2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

உரிமையை அனுபவிப்பதற்கு ‘இருப்பை உறுதி செய்யவேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 28 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்  

நாம் இந்த மண்ணில் இல்லாவிட்டால், இத்தனை காலமும் உயிர்களை இழந்து, உடமைகளை இழந்து, முன்னெடுத்திருந்த போராட்டம், அர்த்தமற்றதாகப் போய்விடும். இதனடிப்படையில் எமது உரிமையை அனுபவிப்பதற்கு, எமது இருப்பை உறுதி செய்ய வேண்டிய தேவையுள்ளது. இருப்பை உறுதி செய்ய வேண்டுமானால், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் யாழ். தேர்தல் மாவட்டத்தில், கைச் சின்னத்தில் 1ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

தமிழ்மிரருக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு:

கே: தேசிய கட்சி என்ற ரீதியில், தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ள உள்ளீர்கள்?

ஆரம்பத்திலிருந்து, என்னைத் தேசிய கட்சி என்று பிரதிநிதித்துவப் படுத்தியதில்லை. தமிழ் மக்களை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறேன். அதனடிப்படையில், மக்களின் உரிமைகளை, தேவைகளைக் கட்சியில் பிரதிநிதித்துவப்படுத்தி, எதிர்காலத்தில் அரசாங்கத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி, மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பது எனது நோக்கமாகும். 

தமிழ் மக்களின் தீர்வு சார்ந்த விடயமாக இருக்கட்டும்; அபிவிருத்தி சார்ந்த விடயமாக இருக்கட்டும் நிச்சயமாகத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகத் தேவையானதைப் பெற்றுக்கொடுப்பதோடு, அதைப் பல மடங்கு அதிகமாகப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் ஒரு சில விடயங்களுக்கு எதிராக அழுத்தங்களைக் கொடுப்பேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதிக்கு நாம் வாக்களிக்கவில்லை. அதற்கான காரணமாக, கடந்த காலத்தில் இடம்பெற்றவையை மறக்க முடியவில்லை; மன்னிக்க முடியவில்லை என்கின்றோம். இது நியாயமான காரணமாகவிருந்தது. ஆனாலும் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இதனை மாற்ற இயலாது. இனியும் நாம், “சிங்களஅரசு சிங்களஅரசு” என்று கூற முடியாது. நாம் வாக்களிக்காத பட்சத்தில், அது சிங்கள அரசுதான். அதனைத் தமிழ்மக்களுக்குச் சார்பான அரசாக மாற்ற வேண்டியது, எங்களுடைய கடமை. அதனடிப்படையில் நான், தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்ல இருக்கிறேன். 

கே: தமிழர் பிரதேசங்களில் அடையாளங்கள், மரபுரிமைகள் அழிக்கப்படுவதற்கான, மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதை இப்பிரதேசத்தை சேர்ந்தவர் என்ற ரீதியில் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இவ்விடயத்தை வைத்துக்கொண்டு பலர் இருபுறமும் அரசியல் செய்கின்றனர். நான் ஏற்கெனவே கூறியது போன்று, தீர்வாகட்டும், அபிவிருத்தியாகட்டும் மக்களின் அபிலாசைகளைக் கொண்டு, இவ்வரசில் இருப்போம் என்று கூறியுள்ளேன். அதனடிப்படையில் தமிழ் மக்களுக்கெதிராக வரும் செயற்பாடுகளுக்கும் எமது கண்டனங்களையும் அழுத்தங்களையும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். 

குறிப்பாக, கிழக்குக்கான செயலணி உருவாக்கப்பட்டதற்கு தமிழர் பிரதிநிதிகளை உள்வாங்காததற்குக் கண்டனங்களையும் அழுத்தங்களையும் வழங்கி இருந்தோம். அதற்கான ஏற்பாடும் இடம்பெற்றது. தொடர்ந்து திருக்கோணேஸ்வரம், நல்லூர் தங்களுடைய இடங்கள் என, ஒரு பௌத்த குரு கூறியுள்ளார். இது எங்களுடைய அடையாளங்களைப் பறிக்கும் செயற்பாடாகக் கருத முடியும். 

