Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 செப்டெம்பர் 03 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ்
முன்னாள் ராஜதந்திரி
அங்கிருக்கும் தேங்காயில் உள்ள குடுமியை அழகாக்கியும், மற்றைய நார்களை அப்புறப்படுத்தியும் , நன்றாக கழுவியும் எடுத்து வாப்பா. கும்பத்திற்கு வைக்க வேண்டும் ".
அமாவாசை, பொங்கல் மற்றைய ஏனைய ஆன்மிக வைபவங்களில் எனது அப்பா அடிக்கடி கூறும் வாசகம் இது !
அவரது குரல் இன்றும் என் மனக்கண் முன் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
அப்பா அதீத தெய்வ பக்தி உடையவராக இருந்ததனால் , எங்கள் வீட்டில் நடக்கும் சகல வைபவங்களிலும் தேங்காய்க்கு தனி முன்னுரிமை !
அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தப்படும் மிக உன்னதமான பொருள் தேங்காய்.
"நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால்",
என அவ்வையார் தனது மூதுரையில் தென்னையின் நன்றி உணர்வினை , அதன் மகத்துவத்தினைத் தெளிவாகக் கூறியுள்ளார்.
" பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு தென்னையை நட்டால் இளநீரு", என்ற பழமொழி பேச்சு வழக்கில் இருந்து வருகின்றது.
இதற்கு காரணம் தென்னையானது பல்வேறு விதமான பயன்தரு அம்சங்களை தன்னகத்தே கொண்டிருப்பதனால் மக்கள் இவ்வாறான பழமொழியினை வழக்கில் உபயோகித்து இருந்திருக்கக் கூடும்.
வாஸ்கொடகாமா என்பவர் ஒரு போர்த்துக்கேய நாடு காண் பயணி !
இவருடன் சேர்ந்து கப்பலில் பயணம் செய்த போர்த்துக்கீச மாலுமிகள் முதன் முறையாக தேங்காயின் அமைப்பைப் பார்த்து , அதற்கு தேங்காயெனப் பெயரிட்டதாக வரலாற்று மூலமாக அறிய முடிகின்றது .
'கோகோ' (coco) என்பது தேங்காய்க்கான ஸ்பானிய மொழி சொல்.
அதாவது 'மூடிய முகம்' அல்லது "சிரிக்கும் முகம்" எனப் பொருள்படும்.
தேங்காயின் மேற்பரப்பில் புன்னகைக்கும் முகமாகத் தெரிந்த மூன்று ஓட்டைகளைப் பார்த்து , இதற்கு அவ்வாறு பெயரிட்டனர்.
அது பருப்பு வகை உடையதாக விளங்கியதால் பிற்காலத்தில் நட் ( nut) என்ற பிற்சேர்க்கையையும் இணைத்து கோகோநட் ( coconut ) என்று அழைக்கப்பட்டது.
மனிதனது கலாசார நிகழ்வுகளிலும், ஆரோக்கியத்திலும், உணவாகவும், மருந்தாகவும், விளங்குவது தேங்காயும், அம்மரத்தின் பாகங்களும் ஆகும்.
தென்னை, தனது அடியிலிருந்து நுனிவரை இருக்கின்ற அனைத்து அம்சங்களையும், மனிதனது வாழ்க்கையில், கர்ணனைப் போலிருந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
அதனால் தான், தென்னை மரத்தினை ஒரு "கற்பக விருட்சம்," அல்லது "வாழ்க்கை மரம்", என்றும் அழைப்பர்.
இளநீர், தேங்காய் போன்றவற்றினை விற்பனை செய்து, அதன் மூலம் தமது அன்றாட வாழ்க்கையை நடாத்துபவர்கள் இலட்சக் கணக்கானோர்.
தென்னை மரம் மக்களின் வாழ்வாதாரத்தை குறிப்பதனால், மாலைத்தீவு மக்கள் தென்னை மரத்தை கற்பக விருட்சமாகக் கருதுகின்றனர்.
அது மருத்துவம் தொடக்கம் கப்பல் கட்டுதல் வரை பயன் தருகின்றது என்பது அவர்களின் நம்பிக்கை !
தென்னை மரத்தை மத்தியில் கொண்டு , அதன் இரு புறங்களிலும் சாய்வாக இரு தேசிய கொடிகளை ஏந்திய கம்பங்களையும், இக்கம்பங்களுக்கு மத்தியில் பிறையையும் நட்சத்திரத்தையும் கொண்டது மாலைத்தீவின் தேசிய சின்னமாகும்.
இந்துக்கள் தமது ஆன்மிகக் கருமங்களில் தேங்காயைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
கோவில்களில் "சிதறுகாய்" உடைப்பதற்கான காரணம், மக்கள் தமது அகங்காரத்தினை அழித்துக் கொள்ள வேண்டுமெனக் கருதப்படும் ஓர் ஐதீகம்.
இதுபோல, இன்னும் பல ஆன்மீகத் தொடர்புகளுடன் தொடர்புடையது தேங்காய்.
இத்தகைய நன்மைகளை மனிதருக்கு வழங்கக்கூடிய தேங்காய்க்கு உரிய நாளாக இன்று காணப்படுகின்றது.
ஆம்
இன்று "சர்வதேச தேங்காய் தினம்" ஆகும்.
2009 ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு வருடமும், செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் (APCC) இத்தினத்தைக் கொண்டாடி வருகின்றது.
இருபத்தொரு உறுப்பு நாடுகளைக் கொண்ட இச்சமூகத்தின் (APCC) தலைமையகம் இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவில் அமைந்துள்ளது.
ஆசிய நாடுகளான இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா , தாய்லாந்து, வியட்நாம் , டிமோர் லேஸ்தே ஆகிய எட்டு நாடுகளும், பசுபிக் நாடுகளான மைக்ரோனீசியக் கூட்டு நாடுகள், பிஜி , கிரிபாட்டி , மார்சல் தீவுகள் , பப்புவா நியூகினி, சமோவா, சொலமன் தீவுகள், டொங்கா , வனவாட்டு ஆகிய ஒன்பது நாடுகளும், கரீபியன் நாடான ஜமேக்காவும் , ஆபிரிக்க நாடுகளான கென்யா, கோட்டிவார் ஆகிய இரு நாடுகளும், தென்னமெரிக்க நாடான கயானாவும் சேர்ந்து உலக உற்பத்தியில் தொண்ணூறு சதவீதமான தென்னையை உற்பத்தி செய்கின்றன.
ட்ரூப் குடும்பத்தைச் சேர்ந்த தென்னையானது பொதுவாக வெப்பமண்டல நாடுகளில் விளைகின்றது.
இத்தினத்தின் நோக்கம் முதலீடுகளை ஊக்குவிப்பதுவும், உறுப்பு நாடுகளிடையே தேங்காய் தொழிலின் வளர்ச்சியை மேம்படுத்துவதும் ஆகும்.
இந்த ஆண்டின், இத் தினத்திற்கான கருப்பொருளாக அமைவது
" சுற்றுப் பொருளாதாரத்திற்கான தேங்காய் : அதிகபட்ச மதிப்புக்கான கூட்டாண்மையை உருவாக்குதல்," என்பதாகும். நிலைத்தன்மையை ஆதரிக்கும் மற்றும் கழிவுகளைக் குறைக்கும் விதத்தில் தேங்காய்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தினையும் எடுத்துக் காட்டுகிறது.
மக்களினது ஏழ்மையை நீக்குவதில் தேங்காய்க்கு முக்கிய பங்கிருக்கின்றது என்பதனை மக்களுக்கு எடுத்துரைப்பதாகவும், இத் தினம் அமைகின்றது.
சுமார் 70 முதல் 80 ஆண்டுகள் வரை வளரக் கூடிய தென்னை மரம் இலங்கையில் அதிகமாக புத்தளம், குருநாகல், கொழும்பு போன்ற முக்கோணப் பிரதேசத்தில் வளர்கின்றது.
இது இலங்கையிலுள்ள முதலாவது தென்னை முக்கோணப் பிரதேசம். யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதான இரண்டாவது தென்னை முக்கோணத் திட்டம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சர்வதேச தெங்கு தினத்தின் ஊடாக எமது நாடானது தென்னை சார்ந்த 150 உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைக்கு அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தெங்கு சார்ந்த மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதை விட , பெறுமதி சேர்க்கப்பட்ட தெங்கு ஏற்றுமதி பொருட்களின் மூலம் பெருமளவான அன்னிய செலாவணியை சம்பாதிக்க முடியும்.
தெங்கை அபிவிருத்தி செய்வதற்காக எமது நாட்டில் 1971ஆம் ஆண்டு தெங்கு அபிவிருத்தி அதிகாரச் சபையானது, தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
இது தவிர , தென்னைக்கென ஆராய்ச்சி நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபத்தொன்பதாம் திகதி "இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனமானது" (The Ceylon Chamber of Coconut Industries - CCCI)
கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நிலைபேறாண்மை வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் உலகளாவிய சந்தையை அடைவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், தென்னை தொழில் துறையில் பரந்த வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் முதல் தடவையாக இந்த ஒருங்கிணைந்த அமைப்பானது இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
நாட்டின் கைத்தொழில்துறை பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் தென்னை தொழில் துறை, ஆண்டுக்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை ஈட்டுகிறது. இதை மேலும் வளர்த்து, 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலக்காகக் கொண்டு இலங்கையின் தென்னை உற்பத்திகளின் தரம் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் கிராமப்புற பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் ஒரு முக்கிய காரணியாக பலராலும் அறியப்படும் தென்னை கைத்தொழில், சுமார் 455,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனமானது மூலோபாய திட்டமிடல், சந்தை விரிவாக்கம்மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் மூலம் தென்னை கைத்தொழிலின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துமென கூறப்படுகின்றது. மேலும், நிலைபேரான்மை நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் பல்வேறு தயாரிப்புகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கையை தென்னை உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நாடாக மாற்றுவதே இந்த சம்மேளனத்தின் நோக்கமாகும்
சர்வதேச தென்னை சமூகத்தின் 60 ஆவது அமர்வு கூட்டமும், அமைச்சர்கள் சார்ந்த கூட்டமும் எதிர்வரும் நவம்பர் மாதம் 2024 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் நடத்துவதற்கு ஸ்ரீலங்காவின் அமைச்சரவை அண்மையில் அனுமதி அளித்திருந்தது.
இவ்வாறு பல்வகைப்பட்ட பலனைத் தரக்கூடிய இன்றைய தினத்தின் பெறுமதியினை நாமும் உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.
2024.09.02
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago