2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

என்.பி.பி. சொல்லுமளவுக்கு துய்மையான கட்சியா?

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உருவாக்கிய பல கட்சிகளில், இறுதியாக உருவாக்கிய கட்சியான ஐக்கிய குடியரசு கட்சி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் தெரிவித்த கருத்தொன்றை எதிர்த்து கடந்த 2ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

மே மாதம் 6ஆம் திகதி நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிறுவப்படும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மத்திய அரசாங்கத்தின் நிதி வழங்கும் போது, ஊழலற்ற கட்சிகளால் நடத்தப்படும் மன்றங்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்படும் என்றும் ஊழலற்ற ஒரே கட்சி தமது கட்சியான தேசிய மக்கள் சக்தி மட்டுமே என்றும் ஜனாதிபதி கூறியிருப்பதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெயர் குறிப்பிடா விட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் முற்போக்கு முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சகல கட்சிகளும் ஊழல் பேர்வழிகளால் நடத்தப்படும் கட்சிகள் என்றும் அவை வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மத்திய அரசாங்கத்தில் நிதி வழங்கப்படாது என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார் என்பதே இம்முறைப்பாட்டின் மூலம் கூறப்பட்டது.

ஜனாதிபதியின் கூற்று வாக்காளர் மீது முறையற்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது தேர்தல் சட்டவிதிகளுக்கு முரணானதாகும் என்றே அந்த முறைப்பாட்டைக் கையளித்த ஐக்கிய குடியரசு கட்சியின் உப தவிசாளர் தீக்ஷன கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவர் குறிப்பிடும் கூட்டத்தில் ஜனாதிபதியின் உரை, ‘யூடியுப்’ தளத்தில் இருக்கிறது. அதன்படி, அவர் ஜனாதிபதியின் கூற்றை திரிபு படுத்தியே முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி வழங்குவதில் சிக்கல் இல்லை என்றும் ஆனால், ஏனைய கட்சிகள் வெற்றி பெறும் சபைகளுக்கு நிதி வழங்கும் போது, நன்றாக ஆராய்ந்தே நிதி வழங்க வேண்டியிருக்கும் என்றும் அதனால் அச்சபைகளுக்கு தாமதமாகவே நிதி வழங்க வேண்டியிருக்கும் என்றுமே ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

அதனாலோ என்னவோ? வடக்கிலோ, தெற்கிலோ மற்றும் கிழக்கிலோ எந்தவொரு அரசியல் கட்சியும் ஜனாதிபதியின் கருத்தைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆயினும், தமது கட்சியில் உள்ளவர்கள் மட்டுமே தூய்மையானவர்கள் என்றும் ஏனைய கட்சிகளில் உள்ளவர்கள் அனைவரும் ஊழல் பேர்வழிகள் என்றும் ஜனாதிபதி அக்கருத்தின் மூலம் கூற வருகிறார் என்பது உண்மையே.

அனுரகுமாரவைப் போல, ஊழலை பற்றிக் குறிப்பிடாவிட்டாலும், தேர்தல் காலத்தில் இவ்வாறு ஏனைய கட்சிகள் வெற்றி பெறும் சபைகளுக்கு நிதி உதவி வழங்கப்படாது என்று இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் கூறியிருக்கிறார்கள். எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் போன்ற கீழ் மட்ட தேர்தல்களின் போது, மக்கள் வேட்பாளர்களோடு தமக்கு இருக்கும் நட்பு, உறவு முறைகள் மற்றும் பிரதேசத்தவர் என்பதைப் போன்ற காரணிகளை கருத்திற்கொண்டே வாக்களிக்கின்றனர். அபிவிருத்தி, அபிவிருத்திக்கான நிதி வழங்கல் போன்ற விடயங்கள் இறுதியாகவே கருத்திற்கொள்ளப்படுகின்றன. 

எனவே, அக்கூற்றுக்களால் பாரிய தாக்கங்கள் ஏற்படுவதில்லை. 
தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரு விதமாகவும் ஏனைய கட்சிகள் வெற்றி பெறும் சபைகளுக்கு மற்றொரு 
விதமாகவும் நிதி வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்த கருத்து அவர் அதே கூட்டத்தில் தெரிவித்த மற்றொரு கருத்தோடு முரண்படுகிறது.

உள்ளூராட்சி மன்றங்கள் தயாரிக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டத்தின் பிரகாரமே நிதி வழங்கப்படும் என்றும் அதற்காக அம்மன்றங்கள் தமது திட்டங்களை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அக்குழுக்கள் அவற்றை ஆராய்ந்து ஒப்புதல் வழங்கியதன் பின்னர் அவற்றுக்கு அரசாங்கத்திடம் நிதி வழங்கப்படும் என்றும் அவர் அக்கூட்டத்தில் கூறினார்.

அதாவது, யாழ்ப்பாண மா நகர சபையைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றினாலும், அச்சபையால் தயாரிக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்றுக்கொண்டால் மட்டுமே அத்திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்தின் நிதி வழங்கப்படும். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற சபைகளின் திட்டங்களுக்கு ஒரு விதமாகவும் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்ற சபைகளின் திட்டங்களுக்கு மற்றொரு விதமாகவும் ஒப்புதல் வழங்க முடியாது. அதேவேளை, ஒருங்கிணைப்புக் குழு வெவ்வேறு சபைகளுக்கு நிதிக் கோரி ஒரே அறிக்கையைத் தான் சமர்ப்பிக்கும்.

எனவே, ஜனாதிபதி கூறுவதைப் போல, எதிர்க்கட்சிகளால் நடத்தப்படும் சபைகளுக்குத் தாமதித்தே நிதி வழங்கப்படும் என்ற கருத்து குழப்பமானதாகவே தெரிகிறது.
எனினும், தமது கட்சிக்காரர்கள் மட்டுமே தூய்மையானவர்கள் என்ற ஜனாதிபதியின் கருத்து முற்றிலும் உண்மையானதல்ல. ஆயினும், வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி அலுவலகத்தின் மட்டத்திலும் பாராளுமன்றத்தின் மட்டத்திலும் ஊழல்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் வாதம் மறுக்கக் கூடியதல்ல. 
எதிர்காலத்தில் எது நடந்தாலும் அது இது வரை உண்மையாகும்.

அதேபோல், இது வரை நாட்டை ஆட்சி புரிவதில் நேரடியாகவோ அல்லது வேறு வழிகளிலோ பங்களிப்புச் செய்த சகல கட்சிகளும் ஊழல்களுக்கு காரணமாகவும் உடந்தையாகவும் இருந்தமை மறுக்க முடியாத உண்மையாகும். எனினும், இது வரை ஊழலில் ஈடுபடாத புதிய அரசியல்வாதிகள் இம்முறை புதிய கட்சிகளாகவோ சுயேச்சை குழுக்களாகவோ தேர்தலில் குதித்திருக்கலாம். அவர்களை ஊழல் பேர்வழிகள் என்று கூறலாமா?

கடந்த காலத்தில் ஊழலில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் திருந்தி விட்டார்கள் என்றும் கூற முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தமது மனைவியுடன் கொழும்பில் அரசுக்குச் சொந்தமான இது வரை பெறுமதி மதிப்பிடப்படாத ஒரு ஏக்கர் காணியில் 47 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட 350 கோடி ரூபாய் பெறுமதியான 30,000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடொன்றில் வாழ்கிறார். இரண்டு முதியோர்களைக் கொண்ட குடும்பமொன்றுக்கு இவ்வாறானதோர் வீடு தேவையா?

சட்டத்தின் படி, மஹிந்த அவ்வீட்டை வைத்திருப்பது குற்றமில்லை என்றாலும், தலைவர்கள் பொதுப் பணத்தை எவ்வாறு துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதை அது காட்டுகிறது. இந்த வீட்டை அரசிடம் கையளிக்குமாறு அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார மஹிந்தவிடம் பகிரங்க வேண்டுகோளை விடுத்தபோது, தேசிய மக்கள் சக்தியை தவிர, ஏறத்தாழ சகல கட்சிகளும் அதனை எதிர்த்தன. அது அக்கட்சிகளின் தலைவர்கள் ஊழல் மற்றும் வீண் விரயம் ஆகியவற்றை எதிர்க்கவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.

மறு புறத்தில், மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ வானத்தில் இருந்து இறங்கியவர்களைக் கொண்ட கட்சிகளல்ல. அந்த இரண்டு கட்சிகளிலும் உள்ளவர்களில் பெரும்பாலானோர் அண்மைக்காலம் வரை ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருந்தே அவ்விரு கட்சிகளில் இணைந்துள்ளனர். அதன் பின்னர், இது வரை அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஊழலைத் தவிர்த்து வாழ்ந்திருக்கலாம். அதேபோல, ஏனைய கட்சிகளிலும் மேலும் பலர் அவ்வாறு ஊழலற்ற அரசியலில் ஈடுபடலாம்.

அதேபோல, ஏற்கெனவே மக்கள் விடுதலை முன்னணியிலும் தேசிய மக்கள் சக்தியிலும் இணைந்துள்ளவர்கள் மத்தியில் ஊழல் பேர்வழிகளும் மறைந்திருக்கலாம். இதற்கு முன்னர் அவ்வாறு மறைந்திருந்த பலர் பல சந்தர்ப்பங்களில் அம்பலமாக்கியுள்ளனர். அதற்கு சிறந்த உதாரணம் விமல் வீரவனசவாகும்.

2008ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியென்றால் விமல் வீரவன்சவே என்று கூறுமளவுக்கு அவர் மக்கள் விடுதலை முன்னணியில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆயினும், 2008ஆம் ஆண்டு அக்கட்சி அவரை வெளியேற்றியது. அவர் தேசிய சுதந்திர முன்னணியை அமைத்து ஊழலுக்குப் பெயர் பெற்றிருந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் தஞ்சம் புகுந்தார். பின்னர் அவரும் பாரிய ஊழல்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற 2003ஆம் ஆண்டு புலிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காகத் தனி நாடொன்றையொத்த இடைக்கால நிர்வாக சபையொன்றுக்கான திட்டத்தை முன்வைத்தனர். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் அதனை ஆராய விரும்பியது. இது நாட்டின் பிரிவினைக்கே வழிகோலும் என்று எண்ணிய மக்கள் விடுதலை முன்னணி, ஐ.தே.க. அரசாங்கத்தை கவிழ்க்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 39 ஆசனங்களை வென்றது.

கேகாலை மாவட்டத்திலிருந்து அனுருத்த பொல்கம்பல என்பவரும் அக்கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். பின்னர் அவர் ஒரு நபரை ஜப்பானுக்கு கடத்திச் சென்றதாகத் தெரிய வந்தது. எனவே, மக்கள் விடுதலை முன்னணி அவரை வெளியேற்றியது. அவரும் பின்னர் மஹிந்தவுடன் இணைந்து கொண்டார். மக்கள் விடுதலை முன்னணியிலும் ஊழல் பேர்வழிகள் மறைந்திருக்கலாம் என்பதற்கு இதுவும் மற்றொரு உதாரணமாகும்.

இப்போது தாம் தூய்மையானவர்கள் என்று கூறினாலும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடைளில் உரையாற்றும்போது, தம்மிடையேயும் ஊழல் பேர்வழிகள் மறைந்திருக்கலாம் என்றும் அவர்களைப் பற்றித் தெரிய வந்தால், உடனே வெளியேற்றுவோம் மற்றைய கட்சிகளைப் போல, அவரை பாதுகாக்க மாட்டோம் என்றே அனுரகுமார கூறினார். அது தான் யதார்த்தம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X