இந்த விடயத்தில் முதன்முதலாக கண்டனம் தெரிவித்தது நான்தான். என்னை “ஆளுங்கட்சி ஆளுங்கட்சி” என்று கூறினாலும், இன்று மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எனது கண்டனத்தைத் தெரிவித்தேன். கண்டனத்தோடு மட்டும் நின்று விடாது, ஜனாதிபதி, பிரதமரிடம் இவ்விடயத்தை எடுத்துச்சென்றேன். அந்தப் பௌத்த குருவின் கருத்தானது, அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். அது செயலணியின் கருத்தோ, அரசாங்கத்தின் கருத்தோ என்று ஆகாது என ஜனாதிபதி அறிக்கை விடுத்துள்ளார். 

இவ்விடயத்தை, அவர்களுடன் இணைந்திருந்து சொல்லும் போது கேட்கிறார்கள். ஆனால், வெளியில் இருந்து சொல்லும் போது, பல விடயங்களைச் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த விடயங்களைப் பொறுத்தவரையில், வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற அனைத்துமே இன்று இடம்பெறவில்லை. கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் இடம்பெற்றது. சர்வதேச கண்காணிப்பு காலத்திலும் இடம்பெற்றது. இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது, நல்லாட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்துக் கொண்டு தான் இருந்தது. இது தொடரத்தான் போகின்றது. அதற்கான அழுத்தங்களை உள்ளுக்குள்ளே இருந்து கொடுக்க வேண்டும். 

கே: அபிவிருத்தி தொடர்பில் உங்களுடைய செயற்பாட்டுத்திட்டம் எவ்வாறானதாக உள்ளது?

 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கடந்த நான்கரை வருடங்களில் 6,597 திட்டங்களைச் செயற்படுத்தியுள்ளேன். குறிப்பாக, நான்கு இலட்சம் பயனாளிகளுக்கான வேலைத்திட்டங்களைச் செய்ய முடிந்தது. இதனை இன்னும் பல மடங்கு செயற்படுத்த வேண்டும் என்பதற்காக, இம்முறை தேசிய பட்டியல் வேண்டாம் என்று கூறி, மக்கள் தெரிவு செய்த பிரதிநிதியாக அரசாங்கத்தின் முன்னிலையில் போய்நின்று, எமது மக்களுக்குரிய தேவைகளையும் அபிலாசைகளையும் பெற்றுக் கொள்வதற்காக தேர்தலில் நிற்கின்றேன். 

அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு வெறுமனே வீதியைச் செப்பனிடுவது பற்றி நான் பேசவில்லை. நான் பார்க்கும் அபிவிருத்தியானது நாம் இழந்த அனைத்தையும் மீளப்பெறுவதாகும். விவசாயம், மீன்பிடி, கல்வி ஆகியவற்றில் நாங்கள் இருந்த இடம் எங்கு, தற்போதுள்ள இடம் எங்கு? அனைத்திலும் கடைசியில்
உள்ளோம். 

வறுமையில் கிளிநொச்சி மாவட்டம் இரண்டாம் நிலையிலுள்ளது. நம் மக்கள் வாழ்வாதார -த்துக்காகக் கஷ்டப்படுகின்றனர்; வேலை வாய்ப்பின்றிக் காணப்படுகின்றனர். 90 சதவீதமான கிராமங்களில் 90 சதவீதமான மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமலுள்ளன. எமது இருப்பு இல்லாமல் போவதை, நம் கண்ணூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம். அனைத்தும் இழக்கப்பட்டு சனத்தொகை சதவீதத்திலும் வீழ்ச்சியடைந்து, வாக்காளர் சதவீதம் குறைவடைந்து, இதனால் எமது பிரதேசத்துக்குக் கிடைக்க வேண்டிய நிதி குறைவடைந்து செல்கின்றது. இத்தனை காலமும் உயிர்களை இழந்து, உடமைகளை இழந்து போராட்டத்தைச் செய்ததற்கு அர்த்தமற்றதாகப் போய்விடும். நாம் இந்த மண்ணில் இல்லாவிட்டால். இதனடிப்படையில் எமது உரிமையை அனுபவிப்பதற்கு எமது இருப்பை உறுதி செய்ய வேண்டிய தேவையுள்ளது. இருப்பை உறுதி செய்ய வேண்டுமானால் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். நாம் இழந்த தகுதிகளை மீளப்பெற வேண்டும். சிதைவடைந்த தொழிற்றுறைகள் மீளெழ வேண்டும். கல்வியை முதல் நிலைக்கு வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். இளைஞர்களைப் போதைவஸ்துப் பிரச்சினையிலிருந்து மீட்க வேண்டும். இளம் சமுதாயத்தைப் பொருளாதாரப் பாதையில் வழி நடத்த வேண்டும். சுயதொழில் முயற்சியாளர் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும். இதனடிப்படையில் ‘என் கனவு யாழ்’ என்ற தொனிப்பொருளில், எங்களுடைய அடுத்த ஐந்து வருடத்துக்கான கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இது எதிர்காலத்துக்கான திட்டமாக அமையும். அதில், ‘யாழ்’ என்று சொல்லுவது, யாழ். தேர்தல் மாவட்டத்தையாகும். நாம் வாழ, உகந்த பிரதேசமாக இந்த மண்ணை மாற்றுவோம். 

கே: வடக்கு மாகாணம் இந்நிலைக்கு வருவதற்கு, என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

இதற்குக் காரணம் நம்மவர்களின் செயற்பாடு. அதாவது, எதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் ஏற்பட்ட தவறு. நம் அரசியல் பிரதிநிதிகள் உரிமை உரிமை என்ற கோஷத்தை மட்டும் முன்னெடுத்துச் சென்றனர். அவ்வாறு செல்வதில் பிழை என்று நான் கூறவில்லை. உரிமையுடன் சேர்ந்த நம் இருப்புகளைப் பாதுகாப்பதற்கான தேவைகளையும் செய்ய வேண்டும். 

நான் நினைக்கிறேன், போராடியவர்கள் கூட, இருப்புடன் சேர்ந்த உரிமைகளைப் பெற வேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். இருப்பு இருந்தால் தான், உரிமையை அனுபவிக்க முடியும் என்பது உலகறிந்த விடயம். அரசியல் தலைமைகள் கடைசியாக இருப்பையும் காக்கவில்லை, உரிமையையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமிழ்த் தலைமைகளில் ஒரு சிலர் விட்ட பிழையால், இன்று தமிழ் மக்கள் இந்நிலையில் உள்ளனர்.

 கடந்த நான்கரை வருடங்களை உதாரணமாக எடுத்தால், அனைத்தையும் பெற்றுத் தருகிறோம்  என்று கூறியவர்கள், “தீர்வு இன்று வரும் நாளை வரும்” என்று கூறினார்கள். ஆனால், அனைத்துப் பண்டிகைகளும் வந்து சென்று விட்டன; தீர்வு வரவில்லை. ‘கம்பெரலியா’ என்ற ஆறுதல் பரிசைப் பெற்றுக்கொண்டு, வாயடைத்து விட்டார்கள். மக்களின் வாழ்க்கைத் தரத்தையோ வாழ்வாதாரத்தையோ மேம்படுத்துவதற்கான எந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கவில்லை. எமது மாவட்டத்தை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது எவ்வாறானதென்பதை தமிழ்ப் பிரதிநிதிகள் சிந்திக்கவில்லை. 

இன்று உரிமை, அபிவிருத்தி என்று கூறத்தொடங்கியுள்ளனர். இதற்கு மக்கள் தான் காரணம். மக்கள் அவர்களை அவ்வாறு பேச வைத்துள்ளனர். வடக்கு மாகாண சபை ஐந்து வருடம்  செயற்பட்டது. அதில் என்ன வேலை செய்தார்கள் என்று கூறமுடியமா? ஆகவே, இவர்கள் தமிழ்மக்களின் இருப்பைக் காக்க மறந்ததாலே மாகாணத்துக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. 

உரிமை, அபிவிருத்தி இரண்டும் முக்கியம்; இவ்விரண்டையும் சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  இன்று அபிவிருத்தி என்ற இடைவெளியை நிரப்புகின்ற  போது, உரிமையுடைய பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளாகவும் அமையும். ஏனெனில், அபிவிருத்தி என்பதும் எமது உரிமைதான். இன்று எமது பிரதேசத்தில் வீதி சரியில்லை என்றாலும், குடிநீர் இல்லாவிட்டாலும், விவசாயம், கடற்றொழில் ஆகியவற்றில் இலாபம் கிடைக்காவிட்டாலும் மற்றைய மாகாணத்தை ஒப்பிட்டு, அங்குள்ளது போன்று எமக்கில்லை என்று கூறுகின்றோம். அந்த வகையில், இவையும் உரிமைகளுக்குள் அடங்குகின்றன. எமது பிரதேசத்தில் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டு வந்து, இழந்தவற்றை மீளப் பெறும் போது, உரிமை தொடர்பில் எங்கு யாப்பு மாற்றம் வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். ஆகவே, அனைத்து விடயங்களுக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்படுத்த வேண்டிய தேவையுள்ளது. 

