2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

இலங்கையில் அரசியல் உறுதிப்பாடின்மை இந்தியாவுக்கு எவ்வாறு அச்சுறுத்தலாக அமைகிறது?

Johnsan Bastiampillai   / 2022 மே 23 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தைரியா மஹேஸ்வரி

(ஸ்புட்னிக் இன்ரர்நாஷனல்)

இலங்கையில் முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருட்கள்,உணவு வகைகள், மருந்துப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பாவனைப்பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், கொழும்பு விடுத்த வேண்டுகோளை அடுத்து புதுடெல்லி தாராளமாக உதவிகளை வழங்கியிருக்கிறது. 350 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவிகளை இந்தியா செய்திருக்கிறது. வேறு எந்த நாடும் வழங்கியிருக்கக்கூடிய உதவியையும் விட இது அதிகமாகும்.

  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் இலங்கையின் பிரதமராக பதவியேற்றபோது அதை முதலில் வரவேற்ற நாடு இந்தியாவேயாகும்.

‘இலங்கையில் அரசியல் உறுதிப்பாடு நிலைநாட்டப்படும் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் நம்புகிறது. பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக்கொண்டதையடுத்து அமைக்கப்படவிருக்கும் அரசாங்கத்துடன் பணியாற்ற ஸ்தானிகரகம் எதிர்பார்த்திருக்கிறது’ என்று 12ஆம் திகதி வியாழக்கிழமை இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மறுநாள் வெள்ளிக்கிழமை பிரதமர் விக்கிரமசிங்க இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துப் பேசினார். ‘இலங்கை மக்கள் சகலரினதும் நல்வாழ்வை நோக்கிய ஜனநாயக செயன்முறைகள் ஊடாக இலங்கையில் பொருளாதார மீட்சிக்கும் உறுதிப்பாட்டுக்குமான தொடர்ச்சியான ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேசினார்கள்’ என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் ‘ருவிட்டர்’ தளத்தில் பதிவிட்டிருந்தது.

கொழும்பை பொறுத்தவரை இந்தியா இன்றியமையாதது என்பதை இலங்கையில் மூண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி கவனத்துக்கு கொண்டுவந்திருக்கிறது என்று 1980களின் பிற்பகுதியில் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையின் புலனாய்வு பிரிவுக்கு தலைமைதாங்கிய ஒய்வுபெற்ற கேணல் ரமணி ஹரிஹரன் கூறுகிறார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின்  பதவி விலகல்  இந்தியாவில் ‘வரவேற்கப்பட்டிரு க்கக்கூடும்’ என்கிற அதேவேளை,இலங்கையின் அண்மைய கொந்தளிப்பின் ஒட்டுமொத்த விளைவுகளும் மதிப்பீடு செய்யப்படும்வரை புதுடெல்லி பொறுத்திருப்பதே விவேகமானது என்றும் கேணல் ஹரிஹரன் கூறினார்.

ஜனாதிபதியாக முன்னர் இரு தடவைகளும் பின்னர் பிரதமராகவும் பதவி வகித்த மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழ் பெய்ஜிங்குடனான கொழும்பின் பொருளாதார நெருக்கம் குறித்து இந்தியா விசனம் வெளியிட்டிருந்தது. டெல்லியின் கடுமையான அதிருப்திக்கு மத்தியிலும் மஹிந்தவின் கீழ் கொழும்பும் பெய்ஜிங்கும் பொருளாதார மற்றும் பாதுகாப்புத்துறை உறவுகளைத் தீவிரப்படுத்தியிருந்தன என்று ஹரிகரன் குறிப்பிட்டார். இது தொடர்பாக ஹரிகரன் ஸ்புட்னிக் இன்ரர்நாஷனலுக்கு தெரிவித்த கருத்துகள் கேள்வி-பதில் வடிவில் தரப்படுகின்றன:

ஸ்புட்னிக்: இந்தியாவைப் பொறுத்தவரை, அரசியல் ரீதியில் உறுதிப்பாடில்லாத ஓர்  இலங்கையால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் எவை?

ஹரிஹரன்:  உறுதிப்பாடில்லாத இலங்கை இந்தியாவுக்கு ஒரு பெரிய தலையிடி என்பது தெளிவானது.இலங்கையில் பெரிய நெருக்கடி ஏற்படுகின்ற வேளைகளில் அங்கிருந்து அகதிகள் வந்து இறங்குகின்ற அளவுக்கு இலங்கைக்கு நெருக்கமாக இந்தியா அமைந்திருக்கிறது. 1983  ஆம் ஆண்டில் ஏற்கெனவே இவ்வாறு நடந்தது. அப்போது அந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளையடுத்து சில இலட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவுக்கு வந்தார்கள்.

பிறகு 1990 க்கும் 1995 க்கும் இடைப்பட்ட காலத்திலும் 2002 வரையிலும் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்த போது இலங்கையில் இருந்து அகதிகள் படையெடுத்தார்கள். அடுத்து உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களிலும் (2008 - 2009) அகதிகள் வந்தார்கள்.
 தற்போதைய பொருளாதார நெருக்கடியின்போதும்கூட சில அகதிகள் இந்திய கரையோரத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால், முன்னரைப் போன்று பெருந்தொகையில் அகதிகள் வரவில்லை.

நிலைகுலைந்த இலங்கையொன்றை இந்தியா விரும்பவில்லை என்பதால் மிகவும் பெரிய அளவில் இந்தியா உதவிக்கொண்டிருக்கிறது. உறுதிப்பாடற்ற ஓர் ஆப்கானிஸ்தானை இந்தியா விரும்பவில்லை. அது ஏற்கெனவே நடந்துவிட்டது. பாகிஸ்தானும் அரசியல் உறுதிப்பாடின்மையின் விளிம்பில் இருக்கிறது. அடுத்து இந்தியாவின் கிழக்கு எல்லையில் உள்ள மியான்மாரிலும் அரசியல் நெருக்கடி நிலவுகிறது. இவையெல்லாம் இந்தியாவின் கவனத்தை திருப்புகின்றன.

ஸ்புட்னிக்: இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களில் பாரிய முதலீடுகளைச் செய்திருக்கும் சீனாவைப் பொறுத்தவரை, இப்போது இருக்கக்கூடிய தெரிவுகள் எவை?

ஹரிஹரன்: சீனா அதன் மண்டலமும் பாதையும் செயற்றிட்டத்தின் (Belt and Road Initiative) கீழ், இலங்கையில் பாரிய அளவில் முதலீடுகளைச் செய்திருக்கிறது.சீன முதலீடுகளின் வெற்றி பற்றிய மதிப்பீடுகள் வெற்றியளிக்க முடியவில்லை. அதேவேளை பொருளாதார நெருக்கடியை தணிக்குமுகமாக பொருளாதார உதவிகளைச் செய்யுமாறு இலங்கையால் கேட்கப்பட்டபோது சீனாவால் உதவவும் முடியவில்லை.

இந்தியாவுக்கு ஒரு முக்கிய பிரச்சினை இருக்கிறது.அதாவது புதுடெல்லியின் வெளிநோக்கியதும் உள்நோக்கியதுமான வாணிபத்தைப் பொறுத்தவரை கொழும்பு துறைமுகம் முக்கியமானது.இந்தியாவில் இருந்து போகின்றதும் இந்தியா நோக்கி வருகின்றதுமான கப்பல்களில் 70சதவீதமானவை கொழும்பில் தரிக்கின்றன. கொழும்பு துறைமுகத்தின் இரு கொள்கலன் முனையங்கள் சீனாவால்  முகாமை செய்யப்படுகின்றன. அதனால் இந்தியாவின் மூலோபாய நலன்கள் மேலாக சீனர்கள் நேரடிக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இலங்கையின் இன்னொரு முக்கியமான துறைமுகமான திருகோணமலையில் புதுடெல்லி அதன் பிரசன்னத்தை அதிகரிக்க நோக்கம் கொண்டிருக்கும் நிலையில் இந்தியா பற்றிய சீனர்களின் விசனம் அதிகரிக்கவே செய்யும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பூகோளரீதியான நெருக்கமே சீனாவை விடவும் இந்தியாவுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரதான அனுகூலமாகும். இந்து சமுத்திரத்தை அடைவதற்கு சீனர்கள்  2,000 கிலோ மீட்டரை கடந்துவரவேண்டும்.

அதனால், சீனர்கள் தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலும் பாகிஸ்தானின் குவாடார் துறைமுகத்திலும் தங்களது பிரசன்னத்தை அதிகரித்திருக்கிறார்கள்.இவை இப்போது இராணுவத்தளங்களாக இல்லை. ஆனால் முரண்நிலையொன்று ஏற்படும் பட்சத்தில், அந்தத் துறைமுகங்கள் இராணுவத்தளங்களாக மாறக்கூடிய ஆபத்தை நிராகரிக்கமுடியாது.இப்போது இந்தியா, இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கும்.

ஸ்புட்னிக்: எனவே, இலங்கையில் அரசியல் உறுதிப்பாடின்மை இந்தியாவுக்கு கவலை தருகிறது. ஏனென்றால் அகதிகள் வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. அத்துடன் இலங்கையில் அரசியல் ரீதியில் குழப்பகரமான சூழ்நிலைக்கு மத்தியில் பெய்ஜிங் அதன் இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்கக்கூடிய சாத்தியமும் இந்தியாவுக்கு அதிருப்தியை தரக்கூடிய ஒன்றல்லவா?

ஹரிஹரன்: மூன்றவது பரிமாணம் ஒன்றும் இருக்கிறது. அது உள்நாட்டு நிலைவரம். கொழும்பு, காலிமுகத்திடலில் அமைதிவழி போராட்டக்காரர்கள் மீது பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் மே 9 தாக்குதலை நடத்தியபோது தொழிற்சங்கங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது.

பெரும்பாலும் நகர்ப்புற தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முன்னரங்க சோசலிச கட்சி போராட்டக்காரர்களுக்கான பொதுமக்களின் ஆதரவை முன்னெடுக்கிறது.

என்னைப் பொறுத்தவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகளும் சொத்துகளுக்கு தீவைத்தலும் இந்தக் கட்சியின் ஆதரவாளர்களாலேயே முன்னெடுக்கப்படுவதாக நம்புகிறேன்.அமைதிவழி போராட்டக்காரர்கள்  இந்த வன்முறைகளைச் செய்யவில்லை. வன்முறைகளுக்கு எதிரான பிரதிபலிப்பு மிகவும் திட்டமிட்ட ரீதியிலும் துரிதமானதாகவும் இருந்தது.இந்த அச்சுறுத்தல் இலங்கை பாதுகாப்புத் துறையின் தோல்வியை காட்டுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X