Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.கே. அஷோக்பரன்
அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலம், இலங்கை நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி, 156 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 65 பேர் எதிர்த்துள்ளனர். இதில், பிரதானமாக இரண்டு விடயங்கள், பொது வாதப்பிரதிவாதத்தின் பொருளாக மாறியிருக்கின்றன. முதலாவது, 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் பாரதூர விளைவுகள். இரண்டாவது, கட்சித்தாவல்கள்.
20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் பாரதூர விளைவுகளைப் பற்றி, பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும் விமர்சனக் கலந்துரையாடல்களும் பாரம்பரிய ஊடகங்களிலும் சமூக ஊடக வௌியிலும் குவிந்து கிடக்கின்றன.
20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் சுருக்கம் யாதெனில், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு, 17ஆம், 19ஆம் திருத்தங்களினூடாகக் கொண்டுவரப்பட்ட மட்டுப்பாடுகளைப் பலவீனப்படுத்தியும் இல்லாதொழித்தும், ஜனாதிபதியிடம் மீண்டும் நிறைவேற்றதிகாரத்தைக் குவிப்பதாக அமைகிறது.
இங்கு, ‘மீண்டும்’ என்ற சொல் கவனிக்கப்பட வேண்டியது. ஜே.ஆர். கொண்டுவந்த இந்த அரசமைப்பில், ஜே.ஆர். தனக்குத்தானே வகுத்தளித்துக்கொண்ட நிறைவேற்றதிகாரங்களை, பெருமளவுக்கு ஒத்த நிறைவேற்று அதிகாரங்களை கோட்டாபய, தனக்குத்தானே தற்போது, வகுத்தளித்துக் கொண்டிருக்கிறார்.
20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் அறிமுகத்தை, அதிர்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டியதில்லை. 2019ஆம் ஆண்டு நவம்பரில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவானபோதே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, இத்தகைய அரசமைப்புத் திருத்தம் வரும் என்பது, வௌ்ளிடைமலையாகவே இருந்தது.
அந்தச் சந்தர்ப்பத்தில், ராஜபக்ஷர்களின் பொதுஜன பெரமுன, தனித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுமா என்பது, நிச்சயமற்று இருந்த நிலையில் கூட, அரசமைப்புத் திருத்தத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் நாடாளுமன்றப் பலத்தைப் பெற்றுக்கொள்ளும் என்ற நிச்சயத்தன்மை உருவாகக் காரணம், இலங்கை அரசியலில் சர்வசாதாரணமாகிப் போயுள்ள கட்சித்தாவல் கலாசாரமாகும்.
கட்சித்தாவுகின்றவர்களை, ஆங்கிலத்தில் turncoat அல்லது renegade என விளிப்பார்கள். Renegade என்றால், தான் சார்ந்திருந்த அமைப்புக்கோ நாட்டுக்கோ கொள்கைக்கோ நம்பிக்கைக்கோ துரோகமிழைத்து, அதிலிருந்து நீங்கி, மாற்றுத்தரப்பை ஏற்பவரைக் குறிக்கும் சொல்லாகும்.
Turncoat என்ற சொல்லுக்கு இன்னும் சுவாரசியமானதொரு வரலாறு இருக்கிறது. 12ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், பிரித்தானியாவில் இரண்டு சீமான்கள், வில்லியம் மார்ஷலுக்கு அளித்துவந்த விசுவாசத்தைக் கைவிட்டு, ஜோன் மன்னருக்குத் தமது விசுவாசத்தை வழங்கினார்கள். இதன்மூலம், வில்லியம் மார்ஷலின் இலச்சினையை (coat of arms) மாற்றி, ஜோன் மன்னரின் இலச்சினையை ஏற்றதால், ‘Turncoat’ என்ற சொல் உருவானதாக ஒரு கதையுண்டு.
இதுபோன்ற, 1,000 கட்சித்தாவல்களையும் அரசியல் துரோகங்களையும் உலகம் எங்கிலுமுள்ள வரலாறுகளில், இலக்கியங்களில் நிறைந்தளவில் காணலாம். ‘தக்கன பிழைக்கும்’ என்பது, இயற்கையின் நியதி; எனில், உயிர்கள் இயல்பாகவே பிழைத்துக்கொள்வதற்காகத் தம் இயல்புகளை மாற்றிக்கொள்வதும் நியதியேயாகும். இந்த நெகிழ்ச்சித் தன்மை இயல்பானதாகும்.
ஆனால், இந்த இடத்தில்தான் விழுமியங்களும் ஒழுக்கங்களும் நியதிகளும் சட்டங்களும், மனித வாழ்வை நெறிப்படுத்த உருவாகின. அவை, நெகிழ்ச்சித் தன்மையைத் திடப்படுத்த, சில சட்டகங்களை ஸ்தாபித்தன. ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’, ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்’ போன்ற, உயர் ஒழுக்கக் கோட்பாடுகள், இத்தகைய சட்டகங்களை ஸ்தாபித்தன.
இதில் மதங்களின் பங்கு முக்கியமானது. ‘சத்தியமேவ ஜயதே நான்றதம், சத்யேன பந்தா விதாதோ தேவயானா’ என்று, முண்டக உபநிஷதம் உரைப்பதும் ‘பொய்யான பேச்சைத் தவிர்க்க’ என்பது, பௌத்தத்தின் எட்டுக் கட்டளைகளில் ஒன்றாக இருப்பதும் ‘பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே’ என்று யூத, கிறிஸ்தவ மதங்கள் சொல்வதும் ‘பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்’ என்று குர்ஆன் சொல்வதும் ஆகிய எல்லாம், இந்த ஒழுக்கக்கட்டுப்பாட்டின் பாற்பட்டவையே.
இந்த ஒழுக்கக் கட்டுக்கோப்பின் வழியாகத்தான், அடையாளபூர்வ சத்தியப்பிரமாணங்கள், வாக்குறுதிகள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. ஒருவன், ஓர் ஆட்சியாளனுக்கு விசுவாசமாக இருப்பேன் என்ற சத்தியப்பிரமாணத்தை வழங்கிவிட்டு, அதற்கு முரணாகத் துரோகமிழைத்தால், அது ராஜதுரோகமாகவும் மரணதண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டது. இது, அரசியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; சில மதங்களில், அந்த மதத்தைவிட்டு மாறுபவர்களுக்கு, மரணதண்டனையே தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நவீன காலத்தில், விசுவாசப்பிறழ்வுக்கு, அரசியல் துரோகத்துக்கு மரண தண்டனை வழங்கப்படாவிட்டாலும், சிறைத்தண்டனைகள், இன்னும் பல நாடுகளின் தண்டனைச் சட்டக்கோவையில் இருக்கிறது. பண்பாட்டு, விழுமிய ரீதியாக விசுவாசப்பிறழ்வும் நம்பிக்கைத் துரோகமிழைத்தலும் கீழ்த்தரமான செயற்பாடுகளாகவே கருதப்படுகின்றன.
நவீன ஜனநாயகத்தின் கட்சி அரசியலைப் பொறுத்தவரையில், கட்சி விசுவாசம், அதன் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கட்சி மைய அரசியல், கட்சிசார் தேர்தல்கள் நடைமுறையில் உள்ள நாடுகளில், இதன் முக்கியத்துவம் அதிகமாகும்.
‘வெஸ்ட்மின்ஸ்டர்’ நாடாளுமன்றப் பாரம்பரியத்தைப் பின்பற்றும் நாடுகளில், நாடாளுமன்றத்தில் ‘கொறோடா’ (Whip) என்ற பதவியுண்டு. ஆளுங்கட்சிக்கு ஒரு கொறோடா பதவி; எதிர்க்கட்சிக்கு ஒரு கொறோடா பதவி உண்டு. இவர்களின் பணி, கட்சிக் கட்டுப்பாட்டை, தம்கட்சி சார்ந்த உறுப்பினர்கள் மீது தக்கவைத்துக் கொள்வதாகும்.
Whip என்ற சொல் whipping என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். Whipping என்பது, சவுக்கால் அடித்து, கட்டுக்கோப்பில் வைத்திருத்தல் என்ற பொருளையுடையது. கொறோடாவின் பணியும், அடையாள ரீதியில் அத்தகையதே என்பதால், Whip என்ற பெயர் வழக்கமானது. கொறோடாவின் உத்தரவை மீறி நடத்தலானது; நாடாளுமன்றக் குழுவிலிருந்தான நீக்கத்துக்கும் தொடர்ந்து கட்சியில் இருந்தான நீக்கத்துக்கும் வழிவகுக்கும்.
பிரித்தானிய ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ முறையின் வெற்றிகரமான இயக்கத்துக்கு, மரபுகள் மீதான மதிப்பு அடிப்படையானது. ஆனால், அத்தகைய மாண்புகள் சகல இடங்களிலும் சகல சந்தர்ப்பங்களிலும் எதிர்பார்க்கப்பட முடியாதவை.
இலங்கையின் அரசமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதைத் தடுக்கும் ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது. அரசமைப்பின் 99(13) சரத்தானது, நாடாளுமன்ற உறுப்பினர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு மாதகாலத்தில் அவரது நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகும் என்று வழங்குகிறது.ஆனால், அந்த ஒரு மாதகாலப் பகுதிக்குள், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் கட்சி உறுப்பினர் நீக்கத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்துக்கு மனுச்செய்ய முடியும் என்றும், அவரது நீக்கம் செல்லுபடியானது என்று உயர்நீதிமன்ற அமர்வு தீர்மானிக்கும் போது, அது அவ்வாறு தீர்மானிக்கும் தினத்திலிருந்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என்றும் வழங்குகிறது.
ஒரு கட்சிக்கு, அதன் உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும், கட்சியிலிருந்து தகுந்த காரணங்களுக்காக நீக்கும் உரிமையுண்டு. ஆனால், அத்தகைய செயற்பாடானது, எதேச்சதிகாரமான முறையில், முன்முடிவுகளின் படியான மனநிலையுடன், இயற்கை நீதிக்கு விரோதமாகச் செய்யப்பட முடியாது.அவ்வாறு செய்யப்படும் போது, அது செல்லுபடியற்ற நீக்கமாக அமையும்.
ஆகவே, இயற்கை நீதியின்படி, தவறிழைத்த உறுப்பினரிடம் விளக்கம் கோருவதும், முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்துவதும், அதன் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுமே பொருத்தமான வழிமுறையாகும்.
இதை முறையாகச் செய்யும் போது, கட்சிகள், கட்சியின் கட்டுக்கோப்புக்குக் குந்தகம் விளைவிக்கும், கொறோடாவின் கட்டளைக்கு உட்பட்டு நடவாத நாடாளுமன்ற உறுப்பினர்களை, கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க முடியும்.
இதைச் செய்வதில், இலங்கையின் சமகால அரசியலில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. அதுதான், தற்காலிகமாக உருவாகும் பெயரளவிலான ‘கூட்டணிகள்’. எந்தவித முறையான கட்டமைப்புமின்றி உருவாகும் ‘கூட்டணிகள்’, ஏதோ ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அப்படிப் போட்டியிடுபவர்கள், அந்தக் கட்சியின் உறுப்பினர்களாக இருப்பதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம், அந்தக் கட்சிகளுக்கு இருப்பதில்லை; அதன் விளைவாக, அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க முடியாது. பஷீர் சேகுதாவூத் எதிர் பேரியல் அஷ்ரப் வழக்கில், இந்தவிடயம் உயர் நீதிமன்றினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆகவே, பெயரளவிலான கூட்டணிகளை, முறையாகப் பதிவு செய்யாமல், ஏதோ ஒரு கட்சியின் பதாகையின் கீழ் இயக்கும் போது, கட்சிக்கட்டுக்கோப்பை மீறினாலும், கட்சிதாவினாலும் கூட, எதுவும் செய்ய முடியாத நிலையே, யதார்த்தத்தில் காணப்படுகிறது.
இந்த நிலையின் மாற்றம், முதலில் முறையான கட்சி அமைப்பின் ஸ்தாபிப்பிலிருந்து தொடங்கவேண்டும். அல்லாவிடில், கட்சித்தாவல் என்பது, சர்வசாதாரணமான ஒன்றாகவே தொடரும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
42 minute ago
42 minute ago