2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

அரசியல்வாதிகள் மீட்பர்கள் இல்லை

Johnsan Bastiampillai   / 2023 ஜனவரி 25 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம் ஐயூப்

 

 

 

 

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைக்க, அரசாங்கம் இதுவரை எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அம்முயற்சிகளை நாம், கடந்த வாரக் கட்டுரையில் பட்டியலிட்டோம். ஆனால், அதன் பின்னரும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும், தேர்தல்களின் போது செலவிடும் பணத்தின் தொகையை கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று, வியாழக்கிழமை (19) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் இம்முறை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திப்போடப்படலாம் என்பதால், அச்சட்டம் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக அமலாக்கப்படாது என்றதொரு திருத்தத்துடன் நிறைவேற்றுமாறு எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டன. ஆனால், அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை.

அச்சட்டத்தின்படி, கட்சிகளும் வேட்பாளர்களும் எவ்வாறு தேர்தலுக்காக பணம் செலவழிக்கலாம் என்பதைப் பற்றி, தேர்தல் ஆணையகம் விதிமுறைகளை வெளியிட வேண்டும்; அதற்கு பல வாரங்கள் செல்லலாம். அதன் மூலம் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்பதாலேயே, எதிர்க்கட்சிகள் அவ்வாறு கோரின. ஆனால், அவ்விதிமுறைகள் சில தினங்களில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையக வட்டாரங்கள் இப்போது தெரிவிக்கின்றன.

இச்சட்டம், தேர்தலைப் பாதிக்காது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். குறித்த விதிமுறைகள் தயாரிக்கப்படவில்லை என்பதற்காக, தேர்தல் ஒத்தி வைக்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார். ஆனால், எவராயினும் இந்த விடயத்தில் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தால், நிலைமை என்னவாகும் என்பதை எவராலும் எதிர்வுகூற முடியாது.

தேர்தலுக்கான தடைகள், அத்தோடு முடிவடையவில்லை; தேர்தல் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதை அரசாங்கம் மறுக்கவில்லை. இதைப் பற்றி விசாரணை நடைபெறும் என்று, பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் இந்த அச்சுறுத்தல்களை விடுத்தவர்கள் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களாயின், அது தொடர்பான விசாரணைகள் தோல்வியிலேயே முடியும். சிலவேளை, விசாரணை ஓரிரு நாள்களில் நின்றுவிடும். முன்னைய காலங்களில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தமிழ் அரசியல்வாதிகள் கொல்லப்பட்ட போது, அவை தொடர்பான விசாரணைகள் எவ்வாறு இழுத்தடிக்கப்பட்டன என்பது இதற்கு உதாரண‍ங்களாகும். 

தேர்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் சதிகள் மேலும் தொடராவிட்டால், அதேபோல் அச்சதிகள் தொடர்ந்தும் முறியடிக்கப்பட்டால், தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதைப் போல், தேர்தல் மார்ச் ஒன்பதாம் திகதி நடைபெறும். 

தற்போதைய நிலையில், பல பிரதான குழுக்கள், கூட்டணிகள் இம்முறை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. ஆளும் கட்சிகளான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசிய கட்சியும் பல இடங்களில் கூட்டாக போட்டியிடுகின்றன. வடக்கில், தமிழ் கட்சிகள் மத்தியில் பல்வேறு முரண்பாடுகள் எழுந்துள்ளன. முஸ்லிம் கட்சிகளும் மலையகக் கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டாக போட்டியிடுகின்றன. 

இந்தத் தேர்தல் மூலம், ஆட்சி மாற்றம் எதுவும் இடம்பெறாததால் 1,000 கோடி ரூபாய் செலவழித்து, இந்தத் தேர்தலை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்பது, தேர்தலுக்கு எதிராக ஆளும் கட்சிகள் முன்வைக்கும் பிரதான வாதங்களில் ஒன்றாகும். இது முற்றிலும் பிழையான வாதம் எனக் கூற முடியாது. 

