Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முழு நாட்டையும் அச்சுறுத்தி வரும் கொவிட் -19 பெருந்தொற்றுக் காரணமாக, சிறுவர்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இன்று பாடசாலைகள் தொடர்சியாக மூடப்பட்டுள்ளதால், கல்வியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிகளவான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர் நோக்குவதால், சிறுவர்களின் போசாக்கில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, கடந்த காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, இலங்கையில் பெண்களும் சிறுவர்களுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளின் போராட்ட வரலாறுகளிலும், அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டவர்களாக சிறுவர்களும் பெண்களுமே காணப்படுகின்றனர்.
வடமாகாணத்தில் காணப்படும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் அதிகளவானோர், 1980ஆம் ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட யுத்தம் காரணமாக, கணவனை இழந்த, காணாமல் போன, கணவனால் கைவிடப்பட்ட, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் எனப் பல்வேறு யுத்த பாதிப்புகளால் உருவானவையாகவே, அதிளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், அவர்கள் வாழும் சமூகத்தில் ஏற்கெனவே பல்வேறு வகையான நெருக்குதல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இன்று கொவிட்-19 சூழலில், வருமானம் இன்மை, உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த முடியாமை, தொழில் வாய்ப்பின்மை என்பன மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன.
தமிழர் சமூகம், மரபு ரீதியாக தாய் வழி வந்த சமூகமாக இருந்துள்ளதாக, வரலாறுகள் கூறுகின்றன. ஆண்கள், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக உழைப்புகளை நாடி வெளியில் செல்வார்கள்; பெண்கள், குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வார்கள். இதுவே பண்டைய தமிழர் வாழ்வியலாக இருந்துள்ளது. அவர்கள், பெண்களுக்கு மதிப்பளித்து வாழ்ந்த வரலாறுகள் இருக்கின்றன.
பின்னர், கால மாற்றம், சகலவற்றையும் தலைகீழாக மாறியுள்ளது. குடும்பத்தில், சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்ட அடிமைகளாக, பெண்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதுவே, மரபாக மாறியது; ற்பு என்ற ஒன்றை, பெண்களுக்கு மட்டும் சொந்தமாக்கி, அவர்கள் மீது ஒடுக்குமுறைகள் ஏவி விடப்பட்டன.
இந்த மரபு ரீதியான தாக்கம், இன்றைய பெண் தலைமைத்துவக் குடும்பங்களிலும் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
அதாவது, பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்று, பொருளாதார ரீதியில் உயர்வாகக் காணப்பட்டால், அந்தப் பொருளாதார ரீதியான உயர்வுக்கான காரணம், சமூகத்திலுள்ளவர்களால் தவறாகப்பார்க்கப்படும். அதேவேளை, பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்று, வறுமையை எதிர்கொள்ளுமாக இருந்தால், அதனை இலக்காக வைத்து, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் போன்ற நெருக்குதல்கள், அக்குடும்பத்தின் மீது ஏற்படுத்தப்படும். இவ்வாறு பல பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், சமூகத்தில் பெரும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
இதனால், சமூகத்தில் பெண்கள் அல்லது பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெரும் நெருக்குதல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலமை காணப்படுகின்றது.
குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்கு வைத்து, நுன்கடன் நிதிநிறுவனங்கள் அதிகூடிய வட்டி வீதங்களில் கடன்களை வழங்குதல், அதனை அறவிடுதல், குடும்ப சுமைமை சுமக்கும் பெண் தலைமைத்துவக் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைகளை வழங்கி, குறைந்த வேதனங்களை வழங்குதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பிலான அநீதிகளை வெளிப்படுத்தவோ முடியாது. இவ்வாறான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், சமுகத்தில் நெருக்குதல்கள், துன்புறுத்தல்கள் இன்றி வாழ்வதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தக் கூடிய விழிப்புணர்வுகள், இன்று அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது.
யுத்தத்தில் பெண்கள், சிறுவர்கள் அதிகளவான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதையும் அதன் பாதிப்புக்கள் இன்னும் தொடர்கின்றன; அல்லது, அதிலிருந்து விடுவிக்கப்படுவதிலுள்ள நெருக்குதல்கள் உலக நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்கள் உணர்த்தியுள்ள சூழலில், இன்று உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொவிட் -19உம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட் -19 அச்சுறுத்தல் காரணமாக, பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாதிப்புகளை எதிர் கொண்டு இருக்கின்றார்கள். அதாவது, கூடுதலான பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தொழில் வாய்ப்புகளை இழந்திருக்கின்றனர். குறிப்பாக, தினக்கூலி வேலை செய்கின்ற, சிறு சிறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தங்களுடைய கைத்தொழில் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்ற பெண்கள் எனப் பலதரப்பட்ட வகையிலே, தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த குடும்பங்கள், கொவிட் -19 அச்சுறுத்தல் காரணமாக, தொழில் ரீதியாகப் பாதிப்புகளையும் இதனால் மன ரீதியான பாதிப்புகளையும் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையிலேயே, இவ்வாறான பாதிப்புகளை எதிர்கொண்ட சமூகத்துக்கு, பல்வேறு தரப்பினரும் தங்களுடைய முயற்சியின் பயனாக, கொடையாளர்கள் ஊடாகப் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது கூடுதலான குடும்பங்களுக்கு பெரும் உதவியாக அமைந்திருக்கின்றது.
இவ்வாறு, பெண் தலைமைத்துவக் குடும்பங்களில், குடும்ப சுமையை தாங்குகின்ற பெண்கள், தொழில் தேடிச்செல்லும் போது அல்லது, தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, சமூகத்தின் பார்வை, தவறான ஒரு பார்வையாகவே உள்ளது.
எனவே, இவ்வாறான பாதிப்புகளை எதிர்கொண்டு, இழப்புகளில் இருந்து மீண்டு வரும் இவ்வாறான சமூகத்தை கட்டியெழுப்பும் வகையில், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மீதான சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும்.
அத்துடன், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட வசதிகளும் கட்டியெழுப்பப்பட வேண்டும். “போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால் தொடர்ந்து செல்; துணிந்து நில்; கருமத்திலே கண்ணாயிரு” என்ற வரிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு மந்திர வாக்கியமாக இருக்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago