2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

உங்கள் வாழ்வை எதில் முதலீடு செய்கிறீர்கள்?

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மனோகரன் இராமநாதன் 

அமைதி கல்வித் திட்ட வழி நடத்துநர்,

பிரேம் ராவத் நிறுவனம்

 

 

நீங்கள் அறிவதற்கு மூன்று விடயங்கள் இருக்கின்றன. முதலாவதாக, விவேகத்திற்கும் அறிவுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

அறிவைப் (Knowledge)  பெற்றுக் கொள்ளுங்கள். அந்த அறிவை விவேகத்துடன் (wisdom) பாவிக்கவும். அறிவை பயிற்சிப்பது தான் விவேகம்.  உலகத்தில் தொழில்நுட்ப அறிவு  இருந்தும், விவேகத்தைப் பாவிக்காதபடியால், அந்தத் தொழில்நுட்ப அறிவைப் பாவித்து  மனிதர்கள், மனிதர்களையே அழிக்கின்றார்கள்.

விவேகத்தைச்  சரியான முறையில் பயன்படுத்தினால் புவி வெப்பமயமாதலை தடுக்கலாம்.  அறிவை, விவேகத்துடன் பாவித்தால் மிருகங்களின்  அழிவைத் தவிர்த்துக்  கொள்ளலாம். 

இற்றைவரை மனிதன் செய்த  பிழையான காரியங்களை, அதே தொழில்நுட்பத்தின் உதவியுடன் சரி செய்து கொள்ளலாம்.   அறிவை விவேகத்துடன்  பாவித்தால் நல்லது நடக்கும்.

இரண்டாவது, உங்களை  நீங்களே அறிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய பலம் தான் என்ன? ஒரு விதையானது வரண்ட வனாந்தரத்தையே  மாற்றக்கூடிய தன்மை உள்ளது.   மழைவந்தால், ஒரு விதை  வெற்று வனாந்தரத்தையே  மாற்றக்கூடியது.  உங்களை நீங்களே அறிவதால் இம்மாற்றம்  சாத்தியமாகும். 

மூன்றாவது விடயம், பச்சாத்தாபத்தையும் அனுதாபத்தையும் பற்றியது. எல்லோரும்  சமூக  ஊடகங்களில் பங்கு பெற விரும்புகிறார்கள். மற்றவர்களுடன்  தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள்.   உங்களுக்குத் தேவையானது இது அல்ல; உங்களுடைய இந்த உடம்பை,  ஓடும்  காருக்கு முன்னால்  நீங்கள் போட விரும்பினால் போடலாம். அலைபேசியை பாவித்துக்கொண்டு, வீதிகளைக் கடக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு  இருந்தும், மனிதன் விவேகத்தை அங்கு பாவிக்கவில்லை.  பாரிஸில் உள்ள வாகனப் போக்குவரத்து மிகவும் மோசமாகி விட்டது.  அங்கு, அவர்கள் ஏன் ‘ஹோர்ன்’ அடிகிறார்கள் தெரியுமா?

ஏனெனில், தன் முன்னால் உள்ள கார் புறப்பட்டு போனாலும், பின்னாலுள்ள காரிலிருந்து ஹோர்ன் அடித்த பின்பும் தங்களது காருக்குள் குனிந்தபடி, அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  விபத்துக்கு இது  அடிகோலும்.  இவர்களின் விளக்கமின்மையைத் தீர்ப்பதற்கு, பச்சாத்தாபம் (empathy) தான் தேவை; அனுதாபம் (sympathy) அல்ல . 

சமூகம்  ஏற்றுக் கொள்ளப்படும் ஒருவனாக நீங்கள் இருப்பதற்கு,  பச்சாத்தாபம் இருக்க வேண்டும்; அனுதாபம்  அல்ல.   பச்சாத்தாபம் மக்களிடம் இருந்தால், இந்த உலகத்தில் போர்களைத் தவிர்க்கலாம். ஒருவனுடைய நிலையை,  உங்கள் நிலையாக  உணர்ந்து, அவனுடைய  சூழ்நிலையை நீங்கள்  விளங்கினால்  அவனிடம் பச்சாத்தாபம்  கொள்வீர்கள். 

மக்கள் பச்சாத்தாபப்படுவதில்லை. சில நாடுகளில்  பச்சாத்தாபம் என்ற சொல்லுக்கே இடமில்லை. பச்சாத்தாபம் இல்லாத படியால்தான், நாங்கள் கடவுளின் பெயரில்,  சந்தோசத்தின் பெயரில், சமயங்களின் பெயரில் அமைதியின் பெயரில்   போராடுகிறோம்.

மக்கள்  ஒன்றுபட வேண்டிய இந்த இடத்தை,  தங்களுக்கிடையே போரிடும் இடமாக ஆக்கி விட்டார்கள். பச்சாத்தாபம் என்பது மனிதர் மட்டுமல்லாமல், மிருகங்களிடமும் காட்ட வேண்டியது ஒன்று. அவ்வாறு  செய்வதால்,  மிருகங்கள் அழிவடையாது. 

இந்தக் காலத்தில், சூப்பர் மார்க்கெட்டில் உணவு அளவுக்கு அதிகமாக இருக்கும்.   அளவுக்கு அதிகமான உணவை என்ன செய்வதென்று தெரியாமல் அதை  எறிந்து விடுகிறார்கள்.

இவ்வாறு உணவு மேலதிகமாக இருக்கையில், மக்கள் சிலர் உணவுக்காக வேட்டையாடவும் போகிறார்கள். வேட்டையாடப் போனால் மிருகங்களுக்கு சமனாக  துப்பாக்கி இல்லாமல்  நாமும்  போகலாமே!  நீங்கள் வேட்டையாட போகலாம். ஆனால் உங்களுடைய, குடும்பத்துக்கு நல்ல காப்புறுதிக் கொள்கையை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஏனெனில் நீங்கள் சிங்கத்திடமிருந்து திரும்பி வரக் கூடிய சாத்தியம் இருக்காது. ஆயிரக்கணக்கான வருடங்களாகப் பாவித்து வரும்  துப்பாக்கிகள் கொண்டு சிங்கத்தை வேட்டையாட பார்க்கிறீர்கள்.  துப்பாக்கியால் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று  சிங்கத்துக்கு தெரியாது 

 துப்பாக்கி இல்லாமல் நீங்கள்  சிங்கத்திடம் சண்டை போடப் போனால் சிங்கத்துக்கு நீங்கள்  ஒரு  பற்பசை  ஆகிவிடுவீர்கள். அதே மாதிரி, நீங்கள் கடலுக்கு உள்ளே ஆயுதம் இல்லாமல், திமிங்கிலத்துடன் சண்டை போடப் போனால்,  திமிங்கிலத்திற்கு  உங்களைக் காண சந்தோசமாக இருக்கும்.

இவற்றால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், நான் இந்த உலகத்தில் வாழ்ந்து  கொண்டிருப்பதால் இதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இவ்வுலகத்தில் நடப்பது அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை.

நாம்   இவ்வுலகத்தை  மாற்ற  முன்பு,  நாம் மாற வேண்டும்.  மற்றவர்கள் மாற வேண்டும் என்று தான் நாம் கூறுவோம். ஆனால்  நாங்களும் மற்றவர்கள் போலத்தான் உள்ளோம்.

உங்களை நீங்களே உணர்வது பெறுமதி மிக்கது. 
 உங்கள் வனாந்திரத்தில்  அந்த விதை உண்டு. அங்கு மழை பெய்யத் தான் போகின்றது. அவ்வாறு மழை பெய்யும் பொழுது,  உங்களுடைய அந்த வனாந்திரம் மலரத்தான் போகின்றது.  நீங்கள்  தெய்வீகத்தின்  கடைக்குள்  தான் இருக்கிறீர்கள். இது அழகானது; அமைதி அங்கு உள்ளது.

தெய்வீகம் அங்கு இருக்கின்றது.  தெய்வம் எங்கு இருக்கின்றது என்று கேட்கிறார்கள்? எங்கிருந்து இந்தக் கேள்வி வருகின்றது? இந்தக் கேள்வி உங்கள்  மனதிலிருந்து வருவதில்லை. அது  உங்கள்  உள்ளத்தில் இருந்து வருகின்றது.

துக்கத்திலும் பார்க்க, சந்தோசமாக இருப்பது தான் முக்கியம். சந்தோசத்துக்கு எல்லையே இல்லை. மற்றவர்கள் சொல்லாமலே உங்களுக்கு இது தெரியும். ஒருவரும் கோவிலுக்கோ, தேவாலயத்துககோ போய்,  தனக்கு சந்தோசம் அதிகமாகிவிட்டது, சந்தோசம் போதும் என்று பிரார்த்திப்பது இல்லை.

நீங்கள்  அறிந்ததை விட, அறியாத விடயங்கள் தான்; அதிகம்  என்பது உங்களுக்குத் தெரியும்.

தெய்வீகத்தின் கடையில், அழகான  விடயங்கள் இருக்கின்றன. எனினும்; தெய்வீகத்தின் கடையில் ஆனந்தத்தின் விதைகள் மட்டுமே உங்களுக்குத் தரப்படும். அதைப் பற்றி ஆச்சரியப்படத் தேவையில்லை. நீங்கள்  ஆனந்தத்தின் விதைகளில் முதலீடு செய்யத் தயாரா?  

 சகல அறிவையும்  விவேகத்துடன் பாவித்தால்,  வாழ்வில் நல்ல மாற்றங்களுக்கான  சாத்தியங்களுக்கு முடிவில்லை.

வனாந்தரம் பூக்கும் பொழுது,  எவ்வளவு அழகாக இருக்கும். இந்த  வனாந்திரம்  பூக்கட்டும்.   வாழ்வு மலரச்சி அடைவதைப் பற்றியதுதான்  இந்த விடயம். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .