2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இலவசமாக தகனக்கிரியை: ஒரு முன்மாதிரி

Johnsan Bastiampillai   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

 

 

கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதால் வசதி இல்லாமல் உள்ளது. அதை உணர்ந்தே இதிலும் எமது நிவாரணத்தை வழங்கவேண்டும் என்ற மனிதாபிமான நோக்கொடு நாம் இலவச தகனக்கிரியை ஏற்பாட்டை செய்துவருகின்றோம் என மாத்தளை மாநகரசபையின் முதலாவது தமிழ்மேயர்  சந்தனம் பிரகாஷ் கூறினார். 

இலங்கையில் 341 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றில் 24 மாநகர சபைகளும் 41 நகர சபைகளும் 276 பிரதேச சபைகளும் இயங்குகின்றன.இந்த 24  மாநகர சபைகளில் மூவினம் சார்ந்தவர்களும் மேயர்களாக தாவது மேயர்களாகவுள்ளனர்.  ஆனால், இவர்களில் மூன்றே மூன்று மேயர்கள்  தமிழர்களாவர். கிழக்கில் மட்டு. மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன்; வடக்கில் யாழ்.மாநகர சபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்; மாத்தளை மாநகர சபை மேயர் சந்தனம் பிரகாஷ்; ஆக, வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள ஒரேயொரு தமிழ் மேயர் சந்தனம் பிரகாஷ் மட்டுமே என்பது வெள்ளிடைமலை.

மாத்தளை மாநகர சபையில் 21 உறுப்பினர்களில் 3 தமிழ் உறுப்பினர்கள், 5 முஸ்லிம் உறுப்பினர்கள், 13 சிங்கள உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்தநிலையில் தமிழ் பிரமுகர் ஒருவர் மேயராக இருப்பதென்பது போற்றுதற்குரியது; பெருமைக்குரியது.

அண்மையில், முதன்முதலாக கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்செய்தபோது வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தமலை முருகன் கோவிலுக்கு  விஜயம் செய்திருந்தார். அங்கு அவரிடம் பெற்ற நேர்காணலை, இங்கு வாசகர்களுக்காக தருகிறோம்.

கேள்வி: தாங்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்? தங்களது அரசியலுக்குள் ஈர்த்த அரசியல் ஆசான் யார்?

பதில்: நான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன். எமது கட்சியின் அரசியல் தலைவர்கள் குறிப்பாக மத்திய மாகாண சபை உறுப்பினர் முத்துசாமி சிவஞானம், என்னை அரசியலுக்குள் வரவைத்தார்;  எனது அரசியல் ஆசான் அவர்தான். 

நான், 2002ஆம் ஆண்டு மாத்தளை மாநகர சபையில் ஓர் உறுப்பினராக அரசியலில் பிரவேசித்தேன். 2018இல் உதவி மேயராகவும் 26 ஓகஸ்ட் 2020இல் பதில் மேயராகவும், 2021 ஜனவரி 6ஆம் திகதி முதல் நிரந்தர மேயராகவும் சேவையாற்றி வருகிறேன்.

2002 இலிருந்து 4முறை உறுப்பினராகத் தெரிவானேன். இறுதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜ.ம.சு முன்னணி சார்பில் தெரிவானேன்.
2002 தேர்தலில்  ஜ.தே.கட்சி சார்பிலும் பின்னர் 2006, 2011, 2018 களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் தெரிவானேன்.

கேள்வி: மாத்தளை மாநகரின் சமுகக் கட்டமைப்பு பற்றிக்கூறுங்கள்?

பதில்: மாத்தளையில் 50 சதவீதம் பெரும்பான்மையின   சமூகத்தினரும் மீதி தமிழ், முஸ்லிம் சமுகத்தினர் சரிசமமாக ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர்.  

நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். மாத்தளை இந்து தேசியக் கல்லூரியில் உயர்தரம் வரை கல்விக் கற்றவன். கல்விகற்கும்போதே சமுகசேவையிலும் ஈடுபட்டவன். ரத்தோட்டை இந்துக்கல்லூரியில் சிறிது காலம் (1996-98 ) தொண்டராசிரியராக பணியாற்றியவன்.

அகில இலங்கை ரீதியில் உதைபந்தாட்டதுறையில் தெரிவுசெயயப்பட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் கையில் விருது  பெற்றேன். உள்ளுராட்சி சபையில் உதவி நூலகராகவும் பணியாற்றினேன். உள்ளூராட்சி முறைமையில் டிப்ளோமாப் பட்டம் பெற்‌றுள்ளேன். 

கேள்வி: மாத்தளை மாகர சபை வரலாற்றில் முதலாவது தமிழ் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளீர்கள். அதன் வரலாற்றை சொல்லுங்கள்?

பதில்: மாத்தளை மாநகர சபை வரலாற்றிலே எனக்கு முன்பு சிங்கள, முஸ்லிம் அன்பர்களே மேயராக இருந்துள்ளனர். 

மாத்தளை 1947இல் உள்ளூராட்சி மன்றமாக பரிணமித்தபோதிலும் 1970களில் மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டது. 1970க்கு முன்பு நகர சபையாகவிருந்தபோது இருபெரும் தமிழ்த்தலைவர்கள் தம்பிராசா ஜயா,  எதிர்மன்னசிங்கம் ஜயா  ஆகியோர் தவிசாளர்களாக இருந்துள்ளனர்.

கேள்வி: இலங்கையில் கொரோனாச் சேவைகளை சிறப்பாக, மாத்தளை மாநகர சபை முன்னெடுத்து வருவதாக அறியக்கிடைத்தது. அதுபற்றிக்கூறுங்கள்?

பதில்: எமது சபையால் கொரோனாவுக்கென பல வேலைத்திட்டங்களை செய்துவருகிறோம். கூடுதலான நிதியை கொரோனாச் சேவைக்கு ஒதுக்கி பயன்படுத்தி வருகிறோம். உறுப்பினர்களும் ஏகோபித்த முறையில் தமது பூரண ஆதரவை நல்கிவருவதும் இவ்வெற்றிக்கு காரணமாகும்.

 மாத்தளை மாநகர எல்லைக்குள் கொவிட் 19 தொற்றுக்குள்ளான தொற்றாளர்களை அவசர நிலைமைகளின் போது சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்வதற்கு வாகன வசதியின்மையால் அசௌகரியத்துக்கு உள்ளாகிவந்தனர்.

இதற்கு தீர்வுகாணுமுகமாக எமது சபையினால் இவ் இலவச வாகனசேவையை ஏற்படுத்தியுள்ளோம். இதற்கென ஆளணியினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 இவர்களுக்காக உதவி கரம் நீட்டுவதற்காக 24 மணித்தியால இலவச வாகன சேவையை வழங்குவதற்கு கடந்த 24ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு (Hotline) 0710227227 க்கு தொடர்பு கொள்ளலாம்.

பொசிட்டிவ் என இனங்காணப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு  கொண்டுசெல்வது மட்டுமல்ல அவரோடிருந்த ஏனைய குடும்ப உறுப்பினர்களுகளை தனிமைப்படுத்தி, அவர்களுக்குத் தேவையான மருந்துகளை எமது சபையிலுள்ள மற்றொரு குழுவினர் வழங்குவார்கள்.

கேள்வி: ஏனைய இடங்களில் சுகாதாரத்திணைக்களம் முன்னெடுத்திருக்கின்ற   தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நீங்கள் முன்னெடுத்திருப்பதாக அறிகிறோம். அது எவ்வாறு சாத்தியமாயிற்று?

பதில்: மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தையும் பலரும் மெச்சத்தக்க வகையில் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம். அதற்கு எமது வைத்தியஅதிகாரி டொக்டர் அனுசா வெலகெதர உள்ளிட்ட சுகாதாரக்குழுவினர் பரிபூரணமாக ஒத்துழைத்து வருகின்றனர். மாநகர சபையில் 45 ஆயிரமளவில் வாக்காளர்கள். மக்கள் சனத்தொகை 90 ஆயிரம்பேரளவில் வாழ்ந்துவருகின்றனர்.

கேள்வி: கொரோனாவால் மரணித்தவர்களின் உடலங்களை தாங்களே பொறுப்பெடுத்து தகனக்கிரியைகளை இலவசமாக செய்வதாக கூறப்படுகின்றதே? 

பதில்: சபையில் ஒரு பிரேரணையை கொண்டுவந்து கொரோனாவால் இறக்கின்றவர்களின் உடலங்களை நாமே பொறுப்பெடுத்து இலவசமாக  தகனக்கிரியை செய்துவருகின்றோம். இதுவரை சுமார் 150 பேர் அளவில் உடலங்கள் தகனக்கிரியையை செய்துள்ளோம். ஒருவர் கொரோனாவால் மரணித்தால் அவருக்காக சுமார் 10 ஆயிரம் ரூபாய் முதல்  15 ஆயிரம் ரூபாய் வரை எமது சபைக்கு செலவாகின்றது.  இருந்தும் மக்களுக்கான உயரிய அந்திமகால சேவையாக இதனைக்கருதுகிறோம்.

 உண்மையில் இது எமது மாநகர சபை எல்லைக்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமே என்று ஆரம்பிக்கப்பட்டது. எனினும் எமது எல்லைக்குள் உள்ள மாத்தளை ஆதார வைத்தியசாலையில் கொரோனாவால் மரணிக்கும் அனைவரது உடலங்களையும் அவர் எந்த ஊராக, எந்த இனத்தவராக  இருந்தாலும் நாமே முன்னின்று பொறுப்பேற்று அதனை முறைப்படி தகனம்செய்து  வருகின்றோம்.

கேள்வி: கிழக்கிற்கு முதல்தடவை வந்துள்ளீர்கள். அதுவும் காட்டுக்குள் உள்ள உகந்தமலை முருகளைத் தரிசிக்க வந்த காரணம் என்ன?

பதில்: இது எனது நீண்டநாள் ஆசை. இவ்வாலயத்தைப்பற்றி ஊடகங்கள் வாயிலாக உங்கள் எழுத்துகளில் பலதடவைகள் வாசித்திருக்கிறேன். வரலாற்று பிரசித்திபெற்ற உகந்தைமலை முருகனாயலத்திற்கு வரவேண்டும். அருளாசிபெறவேண்டும் என்ற ஆசை இருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .