Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஜனகன் முத்துக்குமார்
இந்தியப் பெருங்கடல் பகுதி பல தசாப்தங்களாக வர்த்தக, பொருளாதார நடவடிக்கைகளின் மய்யமாக மாறியுள்ளது. இதற்கான காரணம், முக்கிய கடல்சார் வர்த்தக பாதை இந்து சமுத்திரம் வழியாக செல்வதே ஆகும். பாரசீக வளைகுடா நாடுகளுக்கு உலகெங்கிலும் எண்ணெய் வழங்க இந்திய பெருங்கடல் ஒரு பாதையை வழங்குவதுடன், இதுவே ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, கிழக்கு ஆசியாவை அமெரிக்கா, ஐரோப்பாவுடன் இணைக்கும் பூகோளவியல் இணையமாக அமைகின்றது. அது தவிர, இது உலகின் எண்ணெய் உற்பத்தியில் சுமார் 40% இந்தியப் பெருங்கடலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, வல்லரசுகள் மத்தியில் இப்பகுதி போட்டி நிலையை தோற்றுவிக்கின்றமையுடன், அதன் காரணமாக இது பிராந்தியங்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஒரு மூலோபாயமான பகுதியாகக் கருதப்படும் அதேவேளை, பிற பிராந்திய எதிர்ப்புக்களை சம்பாதிக்கும் ஒரு ஆபத்தான பகுதிகளில் ஒன்றாக இந்தியா இப்பகுதியை கருதுகிறது.
இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக இந்தியா 70% எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் 95% வர்த்தகம் இந்தியப் பெருங்கடல் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இந்திய பெருங்கடலில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தலையீடும் இந்தியாவில் அரசியல்-பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தியா வெகுவாகவே உணர்ந்துள்ளது. அதன் காரணமாகவே, இந்திய கடற்படை இந்திய பெருங்கடல் முழுவதும் தனது ஆதிக்கத்தை நிறுவ முனைப்பாக உள்ளது. ஒரு மேலாதிக்க சக்தியாக இந்தியா இந்திய பெருங்கடலின் பாதுகாப்பு வழங்குநராக தோன்றுவதற்கான அதன் கடல் மூலோபாயத்தை இந்தியா இதன் காரணமாக மீண்டும் உருவாக்க முனைகின்றது.
இந்தியாவின் இந்திய பெருங்கடல் மூலோபாய உருவாக்க நடவடிக்கைக்கு வடிவம் கொடுப்பதாகவே இந்திய - மத்தியகிழக்கு உறவுகள் பார்க்கப்பட வேண்டியதாகும். இந்தியாவின் ஓமான் - டுக்ம் மற்றும் ஈரான் - சபாஹர் துறைமுகங்களின் அமைவிடங்களில் இந்தியா தனது மூலோபாய மய்யங்களை அமைத்தல் என்பது இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த இந்தியா மேற்கொண்ட ஒரு வெளிவிவகார நகர்வு ஆகும். ஈரானியத் துறைமுகம் சபஹார் ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமல்லாமல், மத்திய ஆசிய நாடுகள், ரஷ்யா, ஐரோப்பாவுக்கும் பாகிஸ்தானைத் தவிர்த்து இந்தியாவுக்கு அணுகலை வழங்குகின்றது. மறுபுறம், டுக்ம் துறைமுகம் செங்கடலுக்கு அணுகலை வழங்குகிறது. இந்தியாவின் மேலாதிக்க வடிவமைப்புகள் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதையும், இந்தியப் பெருங்கடலை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதன் அடுத்தகட்ட வடிவம் தான், இந்தோனேசியாவில் ஒரு துறைமுகத்தை உருவாக்க இந்தியாவின் முடிவு செய்தமை ஆகும். மேலும், குறித்த நோக்கின் அடிப்படையிலேயே, இந்தியா சிஷெல்ஸ் தீவில் ஒரு இராணுவத் தளம் அமைத்திருந்தமை பார்க்கப்படவேண்டியதாகும். இந்நோக்கை செயல்படுத்துதலின் அடுத்த அம்சமே, பிரான்ஸ், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களில் இந்தியப் பெருங்கடலை தனது ஆதிக்க பரப்பில் கொண்டிருப்பதற்கான இலட்சிய உத்திகளை இந்தியா பேணியிருந்ததை காணலாம்.
