புதிய இலைகள் முளைத்து, மரம் மீண்டும் வளர ஆரம்பிக்கும். 

கே: ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள், தங்களது அணியில் பிணைமுறி மோசடிக்கார்கள் இல்லையென பெருமிதம் கொள்கிறார்களே?

பிணைமுறி விவகாரம் ‘பனடோல்’ போன்று மாறிவிட்டது. தலைவலி வந்தவுடன் ‘பனடோல்’ குடிப்பதைப் போலவே, ஒருவருக்குச் சேறு பூச வேண்டுமென்கின்ற போது, பிணைமுறி விவகாரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால் பிணைமுறி விவகாரத்தில் எனக்குத் தொடர்பில்லை; நிதி அமைச்சராக இருந்த காலத்தில், மத்திய வங்கி, வணிக வங்கிகள் என்பன எனக்குக் கீழ் இருக்கவில்லை. அதனால் சுஜீவ சேனசிங்க, ஹர்ஷன ராஜகருணா, காவிந்த ஜயவர்தன போன்றவர்களே மேற்படி விவகாரத்தில் தொடர்புப்பட்டவர்கள் என்றும், அவர்களே அர்ஜுன மஹேந்திரனிடம் பணம் பெற்றுகொண்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கும்போது, என்னை நோக்கிக் கைநீட்டுவதில் அர்த்தமில்லை. அத்தோடு, மேற்படி குழுவினரே பிணைமுறி விவகாரம் தொடர்பான அடிக்குறிப்புகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்ததோடு,   சுஜீவ ​சேனசிங்க போன்றவர்களே, பிணைமுறி விவகாரத்தை நியாயப்படுத்தி புத்தகம் வெளியிட்டார்.  அதனால்,  அந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்களிடம் சலுகைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் என்னைச் சாடுவது வேடிக்கையாது. அதேபோல், சஜித்துடைய சலூனுக்கு யார் பணம் செலுத்தினர் என்பது தொடர்பாகவும் அவர்கள் சிந்திக்க வேண்டும். அதனால், பிணைமுறி விவகாரம் சேறு பூசுவதற்காக மாத்திரமே பயண்படுத்திக்கொள்ளப்படுகிறது.  அத்தோடு, போலி நாணயத்தாள்களை அச்சிட்டு மொனராகலையில் கைதானவர்கள் யார் என்பது தொடர்பாகவும், மத்திய கலாசார நிதியத்தின் பணத்தைக் கொள்ளையிட்டவர்கள் யார் என்பது தொடர்பிலும் மேற்படி ​தரப்பினர் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

கே: ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்த்தும் பறிபோய்விடுமல்லவா?

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள், அப்படியே அரசியலிலிருந்து செயலிழந்து சென்றுவிடுவர். அதனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என வினவுவதை மாத்திரமே எம்மால் செய்ய முடியும். ஐ.தே.கவும் ​எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்காது. 

கே: தலைமைத்துவம் என்று ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரம் நீங்கள் நம்பிப்கொண்டிருப்பது ஏன்?
 
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றமொன்று அவசியம், இருப்பினும்,  தற்போதுள்ள தலைவரை விடவும் நல்லதொரு தலைவர் வந்தால் மாத்திரமே, கட்சியின் மாற்றுத் தலைமைத்துவம் பற்றிச் சிந்திக்க முடியும். ஆனால், ஐக்கிய தேசிய கட்சியை விட்டுச் சென்றவர்கள், இனவாதத்தை ஊக்குவித்தவர்களாகவே உள்ளனர்.  அதனால், இனவாதக் குழுக்களைத் தவிர்த்துச் செயற்படுவதே, எமது நோக்கம் என்பதால்,  கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரிய நேரத்தில், சரியான தலைமைத்துவத்தைக் கட்சிக்குத் தெரிவு செய்வார். தலைவர் என்ற வகையில் ரணிலும்,  கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் பிரதித் தலைவராகவும் இருக்கின்ற என்னாலும் புதியவர்களையும் இணைத்துக்கொண்டு, கட்சியை வழிநடத்திச் செல்ல முடியும். ஆனால், புதியவர்களுக்கும் இனவாதத்தை ஊக்குவிக்க ஐ.தே.க ஒருபோதும் இடமளிக்காது. 

கே: தற்போது கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் தேவையில்லை என்கிறீர்களா?

கட்சியின் தலைமைத்துவத்தில் நிச்சயமாக மாற்றம் அவசியப்படுகிறது.  கட்சியின் தலைமைத்துவத்தைக் கோரியவரைக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் களமிறக்கியிருந்தோம். ஆனால், அவரால் கட்சி சார்பில் 15 இலட்சம் வாக்கு வித்தியாசத்தால் மிக மோசமான தோல்வியையே பெற்றுத்தர முடிந்தது. அதனால், கிராமப் புறத்திலுள்ள சண்டியர் போல் நடந்துகொள்வதால், மாத்திரம் தேர்தலை வெற்றிக்கொள்ள முடியாதென்பதே தெரியவருகிறது. அதனால், தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் சகலரினதும் நம்பிக்கை வெற்றி கொண்டால் மாத்திரமே, தேர்தலை வெல்ல முடியும். அதனை விடுத்து, தான் ஒரு பிரபலத்தின் மகனெனக் கூறிக்கொள்வதால் மாத்திரம், தேர்தலை வெற்றிகொள்ள முடியாது. 

கே: சஜித் இம்முறை கொழும்பில் களமிறங்குவது, ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக அ​மையுமல்லவா?  

சிறிதளவும் சவாலாக அமையப்போவதில்லை என்பதே எமது நிலைப்பாடு. இனவாதியும் மனிதாபிமானமும் அற்ற ஒருவரெனவே அவரைக் காண்கிறோம். கொழும்பிலுள்ளவர்கள் ‘ரை​கோட்’ காரர்கள் என்றும் அவர்களை நம்ப முடியாதெனவும் கூறிவிட்டு, ஹம்பாந்தோட்டைக்குச் சென்றவர்கள், அங்குள்ள மக்களால் அடித்து விரட்டப்பட்ட பின்னர், கொழும்புக்கு வருகிறார். அதனால் கொழும்பு மக்கள், அவரை மீண்டும் ஹம்பாந்தோட்டைக்கே விரட்டியடிக்க வேண்டும். 
கே: ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைமைத்தும் உங்களுக்கு வழங்கப்பட்டால் ஏற்றுக்கொள்வீர்களா? 
ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களும் தற்போதுள்ள தலைவரும் அந்தக் கோரிக்கையை விடுக்கும் பட்சத்தில், நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன். கட்சியை உடைத்துவிட்டு, மீண்டும் கட்சியின் தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கம் எனக்கு இல்லை. சகலரையும் ஒற்றுமைப்படுத்திக் கொண்டு, சகவாழ்வை உருவாக்கும் வகையில், தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே உள்ளேன்.  

கே: இப்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முடியுமென ஐ.தே.க கூறுகிறது. அதனை ஏன் நல்லாட்சியில் சாதிக்க முடியாமல் போனது? 

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்பக் காலத்தில், 100 நாள்களில் 100 வாக்குறுதிகளை, நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றியது. அதனால், மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கவும் முடிந்தது. எரிபொருள், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருள்களின் விலையைக் குறைக்க முடிந்தது. ஓய்வூதியம் பெற்றவர்கள், மாணவர்களுக்கான காப்புறுதி உள்ளிட்ட பல திட்டங்களையும் நல்லாட்சி வழங்கியது. நான், கல்வி அமைச்சராக இருந்த காலத்தில், ஆற்றப்பட்ட சேவைகளையே இன்றும் பேச முடிகிறது.  இருப்பினும், எனக்குப் பின்னர் வந்த நிதி அமைச்சரின் செயற்பாடுகள் எவையும் திருப்திகரமாக இல்லை. அவரால், எனது காலத்தில் மக்களுக்குக் கிடைத்த சலுகைகளும் இல்லாமல் போனது என்றே கூறுவேன். எனது காலத்தில், எனது திட்டத்தை அரச ஊழியர்களை நடைமுறைப்ப டுத்துமாறு கோரினேன். எனக்குப் பின்னர் வந்த நிதி அமைச்சர் அரச ஊழியர்களை திட்டத்தை மாத்திரம் செயற்படுத்தியதால் அவரின் முயற்சிகள் சாத்தியப்படவில்லை. 

கே: நாட்டின் பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க முன்வைக்கப்போகும் புதிய தீர்வுத்திட்டம் என்ன? 

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில், புதியதொரு பொருளாதாரத் திட்டத்தையே முன்வைக்கும். ஐக்கிய தேசிய கட்சி, தற்போதுள்ள பொருளாதாரத் திட்டத்தை எதிர்காலத்துக்கு அவசியமான வகையில் வடிவமைத்துக்கொண்டு, நடைமுறைப்படுத்தவே எதிர்பார்க்கிறோம். தற்காலத்தில் ​பொருளாதார வீழ்ச்சிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அவசியம். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை ஏடுகளிலும் சிந்தனைகளிலும் மட்டும் வைத்துக்கொண்டிருப்பதால் பயனில்லை. அவற்றைச் செயற்படுத்துவதே அவசியமாகும். அதனால், பொருளாதாரம் தொடர்பான தெரிவைக் கொண்டவர்களை, உரிய இடத்தில் அமர்த்தி, அவர்களிடத்தில் ஓர் இலக்கைக் காண்பித்து, அதை அடைவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

கே: சம்பிக்கவைப் பற்றி முக்கியத் தகவலொன்றை வெளிப்படுத்துவதாக அண்மையில் கூறியிருந்தீர்களே?

சம்பிக்க என்பவர் ஓர் இனவாதி;  அதனால் அவரைப் போன்றவர்கள், எமது கட்சிக்கு அவசியமில்லை. அவர், எமது கட்சிக்குள் இருந்து வெளியேறியுள்ளதால், எமது கட்சி தூய்மை அடைந்துள்ளது.  இன்று மோசடிக்காரர்கள் சகலரும், நல்லவர்கள் போல் ஆகிவிட்டனர்.  அதனால், அவர்கள் எங்களைப்பார்த்து விரலை நீட்டுகிறார்கள்.  அதனால், நிலக்கரி மோசடி விவகாரம், பொரளையில் வாகன விபத்து போன்ற விடயங்கள் தொடர்பாக, அவர் விளக்கமளிக்க வேண்டியது அவசியமாகும்.  அதேபோல், புத்தளம் அருவக்காடு பகுதியில் சம்பிக்கவால் அமைக்கப்பட்ட கழிவு முகாமைத்துத் திட்டத்தை, நடைமுறைப்படுத்த வேண்டாமென அப்போது கோரியிருந்தோம். ஆனால், அவர் அந்தத் திட்டத்தை நிறுவியதால், பெரும் நட்டத்தை மாத்திரமே அரசாங்கத்துக்கு ஏற்படுத்திக்கொடுத்தார். 

கே: சம்பிக்கவால்தான் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டதா? 

ஆம்! அவரால் தான் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டது. அவர்தான் இக்கட்சியை இனவாதத்தின் பக்கமாக இழுத்துச் சென்றார். அவர்தான் கட்சியைப் பிரிப்பதற்கான அடித்தளத்தையும் இட்டார்.   

கே: இன்று எந்தெந்தக் கட்சிகள்,  ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன?

சகல கட்சிகளுடனும் ஐக்கிய தேசிய கட்சி சுமூகமான உறவைப் பேணி வருகிறது. அந்த வகையில், பிரதான கட்சிகள் என்னும்போது ஜே.வி.பி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளே உள்ளன. இவ்வாறான கட்சிகளுடன் கொள்கை ரீதியான இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள முயல்கின்றோம்.  ஏனைய கட்சிகளை நாம் கண்டுகொள்வதில்லை.  

கே: வாக்காளர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

அதனால், நாட்டில் இனவாதத்தைப் பரப்புவோரைத் தவிர்த்துவிட்டு, நாட்டுக்காகச் சேவை செய்யக் கூடியவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். சகல இன மக்களையும் ஒன்றுபடுத்தக் கூடியவர்களும் உலக நாடுகளுடன் சுமூகமான உறவைப் பேணக்கூடிய வகையில் இலங்கையைக் கட்டியெழுப்புபவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். புதிய நோக்குகளை வைத்து, முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும்  அனுபவத்துடனும் நாட்டுப் பற்றுடனும் பயணிக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X