2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

எம். பி. பதவியும் ”கூடுவிட்டு கூடுபாயும் கூத்தும்”

Editorial   / 2023 ஒக்டோபர் 19 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

கட்சி மாறுவதும் கொள்கை மாறுவதும் இலங்கை அரசியலுக்கோ சிறுபான்மை அரசியலுக்கோ ஒன்றும் புதியதல்ல. அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியலில் ‘கூடுவிட்டு கூடுபாயும் கூத்து’ தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது.  இது பலரகமாக இடம்பெறுகின்றது எனலாம்.

முஸ்லிம் கட்சிகள் ஒரு குறிப்பிட்ட தேர்தலில் அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் பெருந்தேசியக் கட்சி ஒன்றை ஆதரித்து மக்களிடம் வாக்குக் கேட்டுவிட்டு, தேர்தல் முடிவடைந்த பிறகு கூட்டத்தோடு அப்படியே அந்தப் பக்கம் தாவி விடுவதை கண்டிருக்கின்றோம்.

குறிப்பிட்டுச் சொல்வது என்றால், ‘ராஜபக்சக்கள் இனவாதத்தை கடைப்பிடிக்கின்றார்கள்’ என்று உணர்ச்சி பூர்வமாக பேசியதன் மூலம், மக்களைச் சூடேற்றி அதனூடாக வாக்குகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், ராஜபக்சர்களின் கைக்கு அதிகாரம் வந்த பின்னர் பலர் வெளிப்படையாகவும் திரைமறைவிலும் அந்தப் பக்கம் சோரம் போனதை நாமறிவோம்.

ஏனைய பெரும்பான்மை கட்சிகள் விடயத்திலும் இது நடந்திருக்கின்றது. ஒரு முஸ்லிம்; கட்சிpயின் மொத்த எம்.பிக்களும் பெல்டி அடித்த கதையும் உள்ளது. ஓரிருவர் தாவ தயாராக இருக்கின்றார்கள், எனவே கட்சியில் பிளவு வந்து விடும் எனச் சொல்லி கட்சியோடு கூட்டாக அந்தப் பக்கம் போன சந்தர்ப்பங்களும் உள்ளன.

தனிப்பட்ட அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன்னர் மக்களிடத்தில் முன்வைத்த நிலைப்பாடுகளை அப்படியே தலைகீழாக மாற்றிக் கொண்டு, கூடுவிட்டு கூடுபாய்ந்த நிகழ்வுகள் முஸ்லிம் அரசியலில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. சிலர் பகிரங்கமாகவும் வேறு சிலர் பின் கதவால் இரகசியமாகவும் இதனைச் செய்து வருகின்றார்கள்.

ஆளும் தரப்பிற்கு ஒரு தேவை வரும்போதுதான் முஸ்லிம் கட்சிகளோ எம்.பிக்களோ இப்படியான நிலைப்பாட்டை எடுக்கின்றன. அது ஒரு சட்டமூலம், அரசியலமைப்பு திருத்தம், நம்பிக்கையில்லாப் பிரேரணை, பட்ஜெட் மீதான வாக்கெடுப்பாக இருக்கலாம். அல்லது அமைச்சரவை நியமனக் காலமாக இருக்கும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவிய தருணங்களுக்குப் புறம்பாக, குறிப்பிட்ட முஸ்லிம் கட்சியே அனைத்து எம்.பிக்களோடும் கூட்டத்தோடு கோவிந்தா எனப் போன சந்தர்ப்பங்களும் உள்ளன என்பதை மறக்க முடியாது. 

அப்போதெல்லாம், சமூகத்தின் நலனுக்காக, பாதுகாப்புக்காக, ‘ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் வைக்கக் கூடாது’ என்பதற்காக சாணக்கியமாக, விவேகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் விளக்கமளித்து வந்தார்கள்.

ஆனால், அதற்குப் பின்னால் இருந்த உண்மையான நிஜக் காரணங்கள் என்ன என்பதை அவர்கள் சொல்லா விட்டாலும், திரைக்குப் பின்னால் நடக்கின்ற சங்கதிகளை, ஏன் இவர் அந்தப் பக்கம் போனார் என்பதற்கான காரண காரியங்களை முஸ்லிம் மக்கள் அறியாத மூடர்கள் அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அநேகமான முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைச்சு, பிரதி அமைச்சு பதவிகளுக்காக இவ்வாறு தமது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக் கொண்டார்கள். சிலர் பண ரீதியான டீல்கள் மற்றும் கொந்தராத்து, அபிவிருத்தியை இலக்காக வைத்து இதனைச் செய்தனர். தமது பைல்களை காப்பாற்றுவதற்காக சோரம் போனவர்களும் உள்ளனர் எனலாம்.

ஒரு முஸ்லிம் கட்சியோ அல்லது அந்தக் கட்சியில் உள்ள ஒரு எம்பியோ திடுதிடுப்பென தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் அவர்கள் அதுகுறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தியது கிடையாது. இதனால் முஸ்லிம் மக்கள் பல தடவை மிகுந்த தர்ம சங்கடங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உதாரணமாக, ராஜபக்ச தரப்பை இனவாதிகள் என விமர்சித்தால், முஸ்லிம் சமூகமும் கிட்டத்தட்ட அந்தக் கருத்துநிலைக்கு வரும். தாம் சந்திக்கின்ற மறுதரப்புக்கு ஆதரவான மக்களிடம் அவர்கள் அதற்காக வாதிடுவார்கள். ஏன் சண்டை பிடித்த சந்தர்ப்பங்களும் உள்ளன.

இவ்வாறிருக்கும்போது, கட்சியோ கட்சிக்கார எம்.பியோ பெல்டி அடித்தால், அவர்கள் இலகுவாக அதனைக் கடந்து போவார்கள். ஆனால், அந்த மக்கள் மிகவும் வெட்கித் தலைகுனிந்து போவார்கள். தமது தலைவர், கட்சி, எம்பி ஏன் அந்தப் பக்கம் போனார் என்பதை அவர்களால் நியாயப்படுத்தவே முடியாது போகும்.

இப்படியான சம்பவங்கள் பல தடவை முஸ்லிம் அரசியலுக்குள் நடந்தேறியிருக்கின்றன. ஒரு பக்கம் தேர்தலில் போட்டியிட்டு விட்டு, மக்களைப் பற்றி சிந்திக்காது அல்லது மக்களிடம் அந்தப் பக்கம் தாவுவதற்கான அனுமதியைப் பெறாது, பல்டி அடித்த முஸ்லிம் அணிகள், எம்.பிக்கள் ஏராளம் உள்ளனர்.

சம்பந்தப்பட்ட முஸ்லிம் கட்சி அல்லது அரசியல்வாதியை விடவும் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது முஸ்லிம் சமூகம் என்றுதான் சொல்ல வேண்டும். அதுமட்டுமன்றி முஸ்லிம் அரசியல் பற்றிய ஒரு மட்டரக பார்வையும் இதனால் வலுப்பெற்றது எனக் கூறலாம்.

ஆனால், இப்படி பக்கம் மாறித் தாவிய முஸ்லிம் கட்சிகளை மக்கள் கேள்விக்கு உட்படுத்தவில்லை. முஸ்லிம் அமைப்புக்களோ, புத்தி ஜீவிகளோ, படித்த சமூகமோ அக் கட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவில்லை.

இதேபோல், ஒரு அணியின்
எம்.பி. அந்தப் பக்கம் தாவினால் அதற்காக முஸ்லிம் கட்சிகள் நடவடிக்கை எடுத்தது மிகக் குறைவாகும். அந்தப் பக்கம் நாமும் போக வழியுண்டா என்று தேடியோர்தான் அதிகம் எனலாம்.

இவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதற்கு, பெரும்பான்மைக் கட்சிகளின் சின்னத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் போட்டியிட்டதும் ஒரு காரணமாகும்.

இந்தப் பின்னணியில்தான், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேரடியாக தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு
எம்.பியான அமைச்சர் நஸீர் அஹமட் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது அல்ல என உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியை இழப்பார் என்ற அடிப்பயைடயில், இவ்வெற்றிடத்திற்கு அலிசாஹிர் மௌலானாவை நியமிக்குமாறு கட்சி அறிவித்துள்ளது.

சட்டத்தில் முன்னமே இந்த ஏற்பாடு இருந்ததுதான். ஆனால், ஒரு எம்.பி. கட்சி மாறினாலும் அவருக்கு மக்கள் வழங்கிய ஆணை மாறாது என்ற அடிப்படையில் அந்தப் பதவி வறிதாகாது என்ற ஒரு வியாக்கியானத்தை நீதிமன்றம் முன்னர் வெளியிட்டிருந்தது. ஆனால், அது இப்போது திருத்தி எழுதப்பட்டுள்ளதாக கூறலாம்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்த மு.கா.கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்பட்டு வாக்களித்து, பின்னர் அப்போதைய அரசாங்கத்திற்கு சோரம் போனார் என்றுதான் மு.கா. கட்சியினால் நஸீர் அகமட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால், இதே குற்றச்சாட்டுக்கு உள்ளான மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஒரேயொரு நேரடி எம்.பியான முஷாரப் மீது அக்கட்சியும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டாலும், பின்னர் அதில் ஒரு இழுபறி நிலை தொடர்கின்றதாக தெரிகின்றது. இந்நிலையில், நஸிர் அகமட் மட்டும் அகப்பட்டுள்ளார் எனலாம்.

இவ்விவகாரம் முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி பெரும்பான்மை அரசியலிலும் விவாதப் பொருளாகியுள்ளது. ஏனெனில் இவ்வாறு ஒரு கட்சியின் ஊடாக எம்.பி. பதவியைப் பெற்றுவிட்டு மறுதரப்புக்கு பெல்டி அடித்த பலர் தேசிய அரசியலில் உள்ளனர். அவர்கள் எல்லாம் பதவி இழப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உண்மையில், தேர்தல்கள் இடம்பெறும்போது சிலர் கட்சி மற்றும் அதற்குள்ள செல்வாக்கின் ஊடாக வெற்றி பெறுகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸைப் பொறுத்தமட்டில் இதில் முதலாம் ரகத்திற்குள்ளேயே உள்ளடங்குகின்றன.

முஸ்லிம் அரசியலில் நஸீர் அகமட்டிற்கும் அலிசாஹிர் மௌலானாவுக்கும் ஒரு வரலாறு உள்ளது. அந்த வரிசையில் இந்த தருணத்தில் ஒப்பீட்டளவில் இதில் யார் அதிகாரத்தில் இருப்பது நல்லது என்ற ஒரு கணிப்பும் முஸ்லிம் சமூகத்திற்குள் இல்லாமலும் இல்லை.

நஸீர் அகமட் சாதிக்காத சமூக விவகாரத்தை அலிசாஹிர் வந்து சாதித்து விடுவார் என்று யாரும் கூறி விடவும் முடியாது.

ஆனால் அவர் பதவி இழந்து, அந்த இடத்திற்கு அலிசாஹிர் வருவது ஏனைய முஸ்லிம் எம்.பிக்களுக்கு மட்டுமன்றி, சிங்கள எம்.பி.க்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி தேசிய அரசியலிலும் சில மாற்றங்களை உண்டுபண்ணலாம்.

அப்படியே, எம்.பிக்கள் கட்சி தாவுவதற்கு எதிராக எடுக்கப்படுகின்ற சட்ட நடவடிக்கை போல, மொத்தமாக ஒரு முஸ்லிம் கட்சி, கட்சியாக கூண்டோடு குத்துக்கரணம் அடிப்பதற்கு எதிராகவும் ஏதாவது சட்ட ஏற்பாட்டைக் கொண்டு வர முடிந்தால் இன்னும் நல்லது.

2023.10.19


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .