Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். எஸ். எம் ஐயூப்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், எரிபொருள் விநியோக நிலையங்கள் அருகே காணப்பட்ட நீண்ட வரிசைகள், இப்போது காணக்கூடியதாக இல்லை. இப்போது, சில இடங்களில் வரிசைகள் காணப்பட்ட போதிலும், அப்போது போல், அவை நாள்கணக்கில் நீடிப்பதில்லை.
சமயல் எரிவாயுவை வாங்குவதற்கும் இப்போது வரிசையில் நிற்கத் தேவையில்லை. தேவையான நேரத்தில், எரிவாயு கடைகளுக்குச் சென்று வாங்க முடியும்.
ஆனால், இவற்றால் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிட்டதாக ஆறுதல் அடைய முடியாது. இவை தற்காலிக நிலைமைகளாகும். வெளிநாடுகளில் இருந்து, இலங்கை பெற்ற கடனுக்காக வருடமொன்றுக்கு வட்டி உட்பட சுமார் 6 பில்லியன் டொலர் (216,000 கோடி ரூபாய்) திருப்பிச் செலுத்த வேண்டும்.
வெளிநாட்டு செலாவணி இல்லாமையால், இந்தக் கடன்களை இப்போதைக்கு திருப்பிச் செலுத்த முடியாது என்று, மத்திய வங்கி கடந்த மே மாதம் அறிவித்துவிட்டது. ஒரு நாடு இவ்வாறு அறிவித்தால், அந்நாடு வங்குரோத்து அடைந்ததாகவே கருதப்படும் என்று பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தாமையால், திறைசேரியிடம் அந்தளவு இல்லாவிட்டாலும் ஓரளவு வெளிநாடுப் பணம் மீதமாகிறது. அதனால், தற்போது இறக்குமதிகளுக்குத் தேவையான வெளிநாட்டுப் பணம் கிடைத்துக் கொண்டு இருப்பதாக, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் கூறினார். அதுவும் வரிசைகள் குறைவதற்குக் காரணமாகும். இது தீர்வல்ல; நாளை, இப்போது செலுத்த வேண்டிய தவணையையும் சேர்த்து, அரசாங்கம் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும்.
வரிசையில் நிற்பது குறைந்தாலும், விலைவாசி உயர்வதைத் தடுக்க அரசாங்கத்தால் முடியாமல் இருக்கிறது. மின்கட்டணமும் நீர் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாணின் விலை 300 ரூபாயாகலாம் என, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
கடந்த பெரும் போகத்தைப் போலவே, இம்முறை சிறு போகமும் உரத்தட்டுப்பாட்டால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்துண்டிப்பு நேரமும் நீடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இப்போது அரசாங்கத்துக்கு, இந்தப் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ஒரேயொரு வழி தான் இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்று, வெளிநாட்டு கடன்களை மறுசீரமைத்துக் கொள்வதே அந்த வழியாகும். கடன் மறுசீரமைப்பின் மூலம், கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக் காலத்தை ஒத்திப் போட்டுக் கொள்வதும், வட்டியில் ஒரு பகுதியை இரத்துச் செய்வதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதையடுத்து, சர்வதேச நாணய நிதியத்திடம் ஒரு கடனைப் பெற்று, அதைப் பாவித்து, அந்நிதியத்தின் ஆலோசனைப்படி, இலங்கை அரசாங்கம் தமது கையிருப்பைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அந்தப் பணத்தைக் கொண்டு, வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையை ஓரளவுக்கு சமாளித்துக் கொண்டு, விவசாயத்துக்கும் கைத்தொழிலுக்கும் உல்லாசப் பிரயாணத்துறைக்கும் தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அதன்மூலம், வெளிநாட்டு செலாவணி கையிருப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் தற்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி அரசாங்கம், கடந்த ஏப்ரல் மாதம் முதல், நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. ஏப்ரல் மாதம் அரச அதிகாரிகளும் நாணய நிதியத்தின் அதிகாரிகளும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மே மாதம், இணையவழி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இம்மாதமும் நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இவை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளாகும். அவற்றின்படி, நிதியத்தின் நிறைவேற்றுச் சபையினர், இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பாக முடிவு செய்வர்.
நிதியத்தின் அதிகாரிகளுடனான பூர்வாங்க இணக்கப்பாட்டின் பின்னர், நிதியத்திடம் கடன் தொகையைப் பெற முடியும். ஆயினும், கடனை மீளச்செலுத்தும் திறன், தற்போது இலங்கையிடம் இல்லாமையால், இந்த வசதியை செய்து கொடுப்பதற்கு முன்னர், இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளிடம், தொடர்ந்து கடன் வழங்குவது தொடர்பான உத்தரவாதத்தைப் பெற வேண்டும் என்று நாணய நிதியம் கூறுகிறது.
இந்த விடயத்தில்தான், இலங்கை தற்போது சிக்கிக் கொண்டு இருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் பிரச்சினையில் தலையிட்டு இருப்பதால், அனேகமாக கடன் வழங்கிய நாடுகள், இந்த உத்தரவாதத்தை வழங்கலாம். ஆயினும், இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைக்க, சீனா தயாரில்லை. தம்மிடம் கடன் பெற்ற ஒரு நாட்டுக்கு, அவ்வாறு சலுகை வழங்கினால், தம்மிடம் கடன் பெற்ற ஏனைய நாடுகளுக்கும் அதே சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும் என்பதாலேயே, சீனா அந்த நிலைப்பாட்டில் இருக்கிறது. அதற்குப் பதிலாக சீனா, தம்மிடம் பெற்ற கடனை அடைப்பதற்காக, மற்றொரு கடனை வழங்குகிறது.
ஆயினும், ஒரு நாட்டுக்கு இந்தச் சலுகையை வழங்கியமைக்காக, சீனா மற்றொரு நாட்டுக்கும் அதனை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு நாடு, இலங்கையின் தற்போதைய நிலைமையைப் போல், பொருளாதார ரீதியாக தலையைத் தூக்க முடியாத மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டால் மட்டுமே, கடன் மறுசீரமைப்புச் செய்யும் நிலை ஏற்படுகிறது.
அண்மையில் ஈக்குவடோர் உள்ளிட்ட ஓரிரு நாடுகள், சர்வதேச நாணய நிதியத்தின் மூலமாக, ஏனைய நாடுகளின் கடன்களை மறுசீரமைத்துக் கொண்டன. அதற்காக, ஈக்குவடோருக்கு கடன் வழங்கிய நாடுகள், தாம் கடன் வழங்கிய அத்தனை நாடுகளினதும் கடன்களை மறுசீரமைக்கவில்லை.
இலங்கை விடயத்தில், சீனாவின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாவிட்டால், இலங்கை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும். இலங்கைக்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகளும், இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைக்க முன்வரா!
அந்த நாடுகள், தொடர்ந்து கடன் வழங்கவும் முன்வரமாட்டா. அந்நாடுகள் தொடர்ந்து கடன் வழங்கத் தயாராக இருந்தால் மட்டுமே, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, இலங்கைக்கு அவசர கடன் வழங்குவதை அனுமதிக்கும் என அண்மையில் அந்நிதியம் அறிவித்தது. இது இலங்கையைப் பொறுத்தவரை மிகப் பயங்கரமான நிலைமையாகும்.
இதேவேளை, கடன் மறுசீரமைப்புக்குப் பதிலாக, சீனாவிடம் கடன் பெற்று, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களையும் சீனா கேட்கிறது என்றும் ஒரு செய்தி அண்மையில் வெளியாகி இருந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், கொழும்பில் தாமரைக் கோபுரம் போன்ற திட்டங்களுக்கு சீனாவே கடன் வழங்கியது. அந்தத் திட்டங்கள், இதுவரை தோல்வியடைந்த திட்டங்களாகவே இருக்கின்றன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எதிர்ப்பார்க்கப்பட்டதைப் போல் கப்பல்கள் வருவதில்லை. மத்தள விமான நிலையத்தில், விமானமொன்று தரையிறங்கினால் அது ஊடகங்களில் செய்தியாகிறது. தாமரைக் கோபுரம் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. இவற்றுக்காக கடன் பெற்றே, இலங்கை இந்தளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு சீனாவைக் குறைகூற முடியாது. இவற்றின் வெற்றி தோல்வியையும் அவற்றை பயனுள்ள முறையில் பாவிப்பது எவ்வாறு என்பதையும், இலங்கையின் தலைவர்களே முதலில் மதிப்பிட்டு இருக்க வேண்டும். எனினும், இலங்கைத் தலைவர்கள் அவற்றின் மூலம், தாம் தனிப்பட்ட முறையில் பெறும் பயன்களையே முதன்மையாக கருத்தில் கொண்டனர். நாடு, கடன் பொறியில் சிக்குவதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
ஜப்பானும் இந்தியாவும் இந்த விடயத்தில், இலங்கைக்கு உதவி வழங்க தயாராக இருக்கின்றன. இலங்கையின் வேண்டுகோளின் பேரில், இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளின் மாநாட்டைக் கூட்டி, இலங்கைக்கு சாதகமான முடிவொன்றை எடுக்க ஜப்பான் தயாராக இருக்கிறது. இந்தியா ஆரம்பத்திலிருந்தே, இலங்கை தொடர்பான நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தது.
சீனாவின் நிலைப்பாடு எதுவாயினும், சர்வதேச நாணய நிதியம், இலங்கையை கைவிட்டுவிடும் என்று எந்தவொரு பொருளியல் நிபுணரும் கூறுவதில்லை. சீனாவின் நிலைப்பாடு காரணமாக, சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவிகளைப் பெற, இலங்கைக்கு மேலும் ஆறு மாதங்களாவது செல்லும் என்று, கடந்த வாரம் நடைபெற்ற பொருளியல் நிபுணர்களின் கூட்டமொன்றின் போது, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்ட சிலர், கருத்துத் தெரிவித்தனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார பொருளியல்த்துறை திணைக்களமே அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago