2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

இந்திய மத்திய அரசு: பொருளாதாரப் பேரிடரை எப்படிச் சமாளிக்கும்?

Editorial   / 2020 மே 04 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். காசிநாதன்

பதினைந்து தினங்களுக்கு மேல், தினமும் ஆயிரத்துக்கு மேலானவர்களுக்கு 'கொவிட்-19' பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது கடந்த மூன்று நாள்களாக 2,000 க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரியிலிருந்து முதல் முறையாக, 2,411 பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் சூழல், இந்தியாவில் உருவாகியிருக்கிறது. மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, 03.05.2020 வரை 38 நாள்கள் கடந்து விட்டன. ஊரடங்கு முயற்சி மூலம், 'கொரோனா வைரஸை' வீழ்த்திவிட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

'கொவிட்-19' நோய்த் தொற்று எச்சரிக்கையை, ஜனவரி மாதம் ஏழாம் திகதியே மாநில அரசுகளுக்கு அனுப்பிய மத்திய அரசு, கொரோனா தொற்று சீனாவில் உறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்ட உடனேயே, இந்த நடவடிக்கை ஆரம்பமாகி விட்டது. கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை செய்ய, ஆரம்பத்தில் 51 பரிசோதனை மய்யங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்றைக்கு 419 பரிசோதனை மய்யங்கள் இயங்குகின்றன.

ஒட்டு மொத்த இந்தியாவில், தமிழ்நாட்டில்தான் கொரோனாவுக்கான அரசு பரிசோதனை ஆய்வகங்கள் அதிகபட்சமாக 34 இருக்கின்றன. மகாராஷ்டிராவில் 30 ஆய்வகங்கள் உள்ளன. அத்துடன், தனியார் ஆய்வு மய்யங்களில் மகராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு 24 பரிசோதனை மய்யங்கள் காணப்படுகின்றன. தமிழ்நாடு 13 மய்யங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், பரிசோதனைக்கான உபகரணங்களைத் தயாரிக்க 45 நிறுவனங்களை அங்கிகரித்துள்ளது. இவற்றில் பத்து நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளவை. இவ்வளவு உட்கட்டமைப்புகள் இருந்தும், தினமும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறையவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு, இந்தியாவில் முதலிடத்தில் மகாராஷ்டிரா இருக்கிறது. 11,506 பேருக்கு மேல் இங்கு (02.05.2020) பாதிக்கப்பட்டுள்ளார்கள். இரண்டாவது இடத்தில் குஜராத் மாநிலமும் (4,721 பேர்) மூன்றாவது இடத்தில் நாட்டின் தலைநகரான புதுடெல்லியும் (3,738 பேர்) உள்ளன.

தென் இந்திய மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாடு முதலிடத்தில் (2,526 பேர்) உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆந்திர மாநிலம் (1,525 பேர்) உள்ளது. மூன்றவதாக, தெலுங்கானா மாநிலம் (1,057 பேர்) என்றுள்ளது. ஆனால், நாட்டிலேயே முதன் முதலாக ஜனவரி 30 ஆம் திகதியே கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான கேரள மாநிலத்தில் குறைவாக, அதுவும் 498 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு முதலிடத்தில் வருவதற்கு, சென்னை மாநகரத்தில் இந்த நோய்த் தொற்று அதிகமானதே காரணம் ஆகும். குறிப்பாக, கடந்த சில நாள்களாகப் பாதிப்புகள் தினமும் அதிகரித்து, 176 பேர் (02.05.2020) வரை வந்து விட்டது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அதிகம் பேர் (1,257 பேர்) பாதிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் பாதிப்பிலும் 'தலைநகராக' உள்ளது. 'தமிழ்நாட்டின் மான்செஸ்டர்' எனப்படும் கோவை, இரண்டாவது இடத்திலும் (142 பேர்), திருப்பூர் மூன்றாவது இடத்திலும் (114) உள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுமே, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி விட்டன. நீலகிரி மாவட்டமும் சிவகங்கையும் தற்போது அதிலிருந்து மீண்டுள்ளன.

பரிசோதனை, சிகிச்சை, நோய்த் தொற்றுக்குள்ளானவரின் தொடர்புகளைக் கண்டுபிடிப்பது போன்ற முறைகளைக் கையாண்டு, 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியா, கொரோனா வைரஸ் தொற்றைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் -2005இன் கீழ், கொரோனா வைரஸ் நோய் 'பேரிடராக' அறிவிக்கப்பட்டு, மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது. பச்சை வர்ணம், (நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகாத அல்லது கடைசி தொற்றாளர் வீடு திரும்பி 21 நாள்களாகப் புதிய நோய்த் தொற்று இல்லாத நிலை) சிவப்பு வர்ணம், (அதிக அளவிலான பாதிப்பு உள்ளிட்ட அம்சங்கள்) ஒரேஞ் (எந்த நோய்த் தொற்றுமே வராத நிலை) ஆகிய வர்ணக் குறிகாட்டிகளை உருவாக்கி, நோய்ப் பாதுகாப்பு மண்டலங்களையும் உருவாக்கி, தீவிரமாகச் செயற்பட்டு வந்தாலும், சீனாவிலிருந்து ஐந்து இலட்சம் அதிவிரைவு பரிசோதனை உபகரணங்கள் இறக்குமதி, சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

பிரதமர் தலைமையில் 'பி.எம்.கேர் நிதி' உட்பட, எதிர்க்கட்சிகளும் சர்சைக்கு உள்ளாக்கியுள்ளன. 'தனிமைப்படுத்தல்', 'சமூக விலக்கு' போன்றவையை நோய்த் தடுப்புக்கு மிகச்சிறந்த மருந்து என்ற நிலையில், 'ஊரடங்கு உத்தரவை' மட்டும் நம்பி, இந்த நோயைக் கட்டுப்படுத்தி விட முடியுமா என்ற கேள்விகளை அரசியல் கட்சிகள் உட்பட, இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூட எழுப்புகிறார்கள்.

நீடித்து வரும் ஊரடங்கால், 'வாழ்வாதாரத்துக்குப் போராடும் அனைவருக்கும் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்குக' என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் குழு வலியுறுத்தியுள்ளது. 'இதுவரை 80 முதல் 90 மில்லியன் அமெரிக்க டொலர் (எட்டு முதல் ஒன்பது இலட்சம் கோடி ரூபாய்) இழப்பைச் சந்தித்துள்ள இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும்' என்ற கணக்கீடுகளும் வெளிவந்துள்ளன. 'பொருளாதாரத்துக்கு உயிரூட்ட 65,000 கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்திடுக' என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார். எதிர்க்கட்சிகள் அனைத்துமே 'ஊரடங்கிலிருந்து நாடு வெளியேறும் திட்டம் என்ன?' என்று கேள்வி எழுப்பியுள்ளன.

பேரிடர் நேரத்திலும் மத்திய அரசுக்கும், ஆளும் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையிலும் பனிப்போர் நடைபெறுகிறது. 'ஏன் அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தவில்லை?' என்ற கேள்விகளை, எதிர்க்கட்சிகள் எல்லாம் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.

ஆனால், பிரதமர் மோடி, இவற்றுக்கு எல்லாம் 'நேருக்கு நேர்' நிகழ்த்திக் கொண்டிருக்காமல், அனைத்து மாநில முதலமைச்சர்களையும் நான்கு முறைக்கு மேல் காணொளி மூலம், மாநாடு கூட்டியுள்ளனார். மத்திய அரசின் சார்பில் 1.70 இலட்சம் கோடி நிவாரணத் திட்டத்தை அறிவித்து, அதில்

20 கோடியைப் பெண்களின் 'ஜன்தன்' வங்கிக் கணக்கில் 500 ரூபாயும் மூன்று கோடி மூத்த குடிமக்களின் கணக்கில் 1,000 ரூபாயும்

8.7 இலட்சம் கோடி விவசாயிகளின் கணக்கில்

2,000 கோடி ரூபாயும் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ்

13.62 கோடி மக்களின் கணக்கில்

182 கோடி ரூபாய் என்று, இதுவரை மக்களின் வங்கிக் கணக்கில் போகும்படி செய்துள்ளது மத்திய அரசு.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அண்டை மாநிலங்களில் திண்டாடும் தொழிலாளர்களை, அவரவர் ஊர்களுக்குத் திரும்ப அழைத்துச் செல்ல, சிறப்பு ரயில் இயக்குகிறது. பரஸ்பர நிதிக் கட்டமைப்பைச் சரி செய்ய,

50 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய ரிசர்வ் வங்கி ஒதுக்கியிருக்கிறது. இது தவிர, வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் பல்வேறு சலுகைகளை 'கொவிட்-19 சலுகைகளாக' அறிவித்துள்ளது.

ஆனால், வேலை இழப்பு மிக மோசமாக இருக்கும் என்பதால், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 'சம்பளம் மற்றும் தொழில் தொடங்க உதவி' என்ற அடிப்படையில்,

இரண்டு இலட்சம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 200 இலட்சம் கோடி என்பதால், இந்த இரண்டு இலட்சம் கோடி பெரிய சுமையல்ல என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக இருக்கிறது. இன்றைய திகதியில் 'கொரோனா நோய் பேரிடர்' பாதிக் கட்டத்தைத் தாண்டி விட்டது. ஆனால், இதனால் ஏற்பட்ட பொருளாதார, வருமான பாதிப்பு, இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.

மேலும், 'ஊரடங்கு நீட்டிக்கப்பட' வாய்ப்பு இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறையத் தொடங்கினாலும், பொருளாதாரப் பேரிடரை மத்திய அரசு எப்படிச் சமாளிக்கப் போகிறது, என்பதுதான், இன்றைக்கு ஒவ்வொருவரின் மனதிலும் எழுந்துள்ள கேள்வி ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .