2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

எல்லை தாண்டலுக்கு முற்றுப்புள்ளி

Johnsan Bastiampillai   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்


இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையின் பிரதிபலன் மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது.  எல்லை தாண்டுவதும் அதற்காக கைது செய்வதும், பறிமுதல் செய்வதும் தண்டனை வழங்குவதும், படகுகளை அரசுடமையாக்குவதும், கைதாகும் மீனவர்களைப் பரிமாறிக்கொள்வதும் என்று தொடர்ந்து கொண்டிருக்கும் இரு நாடுகளின் கடல் எல்லைப் பிரச்சினையால் யாருக்கு இலாபம் அதிகம் என்று சிந்திப்பதனைவிடவும் இதிலுள்ள அரசியலை ஆழ்ந்து ஆராயவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

மோதலால் உருவாகும் முறுகல் தீர்வைத் தேடுவதாகவே இருந்தாலும் திரௌபதியுடைய சேலையாகவே தொடர்கிறது.  கடந்த வாரம் முழுவதும்  தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் வடக்கில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. உண்மையில் இந்த மீனவ படகுகளின் விற்பனையானது பல சுருக்குகளை வைத்துக்கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகவே சந்தேகிக்கப்படுகிறது.

இந்த ஏலம் அறிவிக்கப்பட்டது முதலே இந்திய மீனவர்கள் பல கோரிக்கைகளை விடுத்ததுடன், போராட்டங்களையும் நடத்தினர். அதில் இந்திய மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நல்ல நிலையில் உள்ள படகுகளை மீண்டும் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கும்மாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் ஒரு சிறிய சிக்கல் தவிர, ஏலம் எந்தத் தடையுமின்றி நடந்து முடிந்தது. ஏற்பட்ட அந்தச் சிக்கலே பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

மன்னார் மாவட்ட கடற்பரப்பிற்குள் 2014ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு காலத்தில் ஊடுருவிய தமிழக மீனவர்களின் ஒன்பது படகுகள் மன்னாரிலும் ஆறு படகுகள் தலைமன்னர் கடற்படைத் தளத்திலும் நிற்பதாக அறிக்கையிடப்பட்டது. இவ்வாறு நிற்கும் படகுகளில் மன்னார் மாவட்டத்தில் ஒன்பது படகு ஏலம் விடப்படும் எனவும் பத்திரிகையில் பகிரங்க விளம்பரம் பிரசுரிக்கப்பட்டது.

இதற்கமைய  படகுகளை ஏலம் விடுவதற்காக நீரியல்வளத் திணைக்களம் மற்றும் அமைச்சுகளின் அதிகாரிகள் குழு மன்னார் முழுவதும் தேடியபோதும் அங்கே ஒரு படகுகூட காணப்படவில்லை. இதுவே அந்தச் சிக்கலாகும். அவ்வாறானால் இந்தப் படகுகளுக்கு என்ன நடந்தது என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.

2011 இலிருந்து 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி எட்டாம் திகதி வரை  எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட 661 படகுகளில் 582 படகுகளை மீள தமிழ்நாட்டிற்கு பயணிக்க  நீதிமன்றங்கள் அனுமதித்த நிலையில், 445 படகுகளை எடுத்துச் சென்றிருந்தனர். நீதிமன்றம் விடுவித்தும் எடுத்துச் செல்லப்படாமல் இருந்த  137 படகுகளிலும் 12 படகுகள் மிகவும் தரமானவையாக  எந்தவொரு  பழுதும் அற்ற படகுகளாக காணப்பட்டன. எஞ்சிய 125 படகுகளில் உடைந்தவை பழுதடைந்து சேதமடைந்தவையும்  காணப்பட்டன.  இதேநேரம் இறுதி ஆண்டுகளில் கைப்பற்றி வழக்கு நடவடிக்கையில் இருந்த 79 படகுகளுடன் மொத்தம் 216 படகுகள் இறுதியாக இலங்கையில் இருந்தன என்று தமிழக மீனவ அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில், காணாமலாக்கப்பட்ட அல்லது களவாடப்பட்ட 47 படகுகளின் உண்மையை கண்டறியக்கூடாது என்பதற்காகவே இந்த ஏலமுயற்சி இடம்பெற்றது என்றும் தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். 

தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் படகுகளை ஏலம் விட கடந்த 2020ஆம் ஆண்டு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டத்தை நடத்தினர்.

அதனடிப்படையில், மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நல்ல நிலையில் உள்ள படகுகளை மீண்டும் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கும்மாறு கேட்டிருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் தமிழக மீனவர்களால் இலங்கை  வந்து படகுகளை எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. 