இந்தத் தேர்தலால் ஆட்சி மாற்றம் இடம்பெறப் போவதில்லைத் தான். ஆனால், அதற்கான அடித்தளம் அமையும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகும். அரசாங்கமும் அதனாலேயே இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தலை விரும்பவில்லை. 

உண்மையிலேயே, இந்தத் தேர்தல் அரசாங்கத்தைப் பற்றிய கருத்துக் கணிப்பாக மாறலாம். பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பாரியதொரு மக்கள் எழுச்சி ஏற்பட்டு, நாட்டின் ஜனாதிபதியே நாட்டை விட்டுத் தப்பி ஓடிய நிலையில், மக்கள் கடந்த ஏழு தசாப்தங்களாக வாக்களித்ததைப் போலவே கண்மூடித்தனமாக வாக்களிப்பார்களா இல்லாவிட்டால், தற்போதைய பொருளாதார நெருக்கடி அவர்களது கண்களை திறந்துவிட்டுள்ளதா என்பதையும், இதன் மூலம் பார்த்துக் கொள்ளலாம். எவ்வாறாயினும் தேர்தல் முடிவுகள், அரசாங்கத்துக்கு மிக இறுக்கமான செய்தியை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

சிறந்ததொரு நாட்டைக் கட்டி எழுப்புவதற்கான அடித்தளத்தை, இந்தத் தேர்தலின் மூலம் இட்டுக் கொள்ளும் பொறுப்பு, மக்களிடமே இருக்கிறது. ஒரு சில சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்களைத் தவிர, ஏனைய அரசியல்வாதிகளுக்கு அது தேவையற்ற விடயமாகும். அவர்களுக்கு வேண்டியதெல்லாம், தேர்தல்கள் மூலம் பட்டம், பதவிகளைப் பெற்று, அவற்றுக்கான அதிகாரத்தை பாவித்து, மக்களின் பணத்தை கோடிக் கணக்கில் சூறையாடுவதேயாகும். 

அவர்களது உலகமே வேறு என்பதை, நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. சாதாரண மக்களுக்கு ஆயிரம் ரூபாய் பெரிய தொகையாக இருந்தாலும், அவர்களது உலகில் ஆயிரங்கள், இலட்சங்கள் இல்லை, அதில் புழக்கத்தில் உள்ளவை; கோடிகளும் கோடானு கோடிகளுமாகும். 

எனவே, இந்த ஊழல் நிறைந்த சமூக அமைப்பைப் பாதுகாக்கும் வகையிலேயே அவர்கள் செயற்படுவர். தேர்தல்களின் போது, தம்மைப் போன்ற ஊழல் பேர்வழிகளையே தமது கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக நிறுத்துவர். ஒரு சில விதிவிலக்குகள் இல்லாமலும் இல்லை. எனவே தான், சிறந்ததொரு நாட்டை உருவாக்கிக் கொள்ளும் பொறுப்பு, மக்களின் கைகளிலேயே இருக்கிறது என்கிறோம்.

சிறந்த நேர்மையான வேட்பாளர்களை தெரிவு செய்ய, அரசியல் கட்சிகளைத் தூண்டுவதற்காக சில தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் ஒன்றிணைந்து, 2015ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி ஓர் அமைப்பை உருவாக்கின. அதற்கு ‘மார்ச் 12 அமைப்பு’ என்று பெயரிட்டனர். 

இந்த அமைப்பு சகல கட்சிகளையும் அணுகி, இந்த விடயத்தில் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டது. ‘மார்ச் 12 பிரகடனம்’ என்ற அந்த இணக்கப்பாட்டில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கையொப்பமிட்டனர். ஆனால், அதே ஆண்டு வந்த பொதுத் தேர்தலின் போது, சில கட்சிகள் கொலை குற்றத்துக்காக விளக்கமறியலில் உள்ளவர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தின. 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி, அந்த ஆவணத்தைத் தயாரிக்க முன்னர் இடம்பெற்றதாயினும், அம்மோசடியை நியாயப்படுத்தியவர்கள் பலர் ஐ.தே.க சார்பில் அந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டனர். 

மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தவர்களும் அத்தேர்தலிலும் அதன் பின்னரும் தொடர்ந்து போட்டியிடுகின்றனர். எனவே, திருடர்களிடம் திருட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்ப்பார்க்க முடியாது. மக்கள் தான் தமது தலைவிதியை தம் கையில் எடுக்க வேண்டும்.

நாடு இன்று பொருளாதார ரீதியாக பாதாளத்திலேயே இருக்கிறது. இந்த நிலைமை மேலும் மோசமாகும் அறிகுறிகளே தென்படுகிறது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்தால், நாட்டில் சகல பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்பதைப் போல் தான் கூறி வருகிறது. ஆனால் அந்தக் கடனும் அத்தோடு அந்நிதியின் உதவியில் கடந்த காலங்களில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்துக் கொள்ளும் வாய்ப்பும் மட்டுமே கிடைக்கக் கூடிய நன்மைகளாகும். 

அந்த வாய்ப்பை பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு அரசாங்கத்தையே சாரும். ஆனால், அரசாங்கத்திடம் அதற்கான திட்டமொன்று இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் இதற்கு முன்னர் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் 16 முறை உதவி பெற்றும் நாடு தொடர்ந்தும் பாதாளத்தை நோக்கியே சென்றது. 

இது தாமாக நடந்ததொன்றல்ல. இது நாட்டை ஆட்சி செய்தவர்களின் கொள்கைகளினதும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழல்களினதும் விளைவாகும். பொருளாதாரம் இந்தளவுக்கு சீரழிந்தும் அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை சூறையாடுவதை நிறுத்தத் தயாரில்லை. இரசாயன உரத் தடையால் நாட்டின் விவசாயம் அழிந்த போதும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இந்தியாவிலிருந்து திரவ உரத்தை இறக்குமதி செய்து கோடிக் கணக்கில் சம்பாதித்தனர். பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்த போது தான், சீனி இறக்குமதியால் வியாபாரிகள் 1,500 கோடி ரூபாய் வரிப் பணத்தை கொள்ளையடித்துக் கொள்ளும் வகையில் அரசியல்வாதிகள் முடிவுகளை எடுத்தனர். கடந்த வாரமும் மேலும் இரண்டு அமைச்சர்களை நியமித்தனர். இந்தியாவிடம் உதவி பெறுவதற்காக இனப்பிரச்சினையை பாவிக்கிறார்கள்.

எனவே, மக்கள் தமது அரசியல் பொருளாதார தலைவிதியை தாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளை மீட்பர்களாக கருதும் மனப்பான்மை மக்களிடம் இருக்கும் வரை, அவர்களுக்கு விமோசனம் கிடைக்காது. நான்கு வருடத்துக்கோ ஐந்து வருடத்துக்கோ ஒருமுறை வரும் தேர்தலின் போது மக்கள் சிந்தித்து செயலாற்றினால் போதுமாகும். 

பரம்பரையாக இந்தக் கட்சிக்குத் தான் வாக்களித்தோம் என்றோ, இந்த வேட்பாளர் எமது இனத்தை, மதத்தை, சாதியை சேர்ந்தவர் என்றோ, இந்தக் கட்சித் தான் எனது மகனுக்கு தொழில் வழங்கியது என்றோ, இவரைப் பிடித்துக் கொண்டால் தொழிலொன்றை பெற்றுக் கொள்ளலாம் என்றோ தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வழங்கும் சாப்பாட்டுப் பார்சல் அல்லது சாராயப் போத்தலுக்கோ தான் இதுகாலவரை மக்களில் பெரும்பாலானோர் வாக்களித்தனர். இந்தக் கொள்கையால் தான், நாம் இன்று இந்த நிலையில் உள்ளோம் என்று உணரும் தருணம் வந்துவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .