Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 05 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாம் கடந்த பல வருடங்களாக மாற்றம், மறுசீரமைப்பு பற்றிப் பேசி வருகின்றோம். பெருந்தேசிய அரசியலில் மட்டுமன்றி சிறுபான்மை தமிழர், முஸ்லிம்களின் அரசியல் போக்கிலும் பல மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. இவ்வாறான ஒரு மறுசீரமைப்பு அல்லது மீள் ஒழுங்குபடுத்தல் தேவை என்பதை ஏற்றுக் கொள்வதே பெரிய மாற்றம்தான்.
இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்கள் எல்லா விடயங்களிலும் தமது தனித்துவத்தை, சம அந்தஸ்தை, உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற சமகாலத்தில் ஒரு பல்லின நாட்டுச் சூழலிற்குப் பொருத்தமாக தம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
எல்லாக் காலத்திலும் அரசாங்கத்தை அல்லது சிங்கள தேசத்தை மட்டும் குறைகூறிக் கொண்டிருக்காமல், தமது அணுகுமுறைகளில் காலத்திற்கு அவசியமான மாற்றங்களை உள்வாங்க வேண்டியிருக்கின்றது. இது விடயத்தில் கணிசமான தமிழ் அரசியல்வாதிகளும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி சமூக, சமய கட்டமைப்புக்களிலும் ஒரு பாரிய மறுசீரமைப்பு, ஒழுங்குபடுத்தல் அவசியமாகி வருவதாக தெரிகின்றது. அரசியல் ரீதியாகவும் சமய மற்றும் சமூக ரீதியாகவும் முஸ்லிம் சமூகத்தை நெறிப்படுத்த வேண்டிய தேவைப்பாடு முன்னரை விட அதிகரித்துள்ளதாக கூறலாம்.
இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, சரியான தலைமைத்துவம் அல்லது எல்லா முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைமைத்துவம் ஒன்று இல்லாமை எனலாம்.
பொருத்தமான தலைமைகள் இல்லை என்பது ஒருபுறமிருக்க, தற்போதுள்ள எந்த அரசியல், ஆன்மீக, சமூக தலைமையின் கீழும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுவதற்கு முஸ்லிம் சமூகம் விரும்பாமல் இருக்கின்ற போக்கையும் அவதானிக்க முடிகின்றது.
கார்டினால் மல்கம் ரஞ்சித் சொல்கின்ற அறிவுறுத்தல்களுக்கு கத்தோலிக்க மக்கள் கட்டுப்படுகின்றார்கள். பௌத்த மக்கள் கணிசமானவர்கள் தங்களது பௌத்தபீடங்களின் அறிவுரைகளை பேணுகின்றனர். இந்துக்களில் பெரும்பாலானவர்கள் தமது மத தலைமையின் அறிவுரைகளுக்கு செவி சாய்க்கின்றனர்.
முன்னைய காலங்களில் முஸ்லிம் சமூகத்திலும் இந்த கட்டுக்கோப்பான நிலைமை காணப்பட்டதை யாரும் மறுக்கவியலாது. ஆனால், அண்மைக்காலங்களில் இதில் சில மாறுதல்கள் உருவாகியுள்ளன.
மாற்றுக் பெயரில் இந்தக் கட்டுப்பாடு ஏதோ ஒரு வகையில் சிதறடிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் ஜம்மியத்துல் உலமா சபை போன்ற அமைப்புக்கள் எல்லா விவகாரங்களிலும் மிகச் சரியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் முஸ்லிம்களுக்காக முன்னிற்கின்றதா என்ற கேள்வியும் இதற்கு மறைமுக காரணமெனலாம்.
இதேவேளை, சமூக விடயங்களுக்கு முன்னின்று போராடுவதற்கு விரல்விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம்களைத் தவிர வேறு எந்த முஸ்லிம்களுக்கும் நேரமில்லை அல்லது துணிச்சல் இல்லை. இந்த விடயத்தில் தமிழ்ச் சமூகத்தின் முனைப்புக்கும் முஸ்லிம்களின் போக்குக்கும் இடையில் ஏணி வைத்தால் கூட எட்டாது.
சமூக ரீதியாக முஸ்லிம்களின் கட்டமைப்பு பலமாக இல்லை. புத்திஜீவிகள், பல்கலைக்கழக சமூகம், சமூக சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் என்ற பிரிவினரில் ஒரு சிலர் சமூக விவகாரங்களில் முன்னிற்கின்ற போதிலும் கூட பொதுவாக ஒருவித ஒற்றுமையற்ற தன்மையும், போட்டா போட்டியும் அவதானிக்கப்படுகின்றது. எல்லோரும் எல்லா விவகாரங்களிலும் பெரிய அறிவாளிகள் போல படம் காட்ட முற்படுகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகம் பிளவுபட்டு, பலவீனப்பட்டுப் போயிருக்கின்றமையே மேற்குறிப்பிட்ட விவகாரங்களை விட மிகப் பாரதூரமானதாகவும், மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்வதாகவும் இருக்கக் காண்கின்றோம்.
தமிழர்களிடையே வடக்கு (யாழ்ப்பாணம்), கிழக்கு (மட்டக்களப்பு), கொழும்பு மற்றும் மலையக தமிழர்கள் என்று நோக்கும் மனநிலை இன்று வரை மீதமிருக்கின்றது என்பதே உண்மையாகும். ஆனால், அதனையெல்லாம் மீறி தமது அரசியல் அபிலாசைகளுக்காக அவர்கள் ஒருமைப்படுகின்றனர்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதனை விடச் சிறியதொரு பிராந்திய பாகுபாடு உள்ளது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கின் அரசியல் தலைவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தென்னிலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் பெரிய அளவில் அங்கீகரிப்பதில்லை என்றே கூறலாம்.
ஆனால் இதற்கு விதிவிலக்கான மக்களும் உள்ளனர். கிழக்கிலிருந்து ஒரு பெரிய முஸ்லிம் தலைவர் உருவாகி விடக் கூடாது என்பதில் தென்னிலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் மிகக் கவனமாக இருந்தனர் என்பது பொய்யல்ல. மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் பெருவளர்ச்சி கண்டு காழ்ப்புணர்வுற்ற கதைகள் இதற்கு ஒரு சான்றாகக் கொள்ளப்படலாம்.
வடக்கு, கிழக்கில் அதிலும் குறிப்பாகக் கிழக்கில் வாழும் முஸ்லிம்களிடையே தங்களது ஊருக்கு ஒரு எம்.பி. வேண்டுமென்ற அற்பத்தனமான சிந்தனை அண்மைக்காலத்தில் மேலோங்கி வருகின்றது என்றாலும், வெளிப் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். இல்லாவிட்டால் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக றவூப் ஹக்கீம் 23 வருடங்கள் பதவி வகிக்க முடியாது போயிருக்கும்.
இந்தப் போக்குகளில் அண்மைக் காலங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பிரதேசம், பிராந்தியம் கடந்து முஸ்லிம் அரசியல்வாதிகளை நோக்குகின்ற தன்மை முஸ்லிம் மக்களிடையே உருவாக வருகின்றது. அதுவே காலத்தின் தேவையாகவும் இருந்தது.
ஆயினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் ஒருவித எதிர் மனநிலையுடனேயே செயற்படுகின்றனர். ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்துவதே
பலரின் அரசியல் இலக்காக உள்ளது.
மாறாக, சமூகத்திற்காக ஒற்றுமைப்பட்டு, சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தியதாக ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை வகுத்து, அதனைக் கூட்டாக நடைமுறைப்படுத்தும் எந்தத் திட்டமும் இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே அரசியலுக்கு அப்பாலான உறவுகள், தொடர்புகள் இருக்கின்றன. இது தவிர்க்க முடியாததும் கூட. ஆனால், அரசியல் என்று வருகின்றபோது, மக்களை தமது கொள்கைகள், பிரசாரங்களின் ஊடாக பிரித்தாளுகின்றனர்.
இது தேர்தலுக்குப் பின்னரான கவத்திலும் தொடர்கின்றது என்பதே இங்குக் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
‘இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த அரசியல் தலைமை யார்?’ என்று இப்போது கேட்டால் விடையில்லை.. சரி அதிகமான முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் யார் என்றாலும் ஒரு நிமிடம் தடுமாறித்தான் போவோம்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைத்துவப் பதவி இப்போதைய நிலையில் வெற்றிடமாகவே உள்ளது எனலாம். தற்போதுள்ள எந்த முஸ்லிம் அரசியல்வாதியையும் பொதுவான தலைவராக ஏற்றுக் கொள்ள சமூகம் தயாரில்லை. சமூகம் ஏற்றுக் கொள்ளும் தகுதியுடன் தலைவர்களும் இல்லை. இந்தப் பின்னணியில் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இது ஒரு உதவாக்கரை அரசியலாகியுள்ளது.
உண்மையில், முஸ்லிம்களுக்கு சரியான ஒரு தனித்த அரசியல் தலைமைத்துவமோ அல்லது கூட்டுத் தலைமைத்துவமோ கிடைக்குமென்றால் அதன்மூலம் நாம் மேலே குறிப்பிட்ட சமூக, சமய கட்டமைப்புக்களை மறுசீரமைப்பது இலகுவான காரியாகிவிடும். ஆக அரசியல் ரீதியான மறுசீரமைப்பே இங்கு அடிநாதமாகக் காணப்படுகின்றது.
பிளவுபட்டுப்போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனை பதவி விலகச் சொல்லி தமிழ்த் தரப்பிலிருந்து குரல்கள் எழுகின்றன. சமூக விடயங்களில் தன்னால் முடியுமானளவுக்கு பாடுபட்ட சம்பந்தன், ‘90 வயதில் இயங்கவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களாகவும் எம்.பி.க்களாகவும் இருந்து கொண்டு கடந்த இரு தசாப்தங்களாக உருப்படியாக சமூகத்திற்கு எதனையும் செய்யாத தலைவர்களுக்கு முஸ்லிம் மக்கள் இவ்வாறான எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை.
பதவி விலகச் சொல்லவும் இல்லை, தேர்தல்களில் சம்பந்தப்பட்ட எம்.பிக்களை தோற்கடிக்கவும் இல்லை.
மாறாக, முன்பிருந்த எம்.பிக்களே திரும்பத்திரும்பத் தெரிவு செய்யப்படுகின்றனர். புதிதாக உள்ளே வருகின்ற அரசியல்வாதிகளில் அநேகர் அதைவிடப் பிற்போக்கான அரசியலில் ஈடுபடுவதைக் காண முடிகின்றது. ஆனபோதும் சமூகமோ, பள்ளிவாசல்களோ, வாக்களித்த மக்களோ அவர்களிடம் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை.
தேர்தல் காலத்திலும், ஆட்சி மாறும் காலத்திலும் சட்ட மூலங்கள், வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்புக்கு வரும் காலத்திலும் மட்டும் செய்வதல்ல சமூக அரசியல் என்பது! அதற்கு சீசன் வியாபாரம் என்று பெயர். மாறாக, எல்லாக் காலத்திலும் முஸ்லிம்களிற்காக அவர்களின் நீண்டகால, குறுங்கால பிரச்சினைகளை இயங்கிக் கொண்டிருப்பதே அரசியலாகும்.
இதற்காகத் தேவைப்படும் போது கூட்டாகவும், தனியாகவும் முன்னிற்க வேண்டும். ஆகவே, முஸ்லிம் எம்.பிக்கள் தாம் எதனைச் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை முதலில் பிரித்தறிய வேண்டும். முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி அதனோடிணைந்ததாக சமூக, சமய, நடத்தைக் கட்டமைப்புக்களில் ஏற்பட்டுள்ள இந்தச் சீரழிவுகளை, பின்னடைவுகளைச் சரி செய்வதாயின், அரசியல், சமூக சமய கட்டமைப்புக்களில் மறுசீரமைப்புக்கள் அவசியமாகின்றன.
இந்த உதவாக்கரைசிய அரலில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் ஊடாக அந்த மறுசீரமைப்பைத் தொடங்கி வைக்க வேண்டியது காலத்தின் தேவை என்பதை இனிமேலும் உணராதிருக்க முடியாது.
2023.11.28
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago