2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

ஆரியகுள புனரமைப்பும் காழ்ப்பு அரசியலும்

Johnsan Bastiampillai   / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 04:09 - 1     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

 

ஆரியகுளம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்தது முதல் தோற்றுவிக்கப்பட்ட குழப்பங்களைக் காணும் போது, தமிழ்த் தேசிய அரசியல் காழ்ப்புணர்வுக் கூட்டத்தாலும் அயோக்கிய சிந்தனையாளர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதோ என்று அச்சப்பட வேண்டியிருக்கின்றது.

யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் முப்பதுக்கும் மேற்பட்ட குளங்கள், பல்லாண்டு காலமாகப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படாமல், குப்பை கூழங்களால் நிரம்பிக் காணப்படுகின்றன. சில குளங்கள், இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டன.

அப்படியான நிலையில், யாழ். நகரின் மத்தியில், பிரதான வீதிகளுக்கு அருகில் அமைந்திருக்கின்ற ஆரியகுளத்தைப் புனரமைத்து, மகிழ்வூட்டும் திடலாக மாற்றும் செயற்றிட்டம், விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான யாழ். மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டு, மக்கள் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழிருந்த யாழ். மாநகர சபையின் ஆட்சியை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு, 2020ஆம் ஆண்டு கைப்பற்றியது. மணிவண்ணன் மாநகர மேயராகப் பதவியேற்றதும், ஆரியகுளத்தைப் புனரமைக்கும் திட்டத்தைச் செயற்படுத்தத் தொடங்கினார். அதற்கான நிதியை, மாநகர சபையால் முழுமையாக ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் காணப்படாத போது, கொடையாளர்களிடம் நிதியைப் பெற்று, புனரமைப்புப் பணியை முன்னெடுக்கத் தொடங்கினார்.

ஆரியகுள புனரமைப்புப் பணி, பல கட்டங்களாகத் திட்டமிடப்பட்டு இருந்தாலும், பிரதான இரு கட்டங்களை நிறைவு செய்ததும், மக்களின் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. மக்களும் ஆர்வத்தோடு ஆரியகுளத்தைச் சுற்றி வருகிறார்கள்.

பல ஆண்டுகாலமாக யாராலும் சீண்டுவாரற்றுக் காணப்பட்ட, பாரம்பரிய வரலாற்றைக் கொண்டிருந்த ஆரியகுளம், புனரமைப்புக்குப் பின்னராக பல தரப்புகளினதும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. கடந்த சில காலங்களாக, வெசாக் காலங்களில் மாத்திரம் இராணுவத்தால் வெளிச்சக் கூடுகள் கட்டுப்பட்டுவந்த குளம், அதன் உண்மையான வரலாற்றுப் பதிவுடன், மக்கள் பாவனைக்காகத் தயார்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆரியகுளம், தமிழர் வரலாற்றோடு தொடர்புபட்டு உள்ளமைக்கான சான்று, ஆய்வுப் பதிவுகளுடன் மும்மொழிகளிலும் எழுதப்பட்டு நாட்டப்பட்டிருக்கின்றது.

அண்மையில், தமிழர் தாயகப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளில், அனைத்துக் கட்டங்களையும் சரியாக அணுகி முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணியாக, ஆரியகுளம் புனரமைப்பைச் சொல்ல முடியும்.

ஏனெனில், அந்தப் பணி ஆரம்பித்தது முதல், அதன் செயற்றிட்டங்களில் நேரடியான விமர்சனங்கள் எழவில்லை. மாறாக, அரசியல் காழ்ப்புணர்வு, தனிப்பட்ட தேவைகள் போன்றவைகள் சார்ந்த அணுகுமுறைகள் மாத்திரமே, ஆரியகுளம் சார்ந்த சர்ச்சையாக மேலெழுந்தன.

அதற்கு உதாரணமாக, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான செவ்வியைக் குறிப்பிட முடியும். முன்னணியின் கஜன் தரப்பைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், ஆத்திரத்தாலும் இயலாமையாலும், மண்ணை அள்ளி வீசி, சபிக்கும் ஒருவராக மாறி, பேசிக் கொண்டிருந்தார். “...இருந்து பாருங்கள், இன்னும் இரண்டு வருடங்களில் ஆரியகுளத்தின் சீரழிவு நிலையை...” என்று ஆரம்பித்து பொருமினார். அவர் பேசிய விடயங்களின் உண்மைத் தன்மையை, ஒரு சிறுபிள்ளை கூட ஆராய்ந்தால், காழ்ப்புணர்வின் உச்சத்தில் பேசப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், முன்னணிக்குள் ‘கஜன் அணி’, ‘மணி அணி’ என்ற பிளவு ஏற்பட்டது. கஜன் அணி, இரண்டு பாராளுமன்ற அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டு, முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், மணி அணி யாரும் எதிர்பார்க்காத வகையில், யாழ். மாநகர சபையிலும் நல்லூர் பிரதேச சபையிலும் ஆட்சி அமைத்தது. அது, கஜன் அணிக்குப் பாரிய பின்னடைவாக அமைந்தது.

ஏனெனில், உள்ளூராட்சி மன்ற அளவில் அதிக உறுப்பினர்களின் ஆதரவு என்பது, தேர்தல் வாக்கு அரசியலில் பெரும் வகிபாகத்தை செலுத்தக்கூடியது. அதனால், கஜன் அணியும் மணி அணியும் சமூக ஊடகங்கள் தொடங்கி, அனைத்து இடங்களிலும் தங்களுக்குள் மோதிக்கொண்டார்கள்.

இதன் அடுத்த கட்டமாகவே, மணி அணி ஆரியகுள புனரமைப்பு பணியை கையில் எடுத்ததும், அதற்கு எதிராக கஜன் அணி, சலங்கை கட்டி ஆடத்தொடங்கியது. அதற்காகத் தமிழ்த் தேசிய கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை வரிகளையும் எடுத்துக் கொண்டு சுற்றி வந்தார்கள்.

யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னிக்குச் சென்ற தருணத்தில், அந்தக் கவிதை புதுவையால் எழுதப்பட்டிருந்தது. அதில்,

‘....ஆரியகுளத்து தாமரைப் பூவிற்கு அடித்தது யோகம்.
பீக்குளத்து பூக்களும் பூசைக்குப் போகும்.
நல்லூர் மணி துருப்பிடித்துப்போக நாகவிகாரை மணியசையும்.
ஒரு மெழுகுவர்த்திக்காக புனித யாகப்பர் காத்துக்கிடக்க,
ஆரியகுளத்தில் ஆயிரம் விளக்குகள் சுடரும்...’

என்ற வரிகளையே, கஜன் அணி கடந்த நாள்களில் கொண்டு சுமந்தது.
விடுதலைப் போராட்டத்துக்காக களமுனையில் பங்களிக்குமாறு விடுதலைப் புலிகள், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு வலுச்சேர்ப்பதற்காகப் புதுவையால் எழுதப்பட்ட கவிதையாக, இதைக் கொள்ள முடியும்.

இன்றைக்கு இந்தக் கவிதையின் பகுதிகளை, கஜன் அணிக்குள் காவித்திரிவோர், புதுவையின் கவிதை வலியுறுத்திய விடயத்தை உள்வாங்கி, அப்போதே போராட்டத்தில் நேரடியாகப் பங்களிக்கும் வயதோடு பலரும் இருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் எல்லோரும் அப்போது அமைதியாகத் தங்களது தனிப்பட்ட வாழ்வு குறித்து அக்கறை செலுத்திவிட்டு, காலமும் சூழலும் மாறிவிட்ட பின்னர், அந்தக் கவிதை வரிகளைத் தூக்கித் திரிவது என்பது அடிப்படையில் அயோக்கியத்தனமானது.

இந்தப் பத்தியாளர் எந்தவொரு நபரையும் ஆயுதப் போராட்டத்தில் இணையவில்லை என்பதற்காக விமர்சிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், தர்க்க ரீதியாக விடயங்களை அணுகும் போது, மேற்கண்ட கேள்வி எழுவதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

ஆரியகுளத்தை ‘பீக்குளம்’ என்று புதுவை விளித்துவிட்டார்; ஆகவே, அது அப்படியே பேணப்பட வேண்டும் என்ற சிந்தனையை, கஜன் அணியின் முக்கியஸ்தர்கள் தங்களின் தொண்டர்களிடம் விதைந்துரைப்பது என்றைக்குமே ஏற்றுக்கொள்ள முடியாதது.

தமிழர் தேச அபிவிருத்தியில், தென் இலங்கை அக்கறை கொள்ளாது. ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களையும் போராடித்தான் செய்ய வேண்டியிருக்கும். அப்படியான நிலையில், கொடையாளர்களின் பங்களிப்போடு தமிழர் நிலத்தின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால், அதனை உச்சக்கட்டத்தில் செய்தாக வேண்டும்.

அப்படியான நிலையில், ஆரியகுளப் புனரமைப்பு என்பது, முன்மாதிரியான செயற்பாடு. எதிர்காலத்தில் இவ்வாறான செயற்றிட்டங்களை நோக்கி கொடையாளர்களை முன்வர வைக்கும்.
‘வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்’ என்ற மனநிலையில் இருந்து, தமிழ்த் தேசிய அரசியலில் பயணிப்பவர்கள் விலகி நிற்க வேண்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் தேர்தல் அரசியலுக்கான முன்னெடுப்புகளையும்,வேறு நேர்வழிகளில் முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால்,  ஆரியகுளத்தை பீக்குளமாகப் பேண வேண்டும் என்கிற மனநிலையே மேலோங்கும். அது தமிழர் தேசத்தின் பெரும் துயரமாக இருக்கும்.


You May Also Like

  Comments - 1

  • முருகபூபதி Friday, 21 January 2022 02:46 PM

    புருஜோத்தமன் தங்கமயில் அவர்கள் கருத்தாழம் மிக்க பார்வையை எழுதியிருக்கிறார். அவரைப்பாராட்டுகின்றோம். இந்த ஆக்கம் யாழ். குடாநாட்டில் வெளியாகும் தமிழ் ஊடகங்களில் வெளிவரல்வேண்டும். சாதாரண மக்களையும் இது சென்றடையவேண்டும். இந்த ஆரியகுளம் விடயத்தையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அமைய காழ்புணர்வு அரசியலுக்கு பலியாக்குபவர்கள், இன்னும் எத்தனை காலம்தான் தமிழ் மக்களை ஏமாற்றுவார்கள். வடக்கு மாகாண சபை செய்திருக்கவேண்டிய பல ஆக்கபூர்வமான பணிகள் நடைபெறவேயில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .