2025 ஜனவரி 30, வியாழக்கிழமை

“இனி தமிழினத்தை காப்பாற்ற முடியாது”

Editorial   / 2025 ஜனவரி 10 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தம் தவம்

சர்வதேச நாடுகளையே இலங்கையை நோக்கித் திரும்பிப்பார்க்க வைத்த, அந்நாடுகளின் தலைவர்கள், இராஜதந்திரிகளை இலங்கை விஜயங்களின்போது, தமிழர் தாயகத்திற்கு வரவைத்த, ஐ.நா. மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பார்வையை, அக்கறையை ,அவதானிப்பைத் தமிழர் தாயகப் பகுதியில் குவிய வைத்த, இலங்கை அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்து, நிம்மதி கெடுத்து சர்வதேசத்தின் முன் குற்றவாளிகளாக நிற்க வைத்த  தமிழ்த் தேசிய அரசியலும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் இன்று  பயணிக்கும் பாதை தமிழர் தாயகத்தின் எதிர்காலத்தை, எதிர்பார்ப்பை நிர்மூலமாக்கும் பாதையாகவேயுள்ளது.

‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்ற அடிப்படையில்,  தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தமிழ் மக்களின் உரிமை சார் விடயங்கள், தமிழ் மக்கள் மீதான போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில்   அரசுக்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்போதைய  தலைவர் இரா.சம்பந்தனின் தவறான தெரிவுகளினால்  கோடரிக் காம்புகளாக நுழைந்தவர்களினால் தமிழர்களின் பலமான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இன்று இல்லாதொழிக்கப்பட்டுள்ளதுடன், தமிழரசுக் கட்சியும் அழிக்கப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமன்றி, இன்று தமிழ்த் தேசிய அரசியலின் துன்பியலாக   தமிழர்களின் தாய்க் கட்சியெனக் கூறப்படும் தமிழரசுக் கட்சியில் தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு சுமந்திரன் அணியினால் முன்னெடுக்கப்படும் ‘மதுபான அனுமதி’ அரசியலும் வடக்கு மற்றும்  புலம்பெயர் நாடுகளிலுள்ள வருமானத்தை மட்டும் இலக்காகக் கொண்ட சில  ‘யூரியூபர்’ஸினால் ஊதிப்பெருப்பித்து  முன்னெடுக்கப்படும் ‘அர்ச்சுனா ’ என்ற ‘காட்சி’ அரசியலும் தமிழர் அரசியலை ஆட்கொண்டு அலங்கோலப்படுத்தி வருகின்றன.

தமிழரசுக் கட்சிக்குள் சர்வாதிகாரிகள் போல, செயற்பட்ட சுமந்திரன் அணி தமது சக  போட்டியாளர்களை வீழ்த்த, முன்னெடுத்த ‘தமிழரசுக் கட்சிக்குள் மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்கள்’ என்ற திட்டமிட்ட  பிரசாரமே ‘பூமராங்’காக மாறி பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில்  தமிழ்த் தேசிய அரசியலை பதம் பார்த்துள்ளதுடன், நாட்டின் ஏனைய சமூகங்களினால் தமிழ்த் தேசிய அரசியலைக் கேவலமான, கோமாளித்தனமா, அரசியலாகப் பார்த்து எள்ளி நகையாடும்  நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும், சுமந்திரன் அணி  தமது தலைக்கன நிலைப்பாட்டிலிருந்து இன்னும் மாறியதாகத் தெரியவில்லை. தொடர்ந்து மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் என்ற பிரசாரத்தின் மூலம்  தமிழ்த் தேசிய அரசியலை நாறடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் தாய் கட்சியான தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பாராளுமன்றத் தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காக வைத்து தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு இவ்வாறாக மதுபானசாலை அரசியலை முதன்மைப்படுத்தி பிரசாரங்களை முன்னெடுத்து தமிழ் மக்களின் விசனத்தையும் விமர்சனத்தையும் சம்பாதித்ததன்  விளைவாகவே  தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் சிறீதரன் மட்டும் வற்றப் பெற்றதுடன், வன்னி மாவட்டத்தில் ரவிகரன் மட்டும் வெற்றி பெற்றார்.  2015ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் 58,043 வாக்குகளையும்  2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில்
27,834 வாக்குகளையும் பெற்று வெற்றிபெற்றிருந்த சுமந்திரன் ‘மதுபானசாலை அனுமதி’ என்ற கீழ்த்தரமான பிரசாரத்தை முன்னெடுத்ததால் இந்தத்தேர்தலில்  15,039 வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வியடைந்தார். சுமந்திரன் தோல்வியடைந்தது மட்டுமன்றி, அவர் சிறீதரன்  மீது முன்வைத்த மதுபானசாலை அனுமதிப்பத்திர குற்றச்சாட்டும் பொய் என்பதும் வெளிப்பட்டது.

அதுமட்டுமன்றி,  மதுபானசாலை அனுமதிப்பத்திர பிரசாரத்தில் சுமந்திரனுடன் தீவிரமாக செயற்பட்டவரான இரா.சாணக்கியனின் ஒன்று விட்ட சகோதரனின் மதுபானசாலையில் சிலதினங்களுக்கு முன்னர் மதுபானம் அருந்திய குழுக்களிடையில் ஏற்பட்ட மோதலினால் மதுபானசாலை சேதமாக்கப்பட்டதாக ஊடகங்களில்  செய்திகள் வெளியாகியிருந்தன. தனது ஒன்று விட்ட சகோதரரே மதுபானசாலை நடத்தும் நிலையில், சாணக்கியன் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பற்றி பேச  முன்னர் தனது ஒன்று விட்ட சகோதரரின் மதுபானசாலைக்கு எதிராக போராடுவதே நீதியும் தர்மமமுமானது.

மதுபானசாலைகள் வடக்கு,கிழக்கில் அதிகரிப்பது ஆரோக்கியமான விடயமல்ல. இளம் சந்ததியினரின் எதிர்காலத்தையே அழித்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால்,  சுமந்திரன் - சாணக்கியன் அணி அதனை தமது சக போட்டியாளரை வீழ்த்தமட்டும் பயன்படுத்த நினைத்ததே தமிழரசுக் கட்சியையும் தமிழ்த்  தேசிய அரசியலையும்  வடக்கு மாகாணத்தில் வீழ்த்தியுள்ளதுடன், கீழ்த்தரமான அரசியல் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க ‘டொக்டர்  அர்ச்சுனா’ என்ற வடக்கு மற்றும்  புலம்பெயர் நாடுகளிலுள்ள வருமானத்தை மட்டும் இலக்காகக்கொண்ட சில  ‘யூரியூபர்’ஸினால் ஊதிப்பெருப்பித்துக் காட்டப்படும் ‘காட்சி’ அரசியல்  தமிழ்த் தேசிய அரசியலை நாறடித்துக் கொண்டிருக்கின்றது.  சில  ‘யூரியூபர்’களை நம்பி அர்ச்சுனா எம்.பியும் அர்ச்சுனா எம்.பியை நம்பி சில  ‘யூரியூபர்ஸ்’களும் செய்யும் இந்த பிரசாரத்தையும் பணத்தையும் மட்டும் இலக்காகக் கொண்ட அரசியல் மறு புறத்தால் தமிழ்த்  தேசிய அரசியலைச்  சந்தி சிரிக்க வைத்துள்ளது.

அர்ச்சுனாவை  முதன்மைப்படுத்தி ‘யூரியூப்’களில் காட்சிப்படுத்தப்படும் காணொளிகளுக்கும்  அவற்றுக்கு ‘யூரியூப்’பர்கள் போடும் தலைப்புகளையும் பார்த்தாலே மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு மக்களைக் கவர்ந்து தமது பைகளை நிரப்ப ‘யூரியூப்’பர்கள் கையாளும் தந்திரத்தையும் புரிந்து கொள்ள முடியும். ‘யூரியூப்’பர்களே தனது ‘விலாங்குமீன்’அரசியலுக்குப் பொருத்தமானவர்கள் என்பதை நன்குணர்ந்து அவர்களுக்குத் தீனிபோடும் வகையில் அர்ச்சுனாவும் தனது காட்சிகளை நன்கு வடிவமைத்து மக்களைத் தனது நடிப்புக்கு ரசிகர்களாக்கி வருகின்றார். இதில் மக்களும் அவருக்கு ரசிகர்களாகி வருகின்றமை வடக்கில் தமிழ்த் தேசிய அரசியலைக் கீழ் நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, காணி உரிமைகள். அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டோர்  பிரச்சினைகளை முன்வைத்து  அரசியல் செய்த நிலைமை மாறி  தமது கட்சிக்குள்ளேயே பதவி மோகங்களில்  குத்து வெட்டுக்கள், குழிபறிப்புக்களில் ஈடுபட்டு கட்சியை உடைத்து பலரை வெளியேற்றி, கட்சி விசுவாசிகளைத் தேர்தலில் தோற்கடிக்க மிகவும் கீழ்த்தரமாக மதுபானசாலை அனுமதிகள் என்ற பிரசாரத்தைக் கையில் எடுத்து ஏனைய சமூகத்தினர் தமிழர்களை அதிலும் வடக்குத்  தமிழர்களைக் குடிகாரர்களாக, மதுபான வெறியர்களாகப்  பார்த்துச் சிரிக்கும் நிலையை  தமிழரசுக் கட்சியின்
சுமந்திரன் அணி  முன்னெடுத்து ஒருபக்கத்தால் தமிழ்த் தேசிய அரசியலை அழிக்கின்றது.

மறு புறத்தால் தங்கம், மேதகு, தமிழீழம், தமிழன் என்ற வார்த்தைப் பிரயோகங்களை வைத்தும் திட்டமிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியும் அரச கூட்டங்களில் விதண்டாவாதம் செய்து தமிழ் அரச  அதிகாரிகளை வம்புக்கிழுத்து அவமானப்படுத்தி, தகுதியற்றவர்களாக, ஊழல் வாதிகளாக, பிரயோசனமற்றவர்களாக ஒருபுறம் காட்டி அதனைக் காட்சிப்படுத்திக்கொண்டு   மறுபுறம் காட்சிப்படுத்தாது அரசுக்குத் துதிபாடும் அரசியலை முன்னெடுக்கும் அர்ச்சுனாவின் ‘யூரியூப்’ அரசியலும்
தமிழ்த் தேசிய அரசியலை வேறு தடத்துக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றது.

‘தமிழினத்தை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்’ என தந்தை செல்வா கூறியிருந்தார். ஒட்டுமொத்தத்தில் ‘தந்தை’ செல்வாவினால் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியும் ‘தந்தை’ விடுதலைப் புலிகளின் தமிழீழ காவல்துறை அதிகாரியாக உயிரைத்  தியாகம் செய்தவர்  என கூறி தந்தையின் பெயரையும் பயன்படுத்தி அரசியல்வாதியான அர்ச்சுனாவும் தமிழ் தேசிய அரசியலை வேறு தடத்துக்கு கொண்டு செல்வதனால் ‘கடவுளினாலும் இனி தமிழினத்தை காப்பாற்ற முடியாது’ என்ற  நிலைமையே தற்போது உருவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .