2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

இந்தியாவின் தராளமனம்

Editorial   / 2022 மே 13 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்
jantongeorge@gmail.com

நாளுக்கு நாள் இலங்கையின் பொருளாதார நெருக்கடி  தீவிரமாகி கொண்டே போகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக காலிமுகத் திடலில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ வும் பதவி விலகியுள்ளார்.

 

1948-இல் பிரிட்டனிடம் இருந்து விடுலை பெற்ற பிறகு இலங்கை தற்போதுதான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கின்றது.

இந்த நிலையில், நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் இலங்கை கூடுதலாகக் கடன் வாங்குவதுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன..

உலக வங்கியின் மதிப்பீட்டின்படி இலங்கையைப் பொறுத்தவரை 2020 மார்ச் மாதத்தில் 2.3 பில்லியனான  அந்நிய செலவாணி குறைந்திருந்தது. தொடர்ந்து வந்த காலங்களில் அந்த எண்ணிக்கை தொடர்ந்தும் சரிந்தே வந்திருக்கின்றது.

சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நிதி உதவியையே இலங்கை தற்போது நம்பியிருப்பதுடன், இவற்றைக் கடந்து முதல் முறையாக ஐஎம்எஃப் என அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தையும் இலங்கை அணுகியிருக்கிறது.

சர்வதேச செலாவணி நிதியும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கடன்களைக் கொடுத்துவிடக் கூடிய அமைப்பு அல்ல. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வரிகளை உயர்த்த வேண்டியது சர்வதேச செலாவணி நிதியத்தின் முதல் விதியாக இருக்கலாம்.

இதனால் பொதுமக்களுக்கு விதிக்கப்படும் வரிகள் கணிசமாக உயரக்கூடும். பல்வேறு வகையான இலவச, குறைந்தவிலை சமூக நலத் திட்டங்களில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நேரிடும்.

இந்த நிலையில். ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கையின் தற்போதைய கடுமையான நெருக்கடியான காலகட்டத்தில் நட்பு நாடான இந்தியா அவசர உதவி மற்றும் கடன் உதவிகளை தாரளாமாக வழங்கி வருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷக்கும் இடையிலான இருதரப்பு உறவின் அடையாளமாக இது பார்க்கப்படுவதுடன, அண்டை நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கை மற்றும் பரஸ்பர ஒற்றுமையின் வெளிப்பாட்டை எடுத்து காட்டுகின்றது.

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இந்தியக் கடனை வழங்குவது குறித்து முன்னால் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது, நான்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் இதில் முக்கிய இடத்தை பெற்றிருந்தது.

இரண்டாவது, எரிபொருள் இறக்குமதி செலவுகளை ஈடுசெய்யும் கடன்கள் திட்டம், மற்றும் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு வளாகத்தின் விரைவான நவீனமயமாக்கல் என்பவை அடங்கும்.

அத்துடன், இலங்கைக்கு கொடுப்பனவு சமநிலையை தீர்ப்பதில் உதவுவதற்கும், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு பல்வேறு துறைகளில் இந்திய முதலீட்டை எளிதாக்குவதற்கும் பரிவர்த்தனை பரிமாற்றமும் உள்ளடங்கும்.

இவ்வாறு வழங்கப்பட்ட கடனை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தை விதிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கு அவசர உதவியாக இந்தியா வழங்கிய இந்த கடனுக்கான வட்டி வீதம்  மிகவும் குறைவானது என்றாலும், இந்தக் கடனின் கீழ் இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களை தீர்மானிக்கும் அதிகாரம் நிதியமைச்சுக்கே வழங்கப்பட்டிருந்தது.

இந்திய-இலங்கை நிவாரணப் பொதியானது 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமான ஒன்றாகவே காணப்படுகின்றது. எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா தனியாக வழங்கியிருந்தமை நினைவுகூறத்தக்கது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், இலங்கை மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியத்தை கருத்தில் கொள்ளும்போது, இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட கடன் நிவாரணம் பெரும் நிவாரணமாகவே காணப்பட்டது.

எனினும், இந்தியாவிடம் இருந்து எரிபொருளுக்கான கடனை பெற்றுகொண்ட பின்னரும் நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஆனால், இந்தியாவில் இருந்து பெட்ரோலியம் வாங்குவதற்கான கடன் கையிருப்பு முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பரவாலாக முன்வைக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர், கடந்த ஆண்டின் நடுப்பகுதியில், சூரிய ஒளி மின் உற்பத்திக்காக இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ வின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சிக்காக இந்தியப் பிரதமர் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக அறிவித்த போதும், அந்த தொகைக்கான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. இந்த விடயம் இன்றுவரை கேள்விக்குறியாகவே நீள்கின்றது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான ஏராளமான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்தி, விமான நிலையங்களின் நிலையங்கள் அபிவிருத்தி  உள்ளிட்ட வர்த்தக ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுநோய் காரணமாக பல்வேறு நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், சர்வதேச அளவில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. சிறிய நாடுகள் பொருளாதார சரிவை சந்தித்துள்ள அதேவேளை, சக்திவாய்ந்த நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை புதிய வடிவில் கட்டமைக்க முயல்கின்றன.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிக முதலீடு செய்ய முயற்சிக்கும் இந்தக் காலப்பகுதியில் இலங்கை போன்ற சிறிய நாடுகள் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி  தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியம்.கொரோனா தொற்று நோயினை காரணம் காட்டி, தனது பிழையான கொள்கை திட்டங்களை நடைமுறைப்படுத்திய இலங்கையின் அண்மைய கால ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழும்பும் நடவடிக்கையை அடுத்து உருவாகவுள்ள அரசாங்கமாவது முன்னெடுக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் அபிலாஷைகளாகும்.

அதற்கு கை கொடுக்க காத்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் உதவிகளை பெற்று அதனை காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்தினால் இலங்கை தொடர்ந்து அதல பாதாளத்தில் விழுவதில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

புதிதாக பிரதமராக பதவி​யேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா, அமெரிக்கா, வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன.  ரணில் விக்கிரமசிங்க நேற்று (13) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அலரிமாளிக்கைக்குச் சென்று பூச்செண்டு ​கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்து கலந்துரையாடியுள்ளார். அந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னர், இந்தியா இன்னும் உதவிகளைச் செய்யும் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் என்னவே, எந்தவொரு எம்.பியின் உதவியும் இன்றி, எரிபொருள்களை நாட்டுக்குக் கொண்டுவருவேன் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டதன் பின்னர் தெரிவித்துள்ளார் என்பதை யூகிக்க முடிகின்றது. (13.05.2022)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .