2025 மார்ச் 31, திங்கட்கிழமை

இலக்குகள் வாக்குறுதியாகி காணாமல் போதல்

R.Tharaniya   / 2025 மார்ச் 17 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே தற்போதுள்ள ஆட்சியாளர்களை ஆட்சி பீடத்துக்கு ஏற்றியதாகவும் ஆனால், அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்தாமலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் அரசு நகர்ந்து வருவதாகக் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆதங்கம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 
அதே நேரத்தில், அரசாங்கத்திற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத குழுக்கள் இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்தச்  செய்தி, பொது மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காக செய்யப்படும் ஒரு சித்திரிக்கப்பட்ட நடவடிக்கையாகவே தோன்றுகிறது. விசாரணை செய்ய வேண்டுமாக இருந்தால், அரசாங்கம் நேரடியாக விசாரணை செய்ய வேண்டும். அதனை விடுத்து, தவறான செய்தியை சித்திரித்து ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தக் கூடாது என்றிருக்கிறார்.

இவர்கள் இருவரும் பிரதானப்படுத்தியிருப்பது அல்லது இந்த இரண்டு விடயங்களும் இணைக்கப்பட்டிருப்பது ஒரே விடயமில்லையென்றாலும் ஒரு இணைப்பைக் கொண்டதாகும்.அதாவது2019உயிர்த்தஞாயிறுதாக்குதலில்தொடங்கிவைக்கப்பட்டது. அவர்களுடைய கருத்துக்கள் சரியா இல்லையா என்பது குறித்து நாம் ஆராயத் தேவையில்லை.

இருந்தாலும், சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர்களான பிரதீப் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நொயர் தாக்கப்பட்டமை என நீழும் பட்டியல் குறித்து பேராயர் கருத்து வெளியிட்டிருக்கிறார். வடக்கு கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான நிமலராஜன், ஜீ.நடேசன், டி.சிவராம் உள்ளிட்ட 40ஐத் தாண்டிய பெரும் பட்டியலும் இருக்கிறது. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் போன்றவற்றிற்கு நீதியைக் கோருவது முக்கியமானது. அதற்குள் ஓரவஞ்சனையான முனைப்புகள் தவிர்க்கப்படுவது நல்லதாக இருக்கும்.

இவ்வருடத்தின் ஏப்ரல் 21 உடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஆண்டு நிறைவடைகிறது. இன்னமும் இத் தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படவோ, தண்டனைக்கு உட்படுத்தப்படவோ இல்லை. அந்தவகையில் கர்தினாலுடைய ஆதங்களம் உயிர்த்த ஞாயிறு  தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதற்கானதே ஆகும். இது ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் ஒரு வாக்குறுதியை இணைப்பாகக் கொண்டது. இது தவிர இன்னும் பல இருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் இலங்கையின் கிழக்கு உள்ளிட்ட பல இடங்களிலும் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தாலும், 2019 ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரே அது பலமான வெளிப்படுத்தலுடன் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் பல இஸ்லாமிய அமைப்புகள் தடை செய்யப்பட்டன. அந்த அமைப்புகளுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இருந்தாலும் 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் யாருடைய அறிவுறுத்தலில் நடத்தப்பட்டது. என்பதும் அதன் ஊடாக யாரையெல்லாம் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இலக்குக்கு உட்படுத்துகிறார்கள் என்பதும் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே.

1978இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு ஒரு நபர் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருப்பதற்கான சட்டமாக இருந்துவருகிறது. இதற்கு அரசியல் தலைவர்களே காரணமாகும். இந்த அரசியல் தலைவர்களின் பட்டியலை இல்லாமல் ஆக்குவதற்காக இந்த அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கொண்டால், நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை எடுத்த எடுப்பிலேயே மாற்றியமைத்துவிட முடியுமா என்பது கேள்விக்குறியே. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, இப்போது 

தொடர்கின்ற நெருக்கடிகளுக்குத் தீர்வு அரசியல்வாதிகளை மாற்றிவிடுவதால் ஏற்பட்டுவிடுமா என்பதும் கேள்விதான்.இந்த நிலையில்தான் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வெளிக்கிளப்பப்படுகின்ற தீவிரவாதம் தொடர்பான கருத்துக்கள் நாட்டில் சட்டம் ஒழுங்கை எவ்வாறு சீர்குலைக்கிறது. மக்கள் மத்தியில் எழுகின்ற குழப்பகரமான மனோநிலைகள் காரணமாக உருவாகுகின்ற தேவையற்ற குழப்பங்கள் பற்றிச் சிந்திக்கவேண்டியிருக்கிறது.

கடந்த பல தசாப்தங்களாக இருந்து வந்து கொண்டிருந்த பல்வேறு குழப்பங்களுக்கு மேலதிகமாகவே இப்போது  கொலைகளின் அதிகரிப்பு, வன்முறைச் சம்பவங்கள் இணைந்து கொண்டிருக்கிறது.தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த 2009ஆம் ஆண்டு வரை நாட்டுக்குள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களோ, கொலைகளோ, குண்டுத் தாக்குதல்களோ நடைபெறுகின்ற வேளைகளில் இனந்தெரியாதோர் என்ற ஒன்றுடன் சம்பவத்தினை இணைத்து விடுவது வழக்கம். அவ்வேளைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அந்த விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதும் வழக்கமாகும். இப்போதும் அவ்வாறானவர்கள் பலர் அரசியல் கைதிகளாக சிறைகளில் அடைந்து கிடக்கின்றனர் என்பதும் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து தொடர்ச்சியாகத் தமிழ் அரசியல்வாதிகள் அரசுக்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் இதன் மறுபக்கமாகும்.

ஆனால், அதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019இல் நடைபெற்ற வேளை நேரடியாக இஸ்லாமிய அமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டன. ஆனால், ஆறு வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை எனபதே இந்த இடத்தில் பிரச்சினைக்குரியது.  அதே நேரத்தில், இவ்வருடத்தில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் அடுத்த ஆண்டு நினைவுக்கான வேளை நெருங்குகையில் மீண்டும் ஒரு குழப்பகரமான சூழலை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்புத் தரப்பினர் முனைவது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஒருபக்கம் கர்தினால் அரசாங்கத்தை நெருக்குதலுக்குட்படுத்த ஆரம்பிக்கிறார். பாதுகாப்புத் தரப்பினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக் 
குழுக்கள் காணப்படுகின்றன

என்ற தகவலை வெளியிடுகின்றனர். இதில் பாதுகாப்புத் தரப்பினரின் இயலாமை வெளிபடுவதாகவும் கொள்ள முடியும்.முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் கிழக்கில் தீவிரவாதக் குழுக்கள் என்ற எண்ணக்கருவை உருவாக்கி இருப்பது கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நாட்டுக்குள் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மறைப்பதற்கில்லை.

இது நாட்டுக்குள் நல்லிணக்கம் ஏற்படுவதைச் சீர்குலைக்கும் என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் அரசாங்கம் பார்த்தும் பாராதவாறான நடைமுறையைக் கையாள்வது அதனை ஏற்றுக் கொண்டதாகவே இருக்கும் என்பது இந்த இடத்தில் நினைவுபடுத்தப்பட வேண்டும். அமைதியாக மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்களைப் பொதுவெளியில் ஊடகங்களுக்கூடாக வெளிப்படுத்த முனைவதானது தவறான புரிதலை ஏற்படுத்தும் தேவையற்ற விபரீதங்களைக் கொண்டுவரும் என்பதற்கு இது நல்லதொரு உதாரணமாகும்.

நாட்டில் உள்ள சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது, விசாரணைகளை மேற்கொள்வது சரியான ஆதாரங்கள் இருக்கின்ற போது, தண்டனைக்குட்படுத்துவதே சிறந்த முறையாக இருக்கும். அல்லாது போனால் வீணான விபரீதங்கள் தோன்றிவிடும் என்பது பாதுகாப்புத் தரப்பினருக்குத் தெரிந்திருத்தலே நல்லதாகும்.இந்த இடத்தில் தான், அரசாங்கம் தேசியப் பாதுகாப்பில் சட்டம் ஒழுங்கை தவறவிட்டுள்ளது என்பதும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான வேலைப்பாடுகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதும் வெளிப்படுகிறது. இது தேசியப் பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்கு உறுதியளிக்க வேண்டிய தேவைப்பாட்டை உருவாக்குகிறது என்றே சொல்லாம். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்  என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லையென்றாலும் பொது மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவது தவறென்பதே முக்கியம்.மொத்தத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு பொதுஜன பெரமுன ஆட்சியைக் கைப்பற்றியதும் அதனை முதன்மையாகக் கொண்டு மக்கள் விடுதலை முன்னணியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியதும் நடந்திருக்கிறது. 
என்றாலும், இன்னமும் முடிவுக்குவரா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் முடியும் வரையில் இன்னும் பல விபரீதங்களும் நடைபெறத்தான் செய்யும்.
இலக்குகளும் வாக்குறுதிகளும் திசைதிருப்பல்களும் இதய சுத்தியுடனானதாக இல்லாமல் போனால் அவை வீணே என்பது மாத்திரமே நிச்சயம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X