கே: காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில், ஆட்சி, அதிகாரத்திலுள்ளவர்கள் ‘இல்லை’ என்ற கருத்தை முன்வைத்து வரும் நிலையில், இது தொடர்பில் உங்கள் எதிர்கால நடவடிக்கை என்ன?

உண்மையில் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவர்களின் வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தக் கூடியவர்களில் ஒருவர் தான் காணாமல் போயிருக்கிறார். பிள்ளை, கணவன், தந்தை இவ்வாறு காணாமல் போயுள்ள இந்த இழப்பை எவ்விதத்திலும் எதைக்கொடுத்தும் ஈடுசெய்ய முடியாது. எதை முன்னிறுத்தியும் அவர்களைச் சமாதானப்படுத்த முடியாது. இதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன். 

யுத்தம் முடிவடைந்த பின்னர், 2010ஆம் ஆண்டு தான், நான் அரசியலுக்கு வந்தேன். எனது அரசியல் பிரவேசத்துக்கான காரணம், பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதாகவிருந்தது. மேற்படி விடயத்தில், நான் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத ஒருவன். இவ்விடயத்தில் யார் பக்கமும் நிற்காதவன்; மக்கள் பக்கம் உள்ளவன். மக்களில் ஒருவனாக உள்ளேன். என்னால் முடிந்ததை மக்களுக்குச் செய்வதற்காகவே வந்தேன். அவ்வடிப்படையில் காணாமல் போனவர்களைத் திருப்பிப் பெற்றுத்தர முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக, கடந்த நான்கரை வருடங்களில் நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்விடயத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமிழ்த்  தேசிய கூட்டமைப்பாலே அது முடியவில்லை. சர்வதேச அங்கிகாரத்தாலும் முடியவில்லை. 

பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு, என்னால் முடிந்த ஓர் ஆறுதலாக, ஒரு மருந்தாக அவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, அவர்களை மீளவும் இச்சமூகத்தோடு இணைப்பதற்கு என்னால் முடிந்த முயற்சிகளைச் செய்து கொண்டு தான் இருக்கின்றேன். இவ்வாறு பாதிக்கப்பட்ட தரப்புகளை வைத்து, அரசியல் இலாபம் தேடுபவர்களை அவர்களுக்குச் சுட்டிக்காட்டி, இம்மக்களும் நம்மக்கள் தான் என்பதைத் தெளிவுபடுத்தி, அவர்களைச் சமூகத்தில் இணைக்கும் செயற்பாட்டைச் செய்ய வேண்டும். இவர்கள் எங்களுக்காகப் போராடியவர்கள். இவர்களுக்கு முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், அரசியல்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் எனப் பெயர் வைத்து, அவர்களை மேடைக்கு மேடை சுட்டிக்காட்டி, தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காகப் பிச்சை எடுக்கிறோம். 

இன்று அந்நிலைமையை மாற்றி, அவர்களுக்கான அடுத்த கட்ட நகர்வைச் செய்வது தான், எனது நோக்கம். நான் பொய் கூறி, நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களைக் கூற  விரும்பவில்லை. ஏனெனில், மக்கள் நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களைக் கேட்டு கேட்டு, கடந்த காலங்களில் ஏமாற்றமடைந்துள்ளனர். இவ்வரசின் மூலம், எவற்றை இந்த மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியுமோ, அதைப் பெற்றுக் கொடுத்து, இந்த மக்களை அடுத்த கட்டம் நோக்கிப் பயணிக்க வைக்க முடியும். 

கே: இவ்விடயத்தில் நாள்களை எண்ணி எண்ணி வீதிகளில் போராடும் குடும்பங்களுக்கு ஆறுதலாக எத்திட்டங்களும் இதுவரையிலும் முன்னெடுக்கப்படவில்லை. இதில் நீங்கள் எவற்றைச் செய்யவுள்ளீர்கள்?

