Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளைகள் என்பன இன்றைய சிறார்களுக்கானவை என்பதை சிந்திக்க மறந்துள்ளனர் இன்றைய மனிதர்கள்.
தம் கண்களுக்கு எதிரேயே சிறார்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவற்றை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் மிகவும் அரிதே.
எனினும், தற்காலத்தில் ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்புப் போராட்டங்கள், விழிப்புணர்கள் எனச் சிலர் வீதிக்கு இறங்கி, சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல்கொடுத்து வருகின்றார்கள்.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய போது, தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த டயகமவைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியே, இவை எல்லாவற்றுக்கும் வித்திட்டுச் சென்றுள்ளார்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக இன்று முன்வைக்கப்படும் கண்டனங்கள், நீர்த்துப்போகாமல், ஓர் உடும்புப் பிடியாய் தொடர வேண்டும் என்பதே, சிறார்கள் மீது அக்கறையுள்ள சமூகத்தின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம், அண்மையில் கல்கிஸைப் பகுதியில் பாலியல் செயற்பாடுகளுக்காக விற்கப்பட்ட 15 வயது சிறுமியின் விவகாரம், டயகம சிறுமியின் மரணத்துடன் நீர்த்துப்போய்விட்டது.
அவ்வாறாறே, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கப் போராட்டங்கள், தாதியர் போராட்டங்களுடன், சிறுவர் தொழிலாளர்களுக்காக எழுப்பப்படும் குரல்கள் மிகையாக ஒலிக்கவில்லை என்பதே யதார்த்தமாகிறது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சிறுவர் உரிமைகள் சாசனத்தில், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தொடர்பான விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அதாவது, சிறுவர்கள் பொருளாதார ரீதியில் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவதில் இருந்தும் ஆபத்து விளையக்கூடிய தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதில் இருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என அச்சாசனம் எடுத்துரைக்கின்றது.
ஆளுமை விருத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த பருவமாக சிறு பராயம் காணப்படுவதால், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் இங்குள்ள சட்டத்துக்கமைய, 14 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை எச்சந்தர்ப்பத்திலும் தொழிலுக்கு அமர்த்த இயலாது. அவ்வாறு அவர்களைத் தொழிலுக்கு அமர்த்துவோருக்கு எதிராக 1 வருடத்துக்கும் குறையாத சிறைத் தண்டனை வழங்க முடியும்.
ஆனால், 14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களை சில சந்தர்ப்பங்களில் வேலைக்கமர்த்த முடியும். எனினும், அச்சிறார்களின் வாழ்க்கை, சுகாதாரம், கல்வி, ஒழுக்கம் போன்றவற்றுக்கும் உடல், உளப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தொழில்களில் ஈடுபடுத்த முடியாது.
அதாவது, கிருமிநாசினி, இராசாயனத்திரவியம், பட்டாசு கைத்தொழில், இரும்பைக் காய்ச்சுதல், சுரங்க அகழ்வு, கல் உடைத்தல், விறகு வெட்டுதல், கழிவுகளை ஏற்றிச்செல்லுதல், தீப்பந்துகள் சுழற்றுதல், கரணமடித்தல், மரம் ஏறுதல், வெட்டுதல் போன்றவற்றில் சிறுவர்களை ஈடுபடுத்தல் ஆகாது.
எனவே, இவர்கள் பெரும்பாலும் வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதமான சிறுவர்கள், வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர் என தொழில் திணைக்களம் அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது, 18 வயதுக்கு குறைந்த சுமார் 45,000 சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்காக தற்காலத்தில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இவர்களில் ஆகக் கூடுதலானவர்கள் கொழும்பு, கம்பஹா ஆகிய பிரதேசங்களிலேயே பணியாற்றுகின்றனர்.
“தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இலங்கையில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள எண்ணிக்கை தொடர்பில் ஓரளவுக்கு திருப்தியடைய முடியும். எனினும், நாடு என்றவகையில் அதுவும் இருக்கக் கூடாது”என தொழில் ஆணையாளர் நாயகம், பிரபாத் சந்திரகீர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
வேலைக்கு அமர்த்தப்படும் சிறார்கள் ஆளுமை விடுத்தி குன்றுதல், பல்வேறு விதமான துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாவதால், நாளடைவில் நாட்டின் மீதும் சமூகத்தின் மீதும் வெறுப்புடையவர்களாக மாற்றமடைகின்றனர். இதனால் நாட்டின் எதிர்காலமும் கேள்விக்குறியாகின்றது.
சிறுவர்களை பணிக்கு அமர்த்துதல், துன்புறுத்தலுக்கு ஆளாக்குதல், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 0112 433 333 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்விடயத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற சிறுவர்களுக்கான அவசர உதவிச் சேவை இலக்கம் உள்ளமையையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஹோட்டல்களில் சமைப்பதற்கு, டைல்ஸ்களை வெட்டுதல் போன்ற ஆபத்தானப் பொருள்களைக் கையாள்வதற்கு, 16 - 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களைப் பயன்படுத்துவதற்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாக தொழில் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புதிய ஒழுங்குவிதிகளை உருவாக்க, தொழில் திணைக்களம் தயாராகி வருவதோடு, சிறுவர்களை எந்தெந்தத் தொழில்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது தொடர்பான பட்டியல் ஒன்றையும் வெளியிட உள்ளதாக அறிய முடிகிறது.
மேலும், சிறுவர்களை பணியாளர்களாக வேலைக்கமர்த்துவதைத் தடுக்க சில அவசர சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வேலை வழங்குவதைத் தடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும், சிறுவர்களுக்காக தனி நீதிமன்றங்களை நிறுவுவதற்கும், துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்களின் சாட்சியங்களை வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பெறுவதற்கும் புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, ஹிஷலினி-189 எனும் வீட்டுப் பணியாளர் அவசரச் சேவை இலக்கத்தை அறிமுகப்படுத்தலுக்கான பரிந்துரையை, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் அண்மையில் கையளித்துள்ளார்.
உண்மையில் பெரும்பாலும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். எனவே, பொருளாதாரத்தை ஈடுசெய்யும் வழிவகையை அச்சிறார்களின் குடும்பங்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம், சிறார்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதை நாட்டில் இருந்து இல்லாதொழிக்கலாம்.
அத்தோடு, சிறார்களின் கல்விக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்தும் சமூகத்தில் ஒன்றித்துக் குரல்கொடுப்போம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
2 hours ago