Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 27 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலின் அழிச்சாட்டியம்: உலக ஒழுங்கு மாற்றங்களை கவனமாக பயன்படுத்த வேண்டிய முஸ்லிம் உலகு
மொஹமட் பாதுஷா
இன்னும் ஒரு உலக மகா யுத்தம் வந்து விடுமோ அல்லது அதற்குச் சமமான மனிதப் பேரவலம் இடம்பெற்று விடுமோ என்ற அச்சமும் கவலையும் உலக மக்களை ஆட்கொண்டுள்ளது. அகன்ற பலஸ்தீனத்தில் ஒவ்வொரு நொடியும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற உயிரிழப்புக்களும் இன அழிப்பும் அந்தக் கவலையை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
பலஸ்தீன மண்ணை இஸ்ரேல் 75 வருடமாக ஆக்கிரமித்துள்ளது. அதுமட்டுமன்றி அதன் எல்லைகளை அகலமாக்கி இன்னுமின்னும் பலஸ்தீன நிலத்தைச் சூறையாடி வருகின்றது என்பது உலகுக்கே தெரியும். இருப்பினும், இஸ்ரேலின் மீது இம்முறை ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் போரைத் தூண்டும் ஒரு நடவடிக்கை என்ற அடிப்படையில் உலகம் அதனைச் சரி காணவில்லை.
ஆனால், அதற்குப் பதிலடியாக, இன்று வரை சியோனிஸ இஸ்ரேல் பலஸ்தீன முஸ்லிம்கள் மீது மேற்கொண்டு வருகின்ற அழிச்சாட்டியத்தை, அதே உலக மக்கள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றது. குறிப்பாக, குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் எல்லாவற்றையும் துண்டித்து, தொடர்ச்சியாக பொது மக்கள் மீது இஸ்ரேல் படைகள் நடத்துகின்ற ஈவிரக்கமற்ற குண்டு மழை இஸ்ரேலை உலகின் பொது எதிரியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றது எனலாம்.
ஹமாஸ் இயக்கத்திற்கு 2006 தேர்தலில் கணிசமான பலஸ்தீனர்கள் வாக்களித்திருந்தனர். இருப்பினும், ஹமாஸ் செய்கின்ற எல்லா காரியங்களையும் சரி என்றோ, அவர்கள் போர் விதிகளைச் சரிவரக் கடைப்பிடிக்கின்றார்கள் என்றோ கூற முடியாது. இஸ்ரேலில் இறந்த அப்பாவி பொது மக்களது உயிர்களும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பொதுவான அபிப்பிராமயாகும்.
ஆயினும், அது ஒரு பயங்கரவாத இயக்கமென்று கூறுபவர்கள், பிரச்சினையின் அடிவேரை விளங்க வேண்டும். ஹமாஸ் மட்டுமன்றி, பலஸ்தீன விடுதலை இயக்கம் போல பல போராட்ட குழுக்கள் உருவாகுவதற்கு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பே காரணம் என்பதையும் விளங்கிக் கொள்வது கடினமன்று.
ஒப்பீட்டளவில் ஒரு ஆயுத இயக்கத்தை விட, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாங்கமான இஸ்ரேலின் அரசு மிகப் பொறுப்புடனும் சர்வதேச விதிமுறைகளையும் கடைப்பிடித்து போரை நடத்த வேண்டும் என்பது இங்கு முக்கியமானது.
ஆனால், அதனையெல்லாம் பொருட்படுத்தாது, வெண் பொஸ்பரஸ் குண்டுகளைப் பாவித்தமை, அடிப்படை வசதிகளைத் துண்டித்தமை, பொது மக்கள் வசிக்கின்ற இருப்பிடங்கள் மீது தெளிவாகக் குண்டு வீசுகின்றமை போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளின் மூலம் இஸ்ரேல் அந்த சட்ட விதிகளை மீறியுள்ளது.