அதனால், படகுகளை உடனடியாக ஏலம் விட்டு அந்த பணத்தை விசைப்படகு உரிமையாளர் ஒப்படைக்கவும் என்று தெரிவித்திருந்தனர். அந்த வகையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள பயன்படுத்த முடியாத நிலையில் தமிழக அரசு இழப்பீடு வழங்கியிருந்தது. ஆனால் அதற்கு மாறாக ஏலம் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த இடத்தில் தங்களுடைய படகுகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட இராமேஸ்வரம் இழுவைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் யேசுராஜா,  “இலங்கை அரசிடம் எம்மை விடவும் அதிகம் துன்பப்பட்டவர்களான ஈழத் தமிழர்கள் இன்று எமக்கு ஏற்படும் துன்பத்தை கண்டுகொள்ளாமை வருத்தமளிக்கின்றது.  இலங்கையில் அகப்பட்டுள்ள 200 படகுகளில் நூற்றிற்கும் மேற்பட்ட படகு உரிமையாளர்கள் சிறுவயது முதலே மீனவனாக இருந்து சிறுகச் சிறுக சேமித்து மிகுதியை கடன்வாங்கியே இந்த படகுகளை வாங்கினான். இன்று அவன் தான் பெத்த பிள்ளைக்கே உணவளிக்க முடியாமல் தவிக்கின்றான்.  இதேநேரம் இலங்கை படையினர் தமது தேவை முடிந்த பின்பு இதே ஈழத் தமிழர்களை மீண்டும், விரட்டியடிப்பர். அப்போது இதே இந்திய மீனவனே கைகொடுப்பான். நாம் எட்டி உதைக்க மாட்டோம். மாறாக இரு கரம் கொடுத்து வரவேற்கும்போது, ஈழத்தமிழர்கள் இன்று எமக்கு முதுகில் குத்தும் வலியின் வேதனையை புரிந்துகொள்வர்” என்று தெரிவித்திருக்கிறார். இதனை வெறும் கருத்தாக நாம் வெறுமனே புறந்தள்ளிவிடமுடியாது.

இலங்கையின் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் உதவியும் ஆதரவும் மிக இன்றியமையாதன. அது ஒருவகையில் இந்தியாவின் ஆதரவுக்கு ஒப்பானது. ஆனாலும் இப்போது உருவெடுத்து வருகின்ற இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினையாலல் இலங்கை - இந்திய உறவிலேயே விரிசலை ஏற்படுத்திவிடக்கூடியதொன்றாகவே பார்க்கப்படவேண்டும்.

இவ்வாறு இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாத தீர்க்க முடியாததொன்றாக நீண்டு கொண்டிருக்கையில்தான்  ஐ.நா தரப்புக்கு இவ்விடயம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பால் கொண்டுசெல்லப்பட்டது. அதே போன்று நாடாமன்ற ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றையும் அவர்கள் தயார்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் இந்தியத் தூதரக அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அவர்களது முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புவேளை பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுப்பதைத் தவிர்த்துக்கொண்டுள்ளோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்திருந்தார்.

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை வெறுமனே ஒரு பாதிப்புகள் சார்ந்ததாக மாத்திரம் பார்க்கப்பட்ட பெரியளவான வாழ்வாதாரப் பிரச்சினையாக பூதாகாரமாக்கப்படுகிறது. வடக்கு மீனவர்களின் வலைகள் அழிக்கப்படுவதையும் படகுகள் சேதமாக்கப்படுவதையும் மீனவர்கள் தாக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் இலங்கை கடற்படையும் இலங்கை அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றமை தொடர்பிலேயே தாம் இந்தப் பிரேரணையை முன்னெடுக்கவிருந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தருவது இந்திய அரசாங்கத்தினதும் இலங்கை அரசாங்கத்தினதும் கடமையாகும். ஆனால், இதனை ஓர் அரசியல் பிரசாரமாக மாற்றி, இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சினையாகவும் இருக்கின்ற நல்ல விதமான உறவைக் குழப்புவதாகவும் அமைத்துவிடலாம் என்று ஒரு தரப்பு சிந்திப்பது ஆபத்தானது.

இந்த நிலையில், இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்புக்கும், யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்குமிடையில் நடந்த சந்திப்பில், இரு தரப்பு மீனவர்களிடையேயும் தொடர்ச்சியாக நிலவிவரும் இம்முரண்பாடுகள் ஈழத்தமிழர்களுக்கும் தாய்த்தமிழக உறவுகளுக்குமிடையே விரிசலை ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் முகமாக,  இலங்கை மீனவர்களின் கடல் எல்லைகளை  வரையறை செய்வதற்கேனும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.  ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் குறித்தும், தமிழ்மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாஷையான நிலையான அரசியல்தீர்வைப் பெறுவதில் ஏற்படுத்தப்படும் காலதாமதமானது, தமிழர்களின் நில உரித்துகளை வன்பறிப்புச் செய்து, தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் சமநேரத்தில் இந்தியாவின் அரசியல், இராஜதந்திர நகர்வுகளிலும் தாக்கம் செலுத்தக்கூடும் என்பதால், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல்தீர்வில் இந்தியாவின் வகிபாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் சிறப்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக கடற்படையினரின் தமிழக மீனவர்களுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு தமிழகத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஆதரவினையும் உதவிகளையும் குறைக்கின்ற அல்லது இல்லாமலாக்குகின்ற நடவடிக்கையாகவே இருக்கும் என்ற சந்தேகம் எல்லோரிடமும் இருக்கிறது.

இப்போது முன்னெடுக்கின்ற முயற்சியானது வட பகுதி மீனவர்களது கடற்தொழிலுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதாகவும், இந்திய தமிழக மீனவர்களின் நலனுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாததாக தீர்வுகளைக் காண்கின்றவகையில் அமைந்திருக்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .