2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஊரை ஏமாற்றும் ஆணைக்குழுக்கள்

R.Tharaniya   / 2025 மார்ச் 26 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.எஸ்.எம். ஐயூப்

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இருந்து இலங்கை விலக வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியமை இலங்கைக்கு சாதகமானது என்று இலங்கையில் பிரபல சட்டத்தரணி ஒருவரான பிரதீபா மஹாநாமஹேவா கூறியிருக்கிறார். இவ்விருவரினதும் கருத்துக்களின் அர்த்தமானது இலங்கை மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லை என்பதாகும்.

இதில் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை ஆராய்வது மிக முக்கியமானதாகும். ஒரு காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி இனவாதத்தைத் தூண்டி அரசியலில் ஈடுபட்டு வந்தன. ஸ்ரீல.சு.க. 1958ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட போது, ஐ.தே.க. அதை வைத்து இனவாதத்தைத் தூண்டி அரசியல் இலாபம் தேட முயன்றது. பின்னர் 1966ஆம் ஆண்டு டட்லி-செல்வா ஒப்பந்தத்தை ஐ.தே.க. கைச்சாத்திட்ட போது, ஸ்ரீல.சு.க. இனவாதத்தைத் தூண்டி அரசியல் இலாபம் தேட முயன்றது.

ஆயினும், 2000ஆம் ஆண்டிலிருந்து ஐ.தே.க. சற்று முற்போக்குத் தன்மையைக் காட்டத் தொடங்கியது. 2002ஆம் ஆண்டு அக்கட்சி புலிகள் இயக்கத்துடன் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து இனப் பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றைத் தேடுவதென அவ்வியக்கத்துடன், உடன்பாட்டுக்கு வந்தது.
மஹிந்த ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததை அடுத்து புலிகள் மீண்டும் போரை ஆரம்பித்ததன் காரணமாக அச்சமாதான திட்டம் சீர்குலைந்தது. 2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.

அதன் பின்னர் அவர் மஹிந்த ராஜபக்‌ஷவை போல, ஐ.நா. மனித உரிமை 
பேரவையோடு முட்டி மோதாமல் இலங்கை தொடர்பாகப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளுக்கு இணை அனுசரணை வழங்கினார்.

இவ்வாறு முற்போக்காளர் போல் தம்மைக் காட்டிக் கொண்டவர் தான் இப்போது மனித உரிமைப் பேரவையில் இருந்து இலங்கை விலக வேண்டும் என்கிறார். கடந்த மாதம் 25ஆம் திகதியும் அவர் அதே கருத்தைப் படும் வகையில் பேசியிருந்தார். செப்டம்பர் மாதம் மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணையை நிறைவேற்ற இருப்பதால் அரசாங்கமும் ஏனைய கட்சிகளும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் குழுவொன்றுடன் உரையாடும் போது அவர் கூறியிருந்தார்.

இவை ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் ஐ.தே.கவின் அரசியல் அடித்தளம் கறைந்து செல்லும் நிலையில் வெளியிடும் கருத்துக்கள் என்றே கருத வேண்டியுள்ளது. 2015ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்த ஐ.தே.க. 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் படு தோல்வியடைந்தது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை அடுத்து அக்கட்சி பிளவுபட்டு கட்சியின் பெரும்பாலானவர்கள் கட்சியை விட்டு வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை நிறுவினர்.

இதனையடுத்து, 2020ஆம் ஆண்டு ரணில் தலைமையில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சி எந்த ஒரு மாவட்டத்திலிருந்தும் ஒரு ஆசனத்தையேனும் பெறவில்லை. தேசிய பட்டியல் மூலமாகவே ரணில் பாராளுமன்றத்துக்கு சென்றார். கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 22 இலட்சம் வாக்குகளைப் பெற்று அவர் மூன்றாம் இடத்துக்கு வந்த போதிலும் கடந்த நவம்பர் மாதம் ரணில் தலைமையில் சிலிண்டர் சின்னத்திலும் யானை சின்னத்திலும் போட்டியிட்டவர்கள் வெறும் 566,000 வாக்குகளை மட்டுமே பெற்றனர்.

இந்த நிலையில், தமது அரசியல் எதிர்காலமே இருள் மயமாக இருப்பதை கண்டு அவர் பெரும்பான்மை மக்களின் இன உணர்வை தமக்கு சாதகமாக்கிக்கொள்ள முயல்கிறார் போல் தான் தெரிகிறது.அவர் மட்டுமல்லாது, கடந்த காலத்தில் பதவியில் இருந்த சகல தலைவர்களும் மனித உரிமை விடயத்தில், குறிப்பாக வடக்கு கிழக்கு போரின் போது, பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகள் விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் உலகத்தையும் ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டே செயல்பட்டுள்ளனர்.

மனித உரிமை விடயத்தில் அவ்வாட்சியாளர்கள் நியமித்த ஆணைக்குழுக்கள் அதற்கு சிறந்த உதாரணங்களாகும்.வடக்கு, கிழக்கு பிரிவினைவாத போரின் போதும் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு கிளர்ச்சிகளின் போதும் பல்லாயிரக் கணக்கானோர் காணாமலாக்கப்பட்டுள்ளனர். அதேபோல, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாகவே நாட்டில் கூடுதலான எண்ணிக்கையில் அதாவது ஒன்பது ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்திலேயே மிகவும் அதிகமானோர் காணாமல் போனார்கள். பெரும்பாலும் நாட்டின் தென் பகுதிகளிலேயே அவர்கள் காணாமல் போனார்கள். ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் 60,000க்கு மேற்பட்டோர் அவ்வாறு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சர்வதேச ரீதியில் பலர் குரல் எழுப்பவே பிரேமதாசவே காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்வதற்காக 1991ஆம் ஆண்டு ஆரம்பித்து மூன்று ஆணைக்குழுக்களை நியமித்தார். புலிகளின் தற்கொலை குண்டுதாரி ஒருவர் 1993ஆம் ஆண்டு பிரேமதாசவை கொலை செய்த பின் தற்காலிகமாக ஜனாதிபதி பதவிக்கு வந்த டி.பி.விஜேதுங்க அந்த மூன்று ஆணைக்குழுக்களையும் இரத்து செய்து தாம் மற்றொரு ஆணைக்குழுவை நியமித்தார்.

விஜேதுங்க சுமார் ஒன்றரை ஆண்டுகளே ஜனாதிபதியாக இருந்தார். அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க காணாமற்போனோர் தொடர்பாக பிராந்திய ரீதியாக மூன்று ஆணைக்குழுக்களையும் 1998ஆம் ஆண்டு நாடு தழுவிய ரீதியில் மற்றொரு ஆணைக்குழுவை நியமித்தார். இந்நாட்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பட்டலந்த ஆணைக்குழுவையும் அவரே நியமித்தார்.

ஆனால், இந்த ஆணைக்குழுக்களால் கிளர்ச்சிக்களாலும் போர்களாலும் தமது உறவினர்களை இழந்தவர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்திலும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இரண்டு பொறிமுறைகள் உருவாக்கப்பட்டன. ஒன்று பரணகம் ஆணைக்குழுவாகும். மற்றையது, இராணுவத் தளபதியால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைக் குழுவாகும். பரணகம ஆணைக்குழுவுக்குக் காணாமல்போனோர் தொடர்பாக 19,000க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்தன. ஆனால், அப்பொறிமுறைகளாலும் காணாமல்போன எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் நெருக்குதல் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் (Office on Missing Persons-OMP) என்ற நிரந்தர அலுவலகம் ஒன்று நிறுவப்பட்டது.
அண்மையில் ரணில் விக்ரமசிங்க அல்-ஜசீரா தொலைக் காட்சியுடன் நடத்திய நேர்காணலின் போது, இந்த அலுவலகத்தின் மூலம் காணாமல்போன எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு ரணில், 
16 பேர் என்று பதிலளித்தார். இத்தனை ஆண்டு காலத்துக்கும் 16 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள் என்றால், அந்த நிறுவனத்தால் என்ன பலன் என்று தான் கேட்க வேண்டும்.

காணாமல்போனோர் விடயத்தில் மட்டுமல்லாது, ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் அரசாங்கங்கள் ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளன. மனித உரிமை மீறல்களுக்கு நிதர்சனமாக விளங்கிய சர்வதேச ரீதியில் பிரசித்தி பெற்ற 15 சம்பவங்களைப் பற்றி விசாரணை செய்வதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 2006ஆம் ஆண்டு உதலாகம ஆணைக்குழுவை நியமித்தார்.

அதன் செயற்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகவே அவர் அந்த ஆணைக்குழுவுக்கு உதவுவதற்காகவென இந்திய முன்னாள் பிரதம நீதியரசர் பி.என்.பகவதியின் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றை அதே ஆண்டு நியமித்தார். சட்ட மா அதிபர் தமக்கு போதிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்று அந்த நிபுணர்கள் சில மாதங்களுக்குப் பின்னர் அதனை கை விட்டுச் சென்றனர். உதலாகம ஆணைக்குழுவாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கென 2010ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் குழுவொன்றை நியமித்தார். அது தமக்குப் பாதகமான முடிவுகளுக்கு வரும் என்று நினைத்த மஹிந்த உள்ளூரிலேயே மனித உரிமை மீறல்களை விசாரிப்போம் என்று கூறி, அவ்வாண்டே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார்.

இலங்கையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ள கூடிய பரிந்துரைகளை செய்த ஒரே ஆணைக்குழு அதுவாகும். ஆனால், மஹிந்தவின் அரசாங்கம் அவற்றை அமுலாக்கவில்லை. எனவே, 2012ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் இலங்கை விடயத்தில் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட முதலாவது பிரேரணையில் அந்த பரிந்துரைகளை அமுலாக்க வேண்டும் என்று மட்டுமே கூறப்பட்டது. ஆனால், மாறி மாறி வந்த அரசாங்கங்கள் அவற்றை அமுலாக்க முன்வரவில்லை.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகவும் மைத்திரிபால ஒரு ஆணைக்குழுவையும் ரணில் விக்ரமசிங்க இரண்டு ஆணைக்குழுக்களையும் நியமித்தனர். அவற்றால் என்ன நடந்தது என்பது சகலரும் அறிந்த விடயமாகும்.
ஊரையும் உலகையும் ஏமாற்ற நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுக்களுக்காக பொது மக்களின் பணத்தில் கோடிக்கணக்கு ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆயினும், மீறப்பட்ட மனித உரிமைகளைப் பற்றியோ அல்லது செலவிடப்பட்ட பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைப் பற்றியோ எந்தவொரு ஜனாதிபதியும் கவலையடைவதாகத் தெரியவில்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X