குறிப்பாக, உலகுக்கே நீதி, நியாயம் போதிக்கின்ற மேற்குலக நாடுகளின் கூட்டாளியும், உலக பொலிஸாரான அமெரிக்காவின் நெருங்கிய சகாவாகவும் இருக்கின்ற இஸ்ரேலின் மெதன்யாஹூ அரசாங்கம், அகன்ற பலஸ்தீனத்தில் உள்ள வைத்தியசாலை மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி 500இற்கும் மேற்பட்டோரைக் கொன்றதன் மூலம் பகிரங்கமாகவே மிகப் பெரும் போர்க் குற்றத்தை நிகழ்த்தியுள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே இஸ்ரேல் மேற்கொண்ட அழிச்சாட்டியமும், சர்வதேச போர் மற்றும் மனிதாபிமான விதிகளை மீறும் விதத்திலான சண்டித்தனமான போக்கும், பலஸ்தீன மக்களுக்காக உலகின் பெரும்பாலான நாடுகளும், மக்களும் குரல்கொடுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.
அரபு நாடுகள் ஒன்றுபட்டிருக்கின்றன. மத்திய கிழக்கின் முஸ்லிம் நாடுகளுக்குள்ளும் ஒரு அரசியல் இருக்கின்றது. பலஸ்தீனத்தை ஜோர்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகள் வரலாற்றில் வஞ்சித்த கதைகளும் உள்ளன. எது எப்படியிருப்பினும், முஸ்லிம்களின் புனிதபூமி என்ற அடிப்படையில் பலஸ்தீனத்தை காப்பாற்றியேயாக வேண்டியது அவர்களின் மதக் கடப்பாடாகவும் உள்ளது.
இந்தப் பின்னணியில் அரபு நாடுகளின் அமைப்புக்கள் காட்டமான அறிக்கையை விடுத்துள்ளன. இஸ்ரேல் மேற்கொள்வது தெளிவான இன அழிப்பு, ஒரு இனத்தை, மதத்தைத் துடைத்தெறியும் ஆக்கிரமிப்பு, பகிரங்கமான போர்க் குற்றம் என நேரிடையாகவே அரபு நாடுகள் சொல்லியுள்ளன.
மறுபுறுத்தில் சீனா, ரஷ்யா போன்ற பல முக்கிய நாடுகள் பலஸ்தீன மக்களின் பக்கம் நிற்கின்றன. அதுமட்டுமன்றி, இஸ்ரேலிற்கு சார்பான நிலைப்பாடுகளை அறிவித்த பல மேற்குலக நாடுகளின் பாராளுமன்றங்களில் உள்ள கணிசமான உறுப்பினர்கள் பகிரங்கமாகவே பலஸ்தீனத்திற்கு ஆதரவையும் இஸ்ரேலிற்கு எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
சமகாலத்தில், அமெரிக்கா, பிரித்தானியா என இஸ்ரேலின் கூட்டாளி நாடுகளிலும் கூட பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மிக முக்கியமாக இஸ்ரேல் உட்பட பல நாடுகளில் உள்ள முற்போக்கான யூதர்களே பலஸ்தீன மக்கள் விடயத்தில் மனிதாபிமானம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வீதிக்கு இறங்கி போராடுவதை காண முடிகின்றது.
இது ஒரு முக்கிய மாற்றமாகும். முஸ்லிம்கள் பற்றியும் பலஸ்தீனம் பற்றியும் இவ்வளவு காலமும் இருந்த தப்பபிப்பிராயங்கள் விலகத் தொடங்கியுள்ளன. அத்துடன், உலக பொலிஸார், நாட்டாமைகள், நீதியின் காவலர்களின் உண்மை முகம் என்ன என்பதையும், பிணத்தின் மேல் அரசியல் செய்யும் மனநிலையையும் இந்த யுத்தம் வெளிப்படுத்தியிருக்கின்றது.
இந்தக் காரணத்தினாலேயே அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தமது நிலைப்பாட்டைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டுள்ளன எனலாம்.
ஆரம்பத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த மோடி அரசு, அரபு நாடுகளின் நிலைப்பாடு மற்றும் உலக போக்கை அவதானித்து விட்டு நிலைப்பாட்டைச் சற்று மாற்றியுள்ளது.
கொவிட் வைரஸ் தொற்றுக்குப் பிறகு உலக ஒழுங்கு சற்று மாறத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவும்டொலரும்தான் இவ்வுலக நடத்தையை தீர்மானிக்கின்றன என்ற போக்கை மாற்ற ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் முயற்சித்தன. இந்தியா போன்றனவும் துணைநின்றன.
அதன் பிறகு, அமெரிக்காவின் துணையுடன் இடம்பெற்ற மற்றுமொரு யுத்தமான உக்ரேன் - ரஷ்யா போரிலும் அமெரிக்கா நினைத்த வெற்றி கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியான சூழலில், பெரும்பாலான நாடுகள் எல்லாம் நீதிக்காக, மனிதாபிமானத்திற்காகக் குரல் கொடுக்கின்ற போது, அந்த பொது ஒழுங்கிற்கு வெளியே தாம் நின்றால் உலகின் தலைமை நாட்டாமை என்ற பதவி பறிபோய்விடும் என்பதால், சுதாரித்துக் கொண்டு ‘பலஸ்தீனம் விடுவிக்கப்பட வேண்டும்’ என அறிக்கை விட்டதன் மூலம் நானும் உங்களோடுதான் எனக் காட்டியுள்ளது.
புலஸ்தீன போர் இன்றோ நாளையோ தணியலாம். ஆனால், முன் கணிக்கப்பட்ட இஸ்லாமிய வரலாற்றின் படி, உலகின் கடைசிக்கால யுத்தம் கூட அந்த மண்ணில் இடம்பெறும் என்பதை முன்னைய பத்தியிலேயே குறிப்பிட்டிருந்தோம்.
எது எவ்வாறிருப்பினும், உலகளவில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. கண்முன்னே அநியாயம் நடக்கின்ற போது கண்மூடித்தனமாகத் தவறுகளை ஆதரிக்கும் போக்கில் மாறுதல் தெரிகின்றது. அரசாங்கங்களின் நிலைப்பாடுகளை மீறி, இன, மத, நிற பேதங்களைக் கடந்து நியாயத்திற்காகவும் பேசுகின்ற மக்கள் பொது வெளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
நவீன ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் வருகை இதற்கு முக்கிய காரணமாகியுள்ளது எனக் கூறலாம். இதற்கு முன்னைய காலத்தில் இதுபோன்ற இன அழிப்புக்கள், போர்கள், ஆக்கிரமிப்புக்கள், அழிச்சாட்டியங்கள் இடம்பெற்ற போது மேற்குலகம் தனது ஊடகங்கள் ஊடாக தமக்கு விரும்பியவாறு அவற்றைக் காட்சிப்படுத்தி வந்தது. அவர்கள் சொல்வதுதான் செய்தி என்று ஒரு நிலையிருந்தது. ஒரு சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை அவர்களது ஊடகங்கள் சொல்லும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உலக மக்களுக்கு இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறியிருக்கின்றது.
பாலஸ்தீனத்தில் இப்போது என்ன நடக்கின்றது என்பதை நேரடியாகவும் ஒளிப்படமாகவும் பல்வேறு கோணங்களில் இருந்து அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உலகின் கடைநிலை மனிதனுக்கும் கிடைத்துள்ளது. இந்த மாற்றம் அமெரிக்க, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு பெரும் சவாலாகியுள்ளதை பலஸ்தீன யுத்தத்திலும் காண்கின்றோம்.
யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அகன்ற பலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டு அங்குள்ள மக்கள் மீது குண்டுமழை பொழிகின்றது என்ற செய்தி, எவ்வித ஒளிவுமறைவுமின்றி உலக மக்களுக்குக் கிடைக்கின்றது.
ஆக, பலஸ்தீன விவகாரத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு, மேற்குலகின் ஊடகப் பரப்புரைத் தோல்வியும் ஒரு காரணம் எனலாம்.
எனவே, இந்த மாற்றத்தை, நீதியின் பக்கம் மக்கள் நிற்கின்ற சந்தர்ப்பத்தை முஸ்லிம் நாடுகளும் நீதிக்காக, மனித உரிமைக்காகப் போராடுகின்ற அமைப்புக்களும் சரிவரக் கையாள வேண்டும். நாட்பட்ட பலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு இந்த நல்ல சமிக்கையை மிகக் கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமகாலத்தில், இலங்கை போன்று சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற நாடுகளில் நிலைமைகளைக் கவனமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது. ஆயினும், அளவுகடந்த உணர்வு வெளிப்பாடும், விவாதங்களும் பரஸ்பர அறிக்கை விடுதலும் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
2023.10.24
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
3 hours ago