அந்தவகையில், அவர்களுக்கான ஒரு வாழ்வாதாரத் திட்டம் உருவாக்கப்படும்.  அவர்களின்  இழப்பை நிச்சயமாக என்னால் ஈடுசெய்ய முடியாது. ஆனால் அவர்களின் பிள்ளைகளில் ஒருவனாக இருந்து, அவர்களுக்கான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவேன். முக்கியமாக, ஜனாதிபதி செயலணியை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். இச்செயலணியில் இரண்டு முக்கிய அம்சங்கள் உருவாக்கப்படும். ஒன்று, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான ஒரு தீர்வு; இரண்டாவது, ஏற்பட்டுள்ள அபிவிருத்தி இடைவெளியை நிரப்புவதற்கான செயற்றிட்டம். இவ்விரண்டையும் செய்யும் போதுதான், சம்பந்தப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் சென்றடையும். 

கே: தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பில், உங்கள் எதிர்கால நடவடிக்கை என்ன?

தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு, யாப்பு மாற்றம் ஊடான தீர்வு ஒன்று எட்டப்படும் என ஜனாதிபதியே தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அபிவிருத்தி என்ற விடயத்திலும் அக்கறை செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, தமிழர் பிரதேசங்களில் பல அபிவிருத்திகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது, எங்களுடைய மாகாணம் பின்தங்கி இருக்கின்றது. இரண்டையும் சமாந்தரமாகக் கொண்டு செல்ல வேண்டிய தேவையுள்ளது. இரண்டிலும் எமது பங்களிப்பு இருக்கும். யாப்பு மாற்றம் சாத்தியமானதாக இருக்கும் பட்சத்தில், எங்களுடைய பங்களிப்பு அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே இருக்கும். அதற்கிடையில் நம்மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி, எமது இருப்பை உறுதி செய்வதற்காக நாம் செயற்படுவோம். 

கே: கடந்த காலத் தேர்தலில் தேசிய கட்சியின் முன்னிலை பிரதிநிதித்துவமாகப் போட்டியிட்டீர்கள். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளதே? இதற்குக் காரணம்?

நான் எப்போதுமே என்னைத் தேசிய கட்சியின் பிரதிநிதித்துவப்படுத்திக் கூறியதில்லை. மக்களின் பிரச்சினைகளையும் அபிலாசைகளையும் எனது கட்சிக் கூடாக அரசிடம் பிரதிநிதிப்படுத்துகிறேன். இதன் மூலம், மக்கள் எங்களை நடுநிலைவாதிகளாகப் பார்த்து அரசாங்கத்திடமிருந்து அபிலாசைகளை, தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களாக எம்மைப் பார்க்கின்றனர். கட்சி சார்ந்து, தனி நபர் சார்ந்து வாய்ப்புகள் அமையப் போவதில்லை. மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். 

கே: விவசாயிகள் மீதான உங்கள் பார்வை அதிகமாக இருந்தது. அவர்களுக்கான எதிர்கால மேம்படுத்தல் நடவடிக்கைகள் என்ன?

பிரதி விவசாய அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பல திட்டங்களைச் செயற்படுத்தி இருக்கிறேன். அதற்கு முன்னதாகவே விவசாயத்தின் மீதான எனது பங்களிப்பு, கணிசமாக அமைந்திருந்தது. வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 40 சதவீதமானவர்கள் விவசாயத்தையும் கடற்றொழிலையும் நம்பியுள்ளவர்கள். இந்த இரண்டு துறைகளையும் மேம்படுத்தும் போது, அது சார்ந்த குடும்பங்கள் வாழ்வாதார ரீதியில் முன்னேற்றம் அடைகின்றன. அவர்களின் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இதனால், எமது பிரதேசம் மீண்டும் கல்வியில் உயர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். 

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விவசாயத்தில் பெரும்புரட்சியை ஏற்படுத்தியது என்று கூறலாம். அதைத் தொடர்ந்து, மறுபடியும் ஒரு விவசாயப் புரட்சியை எமது பிரதேசத்தில் ஏற்படுத்த வேண்டும். விவசாயப் புரட்சி மட்டுமல்ல கடற்தொழில் புரட்சியையும் ஏற்படுத்த வேண்டும். பிரதி விவசாய அமைச்சராக இருந்த காலகட்டத்தில், இந்த ஐந்து மாத காலப்பகுதியில் பல திட்டங்களைச் செய்துள்ளேன். தொடர்ந்து ஐந்து வருடங்கள் இருந்தால், இத்திட்டங்களையெல்லாம் செம்மையாகவும் வினைத்திறனுடனும் செயற்படுத்த முடியும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X