எது எவ்வாறாக இருந்தாலும், பிராந்திய ரீதியில் இந்தியா தனது மேலாண்மையை உறுதிப்படுத்துவதில் தொடர்ச்சியாகவே பாகிஸ்தானின் பாதுகாப்பு கொள்கைகள் தடைக்கல்லாகவே அமைகின்றது.
வரலாற்றை பொறுத்தவரை, செப்டம்பர் 7, 1965 அன்று பாகிஸ்தான் இந்திய குண்டுவீச்சாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் ரேடார் நிலையத்தை அழிக்க இந்திய நகரமான துவாரகாவைத் தாக்கியமை இந்தியாவின் மூலோபாய நகர்வுக்கு எதிரான பாகிஸ்தானின் முதலாவது இராணுவ நடவடிக்கை ஆகும். தொடர்ச்சியாக 1971 இல் இடம்பெற்ற இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தில், பாகிஸ்தான் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ஹாங்கோர், குர்கியில் நடாத்திய தாக்குதல் - அதில் 176 மாலுமிகள் மற்றும் 18 கடற்படை அதிகாரிகள் கொல்லப்பட்டமை; புல்வாமா தாக்குதல்கள்; மீண்டும் மார்ச் 4, 2019 அன்று பாகிஸ்தான் கடல்பரப்புக்குள் செல்லவிருந்த இந்திய ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தான் அதிகாரிகள் தடுத்திருந்தமை என்பன தொடர்ச்சியாகவே பாகிஸ்தான் - இந்திய போட்டித்தன்மை இந்தியாவின் இந்திய பெருங்கடலை தனது ஆதிக்கத்தில் தக்கவைத்தலில் சிக்கல் நிலையை தோற்றுவித்திருந்தது. இது தவிர, பாகிஸ்தான் - சீனாவின் அண்மைய உறவு - குறிப்பாக சீனாவின் பட்டுப்பாதை இந்திய பெருங்கடலை ஊடறுத்து செல்லுதல் - அது தொடர்பில் பாகிஸ்தான் சீனாவுடன் இணங்கி செயல்படுதல் - குறிப்பாக இந்தியாவின் சினத்தை சீண்டும் செயலாகவே பார்க்கப்படுகின்றது.
இந்தியா இந்திய பெருக்கடலில் தனது மேலாண்மையை நிறுவுதல் என்பது ஒரு இலகுவான காரியமல்ல. இது பாகிஸ்தான் - சீனா - இந்தியா விவகாரமும் இல்லை. இவ்விவகாரம், இன்னமும் ஆழ்ந்து ஆராயப்படுமாயின், அது ஐரோப்பிய - ஐக்கிய அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய வெளிவிவாகாரக் கொள்கையிலும் பிராந்திய கொள்கையிலும் வெகுவாகவே தாக்கம் செலுத்தவல்ல ஒரு விடையப்பரப்பாகும். எது எவ்வாறாக இருப்பினும், வரலாற்று ஆய்வாளர் கே.ம மரிக்கார் குறிப்பிட்டமை - "இந்தியப் பெருங்கடலைக் கட்டுப்படுத்தும் எந்த ஒரு நாடும், இந்தியாவை தமது தயவில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், இந்தியப் பெருங்கடல் சுதந்திரமாக இல்லாமல், இந்தியா இருக்க முடியாது. எனவே, இந்தியப் பெருங்கடல் உண்மையிலேயே இந்தியாவின் ஆளுமையிலேயே இருக்கவேண்டும்" என்பது உண்மை ஆயின், இந்தியா என்ன விலை கொடுத்தாவது தனது ஆளுமையை இந்திய பெருங்கடலில் கட்டியெழுப்புவது அவசியமானதாகும் - அது பெரும்பாலும் ஒரு பிராந்திய யுத்தத்துக்கு வழிகோலுமாயினும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
37 minute ago
37 minute ago