2025 மார்ச் 31, திங்கட்கிழமை

ஊழல் எதிர்ப்பு ஊடகங்களில் மட்டுமா?

R.Tharaniya   / 2025 மார்ச் 12 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்
 தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபை போன்ற அர சநிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல ஊழல்கள் கடந்த சிலவாரங்களாக அரசபொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் (COPE)கூட்டங்களின் போது அம்பலமாகி வருகிறது.
 
அந்தநிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சில கொடுக்கல் வாங்கல்களை பார்க்கும் போது, அவற்றின் அதிகாரிகள் எந்த அளவு அச்சமின்றி சட்டத்தை மதிக்காது எதேச்சாதிகாரமாக  பொதுப் பணத்தை வீண் விரயம் செய்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.
 
காலியில் நடைபெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிகழ்ச்சி ஒன்றின் போது பந்தல்களை போடுவதற்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் செலவழித்துள்ள அதிகாரிகள் அதே நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்காக பந்தல் ஒன்றுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் செலவழித்துள்ளார்கள். அவர்கள் எந்தளவு எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டுள்ளார்கள் என்றால் ஊழல்களை மூடி மறைக்கவாவது அவர்களுக்கு தேவை இருந்ததாக தெரியவில்லை. எனவே, கொள்வனவு செய்யப்பட்ட  ரீசேர்ட்டுகளுக்கா கஇரும்புக்கடை ஒன்றில்தான் பற்றுச்சீட்டுபெற்றிருக்கிறார்கள்
 
.கடந்தஜனாதிபதித்தேர்தல் தினத்துக்கு முதல் நாள் 188 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளை வெளியிட்டுள்ளதாகவும் அப்பணம் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் செலவுக்காகவே பயன்படுத்தபட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருந்தன.சட்ட விரோத நடவடிக்கை ஒன்றின் காரணமாக தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையால் கைப்பற்றப்பட்ட 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் பொதியொன்று அதிகார சபையின் பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் சந்தேக நபரிடமே வழங்கப்பட்டுள்ளதாகவும் கோப் கூட்டமொன்றில் தெரிய வந்தது.
 
 இந்த கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறு இடம்பெற்றன என்று அந்நிறுவனங்களின் அதிகாரிகளிடம் வினவிய போது அவற்றை செய்யுமாறு தாம் வற்புறுத்தப்பட்டதாகவும் மிரட்டப்பட்டதாகவும் அவர்கள் பதிலளித்தனர். இதற்கு முன்னர் கோப் குழுவின் கூட்டங்களில் அதிகாரிகள் இந்தளவு வெளிப்படையாக இது போன்ற அச்சுறுத்தல்களை தெரிவிக்கவில்லை.ஒன்றில் அவர்கள் தற்போதைய அரசாங்கத்தைப் பற்றி முன்னர் இல்லாத ஒரு பயத்தில்செயற்படுகிறார்கள். அல்லது அவற்றை வெளியிடுவதன் மூலம் தாம் பாதிக்கப்பட மாட்டோம் என்ற உத்தரவாதத்துடன் அவர்கள் தற்போது செயற்படுகிறார்கள்.   
 
ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் புதிதாக கோப் குழு நியமிக்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அக் குழு நியமிக்கப்படும் போது, எதிர்க் கட்சிகளுக்கு அதன் தலைமை பதவியை வழங்குவதே மரபாகும் என்று அக்கட்சிகள் அரசாங்கத்தின் தலைவர்களிடம் சுட்டிக் காட்டின.

ஆனால், ஏனைய பாராளுமன்ற கண்காணிப்புக் குழுக்களின் தலைமை பதவியை எதிர்க் கட்சிகளுக்கு வழங்கினாலும் கோப் குழுவின் தலைமை பதவியை வழங்க முடியாது என்று அரசாங்கம் கூறிவிட்டது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்துக்கு வந்த ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இக் கோரிக்கையை விடுத்தார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பல முறைகேடுகளை விசாரிக்க வேண்டியிருப்பதால் அக்கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று ஜனாதிபதி அப்போது கூறினார்.

அது போலவே, கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பல மோசடிகள் இப்போது கோப் குழுவில் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் இவற்றை அம்பலப்படுத்துவதால் நாட்டுக்கு என்ன பயன் கிடைக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு முன்னரும் கோப் குழு முன் அரசாங்க அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு குழுவின் தலைவரும் கணக்காய்வாளர் நாயகமும் குழு உறுப்பினர்களும் அவர்களை கடுமையாக விசாரிப்பதை தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறோம். ஆனால் பெற்ற பயன் எதுவும் இல்லை.

நாட்டின் சகல பொருளாதார பிரச்சினைகளுக்கும் அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படும் ஊழல்களே பிரதான காரணம் என்பது கடந்த தேர்தல்களுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் வாதமாகியது. அதாவது ஊழல்களை நிறுத்தினால் நாட்டில் பிரச்சினைகளில் பெரும் பகுதி தீர்ந்துவிடும் என்ற கருத்தை அவர்கள் தெரிவித்து வந்தனர்.

அது முற்றிலும் உண்மையல்லாவிட்டாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஊழல்கள் பிரதான காரணமொன்று என்பதை மறுக்க முடியாது. கடந்த 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி மிக மோசமான நிலையில் நாட்டை பாதித்த போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்வொன்றை தேடி சர்வதேச நாணய நிதியத்தை அணுகினார். இது தொடர்பாக இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு நிர்வாக முறைகேடுகளே காரணம் என்று கூறியிருந்தார்.
 
ஐ.நா. மனித உரிமை பேரவையும் அவ்வாண்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடியைப் பற்றி ஆராய்ந்திருந்தது. அப்போது மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகர் இலங்கையில் இடம்பெற்ற பொருளாதார முறைகேடுகளை பொருளாதார குற்றச் செயல்கள் (economic crimes) என்று வர்ணித்தார்.
2022 ஆம் ஆண்டு முதல் நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது ஊழலை தடுப்பதை வலியுறுத்தி வந்துள்ளனர். இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு ஊழல் தடுப்பை ஒரு நிபந்தனையாகவும் அந்நிதியம் விதித்தது. அதன் படி ஊழல் தடுப்புச் சட்டம் ஒன்றும் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் வீண் விரயம் ஆகியவற்றை கண்டறிவதில் கோப் விசாரணைகள் பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஆனால் அரசியல்வாதிகள் ஊழல் விடயத்தில் உறுதியாகவும் நேர்மையாகவும் செயற்படாவிட்டால் அதன் மூலம் பயன் பெற முடியாது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலான கால கட்டத்தில் கோப் குழு பாரிய அளவிலான ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ள போதிலும் குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2007 ஆம் ஆண்டு கோப் குழுவின் தலைவராக இருந்த விஜயதாச ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டார். 26 அரச நிறுவனங்களில் 160 பில்லியன் (16,000 கோடி) ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார். அதே காலத்தில் பாராளுமன்றத்தின் அரச கணக்குக் குழுவின் (Committee on Public Accounts- COPA) தலைவராக இருந்த ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதே போன்றதொரு தொகை பொதுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.  
பின்னர் 2017ஆம் ஆண்டு கோப் குழுவின் தலைவராக இருந்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும்  அறிக்கையொன்றை வெளியிட்டார். 15 நிறுவனங்களில் 110 பில்லியன் (11,000 கோடி) ரூபாய் மோசடி செயய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கொள்றின் படி தேசிய வீடமைப்பு அதிகார சபையில் மட்டும் 10 பில்லியன் (1000 கோடி) ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருந்தது.

எனினும் இவ்வாறான அறிக்கைகள் வெளியிடப்பட்டால் அவை ஓரிரு நாட்கள் மட்டுமே பேசுபொருளாகின்றன. அதன் பின்னர் அவை மறக்கப்படுகின்றன. ஊழல் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அதன் காரணமாக எவ்வளவு பாரிய ஊழல்கள் அம்பலப்படுத்தபட்டாலும் எவரும் அதனை பெரிதான பொருட்படுத்துவதில்லை.இந்த விடயம் கோப் குழுவிலும் பாராளுமன்றத்திலும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொறிமுறை ஒன்று இல்லாவிட்டால் கோப் மற்றும் அரச நிதிக் குழு ஆகியவற்றில் ஊழல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதில் அர்த்தம் என்ன என்று கேட்டார்.
 
2022ஆம் ஆண்டு பேராசிரியர் சரித்த ஹேரத்தே, கோப் குழுவின் தலைவராக இருந்தார். அப்போது அவரும் அம்பலப்படுத்தப்படும் ஊழல்கள் விடயத்தில் மேல் நடவடிக்கை எடுப்பதை வலியுறுத்தினார். மேல் நடவடிக்கைகளை எடுப்பதற்காக கோப், கோபா மற்றும் அரச நிதிக்குழு ஆகியவற்றில் விசாரணைகள் நடைபெறும் போது சட்ட மா அதிபரின் பிரதிநிதி ஒருவரும் அதில் பங்கேற்க வேண்டும் என்றும் அதற்காக பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளை திருத்துமாறு 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அப்போது அரச நிதிக் குழுவின் தலைவராக இருந்த கலாநிதி ஹர்ஷ டி சில்வா சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.

பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பல முறை இந்தக் கோரிக்கையை விடுத்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஊழலைப் பற்றி கூறியே பதவிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அதை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X