2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அரசாங்கம் இந்தியாவோடு விளையாடுகிறதா?

Johnsan Bastiampillai   / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம், தேர்தல் வெற்றிக்காகக் கண்ணை மூடிக் கொண்டு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது தடுமாறுகிறது. 

விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதியளித்தது. இப்போது, விலைகள் வானளாவ உயர்ந்துள்ளன. கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்குதாக வாக்குறுதி அளித்தது. இப்போது, அந்தக் கம்பனிகள் அதை வழங்க முடியாது என்கின்றன.

இது போன்றதொரு நிலைமை தான், இப்போது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக உருவாகி இருக்கிறது. கடந்த அரசாங்கம், கிழக்கு முனையத்தின் நிர்வாகத்தை, இந்திய, ஜப்பானிய நிறுவனங்களிடம் கையளிக்க ஒப்பந்தம் செய்து கொண்ட போது, அந்த அரசாங்கம் தேசிய சொத்துகளை விற்பதாகக் குற்றம் சாட்டிய பொதுஜன பெரமுன, தாம் பதவிக்கு வந்து, அதே ஒப்பந்தத்தை நிறைவேற்ற முற்பட்டது. அதற்கு அரசாங்கத்துக்குள் இருப்பவர்களே எதிர்ப்புத் தெரிவிக்கவே, அரசாங்கம் அந்தத் தீர்மானத்தை மாற்றிக் கொண்டது.இப்போது, அது பெரும் இராஜதந்திர நெருக்கடியாக மாறியுள்ளது.

அரசாங்கம் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை, வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதை எதிர்த்து, துறைமுக தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் முடிவடைந்துள்ளது. அம் முனையத்தை வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதில்லை என்று, பெப்ரவரி முதலாம் திகதி அமைச்சரவை முடிவு செய்ததை அடுத்தே, தொழிற்சங்கங்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டன.

ஆனால், அத்தோடு பிரச்சினை முடிவடையவில்லை; அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு, இந்தியா கடும் அதிருப்தியையும் ஜப்பான் ஏமாற்றத்தையும் தெரிவித்து வருகின்றன. இதற்கு முன்னர், முன்னைய அரசாங்கம் ஜப்பானிய நிதி உதவியுடன் ஆரம்பிக்கத் திட்டமிட்டு இருந்த ‘லைட் ரயில் பாதை’ (Light Rail Track) அமைக்கும் திட்டத்தையும் ஒருதலைப்பட்சமாக நிறுத்தியதன் காரணமாகவும், ஜப்பான் தனது அதிருப்தியைத் தெரிவித்து இருந்தது.

கிழக்கு முனைய விடயம் தொடர்பாக, அரசாங்கம் கடந்த வாரம் எடுத்த முடிவை அடுத்து, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் கடந்த இரண்டாம்  திகதி, ஓர் அறிக்கையை வெளியிட்டு, அரசாங்கத்தின் முடிவை, எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து இருந்தது. 

‘இந்தியா, இலங்கை, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் பங்களிப்புடன், கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காகக் கைச்சாத்திடப்பட்ட கூட்டுறவு ஒப்பந்தத்தை (MOC) விரைவில் அமுல் செய்வதற்கான இந்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை வலியுறுத்துகிறோம்’ என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதேபோல், ‘அண்மைக் காலத்தில், தலைவர்கள் மட்டத்திலான சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில், இவ்விடயத்தில் இலங்கையின் பொறுப்பு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இத்திட்டத்தை அமுல் செய்வதற்காக, இலங்கை அமைச்சரவையும் மூன்று மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்தது. தற்போதைய புரிந்துணர்வுக்கு ஏற்ப, சகல தரப்பினரும் தொடர்ந்தும் செயற்பட வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அன்றே, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்புகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை அல்ல என்பதால், இது கிழக்கு முனையம் தொடர்பான சந்திப்புகள் என்பது தெளிவாகிறது.

இலங்கை அரசாங்கம், இதே போன்றதோர் இராஜதந்திர நெருக்கடியை 1989 ஆம் ஆண்டும் உருவாக்கிக் கொண்டது. அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், பத்தரமுல்லையில் உள்ள விகாரையொன்றில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது, அப்போது இலங்கையில் இருந்த இந்தியப் படைகளை அவ்வாண்டு ஜூலை இறுதிக்குள் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

இந்த ஒருதலைப்பட்சமான அறிவிப்பை இந்தியா ஏற்கவில்லை. ஒரு தரப்பும் தமது நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கவில்லை. இறுதியில் ஜூலை 28ஆம் திகதி, அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலையிட்டு, இரு தரப்பினருக்கும் இடையே ஓர் இணக்கத்தை ஏற்படுத்தினார்.

இப்போது அரசாங்கம், கிழக்கு முனையத்துக்குப் பதிலாக, இன்னமும் நிர்மாணப் பணிகள் முடிவடையாத கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் நிர்வாகத்தில் 85 சதவீதத்தை, இந்தியாவுக்கு வழங்க முடியும் என்கிறது.

இந்தியாவின் பொருளாதாரம், பூகோள அரசியல் நலன்கள், அதன் மூலமும் பாதுகாக்கப்படுவதால் இந்தியா அதைச் சிலவேளை ஏற்கலாம். ஆனால், கிழக்கு முனையம் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் இராஜதந்திர மரபுகளுக்கு முரணாக நடந்து கொண்ட விதம், இந்தியாவைச் சீண்டியிருக்கும்.

வெளிநாட்டவரும் இலங்கையின் தலைவர்களும் அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் இந்த விடயத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது, கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதைப் பற்றித் தான் பேசுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே இவ்வனைவரும் அரசியல் நோக்கங்களை மனதில் வைத்துக் கொண்டே, அவ்வாறு பேசுகிறார்கள்.

கிழக்கு முனையத்தை இந்திய - ஜப்பான் முதலீட்டாளர்களிடம் கையளிப்பதென்ற முடிவு, கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பின்னர், 2019 ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கத்தாலும் வலியுறுத்தப்பட்ட ஒன்றாகும். 

அப்போதெல்லாம், மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள், அதை எதிர்த்த போதிலும், தொழிற்சங்கப் போராட்டம் என்ற நிலைக்கு அந்த எதிர்ப்புகள் வளரவில்லை. கடந்த மாதம், அரசாங்கம் முதலீட்டுக்காக இந்திய ‘அதானி’ நிறுவனத்தைத் தெரிவு செய்ததை அடுத்தே, எதிர்ப்பு அந்த நிலையை அடைந்தது.

முதலில், மக்கள் விடுதலை முன்னணி, ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தது. அத்தோடு, கட்சி வேறுபாடின்றித் துறைமுக தொழிற்சங்கங்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். பின்னர், அரசாங்கத்தை ஆதரிக்கும் சில முக்கிய பிக்குகளும், அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 

கடந்த மாத இறுதியில், தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை செய்ய ஆரம்பித்தனர். அரசாங்கம் பின்வாங்கும் நிலை ஏற்படவே, ஆளும் கட்சியைச் சேர்ந்த சில தேசியவாதிகளும் இடதுசாரிகளும் அரசாங்கத்தின் முடிவை எதிர்க்கத் தொடங்கினர். எதிர்ப்பாளர்கள், “இது, தேசிய சொத்துகளை விற்கும் கொள்கை” எனக் குற்றஞ்சாட்டும் போது, “இல்லை, இது வெளிநாட்டு முதலீடு” என அரச தரப்பினர் கூறினர். அதற்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு இந்தியா, ஜப்பானுக்கு கிழக்கு முனையத்தை வழங்குவது என்று, அமைச்சரவை முடிவு எடுத்த போதும், இந்த ஆளும் தரப்பினர், அந்த முடிவை ஆதரித்தனர். அவர்களின் சிலரே, அரசாங்கம் முடிவை மாற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்ட போது, கடைசி நேரத்தில், “தேசிய சொத்துகளை விற்க இடமளியோம்” எனக் கூக்குரலிட்டனர்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட இக்குழுவினர், தமது போராட்டம் அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல என்றும், அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பாதுகாக்கவே, களத்தில் குதித்துள்ளோம் என்றும் கூறினர். 

இது விந்தையான வாதமாகும். கிழக்கு முனையத்தை வெளிநாட்டவர்களிடம் கையளிக்க முற்பட்டவர்கள், ஜனாதிபதியும் அரசாங்கமுமே ஆகும். அவ்வாறெனில், ‘கிழக்கு முனையத்தை வெளிநாட்டவரிடம் கையளிக்க இடமளியோம்’ என்று, களத்தில் குதித்த இவர்கள், ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் எவரிடம் இருந்து பாதுகாக்கப் போனார்கள்?

கிழக்கு முனையம், தந்திரோபாய ரீதியில் முக்கியமானது என்று வாதிடும் இவர்கள், மேற்கு முனையத்தை இந்தியாவிடம் கையளிக்க விரும்புகிறார்கள். அதுவும், கிழக்கு முனையத்தைப் போலவே, ஆழமான முனையமாகவே நிர்மாணிக்கப்பட இருக்கிறது. அவ்வாறாயின், அங்கும் பாரிய கப்பல்கள் வரலாம்; அதை இந்தியாவுக்கு வழங்குவதாலும் அதே பொருளாதார நட்டம் ஏற்படத் தான் போகிறது. 

மூலோபாய ரீதியிலும் இரண்டு முனையங்களும் ஒரே பெறுமதியைக் கொண்டவையாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, கிழக்கு முனையமும் மேற்கு முனையமும் ஒன்று தான். ஆனால், தம்மோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தைப் புறக்கணித்து, பிராந்தியதின் பெரியண்ணனாகிய தன்னை அவமதித்ததை, இந்தியா சிறிய விடயமாகக் கருதும் என நம்ப முடியாது. இந்த விடயத்தை, இலங்கை அரசாங்கம் சரியான முறையில் கையாளாவிட்டால், இந்தியா இதற்கு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அல்லது, ஜெனீவாவில் தான் பதிலளிக்கும்.

ஏற்கெனவே, கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என அரசாங்கம் முடிவு செய்ததற்கு மறுநாளே, இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேகப், அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ்த் தலைவர்களான கருணா அம்மானையும் பிள்ளையானையும் சந்தித்து, ‘13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பூரணமாக அமுலாக்குவது’ தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் செய்திகள் கூறின. 

அதேவேளை, இலங்கைத் தலைவர்களுக்கு எதிரான பயணத் தடை, சொத்துத் தடை போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அந்த விடயத்திலும் இலங்கைத் தலைவர்களுக்கு இந்திய உதவி அவசியமாகிறது. இந்த நிலையில் தான், அரசாங்கம் இந்தியாவோடு விளையாடுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .