2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

எதிர்க்கட்சிகள் பதவிக்கு வந்தால் பிரச்சினைகள் தீருமா?

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 23 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

எம்.எஸ்.எம். ஐயூப்

 

 

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, “தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நாம் பொறுப்பல்ல” எனக் கூறினார். அதேவேளை, “இந்த நெருக்கடிகளைத் தோற்றுவித்த காரணிகளில் சில, எமது கட்டுப்பாடுக்கு அப்பாலானவை” என்றும் கூறினார்.

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது வாக்களித்த மக்களின், அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில், அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்புவதே ஜனாதிபதியின் உரையின் நோக்கமாகத் தெரிந்தது. ஆனால், அந்த முயற்சி பயனளிக்கவில்லை.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு, வெளிநாட்டு செலாவணித் தட்டுப்பாடே பிரதான காரணம் என்ற ஜனாதிபதி, தற்போது நிலைமை சீராகி வருவதாக புள்ளி விவரங்களை முன்வைத்தார். எனினும், பில்லியன் டொலர் கணக்கிலேயே அவர் அதை விவரித்தார். ஒரு பில்லியன் டொலர் என்றால் எவ்வளவு, அந்தத் தொகையால் என்ன செய்யலாம் என்பதை அறிந்த எத்தனைப் பேர், இந்த நாட்டில் இருக்கிறார்கள்?

பொதுஜன  பெரமுன, 2022 பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி அநுராதபுரத்தில் நடத்திய பொதுக் கூட்டமொன்றில், பெரமுனவின் தலைவர்கள் உரையாற்றும் போதும், இவ்வாறு நம்பிக்கையைக் கட்டி எழுப்ப முயன்றனர். எனினும், அந்தக் கூட்டத்தில் இருந்து வீடு திரும்பிய உடனேயே, மக்கள் மீண்டும் எரிபொருளுக்காகவும் எரிவாயுவுக்காகவும் நீண்ட வரிசைகளில் நிற்க நேர்ந்ததை அடுத்து, அந்தக் நோக்கமும் நிறைவேறவில்லை.

“தற்போதைய பிரச்சினைகள் தானாக உருவாக்கியவை அல்ல” என்று கூறும் போது, அவற்றைத் தீர்க்கும் பொறுப்பும் தமக்கில்லை என்று கூற ஜனாதிபதி முயல்கிறார் போலும். அவருக்கோ, தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு தலைவருக்கோ, அவ்வாறு பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.

தற்போதைய பிரச்சினைகளுக்கு, தற்போதைய அரசாங்கம் மட்டுமே காரணம் என்றும் எவரும் வாதிடவும் முடியாது. அதேவேளை, தற்போதைய பிரச்சினைகளுக்கான சில காரணங்கள், தற்போதைய அரச தலைவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாலானவை என்பதும் உண்மை. எனினும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து நழுவிவிட, அரசாங்கத்தின் எந்தவொரு தலைவராலும் முடியாது.

ஜனாதிபதி கூறியதைப் போலவே, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணம், வெளிநாட்டு செலாவணித் தட்டுப்பாடாகும். வெளிநாட்டு செலாவணிக் கையிருப்பைப் பலப்படுத்துவதானால், செலாவணி வெளியேறுவதைத் தடுப்பதோடு, வெளியிலிருந்து செலாவணி உள்ளே வரும் வழிகளைப் பலப்படுத்த வேண்டும். வெளிநாடுகளிலிருந்து செலாவணி உள்ளே வருவதற்காக வெளிநாடுகளுக்குத் தேவையான பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்திச் செய்ய வேண்டும். அதாவது இந்த இரண்டுக்கும் தேசிய உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

ஆங்கிலேயர் காலத்திலிருந்து வரும் பெருந்தோட்ட வருமானமும் 1980களில் உருவான வெளிநாட்டுத் தொழில், ஆடைத் தொழில் ஆகியவற்றின் வருமானமும் தான் இலங்கைக்கு பிரதானமாக வெளிநாட்டு செலாவணியாக கிடைக்கிறது. பிற்காலத்தில் உல்லாச பிரயாணத்துறையும் பிரதான வருமானமாகியது. இலங்கையில் இருந்த உருக்கு, நெசவு, சீனி, ஒட்டுப்பலகை, சீமெந்து போன்ற தொழிற்சாலைகளையும் ஆட்சியாளர்கள் அடிக்கடி விற்றுவிட்டார்கள்.

இப்போது, நாட்டுக்கு தேவையான அனைத்தும் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த காலங்களிலும் அதற்குப் போதுமான வெளிநாட்டுப் பணம் நாட்டில் இருக்கவில்லை. ஆகவே, சகல அரசாங்கங்களும் வெளிநாட்டுக் கடன் பெற்று, இதுவரை காலமும் நாட்டுக்கு அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்து கடனை ஏற்றி வைத்தன.

கடந்த வாரம் அரசாங்கம் இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர் கடனைப் பெற்றது. சீனாவிடமிருந்தும் மேலும் 200 கோடி டொலருக்கு அதிகமான கடனை அரசாங்கம் கேட்டுள்ளது. அந்தப் பணம் முடிவடையும் போது, கடனும் மேலும் ஏறியிருக்கும். மீண்டும் கடன் பெற வேண்டிய நிலையும் உருவாகும். அப்போது எங்கிருந்து கடன் பெறுவது?

அத்தோடு, கொவிட்-19 நோயின் காரணமாக உல்லாசப் பிரயாணத்துறையும் வெளிநாட்டுத் தொழிற்றுறையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. அது எந்தவோர் அரசாங்கத்தினதும் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிலைமையாகும்.

எனவே, வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினைக்கு, தாம் காரணமல்ல என்று ஜனாதிபதி கூறும் போது அது ஓரளவுக்கு உண்மையே. ஆனால் அவரும் அவரது சகோதரரும், நாட்டை ஆட்சி புரிந்த 2005 - 2014 வரையிலான ஒன்பது வருட காலத்திலாவது தேசிய உற்பத்தியை பெருக்க, அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தவகையில் தற்போதைய பிரச்சினைகளுக்கு ராஜபக்‌ஷர்களுக்குப் பெரும் பங்குண்டு.

அதேவேளை, தற்போதைய படுபயங்கரமான விலை ஏற்றத்துக்கு, வெளிநாட்டு செலாவணிப் பற்றாக்குறைக்கு புறம்பாக, தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் அரசியல் கண்ணோட்டத்தில் எடுத்த சில நடவடிக்கைகளும், இந்தக் காலகட்டத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்களும் முக்கிய காரணங்களாகும்.

கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், அரசாங்கம் ஒன்றரை ரில்லியன் (150,000 கோடி) ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியான நாணய நோட்டுகளை அச்சிட்டுள்ளது. பணத்தை அச்சிட்டு, புழக்கத்துக்கு விட்டால் பணவீக்கம் ஏற்படும்; விலைவாசிகள் உயரும் என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.

இதில் விந்தை என்னவென்றால், இதைவிட அதிகமான வருமானத்தை, அரசாங்கம் 2019ஆம் ஆண்டு அறிவித்த பல்வேறு வரிச் சலுகைகள் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இழந்தது என்பதாகும். 2020ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலை இலக்காக வைத்தே, கோட்டாபயவின் அரசாங்கம் இந்த வரிச் சலுகைகளை அறிவித்தது.

அதேபோல், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அரசாங்கம் சீனிக்கு விதித்து இருந்த கிலோ கிராமுக்கு 50 ரூபாய் வீதமான இறக்குமதி வரியை, 25 சதமாகக் குறைத்தது. சீனியின் விலையைக் குறைக்கவே இவ்வாறு செய்வதாக அப்போது கூறப்பட்டது. எனினும், வரிச் சலுகைளைப் பெற்றுக் கொண்ட வர்த்தகர்கள், சீனியின் விலையை குறைக்கவில்லை. அரசாங்கம் அவர்களுக்கு எதிராக, எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவும் இல்லை.

இது பாரியதோர் ஊழலாகும். இதன் மூலமும் அரசாங்கம் பல பில்லியன் ரூபாய் வருமானத்தை இழந்தது. அந்த வரிச் சலுகைகளை அறிவிக்காமல் இருந்திருந்தால், அரசாங்கம் பணம் அச்சிடத் தேவையில்லை. அந்த வகையில், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு, தற்போதைய அரசாங்கம் பெரும் பங்காற்றியுள்ளது.

அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும் என, இப்போது எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 15ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி, கொழும்பில் பாரியதோர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அணியான சோஷலிஸ இளைஞர் சங்கமும் வெள்ளிக்கிழமை (18) ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னால் பாரியதோர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. எரிபொருளுக்கும் எரிவாயுவுக்கும் வரிசையில் நிற்கும் மக்களும் அரசாங்கத்துக்கு சாபமிடுகிறார்கள். “வெளியேறிப் போங்கள்” என்கிறார்கள்.

பிரச்சினை என்னவென்றால், தற்போதைய பிரச்சினைகளுக்கு எந்தக் கட்சியிடமும் தீர்வு இல்லாமையாகும். தற்போதைய அரசாங்கம் இராஜினாமாச் செய்தால், சிலவேளை சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரலாம். அவர்கள், எவ்வாறு தற்போதைய வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையை தீர்க்கப் போகிறார்கள் என்பது தெளிவில்லை.

வெளிநாட்டுக் கடனை ஒத்திப்போட பேச்சுவார்த்தை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அது வெற்றியடைந்தாலும், அந்தக் கடனையும் எப்போதாவது திருப்பிச் செலுத்த வேண்டும்; உணவுக்காகவும் மருந்துக்காவும் பணம் தேடவும் வேண்டும். அதற்கு என்ன வழி?

தமக்கு உதவியளிக்க சில நாடுகள் தயாராக இருப்பதாக சஜித் கூறுகிறார். இலவசமாக, மற்றைய நாடுகளுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும் நாடுகள் இல்லை. அவ்வாறு உதவி செய்ய நாடுகள் இருந்தாலும், அந்த உதவிகளைப் பாவித்து சொந்தக் காலில் நிற்கக் கூடிய வகையில் நாட்டை அபிவிருத்தி செய்ய அவரிடம் திட்டம் ஏதும் இருக்கிறதா?

தாம் பதவிக்கு வந்தால், பில்லியன் கணக்கில் இடம்பெறும் ஊழல்களை நிறுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் கூறுகின்றனர். அது நல்ல யோசனைத் தான். ஆனால், உடனடிப் பிரச்சினையான வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையை தீர்ப்பது எவ்வாறு? பொதுவாக, நாட்டில் எந்தவொரு கட்சியிடமும் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .