2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அஸார்பைஜான் ஆர்மேனியா யுத்தம் முனைப்புகள் 2020

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

1920 ஆர்மேனிய-துருக்கியப் போருக்குப் பிறகு முதல்முறையாக, ஆர்மேனியாவுக்கு எதிரான போரில் துருக்கி வெளிப்படையாகவும் நேரடியாகவும் கடந்த வாரம் முதல் ஈடுபட்டுள்ளமை பிராந்தியத்தில் புது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் திகதி அஸார்பைஜான் இராணுவம், நாகொர்னோ கரபஹ்க்கு எதிராக ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதலை நடாத்த தொடங்கியதுதான் குறித்த இராணுவ நகர்வுகளின் முதல் நிலையாகும். ஆர்மேனியா மற்றும் நாகொர்னோ கராபஹ்க்கு எதிரான இந்த போர் முன்னோடியில்லாத வகையில் அளவு, ஆயுதம் வல்லாண்மை மற்றும் நேரடியான துருக்கியின் ஈடுபாட்டை ஏற்படுத்தியதில் இருந்தே பதற்றமான சூழ்நிலை மேலும் ஒரு யுத்த முனைப்புக்கு வழிவகுத்திருந்தது. இவ்வாண்டு ஜூலை மாதம், அஸார்பைஜான், ஆர்மேனியாவின் தவுஷ் பிராந்தியத்தில் ஒரு குறுகிய கால யுத்த நடவடிக்கையை ஒத்திகை பார்த்திருந்தது. எவ்வாறாயினும், அஸார்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் மற்றும் துருக்கிய ஜனாதிபதி றிசெப் தயீப் ஏர்டோவானின் தற்போதைய நடவடிக்கைகள் இவ்வாண்டு ஜூலை மாத ஆத்திரமூட்டலைப் போலல்லாமல், இந்த முறை ஒரு பிராந்திய போருக்கு வழிவகுக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

ஆர்மேனியாவுக்கும் அஸார்பைஜானுக்கும் இடையிலான மோதல் தொடர்பான வரலாறானது, ஆர்மேனியாவின் ஒரு பகுதியான நாகொர்னோ கரபாஹ் தொடர்பானது. இது ஆர்மேனிய மக்கள்தொகை கொண்ட தன்னாட்சி பகுதியாக இருந்திருந்தது (சோவியத் ஒன்றியக் காலத்தில் 89% மக்கள் ஆர்மேனியர்களாக இருந்தனர்). சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் விருப்பத்தால், நாகொர்னோ கரபாஹ் 1920 இல் அஸார்ர்பைஜான் சோவியத் சோஷலிச குடியரசில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும், 1988 இல் தொடங்கிய கோர்பச்சேவின் சீர்திருத்தங்களை  தொடர்ந்து, நாகொர்னோ கரபாஹ் மக்கள் தங்கள் அரசமைப்பு உரிமைகளைப் பயன்படுத்தி அஸார்பைஜானிடமிருந்து பிரிந்து போவதற்கான குரல்களை எழுப்பத் தொடங்கியிருந்தனர். இதன் விளைவாக, அஸார்பைஜான் -ஆர்மேனிய படைகள் இடையே யுத்தம் மூண்டிருந்ததுடன், அது 1994ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனிடையே 1992 இல் மீண்டும் நாகொர்னோ கராபாஹ் அதன் சுதந்திரத்தை பிரகடனம் செய்த போதிலும், நிகழ்த்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இன்னும் அது அஸார்பைஜானுடன் இணைந்த பகுதியாகவே பார்க்கப்படுகின்றது. ஆயினும், கராபாக்குக்கு  தொடர்ச்சியாகவே ஆர்மேனியா தனது இராணுவ உதவிகளை வழங்கிவருவதும் - உள்நாட்டு யுத்த முனைப்புக்களை அஸார்பைஜானுக்கு எதிராக தூண்டிவிடுவதுமே குறித்த யுத்த நிலைமைகள் அண்மையில் ஏற்பட வழிவகுத்திருந்தது.

குறித்த மோதலில், துருக்கி அஸார்பைஜானின் முக்கிய ஆதரவாளராக கருதப்படுகிறது. துருக்கியே 1991இல் அஸார்பைஜானை அங்கிகரித்த முதலாவது நாடாகும். துருக்கி தொடர்ச்சியாகவே  அஸார்பைஜானுக்கு இராணுவ  மற்றும் இராஜதந்திர உதவிகளை வழங்கி வருகின்றது. அஸார்பைஜானும் துருக்கியிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் ஒரு நாடாக இருக்கின்றது. துருக்கி ஆர்மேனியாவை எதிர்க்க இன்னொரு காரணமும் உண்டு. குறிப்பாக, ஆர்மேனியப் படைகள் கல்பஜரைக் கைப்பற்றிய பின்னர் துருக்கி - ஆர்மீனிய உறவுகள் முழுமையாகவே துண்டிக்கப்பட்டு விட்டது.  கராபாஹ் தொடர்பாக விடையத்தில் அஸார்பைஜானுடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஆர்மேனியாவுடன் இராஜதந்திர உறவுகளை இயல்பாக்கவும் நிறுவவும் பலதரப்புக்கள் முனைந்திருந்த போதிலும், துருக்கி குறித்த சமரசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் இப்பத்தி, குறித்த போரியல் நடவடிக்கை எவ்வாறான ஒரு பிராந்திய யுத்தத்துக்கு வழிவகுக்க கூடும் என இப்பத்தி ஆராய்கின்றது.

பிராந்தியத்துக்கு வெளியே உள்ளவர்களுக்கு, இந்த ‘உறைந்த மோதல்’ எப்போதுமே தொலைதூரமாகவும் பிற முக்கிய வெளியுறவுக் கொள்கை முக்கியத்துவங்களுடன்  ஒப்பிடும்போது இப்பொது தீர்க்கப்பட தேவை இல்லாத சிந்தனையாக தோன்றியபோதிலும், அண்மைய பதற்றங்கள் குறித்த பிராந்தியத்தில் ஒரு முழு அளவிலான யுத்தத்துக்கு வழிவகுக்கும் என்பதுடன், இது பரந்த அளவில் குறித்த  பிராந்தியத்துக்கு அப்பாலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது. அஸார்பைஜானின் நீண்டகால நட்பு நாடான துருக்கி, ஆர்மேனியா குறித்த அஸார்பைஜானின் "உள்நாட்டு விவகாரங்களில் இருந்து" விலக வேண்டும் என்று கோரியுள்ளது. ஜனாதிபதி எர்டோகன், அண்மைய உரையில், துருக்கியின் அஜர்பைஜானுடனான முழு ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காட்டி, ஆர்மேனியா தனது நாகொர்னோ-கராபாஹ் ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு வலியுறுத்தியிருந்தார்.

மறுபுறம், கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பு (Collective Security Treaty Organisation) ஒப்பந்தத்தின் விளைவாக ஆர்மேனியாவின் நெருங்கிய நட்பு நாடாக பரவலாகக் கருதப்படும் ரஷ்யா உடனடியாக இப் போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளமையையும் கவனிக்கவேண்டும். அதற்கும் காரணம் உண்டு. ரஷ்யா, ஆர்மீனியா தனது ஒப்பந்தக் கடமைகளின் மூலம் ரஷ்யாவை மோதலில் ஈடுபடுத்த முயன்றால் அதிலிருந்து ரஷ்யாவால் பின்வாங்க முடியாது என்று கருதுகின்றது. குறிப்பாக, ஆர்மேனியாவுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகள் ஆர்மேனியாவில் நிலை கொண்டுள்ள ரஷ்யப் படைகள் - ரஷ்யாவின் இராணுவ விருப்புக்களுக்கு மாறுதலாக அமையும் என ரஷ்யா கருதுகின்றது. குறிப்பாக, ஆர்மீனியாவில் கியூம்ரியில் ஒரு இராணுவத் தளத்தை ரஷ்யா பராமரிக்கின்ற நிலைமை, ஆர்மேனியாவை போரில் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தை ரஷ்யாவுக்கு ஏற்படுத்தும். இதன் அடிப்படையிலேயே தான், துருக்கி தனது எல்லைக்குள் ஒரு ஆர்மேனிய ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி, அஸார்பைஜான் மற்றும் துருக்கி இரண்டாலும் எதிர்க்கமுடியாத அளவான இராணுவ வல்லாதிக்கத்தை கொண்ட ரஷ்யாவை குறித்த யுத்தத்தில் பங்குபற்ற ஆர்மேனியா தூண்டுகின்றது.

ஒரு பரந்த கண்ணோட்டத்தில் மோதலைப் பார்க்கும்போது, ​​ரஷ்யாவும் துருக்கியும் மீண்டும் சிரியாவக்கு வெளியே மற்றொரு பிராந்திய மோதலின் பக்கங்களில் தங்களைக் காண்கின்றன. இரு தரப்பினரின் இராணுவ மற்றும் ஆயுதத் திறன்களும் வேறொரு யுத்தத்தில் போட்டியாக பயன்படுத்தப்படுவதற்கு ஒரு காரணத்தை தேட முடியும். பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா மின்ஸ்க் குழுமத்தின் (மோதலுக்கு அமைதியான தீர்வைக் காண 1992 இல் அமைக்கப்பட்டது) கூட்டு இணைத் தலைவர்களாக ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுத்தலானது, எவ்வளவு விரைவாக பல வல்லாதிக்க நாடுகள் இலகுவில் ஒரு யுத்த முனைப்புக்குள் தள்ளப்படலாம் அல்லது ஈர்க்கப்பலாம் என்பதை புலப்படுத்துகின்றது.  குறிப்பாக, அஸார்பைஜானை அதன் தெற்கு அண்டை நாடான ஈரானின் நட்பு பட்டியலில் சேர்த்தல் ஐரோப்பா மற்றும் யூரேசியா பிராந்தியத்தில் ஒரு சிக்கலான யுத்தத்தை ஏற்படுத்தும் சாத்தியத்தை உருவாக்குகின்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .