2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஈஸ்டரே அனைத்துக்கும் காரணம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 21 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

எதிர்காலத்தில் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் மக்கள் எந்த வகையிலும் துன்பப்பட அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஓர் அரசாங்கம் என்ற வகையில், நெருக்கடிகளை ஒருபோதும் இனவெறி மனப்பான்மையுடன் பார்க்க மாட்டோம் என்பது மக்கள் விடுதலை முன்னணி 
(ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிப்படுத்தலாக இருக்கிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து ஏப்ரல் 8ஆம் திகதி கைதானார்.

அவர் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சரும் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமாவர்.

இவர் வைது செய்யப்படும் போது, காரணம் கூறப்படவில்லையானாலும், மறுநாள் பொலிஸ் தரப்பு 2006ஆம் ஆண்டு டிசெம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்தினுடைய வழக்கு தொடர்பில் கைதானதாகத் தெரிவித்திருந்தது. 

ஆனால், சில தினங்களில் அவர் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதானதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவர் கைது செய்யப்பட்டதும், 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், பின்னர் 90 நாட்கள் விசாரணைகளுக்கான தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டிருக்கிறது.

அதன் பின்னர் அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் சுமத்தப்படுவதற்கான ஏதுக்களே காணப்படுவதாகத் தெரியவருகிறது. அவ்வாறானால் அவர் ஒரு வழக்குடன் சம்பந்தப்பட்டதாகக் கைதாகவில்லை 
என்றே கொள்ளமுடியும்.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள், வேண்டுகோள்கள், அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கையில், அச்சட்டம் நீக்கப்படுமா? என்பது குறித்த உறுதிப்பாடான தகவல்கள் இல்லாதிருந்தாலும் நிச்சயமாகப் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக ஒரு சட்டம் வந்தே தீரும் 
என்பது உறுதியாக இருக்கிறது.

மார்ச் 25ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட மொஹமட் ருஷ்டி என்ற இளைஞரை தீவிரவாத அல்லது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டுள்ளதாகக் கூறி, 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஏப்ரல் 11 அன்று, அந்த இளைஞன் எந்த பயங்கரவாத அமைப்புடனும் தொடர்புபட்டிருக்கவில்லை என கூறியிருந்தார்.

காசா பகுதியில் நடைபெற்று வருகின்ற இஸ்‌ரேலிய தாக்குதல்களைக் கண்டித்து குப்பைத் தொட்டியில் ஸ்டிக்கரை ஒட்டியதற்காகவே அந்த இளைஞர் கைதானார்.
ஏப்ரல் 12ஆம் திகதி மன்னார் முசலி - சிலாவத்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படும் என்று கூறினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் கடந்த 11ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில், நீதி அமைச்சில் நடைபெற்றிருக்கிறது. அது தொடர்பில் அமைச்சின் ஊடகச் செய்தி 13ஆம் திகதி வெளியாகியிருக்கிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக அதிலிருந்து அறிய முடிகிறது.

அதே நேரம், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக, ஒரு புதிய சட்டம் வந்தே தீரும் என்பது உறுதியாக இருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய சட்டமூலம் உலகளாவிய பயங்கரவாதத்தையும் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு வரைபாக இருக்க வேண்டும்,

இந்த நாட்டின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கான மனித உரிமைகளை 
அது மீறக்கூடாது என்ற நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் கருத்தைக் கொள்ளலாம்.

ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறுவதில்லை என்பதற்கொப்பாக இந்த ஆட்சியிலும் முன்னைய ஆட்சிகளைக் குற்றம் சுமத்துகின்ற செயற்பாடுகளும் அவர்களது ஆட்சிகளில் குறை காண்பதுமே நடைபெற்று வருகிறது.

இது பயங்கரவாதத் தடைச் சட்ட விடயத்திலும் இருக்கத்தான் செய்கிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப்பதிலாகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கான வேலைகள் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆனால், அதற்கு சிவில், மனித உரிமைகள் சார் அமைப்புகள் பெரும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. அவ்வாறான எதிர்ப்புகள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருவாவதற்குத் தடைகளாக இருந்தன.

இருந்தாலும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)  தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றான சட்டத்திற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழு வரைபைத் தயாரித்து விட்டதாகவும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டதென்றும் மே மாத ஆரம்பத்தில் பொதுமக்களின் கருத்துகளையும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களையும் பெறவும், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் கருத்துக்களையும் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகிறது.

இவ்வாறான அளவில்தான் ஈஸ்டர்  குண்டுத் தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை இந்த வருட நினைவு தினத்துக்கு முன்னதாக வெளிப்படுத்துவோம் என்ற ஜனாதிபதியின் அறிவித்தல் நிறைவேற்றப்படுமா? என்ற காத்திருப்பினை மக்கள் மேற்கொண்டிருக்கின்றனர். இன்றுடன் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று ஆறு வருடங்கள் நிறைவடைகின்றன.

ஆனால், ஆட்சிகள் மாத்திரம் மாற்றமடைந்திருக்கிறது என்றளவில் மாத்திரம் திருப்தியடைவதா? இல்லையா? மேலும், இது தொடருமான என்பதற்காக காத்திருக்க வேண்டும்.

பிள்ளையான் கைது செய்யப்பட்டமைக்கு உண்மையான காரணம் என்ன என்று இதுவரையில் உறுதியான நிலைப்பாடொன்றை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. இவ்வாறானநிலை தொடர்ந்தால், பாதுகாப்புத்துறையின் செயற்பாடு கேள்விக்குறிக்குள் இருப்பதே நிகழும் என்பது ஒரு சிலரது விமர்சனமாக இருக்கிறது.

பிள்ளையான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்னரான காலத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

இருந்தாலும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு புனித மரியாள் மறைப் பேராலயத்தில் வைத்து  2005ஆம் ஆண்டு டிசெம்பர் கிறிஸ்மஸ் ஆராதனையின் போது, சுட்டுக் கொல்லப்பட்டமை ஒன்று. இவ்வழக்கில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அவர் கைது செய்யப்பட்டு 5 வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வழக்கைத் தொடர முடியாதென்ற காரணத்தின் 

மூலமாக கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானதும் விடுதலையாகியிருந்தார்.  
அடுத்து, கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக  2004ஆம் ஆண்டு முதல் கடமையாற்றிய பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவிந்திரநாத் காணாமல்போன சம்பவம் தொடர்பில் 2006ஆம் ஆண்டு பதிவான முறைப்பாட்டுக்கு அமைய, 
9 வருடங்களின் பின்னர் பிள்ளையானை கைது செய்துள்ளனர்.

இதேவேளை,  2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையான் செயற்பட்டு இருந்ததாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது.
மேலும் பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், இவை மூன்றும் பிரதானமானவைகளாக இருக்கின்றன .

என்றே செல்லலாம். இருப்பினும், இப்போதுள்ள விமர்சனங்களெல்லாம் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கெதிராக பாராளுமன்றில் பல மணிநேரம் பேசிய, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயுமாகப் போராடிய ஜே.வி.பி. இன்று அதே சட்டத்தைப் பயன்படுத்தி கைதுகளை மேற்கொள்வது மாற்றத்தின் வெளிப்பாடுதான் என்பதுதான்.

ஈஸ்ரர் தாக்குதல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி 
(ஜே.வி.பி.)  தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் தலைவரான  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விடுத்த அறிவிப்பின் பயனாகவே பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தியேயாக வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

ஆனால் ஒருவகையில் நோக்கினால், இலங்கையைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதல் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி, கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி ஆகிய இரண்டு ஆட்சிகளை இல்லாமல் செய்து.  மூன்றாவதாக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினை கொண்டு வந்திருக்கிறது.

இவ்வாறு பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிற இத் தாக்குதல் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக அமையாதிருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

அதன் பின்னரேனும், பிள்ளையான் கைது மிகப்பெரிய அரசியல் நகைச்சுவை என்ற விமர்சனத்திற்கு முடிவு கிடைக்கட்டும். பயங்கரவாதத் தடைச் சட்டமும் ஈஸ்டர் தாக்குதலும் மோதும் நிலையில், சாத்தியம் பற்றி யோசிக்கத்தான் முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .