2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

அரசியலை மாற்றாத தமிழ் தலைமைகள்

Mayu   / 2024 மே 26 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தன் தவம்

இலங்கையில் 2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என பிரசாரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதலில் ஜனாதிபதித் தேர்தல் என ஒரு தரப்பினரும் இல்லை பாராளுமன்றத் தேர்தலே முதலில் என இன்னொரு தரப்பினரும் தென்னிலங்கை அரசியலில் கயிறிழுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, தமிழ்த் தேசிய அரசியலில் ‘ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்’ என்ற சாத்தியமற்ற, பிரயோசனமற்ற விடயத்துக்கான காரசாரமான கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும்போதெல்லாம் அந்த தேர்தலில் யாரை ஆதரிப்பது? என்பதில் தொடங்கி தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பது வரை அதிரடி அறிவிப்புக்கள், காரசார விவாதங்கள், இழுபறிகள் என தேர்தல் திருவிழாக்களை கட்டி இறுதியில் புஷ்வாணமாகப் போவதே தமிழ்த் தேசிய அரசியலில் வழமையான நிகழ்வு. அந்த வகையில்தான் இம்முறையும்  எதிர்வரும் ஜனாதிபதித்  தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகத் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை  நிறுத்த வேண்டுமென்ற  ‘தேர்தல் குண்டு’ வடக்கு, கிழக்கில்  வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாத முதல் வாரத்தில் நடத்தப்படலாமென  எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித்  தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற  தமது நிலைப்பாட்டை, முதலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தான் முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து  அவர் பங்காளியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து புதிய கூட்டணி அமைத்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகள்  அதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றின.

 சிங்கள ஜனாதிபதி வேட்பாளருக்கு  50 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெறாமல் தடுப்பதற்கும் அதன் மூலம் தமிழர்களின் உரிமைகளுக்குப் பேரம் பேசுவதற்கும் தமிழ் பொது வேட்பாளர் அவசியம் என்ற  காரணம் இந்தக்கூட்டணியால் முன்னிலைப்படுத்தப்பட்டு அது தொடர்பான கலந்துரையாடல்கள்,  ஆதரவு திரட்டல்கள் ஆரம்பித்த நிலையில், இந்த தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவுகளும் எதிர்ப்புக்களுமான கருத்துக்களும் சூடு பிடித்துள்ள நிலையில்,   ‘ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை’ என கேட்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது பிறவிக் குணத்தை மீண்டும் காட்டத் தொடங்கியுள்ளன.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகள்  ஒரு தீர்மானமாக நிறைவேற்றிய ‘தமிழ் பொது வேட்பாளர்’ மூலம்  நாம் எதையாவது சாதிக்க முடியுமா எனத் தமிழ் மக்களும்  சிந்திக்கத்  தொடங்கிய நிலையில், அதற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவரும், வடக்கு மாகாணமுன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்  அவ்வாறு ஒரு பொது வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயார் என்று அறிவித்தார்.

 ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ் பொது வேட்பாளர்’ என்ற அறிவிப்பு தென்னிலங்கை அரசியலில்  பரபரப்பையும் கொஞ்சம் பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில்தான் ‘நீங்கள் அப்படிப் பரபரப்போ பதற்றமோ அடைய வேண்டாம். ஏனெனில், “எம்மிடம் தான்  ஒற்றுமை என்பது துளியளவும் இல்லையே” என்றவாறாக  தமிழ் பொது வேட்பாளர் என்ற அறிவிப்பை நிராகரித்து  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியும்  தலைவரே இல்லாத இலங்கை தமிழரசுக்கட்சியும் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களுக்குப்  பால் வார்த்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ் பொது வேட்பாளர்’ என்ற கரு உருவாகத் தொடங்கியவுடனேயே  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. அது இந்தத் தேர்தலை பகிஷ்கரிப்பதுதான். அதனையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்” என்று  கூறி முதல் ஆப்பு வைத்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் மட்டும்தானா ஒற்றுமைப்  பட முடியாது. எங்களினாலும் ஒற்றுமைப்பட முடியாது என்பதுபோல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ‘எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை. அந்த முன்மொழிவுக்குத் தமிழ் மக்களிடத்தில் பரவலான கருத்தாதரவு கிடையாது. குறித்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கும் என்றும் நான் கருதவில்லை’’ என்று  கூறி அடுத்த ஆப்பை இறக்கியுள்ளார்.

‘தமிழ் பொது வேட்பாளர்’ தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  ஆகியோரின்  3 விதமான அறிவிப்புக்களும்   தமிழ்த் தேசிய கட்சிகள் தமிழ்  மக்களுக்காக ஒரு போதுமே தமது தலைக்கன, விட்டுக் கொடுப்பின்றிய அரசியல் கொள்கையிலிருந்து மாறப்போவதில்லை என்பதனையே மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

இவ்வாறான நிலையில் ‘தமிழ் பொது வேட்பாளர்’ என்ற அறிவிப்பு தமிழர் தரப்பில்  மரண வாசலுக்கு  நிலைக்குச் சென்றுள்ளது,இதனை உயிர்ப்பிக்க, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட வருமாறு  தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுத்த அழைப்பை  ‘தமிழ் பொது வேட்பாளர்’  என்ற முன்மொழிவை வைத்த, அதனைத் தீர்மானமாக அறிவித்த  தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தமிழர் அரசியல் தரப்புக்கள் முற்றாகப் புறக்கணித்தமை மூலம் தமிழ் பொது வேட்பாளரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 சிங்கள ஜனாதிபதி வேட்பாளருக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கப் பெறாமல் தடுப்பதற்கும் அதன் மூலம் தமிழர்களின் உரிமைகளுக்குப் பேரம் பேசுவதற்கும்   முன்வைக்கப்பட்ட  ‘தமிழ் பொது வேட்பாளர்’  என்ற ஆயுதம் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களை அச்சுறுத்துவதற்குப் பதிலாகத் தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் பலவீனத்தை மீண்டும் அம்பலமாக்கி தென்னிலங்கை அரசியலை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளுக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மையே பெரும் தடையாகவும் பெரும் பலவீனமாகவும் உள்ள  அதேவேளை, இதுவே ஆட்சியாளர்களுக்கு பெரும் பலமாக இருப்பதுடன்  தமிழர் தரப்பின் கோரிக்கைகளைக்   கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும்  காரணமாகவுமுள்ளது. இது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் நன்கு தெரிந்தாலும் அவர்கள் தமது அரசியலை மாற்ற மாட்டார்கள்.ஏனெனில் அவர்களுக்குத் தமிழ் மக்களை விடவும்  வறட்டு கெளரவம்,தலைக்கனம்,விட்டுக் கொடாமை  என்பவையே உயிர் மூச்சு.

04.18.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X