2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஊருக்குள் யானை; காட்டுக்குள் மனிதன்

Johnsan Bastiampillai   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

காலத்துக்குக் காலம் மிருகங்களுக்கும் மனிதனுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலை, உச்சம்பெற்றுச் செல்வது தவிர்க்க முடியாததாகின்றது.

மனித இனத்தின் வளர்ச்சியும் அதற்கான இடப்பரப்பின் தேவையும் அதிகரிக்கும் போது, மிருகங்களின் வாழ்வியல் பிரதேசங்களை, மனிதன் ஆக்கிரமிக்கும் துர்ப்பாக்கியமே இவ்வாறான அவலநிலைக்குக் காரணம் எனலாம்.

ஆண்டு தோறும் மிருகங்களின் வாழ்வியல் பிரதேசங்களான காடுகள், மனிதனின் தேவைகளுக்காக அதிகளவில் அழிக்கப்பட்டு வருவதால், மிருகங்கள் தமது வாழ்வியல் தடங்களை மாற்றி, இயற்கையின் சமநிலைக்கு மாறாகத் தமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறான நிலை, இலங்கையில் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. வளச்சுரண்டல்கள், அரசியல் காரணங்களுக்காக இயற்கையை அழிப்பதால், இந் நிலை காணப்படுகின்றது. 

குறிப்பாக, மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையிலான போர், ஆசிய நாடுகளில் அதிகளவில் இடம்பெறும் நிலையில், இலங்கையில் இம் மோதலால் ஆண்டு தோறும் 270க்கும் அதிகமான யானைகள் மரணிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கும் மாறாக, வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்ற இடம்பெயர்தல்களால், மக்களின் வாழ்விடங்கள் அதிகளவில் வனத்துடன் சேர்ந்த பகுதிகளாகவே காணப்பட்டமையால், அப்பகுதிகளுக்குள் யானைகள் ஆக்கிரமித்துக்கொண்டன.

யுத்தத்துக்குப் பின்னர், மக்கள் மீள்குடியேறத் தொடங்கியபோது, அங்கு யானைகளின் அச்சுறுத்தல்களை மக்கள் எதிர்கொள்ளும் நிலை உருவாகின.மீள்குடியேறிய மக்களின் வீடுகள், சேனைப்பயிர்கள் போன்றவற்றை, அங்கு வழமையாக வந்துபோகும் யானைகள் சேதப்படுத்தின. இதன்போதும், யானைகளுடன் மனிதன் முரண்படும் நிலைமைகள் தோன்றின.

 ஒரு காட்டு யானை, ஒவ்வொரு நாளும் சராசரியாக 200 கிலோகிராம் உணவையும், 150 லீற்றருக்கும் அதிகமான நீரையும் உள்ளெடுக்கும். அதை ஒரே இடத்தில் இருந்து பெற முடியாது. எனவே, அது காட்டின் பல பகுதிகளுக்கும் நடந்து, கடந்து அவ்வுணவைப் பெற்றுக்கொள்ளும். 

அப்படி, ஒரு வாழ்விடத்தில் இருந்து இன்னொரு வாழ்விடத்துக்குச் செல்லும் இந்தப் பாதைகள் யானைகளின் ‘வலசப்பாதை’ என அழைக்கப்படுகிறது. இந்த ‘வலசப் பாதை’களை, யானைகள் தலைமுறை தலைமுறையாக மறப்பதே இல்லை. 

காடுகள் அழிக்கப்படும் செயற்பாடுகளாலும், காலநிலை மாற்றங்களாலும் யானைகளின் உணவு, நீர் என்பவற்றை பெற அலையும் போது, மனிதர்களின் வசிப்பிடம் நோக்கி வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள், மனிதனின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கிணறு, குழிகளில் விழுந்து மாட்டிக்கொள்கின்றன. இவ்வாறு சிக்குகின்ற யானைகளை, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள், பொலிஸார், போன்றோரின் உதவியுடன் மீட்டு, மீண்டும் காட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

எனினும், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் வருகைக்கு முன்னராகவே, யானைகள் மக்களின் வாழ்விடங்கள் உட்பட பயன்தரு  மரங்காள் என்பவற்றை துவம்சம் செய்து விடுகின்றன. இவ்வாறான சம்பவங்கள், வட பகுதியில் வவுனியாவில் அதிகளவில் இடம்பெற்று வருகின்றமை பதிவுகளின் மூலம் அறிய முடிகின்றது.

இலங்கையில் கடந்த 50 வருடங்களில், யானைகளின் தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கணக்கெடுப்பு விவரங்கள் குறிப்பிடுகின்றன.  இந்தக் காலப்பகுதியில் மட்டும் 1,500 தொடக்கம் 3,000 யானைகள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி 5,879 யானைகள் இருந்ததாகக் கூறப்பட்டது.

இதன்படி பார்த்தால் 5,000 மனிதர்களுக்கு 01 யானை எனும் விகிதத்திலேயே இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் 12 ஆயிரம் தொடக்கம் 14 ஆயிரம் வரையிலான யானைகள் இருந்துள்ளன.

துப்பாக்கியால் சுடுதல், விசம் வைத்தல், மின்சாரம், பொறிவெடிகள் ஆகியவை மூலம், யானைகளில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கான வழிவகைகளாக மனிதர்கள் கைக்கொண்டாலும் பல சந்தர்ப்பங்களில் யானைக்கு பதிலாக மனிதர்கள் பலியானதும் உண்டு. 

1989ஆம் ஆண்டில், சர்வதேச ரீதியில் யானைத் தந்த வியாபாரம் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டது.  இருந்தும் கடந்த பத்து வருட காலப்பகுதியில், இச்சட்டவிரோத வியாபாரம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.  

19ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையின் யானைகள் சுமார் 65% வரை அழிவடைந்துள்ளன. தேசிய வன ஒதுக்கு பிரதேசங்கள் மற்றும் சிலவேளை தனிப்பட்ட காணிகளிலும் காணப்படுகின்ற வன விலங்குகள், தாவரங்கள் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக, 1937 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், முக்கியமாக 2009 ஆம் ஆண்டிலே மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், என்பவற்றின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இச்சட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

இது இவ்வாறு இருக்கையில், ரயிலில் மோதுண்டு, விபத்தாகி யானைகள் இறக்கின்றமை கவலையான விடயமாகும். குறிப்பாக வவுனியா  பறயநாலங்குளத்தில் அண்மையில் யானையொன்று ரயிலில் மோதி இறந்துள்ளதுடன், அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்துள்ள சம்பவமும் இடம் பெற்றுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு போர்க்காலத்தில், வன்னி மண்ணில் குறிப்பாக வவுனியாவில் யானைகளின் தாக்கம் மிக மிக குறைவாகவே காணப்பட்டன. உள்நாட்டு போர் முடிவடைந்து, மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் அதிகளவான யானைகளின் நடமாட்டத்துக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனர்.

இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை, தென்னிலங்கையில் இருந்து யானைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, வவுனியா வடக்கு, செட்டிகுளம் காட்டுப்பகுதியில் இறக்கி விடப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

இந்த யானைகள், தென்பகுதியில் யானை வளர்ப்பவர்கள், தமது யானை வயதாகியவுடன், இப்பகுதிகளில் கொண்டு வந்து விடுவதாகவும் வவுனியா வடக்கு, செட்டிகுளம் பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறு யானைகள், காட்டுப்புறங்களை அண்டிய கிராமப்பகுதிகளில், பல தடவைகள் விடப்பட்டுள்ளதை, பொதுமக்கள் நேரில் பார்த்ததாக தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான, மனித - யானை மோதல்களைத் தடுக்க, அரசாங்கம் நிலையான பொறிமுறைத் திட்டத்தை வகுத்துச் செயற்பட வேண்டும் என்பதே தற்போதைய தேவையாக உள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .