Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 29 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். ஷிவானி
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற இனவாதம் என்னிடமில்லை. என்மீது, மக்களுக்குப் பாரிய நம்பிக்கை உள்ளது. நான், இனவாத ரீதியில் செயற்படாத காரணத்தால் அரசியல் கட்சிகளுக்கு என்மீது நம்பிக்கை இருக்கும் அதேவேளை, நியாயத்தை நிலைநாட்டுபவன் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உண்டு என, திகாமடுல்லை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் தொலைபேசி சின்னத்தில் இலக்கம் 03இல் போட்டியிடும் சந்திரதாஸ கலபதி தெரிவித்தார்.
தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு:
கே: உங்களது அரசியல் பிரவேசம் பற்றிக் கூறுங்கள்?
நான், 1968ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வியைத் தொடரும்போது, ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தேன். டட்லி சேனாநாயக்க அப்போது பிரதமராகப் பதவி வகித்தார். அப்போது, அம்பாறை மாவட்டத்தில் இளைஞர் அணியின் செயலாளராக என்னை நியமித்தார்கள். 1970 இல், பொதுத் தேர்தலில் களமிறங்கிய பி. தயாரத்னவுக்கு ஆதரவை வழங்கினேன். அவர் தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர், 1973 இல் இருந்து ஜே.ஆர். ஜெயவர்தனவின் தலைமைத்துவத்தின் கீழ், இளைஞர் அணியின் செயலாளராக, கிராமிய மட்டத்தில் பல்வேறு அரசியல் வேலைத்திட்டங்களை மேற்கொண்டேன். தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு, ஐ.தே.க வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்போது, அம்பாறை நகரில் நகர சபை என்ற ஒன்று இருக்கவில்லை. இதன்போது, புதிதாக நகர சபை அமைக்கப்பட்டது.
1979ஆம் ஆண்டு, மக்களின் வாக்குகள் மூலம், முதலாவதாக நகர சபைக்குத் தெரிவானேன். பின்னர், 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவானேன். அதன் பின்னர் 1994, 2000 ஆகிய ஆண்டுகளிலும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டேன். பின்னர், அரசியலில் கட்சிக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வந்தேன். 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த எவரும், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஊடாகத் தெரிவுசெய்யப்படவில்லை. 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், நான் களமிறங்கினேன் 49 ஆயிரம் வாக்குகளை மாத்திரமே என்னால் பெற முடிந்தது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட நிலையில், தயா கமகேவுக்கு மாத்திரம், நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புக் கிட்டியது. இம்முறையும் பெரும்பான்மை தரப்பில், ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகும் வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். எனினும், அதில் சந்தேகம் உள்ளது. ஏனெனில், முஸ்லிம்களின் வாக்குகளே, அம்பாறையில் அதிகம் உள்ளன.
கே: முஸ்லிம்களுக்கு மாறாக, தமிழ், சிங்கள மக்களின் வாக்கு விகிதாசாரம் எவ்வாறு உள்ளது?
நாங்கள் பெரும்பாலும், சிங்கள மக்களின் வாக்குகளையே நம்பியுள்ளோம். அதேநேரம், கிழக்கு மாகாண சபையின் தவிசாளரான எனக்கு, தமிழ் மக்கள் சிலரின் ஆதரவும் கிடைக்கும் என்று கருதுகிறேன். மாகாண சபை கலைக்கப்பட்டுள்ள போதிலும், தவிசாளர் அந்தப் பதவியைத் தொடர்ந்து வகித்து வரமுடியும். அவ்வாறே நானும் செயற்பட்டு வருகிறேன்.
சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற இனவாதமோ, பேதமோ என்னிடமில்லை. மக்களுக்குப் பாரிய நம்பிக்கை என்மீது உள்ளது. நான், இனவாத ரீதியில் செயற்படாத காரணத்தால், அரசியல் கட்சிகளும் என்மீது நம்பிக்கை வைத்திருக்கும் அதேவேளை, நியாயத்தை நிலை நாட்டுபவன் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உண்டு. ஆகவே, தமிழ் மக்களின் வாக்குகளும் எனக்குக் கிடைக்கும் என, நம்புகிறேன்.
இதில், சிறு பிரச்சினை இருப்பதை அறிய முடிகிறது. அதாவது, கருணா அம்மான் காரணமாக, தமிழ் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். ஏனைய அரசியல் கட்சிகளுக்கு, ஆதரவு வழங்காதிருக்குமாறு, கருணா தரப்பால் அச்சுறுத்தப்படுவதாக அறிய முடிகிறது. அவர்கள், இரவு நேரங்களில் அப்பாவி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். எனினும், குறிப்பிட்டளவு வாக்குகள், தமிழ் மக்களிடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் தமிழர் ஒருவரும் போட்டியிடுவதால், அவருக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை, எனக்கும் ஆதரவு வழங்குமாறு, தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
கே: ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியான நீங்கள், சுமார் 50 வருடகால அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ளீர்கள். இப்படியிருக்க, அரசியல் ஊடாக மக்களுக்கு ஆற்றியுள்ள சமூக சேவைகள் பற்றிக் கூறுவீர்களா?
கிழக்கில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மூத்த அரசியல்வாதியாக உள்ளேன். இன, மத பேதமின்றி, எனது மக்கள் சேவைகள் அமைந்துள்ளன. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், வீதி அபிவிருத்தி, மின்சாரம், பாடசாலைக் கட்டடங்கள், நீர்ப்பாசனத்துறை அபிவிருத்தி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துள்ளதுடன் புதிய கிராமங்களையும் அமைத்துள்ளேன்.
கே: நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று தடவைகள் தெரிவாகியுள்ளீர்கள். அக்காலப்பகுதியில், அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எவை, தற்போது மேற்படி மாவட்டத்துக்கு எவ்வாறான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தேவைப்படுகின்றன?
சகல கிராமங்களுக்கும் முழுமையாக மின்சார வசதி வழங்கியமை, பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பை வழங்கியமை, தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கியமை, சுகாதார அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமை, மாகாண வீதிகளை அபிவிருத்தி செய்தமை உள்ளிட்ட மேலும் பல பணிகளை முன்னெடுத்துள்ளேன்.
தற்போது, அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதைக் கட்டியெழுப்பி, பலருக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, மீன்பிடித்துறையை நம்பி ஜீவனோபாயம் செய்பவர்களுக்கு, அவர்களது வாழ்வாதாரத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையிலான வேலைத்திட்டங்களை அறிமுகம் செய்தல், கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்தல், அரச தொழில்வாய்ப்புகளை இனவிகிதாசார அடிப்படையில் அரசியல் தலையீடு இன்றி வழங்குதல், சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல திட்டங்களைக் கொண்டுள்ளோம்.
அத்துடன், இங்குள்ள பாரிய பிரச்சினையானது, யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதல் ஆகும். இதைக் கட்டுப்படுத்த, தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளால், தீர்வு கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுக் காணும் வகையிலான திட்டமொன்று என்னிடமுள்ளது. இதை நான், சஜித் பிரேமதாஸவிடம் பரிந்துரைத்துள்ளேன். இதற்கு வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்றாவது, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து, பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago