Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Mayu / 2024 ஜனவரி 04 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஐயூப்
இன்றிலிருந்து ஐந்து நாட்களில் வரும் புத்தாண்டு, “2024 தேர்தல் ஆண்டு” என பலர் கூறுகின்றனர். சட்டப்படிப் பார்த்தால் 2024இல் ஜனாதிபதித் தேர்தல் தான் நிச்சயமாகவே வர இருக்கிறது. உயர் நீதிமன்றம் கட்டளையிட்டால் பணம் இல்லை என்ற அடிப்படையற்ற காரணத்தை முன்வைத்து காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல்களும் வரும் புத்தாண்டில் நடைபெற வேண்டும்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஐக்கிய தேசிய கட்சித் தலைமை 2017இல் சட்டச் சிக்கலொன்றை உருவாக்கித் தடுத்து வைத்துள்ளது. அக்கட்சித் தலைமைக்கு ஜனநாயகத்தைப் பற்றிய அக்கறை இருந்தால் அத்தேர்தல்களும் எதிர்வரும் ஆண்டில் நடைபெற வேண்டும். ஆயினும் ஐ.தே.கவும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் தேர்தல் என்றால் அஞ்சி நடுங்கும் நிலையில், உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களோ மாகாண சபைத் தேர்தல்களோ அடுத்த வருடம் நடைபெறுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
ஜனாதிபதியின் நெருங்கிய சகாவும் ஐ.தே.கவின் ஒரே பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் சில கூற்றுக்களை ஆராயும்போது, சட்டப்படி நடைபெறவேண்டிய ஜனாதிபதித் தேர்தலும் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுகிறது. அவரது அக்கூற்றுக்கள் ஜனாதிபதியின் தேவைக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்று பலர் கூறுகின்றனர்.
பொருளாதாரத்தை எவ்வாறு தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து மீட்டெடுப்பது என்று ஜனாதிபதி ரணிலின் போட்டியாளர்களுக்குச் சிந்தித்தும் பார்க்க முடியாத நிலையில், அவரையே மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்வதே நாட்டுக்கு நன்மையளிக்கும் என்று வஜிர கூறியிருந்தார்.
இதனையடுத்து, தென்பகுதியில் கடந்த நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மேலும், 12 வருடங்களுக்கு ரணிலையே ஜனாதிபதியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். பாராளுமன்றத் தேர்தலை ஆறு ஆண்டுகளுக்கு ஒத்திப் போடுவதற்காக ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன 1982இல் நடத்திய சர்வஜன வாக்கெடுப்பை அவர் அந்தக் கூட்டத்தில் உதாரணமாக எடுத்துக் காட்டினார்.
தேசிய ரீதியில் உடன்பாடொன்றை ஏற்படுத்திக்கொண்டு ரணிலை மட்டும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் அதற்காக ஏனைய கட்சிகளின் வேட்பாளர்கள் தத்தமது வேட்பு மனுக்களைச் சமர்ப்பிக்காதிருக்க வேண்டும் என்றும் வஜிர கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி ஊடகவியலாளர்களிடம் கூறினார். அதன் மூலம் தேர்தலுக்கு செலவாகும் 1,300 கோடி ரூபாவை மின் கடனத்தைக் குறைப்பதற்காகவும் மக்களுக்கு வேறு சலுகைகளை வழங்குவதற்காகவும் உபயோகிக்க முடியும் என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.
ரணிலைப் போட்டியின்றி தெரிவு செய்யவேண்டும், ரணில் மேலும் 12 ஆண்டுகள் நாட்டை ஆளும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும், ஏனைய வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைச் சமர்ப்பிக்காதிருக்க வேண்டும் போன்ற ஆலோசனைகள் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ள ஐ.தே.க விரும்புவதையே காட்டுகிறது. தோல்வி காண்போம் என்ற அச்சமே இதற்கு காரணம். என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இது பெரும்பாலும் அவரது கருத்து அல்ல. இது அவரது தலைவர் நாட்டு மக்களின் நிலைப்பாட்டை அளந்தறிய அவரைப் பாவித்து இக்கருத்துக்களை விதைக்கிறார் என்றும் ஊகிக்கலாம்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் 100 இலட்சம் (ஒரு கோடி) வாக்குகளைப் பெறுவார் என்று வஜிர கூறியிருந்தார். ஜனாதிபதியின் கொள்கைகள் காரணமாக அடுத்த ஏப்ரல் மாதமாகும்போது நாடு அடையும் நிலையை ஊகித்துப் பார்த்தே நான் அவ்வாறு கூறுகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார். ஜனாதிபதி ரணிலுக்கு மேலும் 12 ஆண்டுகளுக்கு இந்நாட்டை நிர்வகிக்க இடமளித்தால் நாடு உலகில் பலமான நாடாக மாறும் என்றும் அவர் மீண்டும் கூறினார்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் அதாவது கடந்த பொதுத் தேர்தலின்போது, ஐ.தே.க முழு நாட்டிலிருந்தும் மூன்று இலட்சத்துக்கும் குறைந்த வாக்குகளையே பெற்றது. அவ்வாறான கட்சி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வஜிர கூறுவதைப் போல், ஒரு கோடி வாக்குகளைப் பெறும் அளவுக்கு பிரபல்யம் அடைந்துள்ளதா? கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடத்த ஐதேக இன்னமும் விரும்பவில்லை என்பது அவரது கூற்றை சவாலுக்குள்ளாக்குகிறது. அந்த அளவு ஐதேக பிரபல்யம அடைந்து இருந்தால் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களைப் பாவித்து அத்தேர்தல்களைத் தடுத்து இருக்க மாட்டார்.
அதேவேளை, சுகாதார கொள்கை நிறுவனம் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள தேர்தல் வெற்றி வாய்ப்புக்களைப் பற்றி இவ்வாண்டு பல கருத்துக் கணிப்புக்களை நடத்தியுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க 51 வீத மக்கள் விருப்பத்தை வென்று இருந்தார். சஜித் பிரேமதாச 30 வீதமாகவும் ரணில் 13 வீதமாகவும் மக்களின் விருப்பத்தை வென்றிருந்தனர். இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் நூறு வீதம் சரியாக இருக்காது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் அழிவின் விளிம்புக்கே சென்ற நாடு, இப்போது மீண்டெழுந்துள்ளதாகவும் எனவே மக்கள் அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் அதே மக்களை நம்பகைவக்க ஐ.தே.கவும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் முயல்கின்றன. ஆனால், நிலைமை அதுவல்ல.
சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தின் கீழ், அந்நிதியத்திடமிருந்தும் உலக வங்கியிடமிருந்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் புதிதாகக் கடனுக்குப் பணம் கிடைத்ததாலும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் காரணமாகவும் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்கும் கடந்த வருடம் காணப்பட்ட மைல் கணக்கு நீளமான கியூ வரிசைகள் போன்ற பொருளாதார நெருக்கடியின் கடும் தாக்கங்கள் இப்போது இல்லை என்பது உண்மையே. பொருளாதார நெருக்கடியால் மக்களின் வருமானம் குறைந்தது. அந்த நிலைமையில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை.
பணவீக்கம் பற்றிய மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி சந்தையில் விலைவாசி இல்லை. ஏனெனில் உயர்ந்த விலைவாசி இறங்கி வர மறுக்கிறது.
இதனால் முன்னொருபோதும் இல்லாதவாறு பொதுமக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும், இதுவரை நாட்டை ஆட்சி புரிந்த கட்சிகளிடம் தீர்வு இல்லாததால் பெரும்பாலானோர் மக்கள் விடுதலை முன்னணியின் பக்கம் சாயத் தொடங்கியிருக்கின்றனர். அதனையே மேற்படி கருத்துக் கணிப்பு சுட்டிக் காட்டுகிறது.
அடுத்த வாரத்தில் அணியில் நிறைவேற்றப்பட்ட வற் திருத்தச் சட்டம் அமுலுக்கு வருகிறது. அவ்வரியானது மனிதனின் சகல கொடுக்கல் வாங்கல்களையும் வெகுவாக பாதிக்கும். இப்போது மக்கள் இதுபோன்ற பொருளாதார விடயங்கள் தொடர்பாக முன்னரை போல் பிரிந்த செயலாற்றுவதாகத் தெரியவில்லை. அதுவும் ஐதேகவையும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியையும் பாதிக்கிறது.
இந்த நிலையில், பலமான கட்சிகளுடன் கூட்டு சேராவிட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறமுடியாது என்பதே தற்போதைய நிலைமையாகத் தெரிகிறது. அவ்விரண்டு கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியுடனோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியுடனோ கூட்டுச் சேரும் வாய்ப்பேதும் இல்லை. ஆனுர குமார திசாநாக்கவும் சஜித் பிரேமதாசவும் அவ்வாறான கூற்றை நிராகரித்து கருத்து வெளியிட்டு இருக்கின்றனர்.
மேற்படி கருத்துக் கணிப்பின்படி, பொதுஜன முன்னணி குறைந்தது 10 வீத மக்கள் விருப்பத்தையாவது வென்றெடுக்கத் தவறியுள்ளது. பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உடல்நலம் குன்றியிருக்கும் நிலையில், அக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத் தேடிக்கொள்ள கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் இப்போது வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் பெயரையும் அதற்காக ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஐ.தே.கவுக்கு கூட்டணி அமைக்க இருக்கும் ஒரே பிரதான கட்சி பொதுஜன முன்னணி மட்டுமேயாகும். அவ்வாறு கூட்டுச் சேர்ந்தாலும் மேற்கூறிய கருத்துக் கணிப்பின்படி அவர்களுக்கு மூன்றாவது இடம் தான் கிடைக்கும். எனவே, அக்கட்சிகளின் தேர்தல் பீதி நியாயமானதாகும்.
12.27.2023
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago